Published:Updated:

KKRvCSK: முன்னிலையில் சென்னை! - `6 6 6 6 4 1 4 1 6 4' சளைக்காமல் சண்டை செய்த ரஹானே-துபே கூட்டணி!

KKRvCSK

அந்த ஓவரில் உமேஷ் வீசும் ஒவ்வொரு பந்தின் லைன் அண்ட் லெந்தை கச்சிதமாக முன்பே கணித்து வைத்திருந்தார் அவர்.

Published:Updated:

KKRvCSK: முன்னிலையில் சென்னை! - `6 6 6 6 4 1 4 1 6 4' சளைக்காமல் சண்டை செய்த ரஹானே-துபே கூட்டணி!

அந்த ஓவரில் உமேஷ் வீசும் ஒவ்வொரு பந்தின் லைன் அண்ட் லெந்தை கச்சிதமாக முன்பே கணித்து வைத்திருந்தார் அவர்.

KKRvCSK
12 ஓவர்கள் முடிய ஒரு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் என்ற நிலையில் சி.எஸ்.கே. ஈடன் கார்டனின் இந்த நல்ல பேட்டிங் ட்ராக்கிற்கும் சற்றே பலவீனமாக காட்சி தரும் சென்னை அணியின் பௌலிங் டிப்பார்ட்மென்டிற்கு 200 ரன்களுக்கு குறைவாக டார்கெட் செய்து டிஃபென்ட் செய்வதை பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாது.

அடுத்த கியருக்கு உடனடியாக மாற வேண்டும். ஆனால், வருண் வீசும் அடுத்த ஓவரின் முதல் பந்தில் 50-ஐ கடந்த கான்வே அவுட். கொல்கத்தா கேப்டன் ராணா ஓரளவுக்கு நிம்மதியாகவே இருந்திருப்பார்.

Dube - Rahane
Dube - Rahane

புதிதாக வந்த துபேவையும் ஓரளவுக்கு செட்டில் ஆகியிருந்த ரஹானேவையும் 16-வது ஓவர் இழுத்து தாக்குபிடித்தால் அதன் பிறகு 180-190 ரன்களை அடித்தால் கூட அதை எட்டிப்பிடித்துவிடலாம் என்பது கே.கே.ஆர் அணியின் நம்பிக்கை. ஆனால், அவை அனைத்தையும் உடைத்து சுக்குநூறாக்க சென்னை அணிக்கு தேவைப்பட்டது வெறும் 10 பந்துகள் மட்டுமே. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஐந்து பந்துகள்தான்.   

ஓவரின் ஐந்தாது பந்து. மிட்-விக்கெட் திசையில் ஓர் பிரம்மாண்ட சிக்ஸரை மடக்கி அடிக்கிறார் துபே. கிட்டத்தட்ட அதே போல வீசப்பட்ட அடுத்த பந்தும் நேர் திசையில் சிக்ஸருக்கு பறக்கிறது. 2 பந்துகளில் 1 ரன் என்றிருந்த துபே தற்போது 4 பந்துகளில் 13. கொல்கத்தாவிடம் நரைன், சுயாஷ் என மிக அருமையான சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும் அவர்களுக்கு ஓவர் கொடுக்க முடியாத நிலை. 

Ajinkya Rahane
Ajinkya Rahane

முந்தைய போட்டிகளில் துபே ஸ்பின்னர்களை ஆடிய விதம் அப்படி. சுதாரித்த ராணா ஷார்ட் பால்ககள் கொண்டு அட்டாக் செய்ய உமேஷை அழைக்கிறார். ஆனால், நடந்ததோ முற்றிலுமாக வேறொன்று. பேடுகளை நோக்கி வீசப்பட்ட அந்த ஓவரின் பந்தை வந்த வேகத்தில் பிக்-அப் ஷாட்டாக மாற்றுகிறார் ரஹானே. முதல் பந்தே ஸ்கொயர் லெக்கில் ஓர் சிக்ஸ். இங்கு தான் ரஹானே எனும் அற்புத பேட்டரின் அனுபவம், பக்குவம் வெளிப்படுகிறது. அந்த ஓவரில் உமேஷ் வீசும் ஒவ்வொரு பந்தின் லைன் அண்ட் லெந்தை கச்சிதமாக முன்பே கணித்து வைத்திருந்தார் அவர்.      

