`வார்னரின் டான்ஸ்... விராட் - டிவிலியர்ஸ் முடிவு...!’ - #SocialMedia-வில் கிரிக்கெட்டர்கள்

கொரோனா நோய் தொற்றால் அனைத்து சர்வதேச விளையாட்டு போட்டிகளும் தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் செய்யும் சேட்டைகள்.
ANZ நியூசிலாந்து கிரிக்கெட் விருதுகளை பெற்ற வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளனர். ஊரடங்கு முடிந்து, கூடிய விரைவில் மைதானத்தில் சக வீரர்களோடு விளையாட பெருவிருப்பம் கொண்டுள்ளதையும் பதிவிட்டனர். அவ்வாறு ராஸ் டெய்லர் வென்ற ஆண்டின் சிந்த வீரர் (player of the year) விருதுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவரது குழந்தைகளின் குறும்புப் பதில்களை விடியோவாக வெளியிட்டது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.
ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கி இருந்தும் ஜூம் செயலியில் வீடியோகாலில் இணைந்து ஸ்காட்லாந்து வீராங்கனைகள் செய்யும் சேட்டைகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீடியாவாக வெளியிட்டிருக்கிறது. கிரிக்கெட் பேட் பிடித்த கைகளால் கரண்டியுடன் போஸ் கொடுக்கிறார்கள் ஸ்காட்லாந்து மகளிரணி வீராங்கனைகள்.
உங்கள் கனவு பேட்ஸ்மேன் ஜோடி யார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் கேட்க, பேட்ஸ்மேன்களை குறித்து பாகிஸ்தான் பௌலர்களான ஹசன்அலியும் வாஹப் ரியாஸும் பேசியிருக்கிறார்கள்.
வீரர்கள் to வீடியோ மேக்கர்கள்!
வீட்டில் அடைப்பட்டதன் விளைவாக முகத்தில் முக்கால் கிலோ குறைந்து நாமே சின்ன வயசுல விளையாடின விளையாட்டெல்லாம் திரும்ப விளையாட ஆரம்பிக்கும்போது எப்போதுமே பேட்டும் கையுமாக சுற்றியவர்கள் நிலைமை பாவம்தான்... அதனால்தான் கிரிக்கெட்டை இன்டோர் கேமாக மாற்றிவிட்டார் நம்ம ஷ்ரேயாஸ் கோபால்.
கிரிக்கெட் விளையாட பேட்ஸ்மேன், பௌலர் என குறைந்தது இரண்டு பேர் வேண்டும். ஆனால், தனியொருவனாக தனிமையிலே இனிமை காண முயற்சி செய்திருக்கிறார் கே எல் ராகுல். தனியாளாக தான் செய்யும் வேலைகள் குறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள வீடியோ சுவாரஸ்யமானது.
இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர், முதல் நாளில் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதையே மறந்து விளையாடச் செல்வது போல நகைச்சுவையான வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். பேட்டிங் செய்ய ஹெல்மெட், பேட், கிளவுஸ் மற்றும் பேட்டுடன் அவர் ஒரு அறையில் இருந்து வெளியே வந்து மற்றொரு அறையின் கதவைத் திறக்க, அங்கு போலீஸ் சைரன் சத்தமாக ஒலிக்கவே மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்புவது போல் வீடியோவில் அவர் காமெடி பண்ணியிருப்பது வைரல் ரகம்.
சும்மாவே சொகுசு வாழ்க்கை வாழும் விஐபிக்கள் ஊரடங்கு வாழ்வை சொல்லவா வேண்டும்....? என வானத்தை பார்த்து ஆச்சர்யப்பட தொடங்கினால், அங்கதான் டுவிஸ்ட் வைக்கிறார் ஷிகர் தவான். என்னதான் பெளலர்களுக்கு வில்லன் என்றாலும் வீட்டில் மனைவி சொல் தட்டாத கணவன், தான் என்பதை இன்ஸ்டா வீடியோ வழியாகக் கடத்துகிறார் அவர்.
மேலும், மகன் ஸோரோவர் தாவானுடன் குத்துச்சண்டை விளையாடுதல் விநோத மேக்கப் செய்தல் என பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் தவான்.
பச்சை நிறமே.....
