காமன்வெல்த்தில் முதல்முறையாக நடத்தப்பட்ட மகளிர் கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது, இந்திய அணி. சிறப்பான ஆட்டத்தால் தங்கப் பதக்கத்தை நெருங்கி அதனை இறுதி ஓவர்கள் ஏற்றிய பதற்றத்தில் தவற விட்டு வெள்ளியோடு ஆறுதல் தந்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான லீக் போட்டிதான் இக்குறுந்தொடரைத் தொடக்கி வைத்தது. அதில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வீழ்ந்தபின் இரு அணிகளுமே எந்த எதிரணியையும் வெல்ல விடவில்லை. இதுதான் இரு அணிகளும் மீண்டும் சந்திக்கும் இறுதிப் போட்டி மீதான எதிர்பார்ப்பினை பன்மடங்காக்கியது. கிட்டத்தட்ட கங்குலி தலைமையில் இந்தியா சந்தித்த 2003 உலகக் கோப்பைத் தொடரின் ஒரு வெர்ஷன்தான் இது. இரு அணிகளுமே மாற்றமின்றி இறங்கியதற்கு தொடரில் அவர்களது முந்தைய சிறப்பான செயல்பாடுகளே காரணம்.
2000-க்குப் பிறகு வலம் வந்த ஆஸ்திரேலிய ஆடவர் அணியைப் போலவேதான் சில ஆண்டுகளாகவே ஆஸ்திரேலிய மகளிர் அணியும் உருவெடுத்துள்ளது. அதிலும் டி20, 50 ஓவர்கள் உலகக் கோப்பைகளின் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இத்தொடர் முழுவதிலுமே பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் ஒரு படி முன்னிலை பெற்றே இருந்தது.

மறுபுறம் இந்தியாவின் செயல்பாட்டிலும் குறைவில்லை. லீக் சுற்றில் பாகிஸ்தானை ஆல்அவுட் ஆக்கிய போட்டியிலாகட்டும், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகக் கிடைத்த த்ரில் வெற்றி ஆகட்டும், ஏதோ ஒரு வகையில் தங்களது இறுதிப் போட்டிக்கான இடத்திற்கு நியாயம் கற்பித்திருந்தனர். இருப்பினும் 2017 உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி அழுத்தத்தைக் கையாள முடியாமல் நாக் அவுட் போட்டிகளில் ஏமாற்றமளித்து வருவதால் ரசிகர்களிடம் சற்றே பதற்றம் இருந்ததே உண்மை. அவர்கள் பயந்தபடியேதான் எல்லாமே நடந்து முடிந்திருக்கிறது.
ஆஸ்திரேலியா வீராங்கனை டாலியா மெக்ரத்துக்கு கொரோனா இருப்பது இறுதி நிமிடத்தில் தெரிய வந்து அவர் ஆட அனுமதிக்கப்பட்டது நாம் கொரோனாவுடனே வாழ மட்டுமல்ல விளையாடவும் பழகிவிட்டோம் என்பதையே காட்டியது. இது பல்வேறு சர்ச்சைகளையும் தற்போது கிளப்பி வருகிறது. ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸின் போது கன்கசனுக்கு உள்ளான இந்திய விக்கெட் கீப்பர் தானியாவுக்குப் பதிலாக யாஸ்டிகா இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் மூனேவின் அதிரடி ஆரம்பம்தான் அவர்களுக்கான சிறப்பான தொடக்கமாக அமைந்தது. பவர்பிளேயிலேயே 48 ரன்களை அவர்களது தரப்பு சேர்க்க, இந்திய அணியோ ஆறாவது ஓவரைக் கழித்துப் பார்த்தால் பவர்பிளேயில் முதல் ஐந்து ஓவர்களில் வெறும், 28 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அதிரடி ராணியான ஷஃபாலியும் சரி, அனுபவம் மிகுந்த ஸ்மிரிதியும் சரி, பொறுப்பற்ற முறையில் தங்களது விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தனர். இந்த ஓப்பனிங் தள்ளாட்டம்தான் இந்தியாவிடமிருந்து போட்டியைக் கைமாற்றியது.
