கத்தி மீதான பயணமாக தொடரும் லீக் சுற்றின் இறுதிக்கட்ட ஓட்டத்தில் தனது வெற்றியைக் கையொப்பமாக இட்டு இரு புள்ளிகளை மதிப்பெண்களாகப் பெற்றுள்ளது சிஎஸ்கே.
பழைய சிஎஸ்கே - மும்பை மோதல்களை எல்லாம் நினைவுக்குக் கொணர்ந்து முன்வருவதை எதிர்நோக்கும் வகையில், இரு அணிகளுமே ப்ளே ஆஃப்பினை நோக்கி ஓடிக் கொண்டுள்ளன. சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலமாக ப்ளே ஆஃப்பினை சிஎஸ்கே நெருங்குகிறது.
டேபிளின் அடியில் பதுங்கும் அணிகள் ரிதம் செட்டாகி க்ளைமாக்ஸுக்கு முன்னதாக பாய்ச்சலுக்குத் தயாராவதை பல சீசன்களாகப் பார்த்திருக்கிறோம். தங்களால் ப்ளே ஆஃப் பெர்த்தை பிடிக்க முடியாவிட்டாலும் டம்ளருக்குள் அடைபட்ட தவளைகள் கதையாக மேலேறத் துடிக்கும் அணிகளை கீழே இழுத்துப் போடும் வேலையை வில்லங்கமாக அவை செய்யும். இம்முறை இப்போட்டிக்கு முன்னதாக கொஞ்சமாக காட்சிகள் மாறியிருந்தன.

பத்தாவது இடத்தில் இருந்தாலும் டெல்லிக்கான கதவுகள் மூடப்படவுமில்லை. இரண்டாவது இடத்திலே இருப்பதால் மட்டுமே சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதிப்படவுமில்லை. ஆட்டத்தின் சுவாரஸ்யத்திற்கான மின்சாரம் அங்கேயே உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. டாஸினை வென்ற தோனி பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க லக்னோவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட பிட்ச் என்பதுவே 200+ ஸ்கோர் எட்டப்படலாம் என்ற தோற்றப் பிழையை உண்டாக்கியது. ஆனால் நடந்ததோ வேறு.
பொதுவாகவே சிஎஸ்கேவின் பவர் ப்ளே ஓவர்கள் வர்ண ஜாலங்கள் காட்டுபவையும் அல்ல, கருப்பு வெள்ளையில் களையற்று இருப்பவையும் அல்ல. சற்றே சராசரியானதே.
இந்த சீசனில் இப்போட்டிக்கு முன்னதாக பேட்டிங்கில் சிஎஸ்கேவின் சராசரி ரன்கள் 51.73. அதேநேரம் 11 போட்டிகளிலும் 8 விக்கெட்டுகளை மட்டுமே விட்டிருந்தனர். இப்போட்டியிலும் ஏறக்குறைய அதே நிலையே நீடிக்க 49/1 என முடித்தனர். ஸ்லோ விக்கெட், Sticky பிட்ச் என பேட்ஸ்மேன்களுக்கு சற்றே சவாலானதாகவே களமும் இருந்தது, மூவ்மெண்டும் பௌலர்களுக்கே நேசக்கரம் நீட்டியது. இதனால் கான்வே மற்றும் கெய்க்வாட் இருவருமே தொடக்கம் முதலே சற்றே திணறியே வந்தனர். வார்னர் மூன்று ஓவர்களோடு வேகப்பந்து வீச்சாளர்களை நிறுத்திவிட்டு சுழலுக்குள் சரணடைய அதுவும் நிரம்பவே ஓப்பனர்களை சோதித்தது. சில டிஆர்எஸ் முடிவுகளை அவர்கள் திறம்படக் கையாளா விட்டிருப்பினும் பலத்த காற்று டெல்லி பக்கமே. 6.1 ஓவரிலேயே அக்ஸர் ஓப்பனர்களை அனுப்பி வைத்து அதகளமாக ஆரம்பித்தார்.

