Published:Updated:

CSK vs PBKS: கான்வே கன்சிஸ்டன்ஸி, தோனி கேப்டன்ஸி; எல்லாமே சிறப்பாக இருந்தும் பஞ்சாப் வென்றது எப்படி?

CSK vs PBKS

கிங்குக்கும் கிங்குக்கும் சண்டை என மன்னர்களின் போராக சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போட்டி கருதப்பட்டாலும், இது சேப்பாக்கக் கோட்டை என்பதால் சிம்மாசனம் எப்படியும் சென்னைக்குத்தான் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. But Punjab Kings had other ideas...

Published:Updated:

CSK vs PBKS: கான்வே கன்சிஸ்டன்ஸி, தோனி கேப்டன்ஸி; எல்லாமே சிறப்பாக இருந்தும் பஞ்சாப் வென்றது எப்படி?

கிங்குக்கும் கிங்குக்கும் சண்டை என மன்னர்களின் போராக சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போட்டி கருதப்பட்டாலும், இது சேப்பாக்கக் கோட்டை என்பதால் சிம்மாசனம் எப்படியும் சென்னைக்குத்தான் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. But Punjab Kings had other ideas...

CSK vs PBKS
"அவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா..." சேப்பாக்கமே அதிர்ந்தது. `பாகுபலி' சிம்மாசனக் காட்சி வேறு `மீட்ஸ் வீடியோவாக' மனதுக்குள்ளேயே எடிட் செய்யப்பட்டு ஓடியது. ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த பைசா வசூல் மொமன்ட் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் தோனியின் என்ட்ரியின் போதே கிடைத்துவிட்டது. அந்த இரண்டு சிக்ஸர்கள் எல்லாம் போனஸ்தான். ஒரே டிக்கெட்டில் இரண்டு படங்கள் பார்த்த திருப்தி! `ஹீரோ இன்ட்ரோக்கே 120 ரூபாய் வொர்த்டா' என்ற சினிமா விமர்சனம் போலத்தான் சென்னை ஆடும் போட்டிகளைப் பற்றிய பேச்சு வருகிறது.
ஈடன் கார்டனோ, சின்னசாமியோ அங்கே குலசாமியாக தோனியைத்தான் பார்க்கின்றனர். `இது அவரின் கடைசி சீசன்' என்ற எண்ணம் வேறு தலைதூக்குவதால் எல்லா மைதானங்களிலும் மஞ்சள் படை வரவேற்கிறது. இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரிட்டையர்டு ஆனவருக்கு இங்கே ஒரு சீசன் முழுக்கவே ஃபேர்வெல்லாக மாறிக்கொண்டிருக்கிறது.
CSK vs PBKS
CSK vs PBKS

கடைசி சீசன் என்று தோனி சொல்லவில்லை என்றாலும் அவரின் பேச்சுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. இந்த சீசன் கோப்பையை வாங்கிக்கொடுத்துவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்பதே பரவலான நம்பிக்கை. அதற்கு ஏற்றாற்போல சென்னை தொடர்ந்து போட்டிகளை ஜெயித்தது. பாதி சீசன் முடிந்த கையோடு டாப் ஆஃப் தி டேபிளிலும் அமர்ந்தது. ஆனால், இப்போது இரண்டு தோல்விகள். பிளேஆஃப் போவது சுலபம்தான் என்றாலும், அந்த வாழ்வா சாவா சுற்றில் ஒரு டிபார்ட்மென்ட் சொதப்பினாலும் வெளியேற வேண்டியிருக்கும். சேப்பாக்கத்தில் பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி சுட்டிக்காட்டுவது சில விஷயங்களைத்தான். அதற்குள் செல்லும் முன் ஒரு குட்டி கொசுவர்த்தி சுருள்...

கிங்குக்கும் கிங்குக்கும் சண்டை என மன்னர்களின் போராக சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் போட்டி கருதப்பட்டாலும், இது சேப்பாக்கக் கோட்டை என்பதால் சிம்மாசனம் எப்படியும் சென்னைக்குத்தான் என்பதே பலரின் கருத்தாக இருந்தது. But Punjab Kings had other ideas...

டாஸ் வென்ற தோனி, வறண்ட பிட்ச் என்பதால் பேட்டிங் பக்கம் சாய்ந்தார். மாலை போட்டிகளில் வெயில் முக்கியமான விஷயம் என்றும் தெரிவித்தார். சென்னை அணியில் மாற்றமில்லை. பஞ்சாப்பில் ஹர்ப்ரீத் பிரார் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

ருதுராஜ் கெயிக்வாட்டும் டெவான் கான்வேயும் ஓப்பனர்களாகக் களமிறங்க, சில கேலரிகளில் இருக்கைகள் காலியாக இருப்பது கண்ணில்பட்டது. வெயிலுக்குப் பயந்து ஆட்கள் இன்னும் உள்ளே வரவில்லையா அல்லது சி.எஸ்.கே-வின் டிக்கெட் விற்பனை குழப்ப அரசியல் இன்னுமே தொடர்கிறதா என்பது தெரியவில்லை.