ஆனாலும் இருபக்கமுமே இரு முக்கிய பார்ட்னர்ஷிப்கள் போட்டிக்கு சுவாரஸ்யம் சேர்த்திருந்தன. மூனே மற்றும் கேப்டன் லானிங்கிற்கு இடையே 47 பந்துகள் நீடித்த கூட்டணியில் 74 ரன்களை அதிவேகமாகக் கடந்துவிட்டார்கள். இந்த முதல் பத்து ஓவர்களுக்குள்ளாகவே ஏழு பௌலர்களை ஹர்மன்ப்ரீத் முயன்றிருந்தார். ஆனால், ரன் கசிவையும் தடுக்க முடியவில்லை, விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை.

மூனே ப்ளிக் ஷாட், புல் ஷாட், கவர் டிரைவ் என அவ்வப்போது பந்தோடு பாதுகாப்பு பவுண்டரி வளையத்தைத் தாண்டி இந்தியாவையும் அனுப்பிக் கொண்டிருந்தார். லானிங்கோ சற்றும் தயக்கமின்றி தனது பவர் ஹிட்டிங்கைக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார். ஹர்மன்ப்ரீத் ஓவரில் வந்த ஹாட்ரிக் பவுண்டரிகள் ரன் மீட்டரை தறிகெட்டு ஓட வைத்தன.
இந்தியாவின் பக்கமும் இதே போன்றதொரு பார்ட்னர்ஷிப்தான் போட்டிக்குள் இந்தியாவைக் கொண்டு வந்தது. ஓப்பனர்கள் இருவரையுமே மூன்று ஓவர்களுக்குள் இழந்துவிட்ட இந்தியக் கப்பலை முதலில் மூழ்காமல் தடுத்து நங்கூரமிட்டு பின் மெல்ல மெல்ல இலக்கை நோக்கி எடுத்துச் சென்றனர் ஹர்மன்ப்ரீத் - ரோட்ரிக்ஸ். ஓடியோ அல்லது பவுண்டரிகளாகவோ ஏதோ ஒரு வகையில் ரன்கள் வருவதை உறுதி செய்து கொண்டே இருந்தனர். ஆஸ்திரேலியாவின் அந்தப் பார்ட்னர்ஷிப் போலவே இந்தக் கூட்டணிதான் தடுமாற்றமின்றி ஆடியது. அதிலும் அரைசதம் கடந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத்தின் இன்னிங்ஸ் பொறுமையுடனும் நிதானத்தோடும் மிக அற்புதமாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது.
கடந்த போட்டியில் அக்ரஸனை வெளிப்படுத்தியிருந்தது குறித்து போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் கேட்கப்பட்ட போது, "நான் அப்படி இருப்பது, போட்டியை நாங்கள் இழந்து விடவில்லை என்ற நம்பிக்கையை மற்ற வீராங்கனைகளுக்குள் புகுத்தும்" என ஹர்மன்ப்ரீத் கூறியிருந்தார். ஆனால் இப்போட்டியின் இரண்டாவது பாதியில் அவரது அணுகுமுறை அதற்கு நேர்மாறாக இருந்தது. ஷாட் செலக்சன், ப்ளேஸ்மெண்ட் என ஒவ்வொரு பந்தினையும் அதீத கவனத்தோடு கையாண்டார். ரோட்ரிக்ஸ் கூட தான் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்த அரைசதத்திற்குக் கூட ஹர்மன்ப்ரீத்திடம் பெரிய ஆர்ப்பாட்டமில்லை. 67 பந்துகளில் 96 ரன்களை இக்கூட்டணி குவித்தது.
ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸில் முதல் 15 ஓவர்களிலேயே 125 ரன்கள் வந்துவிட்டன. ஆனால், இறுதி ஐந்து ஓவர்களில் இந்திய பௌலர்கள் கம்பேக் கொடுத்தனர். அந்த ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.