அடுத்த ஏழு ஓவர்கள் டெல்லியின் ராஜ்ஜியமே. களத்தைக் கணித்து உள்ளே கொண்டு வரப்பட்டிருந்த லலித் யாதவ் மட்டுமின்றி குல்தீப் மற்றும் அக்ஸரும் இணைந்து சிஎஸ்கே ஸ்கோர் செய்யக் கூடிய எல்லாப் பாதையையும் தேடி அடித்தனர். பெரிதாக ரன்களைத் தேற்றவே முடியாத அளவு ஸ்பின்னர்களை பகடையாக்கி உருட்டி வார்னர் செக் வைத்து வேகத்தடையிட 7 - 13 ஓவர்களில் 39 ரன்களை மட்டுமே சிஎஸ்கேவால் சேர்க்க முடிந்தது. ரஹானேவுக்கு வீசி அவர் அடித்த பந்தினை அதிவேகமாக வலப்புறம் பாய்ந்து அற்புதமாக லலித் பிடிக்க ரஹானே 21 ரன்களோடு வெளியேறினார். பவர் பிளேவிற்கு உள்ளேயோ வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போதோ அதிரடியாகக் காட்சியளிக்கும் ரஹானேவின் பேட் ஸ்பின்னர்களுக்கு எதிராகவும் பவர்பிளேவுக்கு வெளியேயும் சற்றே அமைதி முலாம் பூசிக் கொள்கிறது.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் யாருமே 25 ரன்களைத் தாண்டவில்லை. எனினும் ஓரளவு சவாலான இலக்கை நிர்ணயிக்க எப்படி அவர்களால் முடிந்தது என்றால் உபயம் என மத்தியில் துபேவின் பேரையும் இறுதிக் கட்டத்தில் வழக்கம் போல தோனியின் பேரையும்தான் அழுத்தமாக எழுதவேண்டும்.
200-ஐ தாண்டிய அவர்களது ஸ்ட்ரைக்ரேட்டினையும் பின்குறிப்பு என சேர்த்து எழுதவேண்டும். ஸ்பின் பந்துகளை அப்படியே சாப்பிடுவது சிவம் துபேயின் வழக்கம். ஃபுட் மூவ்மெண்ட் என்பது அணுவளவும் இருக்காது தான் என்றாலும் பவுண்டரிகளைக் க்ளியர் செய்வதில் வித்தகர். இந்த போட்டியிலும் அவரது அந்த அதிரடி அவதாரமும் லலித் யாதவ்வினை அட்டாக் செய்த விதமும் ஒரு பெரிய ஓவருக்கு வித்திட்டது. லலித்தை இரு பேக் டு பேக் சிக்ஸர்களால் சிவம் துபே ஸ்தம்பிக்க வைக்க இன்னொரு பவுண்டரி மட்டுமின்றி சிக்ஸரோடு ஓவரை முடித்து அம்பதி ராயுடுவும் சிறப்பித்தார். 23 ரன்கள் இந்த ஓவரில் சேர்க்கப்பட்டது. 140-ஐ தொடுவார்களா என இருந்த சந்தேகத்தை மட்டுமல்ல கியரையும் துபே மாற்றிய ஓவரிது. ரஹானே விக்கெட்டும் அந்தக் கேட்சும் ஹீரோவாக்கிய லலித்தை அந்த 23 ரன்கள் தான் வில்லனாக்கியது.
துபேவால் சேதாரமடைந்த லலித் யாதவ் ஓவர் போலவே கலீல் வீசிய 19-வது ஓவரை தோனி டார்கெட் செய்ய 21 ரன்களை அந்த ஓவர் மட்டுமே கொண்டு வந்து விட்டது. ஸ்லோ பாலில் வந்த அந்த இரு சிக்ஸர்களிலும் கலீலினை அடித்து துவம்சம் செய்தார் தோனி. இறுதி ஓவர்களில் அவரது சிக்ஸர்கள் ஏற்படுத்தி வைத்துள்ள வசீகரத்தையும் அலாதி ஈர்ப்பினையும் அதைக் கொண்டாடும் ரசிகர்களின் ஆரவாரத்தையும் எதனாலும் ஈடுகட்ட முடியாதென்பதே உண்மை. அவரது பேட்டின் அசைவுக்கேற்றாற் போல் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்து ஆனந்தக் கூத்தாடுகிறது.
இந்த இரு ஓவர்களில் வந்து சேர்ந்த 44 ரன்களைக் கழித்துப் பார்த்தால் மற்ற ஓவர்களில் வெறும் 6.8 ரன்ரேட்டோடே சிஎஸ்கே ரன்களை சேர்ந்திருந்தது. வார்னரின் பௌலிங் மாற்றங்களும் மிக முக்கிய காரணி. தனது சுழல் பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்திய பாணி மட்டுமல்ல மிட்செல் மார்ஷினை அவர் பயன்படுத்திய விதமும் டெல்லிக்குக் கைகொடுத்தது. குறிப்பாக இறுதி ஓவரில் இஷாந்த் ஷர்மாவுக்கு ஓவர்கள் மீதயிருந்தும் அவர் மிட்செல் மார்ஷிடம் நகர்ந்தது டார்கெட் எகிறாமல் இருக்க கைகொடுத்தது. இறுதி ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 167 ரன்களோடு சிஎஸ்கேவை முடிக்க வைத்தார்.
