சென்னை அணி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் சென்னை வீரர்கள் பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் குதிப்பதை போன்று இருக்கும் அந்தப் படத்தில் 'Challenge Accepted' என ஒரு நச் வசனமும் இடம்பெற்றிருக்கிறது
சென்னை Vs பெங்களூர் போட்டிக்கான முன்னோட்டமாகத்தான் சென்னை அணி இந்த போஸ்டர் டிசைனை வெளியிட்டிருக்கிறது.

`நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணம் தம்பி யாருமில்லை...' என தோனியும் கோலியும் பாசப்பறவைகளாக உருகினாலும் CSK Vs RCB போட்டியென வந்துவிட்டால் இருவருமே உக்கிரமாகிவிடுவார்கள். இவர்கள் பற்றிய ஒரு குட்டி ரீவைண்டு...
சென்னை அணி வெளியிட்ட அந்த போஸ்டருமே கூட ஹாலிவுட் படத்தில் ஹீரோவின் கேங் க்ளைமாக்ஸ் சண்டைக்கு முறுக்கிக் கொண்டு கிளம்புவதை போன்ற உணர்வைத்தான் கொடுத்தது. இரு அணிகள் ஆடும் போட்டிகளும் அப்படித்தான் இதுவரை இருந்திருக்கின்றன. அதற்கு உதாரணமாக சில பழைய சம்பவங்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் என்றவுடனேயே நம்முடைய நினைவலைகள் மொத்தமும் 2011 சீசனுக்குதான் செல்லும். அந்த சீசனின் இறுதிப்போட்டியில் சென்னையும் பெங்களூரும்தான் மோதியிருக்கும். சென்னை அணி நடப்பு சாம்பியன். பெங்களூர் அணியில் கெய்ல், கோலியெல்லாம் சலங்கை கட்டாத குறையாக ஆடித் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் இறுதிப்போட்டியில் பெங்களூர் அணி ஸ்கோரை சேஸ் செய்கையில் கெய்லுக்கு எதிராக முதல் ஓவரையே அஷ்வினுக்குக் கொடுத்திருப்பார் தோனி. துணிச்சலுடன் பந்தை கையில் வாங்கிய அஷ்வின் சிக்சர்களாக பறக்கவிடும் கெய்லின் சன்னதத்தைக் குறைத்து, அந்த முதல் ஓவரிலேயே கெயிலை வீழ்த்தியிருப்பார். அதோடு பெங்களூர் அணியுமே வீழ்ந்து போயிருக்கும். சவுரப் திவாரி மட்டும் கடைசி வரை நின்று பெங்களூர் ரசிகர்களுக்காக ஆறுதல் இன்னிங்ஸ் ஆடியிருப்பார்.
அதன்பிறகு, அப்படியே பசுமையாக நினைவிருக்கும் இன்னொரு போட்டியென்றால் 2012 சீசனில் சென்னை அணி 200+ ஸ்கோரை சேஸ் செய்த போட்டி ஒன்றில் ஆல்பி மோர்கல் கடைசி வைத்து வெளுவெளுவென வெளுத்திருப்பாரே அந்த போட்டிதான்.
கோலி தெரியாத்தனமாக அதுவும் 19 வது ஓவரில் பந்தை கையில் வாங்கிவிட சமயம் பார்த்து காத்திருந்த ஆல்பி மோர்கல் அந்த ஓவரில் மட்டும் 28 ரன்களை அள்ளியிருப்பார். பந்துகளெல்லாம் மைதானத்தை விட்டு வெளியே பறந்திருக்கும்.