இந்தியாவின் பக்கமும் 15-வது ஓவருக்குப் பின்தான் எல்லாமே மாறத் தொடங்கியது. ஸ்கூட்டின் லெக் கட்டரில் ரோட்ரிக்ஸ் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்ததோடு அஸ்திவாரம் ஆடத் தொடங்கியது. எனினும் திருப்பு முனையானது அதற்கடுத்த கார்ட்னரின் ஓவர்தான். பூஜா மற்றும் ஹர்மன்ப்ரீத் இருவருமே அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ரோட்ரிக்ஸ் ஆட்டமிழப்பதற்கு முன்னதாக 34 பந்துகளில் வெறும் 44 ரன்கள்தான் தேவை என வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது இந்தியா. ஏனெனில் கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்தன. ஆனால், அடுத்த ஆறு ஓவர்களில் அது அத்தனையையும் பறிகொடுத்துவிட்டது இந்தியா.
இந்த இடத்தில்தான் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிடமிருந்து மாறுபட்டிருந்தது. அவர்களுடைய பேட்டிங் டெப்த் அவர்களுக்கு இறுதிவரை கை கொடுத்தது. ஆனால் இந்தியாவின் பக்கமோ போட்டியை நின்று வென்று கொடுக்கும் ஃபினிஷிங் ரோலை யாருமே செய்யவில்லை. அவசரகதியில் விக்கெட்டை பறி கொடுக்காமல் நின்று நிதானித்திருந்தாலே பந்துக்கு ஒன்று என்ற கணக்கில் ரன்கள் சேர்த்திருந்தாலே வெற்றி மிக எளிதாக வசப்பட்டிருக்கும், ஆஸ்திரேலியாவும் கொத்துக் கொத்தாக விக்கெட் எடுத்திருக்காது. ஆனால், விழுந்த ஒவ்வொரு விக்கெட்டும் இந்தியப் பக்கம் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது.
இந்திய டெய்ல் எண்டர்கள் ரன் சேர்க்கத் தவறுவது பற்றி பல ஆண்டுகளாக ஆடவர் கிரிக்கெட்டில் பேசப்பட்டு வந்தாலும், அதனை விவாத பொருளாக மகளிர் கிரிக்கெட்டிற்கும் கொண்டு போக வேண்டியதன் அவசியத்தையே இப்போட்டி உணர்த்தியிருக்கிறது.
ராணா, ராதா ஆகியோரது ரன் அவுட் டி20-ல் எப்படிப்பட்ட அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையே அவர்கள் உணரவில்லை என்பதையே காட்டியது. டெத் ஓவர்களில்கூட ஓடி ரன் எடுக்க முயன்றதும், அதையும் பொறுப்போடு செய்து முடிக்க முடியாமல் வெளியேறியதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். பவர் ஹிட்டிங் என்பதே போதிக்கப்படாததை போட்டியின் ஒவ்வொரு அங்குலமும் உணர்த்திக் கொண்டிருந்தது.

"எந்தத் சூழலையும் தாக்குப் பிடிப்போம், லகான் எங்கள் கையில்தான்", என்பது போன்ற நிதானமான போக்குதான் பெரிய மேடைகளுக்கான முதல் தேவை. அந்த அணுகுமுறைதான் ஆஸ்திரேலியாவுக்குக் கை கொடுத்தது. இந்தியாவின் பக்கம் இல்லாத அந்த முக்கிய அம்சமும் அதுதான். ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது சற்றே முயன்றிருந்தால் கூட தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
வெள்ளி வென்றது மகிழ்வென்றாலும் சின்னத் சின்ன தவறுகளால் தங்கம் கைநழுவி உள்ளது. 2017 ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடர்கள், 2018 மற்றும் 2020 உலகக் கோப்பைகள் என பல நாக் அவுட் போட்டிகளில் நடைபெற்றதைப் போன்றே இது இன்னுமொரு நினைவு ஏட்டிலிருந்து அழிக்கப்பட வேண்டிய நிகழ்வாக மாறியுள்ளது.
அடுத்து வரும் பெரிய தொடர்களுக்குத் தேவையான பயிற்சியை மனதளவிலும் மகளிர் அணிக்குக் கொடுக்க வேண்டியது பிசிசிஐயின் கடமை.