CSK vs PBKS
CSK vs PBKS

அர்ஷ்தீப் வீசிய இரண்டாவது பந்து ஓவர்பிட்ச்சாக வர, கெயிக்வாட் பவுண்டரி அடித்து தன் கணக்கைத் தொடங்கினார். அடுத்த ரபாடா ஓவரில் கான்வே 32 அடி பாய்கிறேன் என்பதாக இரண்டு பவுண்டரிகள் அடித்தார். மீண்டும் அர்ஷ்தீப் ஓவரில் கெயிக்வாட் இந்த முறை இரண்டு பவுண்டரிகள் விளாச, அதே ஓவரின் கடைசி பந்தில் கான்வே ஒரு பவுண்டரி அடித்து 'குயிக் ஸ்டார்ட்' என்று சொல்ல வைத்தார். அது எப்படி, என்பதாக சாம் கரண் உள்ளே வந்து 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 'கரெக்டா இருந்துக்க' என்று ஓப்பனர்களை மிரட்டினார். அடுத்த சாம் கரண் ஓவரிலேயே, கான்வே இரண்டு பவுண்டரிகள், கெயிக்வாட் ஒரு பவுண்டரி என்று அடித்து அதே பன்ச் டைலாக்கை அவரிடமே திரும்பச் சொல்லினர். பவர்பிளே முடிவில் 57 ரன்கள். விக்கெட்டுகளை இழக்கவில்லை என்பதால் முதலுக்கு மோசமில்லாத பிசினஸ்தான்.

அதன்பிறகு கான்வே ஓவருக்கு ஒன்றாக பவுண்டரிகளைத் தட்டிவிட, மறுபுறம் ருதுராஜின் ஸ்ட்ரைக்ரேட் அலாரம் அடிக்க வைத்தது. பஞ்சாப்பின் வலுவான ஆல்ரவுண்டரான சிக்கந்தர் ரசாவின் ஓவரில் கான்வே இரண்டு பவுண்டரிகளைத் தட்டிவிட்டு ருதுராஜுக்கு பாஸ் தர, அவர் இறங்கி வந்து அடிக்க நினைத்தார். அதைக் கணித்தவராக ரசா ஒரு பிராப்பர் லெக்பிரக்கை வீச, விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா ஸ்டம்பைத் தகர்த்து ருதுராஜை 37 ரன்களுக்கு வழியனுப்பி வைத்தார். இது ஒருவகையில் சி.எஸ்.கே-வுக்கு நன்மைதான்!
CSK vs PBKS
CSK vs PBKS

சர்ப்ரைஸாக ரஹானேவுக்கு முன்னதாக ஷிவம் துபே அட்டெண்டன்ஸ் போட்டார். ரபாடாவின் ஒரு ஓவர் பொறுமை காத்தவர், அடுத்த ரசாவின் ஓவரில் வைட் லாங்க் ஆன் திசையில் சிக்ஸரைப் பறக்கவிட்டார். தோனி கூறியதுபோலவே ஸ்பின்னர்களுக்கு எதிரான அபாயகரமான ஆயுதமாக மாறிவருகிறார் துபே. அவரின் இந்த அதிரடி ஃபார்ம் இந்த ஐபிஎல் முழுக்கவே தொடருமானால் சென்னையின் வெற்றிகளுக்கு முக்கியமான காரணமாக அவர் அமைவார். ரபாடா ஓவரிலும் சிக்ஸர், தொட்டுக்க சில பவுண்டரிகள் என பேட்டை வீசியவர் 17 பந்துகளில் 28 ரன்களை அடித்திருந்தபோது மீண்டும் ஒரு சிக்ஸருக்கு கனெக்ட் செய்து லாங் ஆனில் பவுண்டரிக்கு இரண்டு அடி முன்னாலிருந்த ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுபுறம், 'யார் இல்லைன்னாலும் சண்டை செய்வேன்' என்பதாகக் கிடைத்த கேப்பில் எல்லாம் பவுண்டரிகளை விரட்டினார் கான்வே. மொயின் அலியும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விளாச, அவரின் கம்பேக் இன்னிங்ஸ் இதுதானா எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், டெத் ஓவர்களின் தொடக்கமான 16வது ஓவர் முதல் பந்திலேயே அவரை அனுப்பிவைத்தார் ராகுல் சஹார். அடித்து ஆடவேண்டிய கட்டத்தில், தோனி உள்ளே வருவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. கடைசிக்கு நல்ல பார்மிலிருக்கும் ரஹானே ஆவது உள்ளே வருவார் என்றே நினைத்தனர். ஆனால் வந்தது ஜட்டு.