இந்த ஓவரின் புண்ணியத்தால் இறுதியில் சென்னை அணியும் சிறப்பாக வென்றிருக்கும்.
இதற்கடுத்த சீசனில் என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியும் சேப்பாக்கத்தில்தான் நடந்திருந்தது. சேஸ் செய்த சென்னை அணிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற சூழலில் ஆர்.பி.சிங்கின் ஓவரில் ஜடேஜா பெரிய ஷாட் ஆடி அவுட் ஆகியிருப்பார். ஆனால், அம்பயர் அந்த பந்தை நோ-பால் என அறிவிக்கவே கண நேரத்தில் போட்டியின் முடிவு அப்படியே மாறிப்போயிருக்கும்.
சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டி ஒன்று இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். 2018 - சிஎஸ்கேவின் கம்பேக் சீசன் அது. இதுவும் ஒரு 200+ சேஸ்தான். ஆனால், சென்னை தொடக்கத்தில் கடுமையாக திணறியிருக்கும்.79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருக்கும். அந்த சமயத்தில் உள்ளே வந்த தோனி, அதற்கு பிறகு காட்டியதெல்லாம் வின்டேஜ் விஸ்வரூபம்.
34 பந்துகளில் 70 ரன்களை எடுத்து சிக்சரோடு ஆட்டத்தை முடித்துவைத்து அசத்தியிருப்பார். கோரி ஆண்டர்சனின் ஓவர்களையெல்லாம் கிழி கிழியென கிழித்திருப்பார். ஒரு பெரிய டார்கெட்டுக்கான சேஸை எப்படி திட்டமிட்டு முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்கான பாடமாக தோனியின் இந்த இன்னிங்ஸை குறிப்பிடலாம்.
ஒரே சென்னை வென்ற போட்டிகளாகவே வருகிறதே என யோசிக்கலாம். கொஞ்சம் பெங்களூர் வென்ற போட்டிகளையும் பார்த்துவிடலாம். இந்த வரிசையில் பார்த்தாலும் தோனி பயங்கரமாக அடித்து சென்னை 1 ரன் வித்தியாசத்தில் தோற்ற அந்த போட்டிதான் முதலில் ஞாபகம் வருகிறது. மீண்டும் ஒரு சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டி. மீண்டும் சேஸிங் சென்னைக்கு. மீண்டும் ஒரு கடைசி ஓவர். களத்தில் மீண்டும் தோனி. இந்த முறை தோனிக்கான டாஸ்க் கொஞ்சம் பெரிது. கடைசி ஓவரில் 26 ரன்களை எடுக்க வேண்டும். உமேஷ் யாதவ் அந்த ஓவரை வீசியிருப்பார். சாத்தியமே இல்லையென நினைக்கப்பட்ட இடத்தில் தோனி நின்று சமர் செய்திருப்பார். சிக்சர்களாக பறக்கவிட்டவர் கடைசி பந்தில் மட்டும் பீட்டனாகிவிட வெறும் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றிருக்கும்.

கொரோனா சமயத்தில் துபாயில் நடந்த போட்டி ஒன்றில் கோலி சென்னைக்கு எதிராக கதகளி ஆடியிருப்பார். நின்று நிதானமாக ஆடியவர் கடைசிக்கட்டத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தார். 90 ரன்களை அடித்து நூலிழையில் சதத்தை மிஸ் செய்திருப்பார். அந்தப் போட்டியில் பெங்களூர் அணிதான் வென்றிருக்கும்.
இப்படியாக சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டிகளை பற்றி யோசித்தாலே பெரும்பாலும் தோனியும் கோலியும்தான் முன்னே நிற்கிறார்கள்.
அப்படிப்பட்ட கோலியும் தோனியும் நேரதிராக ஆடப்போகும் கடைசி சீசனாகக் கூட இது இருக்கலாம். ஆக, கடந்து போன சம்பவங்களுக்கெல்லாம் சிகரமாக ஒரு சம்பவத்தை இருவரும் இந்தப் போட்டியில் நிகழ்த்துவார்களா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சென்னை - பெங்களூர் அணிகள் விளையாடிய போட்டிகளில் உங்களுக்கு மறக்க முடியாத போட்டியை கமென்ட்டில் பதிவிடுங்கள்!