ஐ.பி.எல் 16வது சீசனின் 55வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதவிருக்கின்றன. இதற்கான பயிற்சிகளைக் கடந்த இரண்டு நாள்களாகவே சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சி.எஸ்.கே அணி மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்றையப் பயிற்சிக்குப் பிறகு ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' ஆவணக் குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் மற்றும் பொம்மன் - பெல்லி தம்பதியை நேரில் சந்தித்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கௌரவப்படுத்தியிருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக நினைவுப் பரிசுகளும், யானைகள் நலனுக்காக முதுமலை புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளைக்குக் காசோலையும் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் பேசும்போது, “யானைப் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லியை, இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் உடன் கொண்டாடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் சொந்த மக்கள் உலக அரங்கை எட்டியிருப்பது நம் அனைவருக்கும் மிகவும் பெருமைக்குரிய விஷயம். ஆசிய யானைகளைப் பாதுகாப்பது காலத்தின் தேவையாகும். அம்மு மற்றும் ரகு ஆகிய இரண்டு யானைகளின் வாழ்க்கைச் செலவுகளுக்குப் பங்களிப்பதன் மூலம் எங்கள் ஆதரவை அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

கேப்டன் தோனியும் பொம்மன், பெல்லி கார்த்திகி கொன்சால்வஸ் ஆகியோருக்குத் தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து சி. எஸ். கே அணியின் ஜெர்சியையும் பரிசாக வழங்கியுள்ளார். மேலும், தனது மகளான ஷிவாவையும் அழைத்து பொம்மன், பெல்லி இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்துக் கைகுலுக்கச் செய்தார்.