ஜடேஜாவின் அக்ரஸிவ் நோக்கம் எல்லாம் எங்கே போனது என்பதே தெரியவில்லை என்பதாகத்தான் சமீபமாக ஆடிவருகிறார். இந்தப் போட்டியும் அந்த லிஸ்ட்தான். 10 பந்துகளில் 12 ரன்கள் அடித்து கான்வேக்கும் ரசிகர்களுக்கும் பிரஷரை ஏற்றிவிட்டு வெளியேறினார். இதனாலேயே டெத் ஓவர்களில் ரன்ரேட் முடுக்கிவிடப்படாமல் அதே 10 என்பதாக ஊசலாடிக் கொண்டிருந்தது.
ஆனால், இந்தக் கணக்கெல்லாம் சேப்பாக்கத்தில் அமர்ந்திருந்த யாருக்கும் நினைவில் இல்லை. சாம் கரண் பௌலிங், எதிர்முனையில் கான்வே சதத்தை நெருங்கி வருகிறார் என்பதைக்கூட நிச்சயம் மறந்திருப்பார்கள். காரணம், தோனி!

சில ஏமாற்றங்களுக்குப் பிறகு, கடைசி இரண்டு பந்துகளுக்கு தோனி மீண்டும் ஸ்ட்ரைக் வர, முதல் பந்து வொயிடாக வீசப்பட, தோனி அப்பர்கட் போல பேட்டை வீச, பட்டும் படாமல் அடிக்கப்பட்ட அந்த ஷாட்டே சிக்ஸ் செல்ல போதுமானதாக இருந்தது. 'பௌலர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து, அப்படி நடக்கும்போது அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்வேன்' என்ற தோனியின் பார்முலா மீண்டும் கைகொடுத்தது. யார்க்கர் என வீசப்பட்ட பந்து லோ புல்டாஸாக, நெட் பிராக்டிஸில் தான் பயிற்சி செய்துகொண்டிருந்த ஷாட்டை அப்படியே ஜெராக்ஸ் எடுத்தார் தோனி. டீப் மிட் விக்கெட் திசையில் அபாரமான சிக்ஸர். சென்னை ரசிகர்கள் அதோடு கிளம்பச் சொல்லியிருந்தால்கூட கிளம்பியிருப்பார்கள். 201 ரன்கள் என்றது ஸ்கோர்போர்டு.

முன்னரே சொன்னதுபோல ஓவருக்கு பத்து ரன்கள் எடுப்பது ஒன்றும் கடினமான வேலையில்லைதான். ஆனால், சேப்பாக் ரசிகர்களின் ஆராவாரத்துக்கு இடையே கூடுதல் பிரஷரில் அதைச் சாத்தியப்படுத்துவது சற்றே கடினமான ஒன்றுதான். ரபாடாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு இம்பேக்ட் பிளேயராக வழக்கம்போல பிரப்சிம்ரன் சிங்கை இறக்கியது பஞ்சாப். கூடவே தவான். இங்கே அம்பதி ராயுடுவை உட்கார வைத்துவிட்டு ஆகாஷ் சிங்கை இம்பேக்ட் பிளேயராக்கி முதல் ஓவரையும் வீச வைத்தார் தோனி. தாமதம் கூடாது என்பதாக முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் தவான். அடுத்த தேஷ்பாண்டே ஓவரில் வந்த சுமாரான லெக் சைடு பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தன் ஃபிளிக் ஷாட் திறனை வெளிக்காட்டினார் பிரப்சிம்ரன். அடுத்த ஆகாஷ் ஓவரிலும் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வகைக்கு ஒன்றாக பார்சல் கட்ட, 2 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்திருந்தார் ஆகாஷ். நல்ல இம்பேக்ட், பஞ்சாப்புக்கு!