கடினமான இலக்கெனினும் எட்ட முடியாதது அல்ல என அக்ஸர் முதல் பாதி இன்னிங்க்ஸிற்குப் பின் கூறியிருந்தார். அதேநேரம் பனிப்பொழிவும் சற்றே சிஎஸ்கேவுக்கு சவால் விடுக்கலாம் என்பதுவும் வெற்றி சமன்பாட்டினைக் குழப்பும் கூறுகளில் ஒன்றானது. ஆனால் தொடக்கத்தில் தீபக் சஹாரும் இறுதிக்கட்ட பணிகளை பதிரானாவும் சிறப்பாகச் செய்து சிஎஸ்கேவினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சற்றே அதிகமான எக்கானமியோடு பந்து வீசியிருந்தாலும் அவர்கள் கூட்டாக எடுத்த 5 விக்கெட்டுகள்தான் நல்ல தொடக்கத்தையும் முடிவினையும் சிஎஸ்கேவின் கணக்கில் வரவு வைத்தன.

குறைந்த இலக்கு என்பதால் என்னதான் சவாலான சூழல் நிலவியிருந்தாலும் தங்களது சேஸிங்கை சரியாக திட்டமிட்டிருந்தால் டெல்லியால் வெற்றி பெற்றிருக்க முடியும். பவர்பிளேயிலேயே தவறாகவே தொடங்கியிருந்தனர். 3.1 ஓவரிலேயே முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தனர். ஸ்பின்னர்களால் விக்கெட் எடுக்கக் கூடிய களத்தில் அவர்களது வரவுக்காகக் காத்திருக்காமல் பவர்பிளேவில் பாதிக் கிணறைத் தாண்டுவதற்கு முன்னதாகவே விக்கெட் வேட்டையை தீபக் தொடங்கியிருந்தார். புதுப் பந்தில் விக்கெட் வீழ்த்தும் இந்த தீபக் சஹாரைத்தான் அணி தொடரின் தொடக்கத்தில் நிரம்பவே மிஸ் செய்தது. அவரது இந்த பழைய ஃபார்ம் முக்கிய கட்டத்தில் அணிக்கு பலம் சேர்க்கிறது.
துஷார் தேஸ்பாண்டேவைப் பொறுத்தவரை விக்கெட் அல்லது வீர மரணத்தோடு கூடிய ரன் வரம் என்ற பாணி அவரை லெக் ஸ்பின்னர்களுக்கான டெம்ப்ளேட்டோடு பொருத்திப் போக வைக்கிறது. தீபக் முதல் ஓவரில் டெல்லிக்குக் கொடுத்த வெறும் 1 ரன்னுக்கு பாவ விமோச்சனம் தேடுவது போல் தான் வீசிய முதல் ஓவரில் 12 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார் துஷார். ஆயினும் மீதம் வீசிய இரு ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து தவறினையும் நேர் செய்திருந்தார்.

மத்தியில் இம்பேக்ட் பிளேயராக வந்திருந்த மணீஷ் பாண்டே மற்றும் ரோசோவுக்கு இடையேயான 59 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் சிஎஸ்கேவை நிரம்பவே சோதித்தது. எனினும் வெறும் 6 ரன்ரேட்டோடு அவர்களால் சேர்க்கப்பட்ட ரன்கள் இறுதி ஓவர்களை கடினமானதாக்கின. இறுதியாக வக்கார் யூனிஸின் இன்ஸ்விங்கிங் யார்க்கரினை நினைவுப் படுத்தும் டெலிவரியில் பதிரானா மணீஷ் பாண்டேவினை வெளியேற்றினார். மத்திய ஓவரில் அவர் கொண்டு வரும் திருப்புமுனைகள் சிஎஸ்கேவினை மிக தன்னம்பிக்கையோடு டெத் ஓவருக்குள்ளும் நுழைய வைக்கின்றன.
எல்லா பௌலர்களும் சிறப்பாக வீசியிருந்தாலும் மொயின் அலி மற்றும் ஜடேஜாவின் ரன்களற்ற வறண்ட ஸ்பெல்களும் சேர்ந்தேதான் வெற்றியை முழுமையாக சிஎஸ்கேவிற்கு வசப்பட வைத்திருந்தன. எவ்வளவு ரன்களைக் கொடுத்தாலும் டிஃபெண்ட் செய்ய முயலாமல் முனை மழுங்கிய பௌலிங் யூனிட்டினை பதிரானாவின் வரவும் தீபக் சஹாரின் கம்பேக்கும் வலுப்படுத்த அதனை சாணை பிடித்து கூர்மையான வாளாக மாற்றியுள்ளார் கேப்டன் தோனி. அதன் பலனாகவே வெற்றியின் வழியில் அணி திரும்பி இருக்கிறது.
இந்தப் போட்டியின் முடிவினால் இடங்களில் மாற்றமில்லை எனினும் ப்ளே ஆஃப்பிற்கான தனது வாய்ப்பிற்கான நிகழ்தகவினை சிஎஸ்கே அதிகரித்துக் கொண்டுள்ளது. டெல்லிக்கான வாய்ப்பு இன்னமும் முடியவில்லை என்பதே கூடுதல் சுவாரஸ்யம்.