ஊரடங்கில்தான் பலர் வீட்டில் உள்ளவர்களின் முகங்களைக் கூட உற்று பார்ப்பதாகச் சொல்வார்கள். அப்படி ஒரு அதிவேக உலகம் இது. இதே ஊரடங்கில் வீட்டைச் சுற்றி உள்ள பலவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார் வாட்சன். வீட்டின் அருகில் உள்ள மரத்தில் அமர்ந்துள்ள குருவியுடன் புகைப்படம் எடுத்து, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்லிப்பில் செல்லப்பிராணி....
வீட்டில் எவ்வளவு பேர் இருந்தாலும் தனிமையைத் துரத்துவது செல்ல பிராணிகள்தான். நாம் என்ன சொன்னாலும் தலையாட்டும் ஜீவன்கள் அவைதானே. அந்தவகையில், தான் பேட்டிங் செய்ய தன் செல்லபிராணியை ஸ்லிப்பில் நிறுத்தி வினோத விளையாட்டை விளையாடியுள்ளார் கேன் வில்லியம்சன். அவர் பந்தை சரியாக நாய்குட்டிக்கு அடிக்க, துள்ளிக் குதித்து அதை வாயால் கேட்ச் செய்கிறது அவரது நாய்.
அதேநேரம், நியூசிலாந்து பேட்ஸ்மேன் டாம் பாண்டனின் நாய், கேட்சைத் தவறவிட்டு கேசுவலாக வேடிக்கை பார்க்கிறது.jஊ
பொறுப்பான தந்தை!
கிரிக்கெட், கோல்ஃப் என எல்ல விளையாட்டுக்களையும் மகனுக்குக் கற்றுக்கொடுத்து. ஊரடங்கில் ஜாலியான அப்பாவாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறார் பென் ஸ்டோக்ஸ்.
தனது செல்ல மகளுக்கு ஜாலியான அப்பாவாக ஜொலிக்கிறார் டேவிட் வார்னர். ஐபிஎல் இல்லாத சோகத்தைப் போக்க சன் ரைசர்ஸ் அணியின் ஜெர்சியுடன் மகள் மற்றும் மனைவி ஆகியோருடன் புட்டபொம்மா தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் செம வைரல்.
வார்னர், தனது மகள் ஐவி மே-க்கு குத்துச்சண்டை சொல்லிக்கொடுக்கும் வீடியோ க்யூட் , சென்டிமென்டல் டச்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு லாங் ப்ரேக், ஐபிஎல் தொடரும் இல்லை. ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் தோனி, தனது rx350 பைக்கில் கியூடான அப்பாவாக மகள் ஜிவாவை ஏற்றிக்கொண்டு வீட்டை சுற்றி கெத்தாக ரெய்டு வருகிறார். இந்த வீடியோவை அவரது மனைவி சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உதவிக்கரம் நீட்டும் கிரிக்கெட்டர்கள்!
இந்திய வீரர்களை பொறுத்தவரையில் சச்சின், கங்குலி, தவான், இர்பான் பதான், கம்பீர், ரஹானே, ரெய்னா என பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கும் அவரவர் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் நன்கொடை அளித்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்திருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கிப்ஸ் தனது ஃபேவரைட் பேட்டை ஏலத்தில் விட இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த அணி 438 ரன்கள் அடித்து வென்றபோது பயன்படுத்திய பேட்டை கொரோனா பாதிப்பு நிதிக்காக ஏலம் விட்டிருக்கிறார் அவர். பாகிஸ்தான் வீரர் அசார் அலியும் தான் முச்சதம் அடித்த பேட் மற்றும் ஜெர்சியை ஏலம் விட்டிருக்கிறார்.
விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி 96 பந்துகளில் 229 ரன்கள் குவிந்த போட்டியில் பயன்படுத்திய விராட் கோலியின் பேட், கிளவுஸ் மற்றும் டிவில்லியர்ஸின் ஜெர்சி மற்றும் பேட் ஆகியவற்றை ஏலம் விட்டிருக்கிறார்கள்.
பொழுதுபோக்கான பதிவுகள் மட்டுமின்றி கொரோனா பாதிப்புக்கான நிதியுதவி, அதுகுறித்த விழிப்புணர்வு என தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்தும் கிரிக்கெட்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.