சற்றே முன் இழுத்து போடப்பட்ட இரண்டாவது பந்துக்கு முந்தைய பந்து வீசப்பட்டபோதே தயாராகி இருந்தார். வலது புறம் நகர்ந்து இடுப்பளவில் வந்த பந்தை ஸ்கூப் ஆட ஃபைன் லெக்கில் இருந்த சென்னை அணியின் டக்கவுட்டை தாண்டி போய் விழுகிறது பந்து. ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 12 ரன்கள் வந்துவிட்டது என அடுத்த பந்தையும் ஏனோதானோ என்று சுற்றவில்லை ரஹானே. ஓவர்பிட்ச் பந்து தான் அடுத்தது என நிச்சயம் தெரிந்ததுபோல் காத்திருந்து ஒரு கவர் ட்ரைவ். நான்கு ரன்கள். அடுத்து ஓர் சிங்கிள். இப்போது ஸ்ட்ரைக்கில் துபே. தனக்கு எப்படி ஷார்ட் பால் தான் வரும் என்பது ரஹானேவின் கணிப்பு. ஆனால், அவரை ஆச்சரியப்படுத்தி உமேஷ் அவுட்-ஸைட் ஆஃபில் ஃபுல் லெந்த் பந்தை வீசுகிறார். அதற்கு சற்று எதிர்பார்க்காத துபே பந்துக்கு சற்று தாமதமாக ரியாக்ட் செய்ய எட்ஜில் பட்டு தர்ட் மேன் திசையில் ஓர் ஃபோர் போக அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள்.   

Shivam Dube
Shivam Dube

டேவிட் விஸே வீசிய அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸ், ஃபோர் என விளாசுகிறார் துபே. 12.4 ஓவரில் 111-2 என்றிருந்த சென்னை அணியின் ஸ்கோர் 14.2 ஓவரில் 155-2 என்றாகிறது. அந்த 10 பந்துகளில் மட்டும் 44 ரன்கள். அதன் பிறகு கொல்கத்தா அணியால் போட்டிக்குள் கடைசி வரை வர இயலவில்லை.

12.4 to 14.2 - சென்னை அணியின் ஸ்கோர் ஷீட் 6 6 6 6 4 1 4 1 6 4

சுயாஷை தவிர மற்ற அனைவரின் ஓவர்களிலும் 10-15 ரன்களுக்கு குறைவில்லாமல் அடிக்கப்பட்டது. முடிவில் கொல்கத்தாவுக்கு எதிரான அதிகபட்ச ஸ்கோர், ஈடன் கார்டனின் அதிகபட்ச ஸ்கோர், சென்னை அணியின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் பதிவுசெய்யப்பட்டது. 236 ரன்கள் டார்கெட் என்றபோதே வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது என்றாலும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினர் சென்னை பௌலர்கள். இதற்குமுன் சென்னை அணி அதிகபட்சமான பதிவுசெய்த முதல் மூன்று டாப் ஸ்கோர்களிலும் எதிரணியை 200 ரன்களுக்கு அதிகமாக அடிக்கவிட்டிருக்கும். ஆனால், நேற்று கொல்கத்தா அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

நேற்றை வெற்றியின் மூலம் 7 போட்டிகள் முடிய மிட் சீஸனில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அடுத்த 7-ல் 4 ஹோம் கேம்கள் என்பதால் முதலிரண்டு இடங்கள் கூட கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்லலாம். குவாலிஃபையர் போட்டிகளும் சென்னையில்தான் நடைபெறவிருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்…