Published:Updated:

``தோனியையும் ரிஷப் பன்ட்டையும் ஒப்பிடுற மாதிரிதான் எனக்கும் அப்போ நடந்தது!'' - பத்ரிநாத்

S.Badrinath

``இந்தியால இப்படி ஒரு முயற்சியை முதல் முதலா நாங்கதான் எடுத்திருக்கோம். இந்திய விளையாட்டுத் துறையில ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தணும்னு விரும்புறோம்" என்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்.

``தோனியையும் ரிஷப் பன்ட்டையும் ஒப்பிடுற மாதிரிதான் எனக்கும் அப்போ நடந்தது!'' - பத்ரிநாத்

``இந்தியால இப்படி ஒரு முயற்சியை முதல் முதலா நாங்கதான் எடுத்திருக்கோம். இந்திய விளையாட்டுத் துறையில ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தணும்னு விரும்புறோம்" என்கிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்.

Published:Updated:
S.Badrinath
நம் உடலில் மூளைதான் மிகமுக்கிய உறுப்பு என்பதை மக்களால் உணர்ந்துகொள்ள முடிந்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன். உடைந்த கையைப்போல், உளவியல் பிரச்னையைக் கண்ணால் பார்க்க முடியாது என்பதால், அது தனி மனிதருக்கோ அவர் குடும்பத்துக்கோ தீங்கை விளைவிக்கும். பாழாக்கும் என்று அர்த்தம் இல்லை.
டெமி லவாடோ

உளவியல் பிரச்னைகள் பற்றி இப்படிச் சொன்ன அமெரிக்கப் பாடகர் டெமி லவாடோவுக்கு வயது 27-தான். மனச்சோர்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு வயது 18. `சமூக, பொருளாதாரப் பிரச்னைகள் இல்லாத ஒருவருக்கு எதனால் மனச்சிக்கல் வரவேண்டும்?’ நம் பொதுப்புத்தி இப்படித்தான் சிந்திக்கும். பயம், கவலை, எதிர்பார்ப்பு, நெருக்கடி என ஒருசிலர் எளிதாகக் கடந்துவிடும் சில விஷயங்களை மற்றவர்களால் அப்படி கடந்துபோக முடிவதில்லை. உடைந்து நொறுங்குவிடுகிறார்கள். ஆனால், அதை வெளியில் சொல்வதற்கான வெளியை இந்தச் சமூகம் அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. அதனால், பலரும் தங்களுக்கு நெருங்கியவர்களிடம் கூடத் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்குகிறார்கள். விளைவு, இன்று உலக அளவில் 45 கோடி மக்கள் உளவியல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் (WHO ரிப்போர்ட், அக்டோபர் 2019). உலக அளவில் அதிகம் பேரை பாதித்திருப்பது இன்று உளவியல் பிரச்னைகள்தான்!

எத்தனையோ பரிணாம மாற்றங்களையும், புரட்சிகளையும் கண்ட விளையாட்டு உலகமுமே இத்தனை காலம் உளவியல் பிரச்னைகளைப் புறக்கணித்தே வந்திருக்கிறது. எதிர்பார்ப்பு, நெருக்கடியெல்லாம் விளையாட்டின் ஒரு அங்கம் என்று இத்தனை நாளும் ஒருவர் அதை வெளியில் சொல்வதற்கான வாய்ப்பே கொடுக்காமல் இருந்திருக்கிறது. ஒருவழியாக, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மைக்கேல் ஃபெல்ப்ஸ், கிளென் மேக்ஸ்வெல் எனப் பெரும் நட்சத்திரங்கள் தங்கள் பிரச்னைகளைப் பேசும்போதுதான் `இவர்களுக்கும் பிரச்னை இருக்குமா’ என்று காதுகொடுக்கிறது உலகம். பல லட்சம் பேரின் எதிர்பார்ப்பையும் நெருக்கடியையும் சந்திப்பவர்களுக்கு எப்படியான சிக்கல்கள் இருக்கும்! அதேபோல் இங்கு எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிக்கல்கள் இருப்பதில்லை. சிறப்பாகச் செயல்பட முடியாதபோது ஒரு வீரர் பாதிக்கப்படுகிறார் என்றுதான் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட்டர் சாரா டெய்லர் தன் சிக்கல்களுக்கான காரணத்தைச் சொல்லும்போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ``என்னால் தொடர்ந்து கிரிக்கெட் கரியரில் உச்சத்தில் இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னைப் பாதித்தது” என்றார் அவர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சிக்கல்கள் இருக்கின்றன. `ஒரு மெடல் ஜெயிக்க முடியல’ என்ற வார்த்தைக்குப் பின்னால் எத்தனை வலி, எத்தனை போராட்டம் இருக்கும்.