CSK vs PBKS
CSK vs PBKS

5வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து இந்த ஐபிஎல்லின் அதிவேக டீம் 50-ஐ பஞ்சாப் பதிவு செய்தது. அடுத்த பந்தும் பவுண்டரிக்குச் செல்ல ஆசைப்பட, ஷார்ட் தேர்டு திசையில் காத்திருந்த பதிரானா அதை கேட்ச்சாக மாற்றினார். 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து தவான் வெளியேறினார். 'பர்ப்பிள் கேப் எனக்குத்தான்' என்று துள்ளிக் குதித்தார் தேஷ்பாண்டே. ஆனாலும் பவர்பிளே முடிவில் 62/1 என்று தேவைப்பட்ட ரன்ரேட் கணக்கைச் சரியாகப் பின்பற்றியது பஞ்சாப். ஸ்பின்னர்கள் ஜடேஜா, மொயின் அலி அட்டாக்கைத் தொடங்க, பிரப்சிம்ரன் சிங்கை தனது இரண்டாவது ஓவரில் வெளியேற்றினார் ஜடேஜா. ஸ்டம்பிங் செய்வதில் தோனி விளையாட்டுக் காட்ட, கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்தது. அதேபோல அதற்கு அடுத்த ஓவரே 17 பந்துகளில் 13 ரன்கள் என்று திணறிக்கொண்டிருந்த அதர்வா டைடேவின் ரிட்டர்ன் கேட்ச்சைப் பிடித்து விக்கெட் கணக்கில் இன்னொன்றைச் சேர்த்துக் கொண்டார் ஜடேஜா.

வைரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் மதீஷா பதிராணாவின் கையில் பந்து சென்றது. மறுமுனையில் ஜடேஜாவும் நல்ல ஒத்துழைப்பைத் தர, சென்னை மெதுவாக கேமுக்குள் வந்தது. பஞ்சாப்புக்குத் தேவைப்படும் ரன்ரேட் 15-ஐ நெருங்கத் தொடங்கியது.

ஆனால், 'ஒரு ஓவர் இருந்தால் போதும் ஆட்டத்தை மாற்றிவிடுவேன்' என்பதாகக் காத்திருந்த லிவிங்ஸ்டோனிடம் வசமாகச் சிக்கினார் தேஷ்பாண்டே. 16வது ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு லெக் பையில் 4 ரன்கள் எனச் சட்டென கியரை மாற்றினார். அதிர்ஷ்டவசமாக வொயிடு பந்தை சிக்ஸருக்குத் தூக்க அவர் ஆசைப்பட, அது ருதுராஜிடம் கேட்ச்சாக மாறியது. ஆட்டத்தில் ட்விஸ்ட்டா, அல்லது மிகவும் தாமதமா? 24 பந்துகளில் 48 ரன்கள் தேவை. கைவசம் 6 விக்கெட்டுகள். சாத்தியமான இலக்குதான்.

CSK vs PBKS
CSK vs PBKS

பதிரானாவுக்கு 18, 20 ஓவர்கள் என ஏற்கெனவே பங்கு பிரித்துக் கொடுத்துவிட்டதால் 17வது ஓவரை வீசினார் ஜடேஜா. 'மேட்சிங் மேட்சிங்' என்பது போல அதில் மட்டும் 17 ரன்கள். இரண்டு சிக்ஸர்கள் வேறு பறந்தன. சுட்டிக் குழந்தை சாம் கரண் பறக்கவிட்ட சிக்ஸருக்குக் குழப்பத்துடனே கைதட்டியது சென்னை கூட்டம். 18வது ஓவர் வீச வந்தார் பதிரானா. தன் குருவான மலிங்காவை நினைவுபடுத்தும் வகையில் அட்டகாசமான ஒரு பந்தை வீசி சாம் கரணின் ஸ்டம்பைத் தகர்த்தார். ஆட்டம் மீண்டும் சூடுபிடித்தது. அதே ஓவரில் ஜிதேஷ் சர்மா ஒரு பவுண்டரி அடித்தாலும் மொத்தமாக 9 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார் பதிரானா.

கடைசி 2 ஓவர்களில் 22 ரன்கள் தேவை. ஆகாஷ் சிங் வீசுவார் என எதிர்பார்த்தால் தேஷ்பாண்டே வந்தார். பவுண்டரியுடன் தொடங்கிய ஜித்தேஷ் 4வது பந்தில் சிக்ஸருக்கு ஆசைப்பட, சப்ஸ்டிடியூட்டாக உள்ளே இருந்த ஷைக் ரஷீத் அதை கேட்ச்சாக மாற்றினார். பேலன்ஸ் தடுமாறிய அவரின் கால்கள் பவுண்டரி லைனைத் தொட்டுவிட்டதாகவே தோன்றியது. ஆராய்ச்சி செய்த மூன்றாவது நடுவர், இல்லை என்பதாகத் திட்டவட்டமாக அறிவித்து அவுட் என்றார். ஆனால், அதில் ஒரு குழப்பம் இருப்பது உண்மைதான். ரசா அடுத்து ஒரு பவுண்டரி விரட்ட, கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.
CSK vs PBKS
CSK vs PBKS

வொயிடாக வீசப்பட்ட புல் லென்த் பந்து, இன்ஸ்விங் யார்க்கர், ஸ்லோயர் பால், நேராக வீசப்பட்ட புல் லென்த் பந்து எனக் கணிக்க முடியாத காம்பினேஷனில் அசத்தினார் பதிரானா. பவுண்டரிகளை அது தடுத்தாலும் 4வது, 5வது பந்துகளில் மொத்தம் 4 ரன்களை பஞ்சாப் ஓடியே எடுத்துவிட, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலை. மூன்று ரன்களையும் எப்படியாவது ஓடியாவது எடுக்கவேண்டும் என்று நினைத்து அம்பயர்களிடம் ஏதோ விவாதித்தனர் பேட்டர்கள். ஷாரூக்கானுக்குப் பதிலாக வேறொருவர் இறங்கலாமா என்று கேட்டதாக ராகுல் சஹார் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முதல் 5 பந்துகளைப் போலவே கடைசி பந்தையும் சிறப்பாகவே வீசினார் பதிரானா. அவுட்சைட் ஆஃபில் ஸ்லோவாக வீசப்பட்ட பந்தைக் கவனமாக ஸ்கொயர் லெக் பக்கம் திருப்பினார் ரசா. அங்கே சர்க்கிளுக்குள் மட்டுமே ஆள் இருந்ததால் மெதுவாக பவுண்டரி நோக்கிச் சென்றுகொண்டிருந்த பந்தைப் பிடித்து வீசுவதற்குள் 3 ரன்களை ஓடியே எடுத்துவிட்டது பஞ்சாப். பதிரானா அபாரமாக வீசியிருந்தும் 9 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் பஞ்சாப் சேப்பாக் கோட்டையைப் பிடித்தது.

92 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த கான்வே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிளேஆஃப் கனவிலிருக்கும் சென்னை, அதைச் சாத்தியப்படுத்த வேகப்பந்து வீச்சில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். தீபக் சஹார், பென் ஸ்டோகஸ் எப்போது வருவார்கள் என்பது தெரியாத நிலையில், பதிரானா, தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங் என அனுபவமில்லாத இளைஞர்களை வைத்தே சமாளித்து வருகிறார் தோனி. பதிரானா மட்டுமே அதில் சிறப்பாக வீசிவருகிறார், அட்டகாசமான டெத் பௌலராக உருவாகி வருகிறார். தேஷ்பாண்டே விக்கெட்டுகள் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்குவது பெரும் சிக்கலாக இருக்கிறது.

CSK vs PBKS
CSK vs PBKS

பேட்டிங்கைப் பொறுத்தவரை, சிறந்த பார்மிலிருக்கும் பேட்டர்கள் அதிக பந்துகளைச் சந்திக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை மனதில் வைத்து, தடுமாறும் ஜடேஜாவுக்கு முன்னதாக இனி கட்டாயம் தோனி களமிறங்கியாக வேண்டும். இதைத் தவிர்த்து தீக்ஷனாவின் ஃபீல்டிங் கவலைக்குரியதாக உள்ளது. அவரின் கேரம்பால் தனித்துவமானது என்றாலும் பௌலிங்கில் பெரிய தாக்கத்தை அவர் இந்த சீசனில் இன்னமும் ஏற்படுத்தவில்லை. எனவே அவருக்குப் பதிலாக பிராப்பர் ஸ்பின்னரான சான்ட்னரை முயன்று பார்க்கலாம். பௌலிங், பேட்டிங் டிபார்ட்மென்ட்களில் யாரேனும் ஒருவர் தவறு செய்தாலும் அது ஆட்டத்தின் முடிவையே மாற்றும் திறன்கொண்டதாக மாறிவிடுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்தப் போட்டியை வென்றிருந்தாலும் பஞ்சாப், சென்னைக்கு அடுத்து 5வது இடத்தில் நிற்கிறது. இனி வரும் அடுத்தடுத்த போட்டிகள் இரண்டு அணிகளுக்குமே முக்கியமானவை. எந்த சீசனிலும் இல்லாத வகையாக பிளேஆஃப் இடங்களுக்கு 7 அணிகள் வரை போட்டிப் போடும் என்றே தெரிகிறது. போகப்போக இந்த எண்ணிக்கை குறையலாம். ஆனால், சுவாரஸ்யம் கூடவே செய்யும்!
CSK vs PBKS
CSK vs PBKS
எந்த நான்கு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.