அந்த வலிகளுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு விடை சொல்லும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத். தன் கிரிக்கெட் கரியர் முழுதும் பல சவால்களை எதிர்கொண்டவர். பர்சனல் பிரச்னைகள், கிரிக்கெட் களத்தில் சந்தித்த நெருக்கடிகள் என ஒவ்வொரு கட்டத்திலும் அனைத்தையும் கடந்துவந்திருக்கிறார். சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோர் கொண்ட மிடில் ஆர்டரில் தனக்கான இடத்துக்காக வருஷக்கணக்கில் காத்திருப்பது சாதாரண விஷயம் இல்லையே! ஆடிய அறிமுக இன்னிங்ஸிலேயே அரைசதம். ஆனாலும், வாய்ப்பு கிடைத்தது 2 டெஸ்ட் போட்டிகளில்தான். ஆடிய ஒரே டி-20 போட்டியிலும் ஆட்ட நாயகன். ஆனால், அதன்பின்பு வாய்ப்புகளே இல்லை.

இந்தியாவுக்காக ஆடுவது பெருமைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒவ்வொரு டொமஸ்டிக் சீசன்களிலும் ரன்களை குவித்துக்கொண்டே இருந்தும், ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான செயல்பாடுகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தும், வாய்ப்புக்காக காத்துக்கொண்டேதான் இருந்தார். 100 சதவிகித உழைப்பைக் கொடுத்த பின்னரும், தன்னை நிரூபித்த பின்னரும் பேக் அப் வீரராகப் பயன்படுத்தப்பட்ட ஒருவர், விளையாட்டு வீரர்களுக்கு மைண்ட் டிரெய்னிங் வேண்டும் என்று யோசித்ததில் ஆச்சர்யம் இல்லை. விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளர்களுக்கு உளவியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கடத்த MFORE என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார் பத்ரி! இந்த அமைப்பைப் பற்றி, விளையாட்டில் உளவியலின் தாக்கம் பற்றி, அவர் சந்தித்த சிக்கல்கள் அனுபவம், இந்திய அணிக்கு ஆடிய அனுபவம், சி.எஸ்.கே, தோனி என நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

``MFORE பத்தி சொல்லுங்க. இதுமூலமா என்ன மாதிரியான விஷயங்கள் செய்யப்போறீங்க?"

``இது லாப நோக்கமில்லாத அமைப்பு. ரொம்ப நாளா இப்படி ஒண்ணு தொடங்கணும்னு ஆசைப்பட்டேன். கடந்த 8 மாசமா இதுக்காக வேலை செஞ்சிட்டு இருக்கோம். அத்லெட்ஸ்லாம் அவங்களோட உடம்பை சரியா வச்சுக்க ஜிம் போறாங்க, வொர்க் அவுட் பண்றாங்க, தொடர்ந்து ட்ரெய்னிங் எடுத்துட்டே இருக்காங்க. ஆனா, நம்ம மனசு எவ்வளவு திடமா இருக்கணும்னு நமக்குப் புரியிறதில்ல. அது ரொம்ப முக்கியமான விஷயம். திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நம்ம மனசோட வலிமை ரொம்ப முக்கியம். நாம சொல்றோம், இந்தியா ஒலிம்பிக்ல பெருசா ஜெயிக்கிறது இல்லைனு. தொடர்ந்து சிறப்பா செயல்படுவாங்க. ஆனா, அந்தக் கடைசிக் கட்டத்துல, அவங்களால சிறப்பா செயல்படமுடியாமப் போயிடும். 100 ரேஸ் நல்லா ஓடினாலும், அந்தக் கடைசி ரேஸ்ல நல்லா ஓடணும். நாம அங்கதான் சறுக்குறோம். காரணம், அந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியறதில்ல. அந்த ஒரு திறன் எல்லா அத்லெட்ஸ்க்கும் இருக்கணும். அதை எல்லோரும் சரியா மேனேஜ் பண்ணணும் அப்டிங்கறதுதான் எங்களோட நோக்கம். இதுக்காக நாங்க எந்த அத்லெட்ஸ்கும் சார்ஜ் பண்ணப் போறதில்ல. அவங்க செயல்பாட்டுல ஒரு பாசிட்டிவிட்டியை ஏற்படுத்தணும்னு நினைக்கிறேன்."

``வீரர்கள் தங்களோட பிரச்னைகளை வெளியே பேச ஏன் தயங்கறாங்கனு நினைக்கிறீங்க?"

``நிறைய வீரர்கள் அவங்களோட பிரச்னைகளை வெளிய சொல்ல சங்கடப்படறாங்க. அவங்களுக்கு ஒரு insecurity இருந்துட்டே இருக்கு. கோச்கிட்ட பேசவே தயங்குறாங்க. `எங்க சொன்னா நம்மளை ஜட்ஜ் பண்ணிடுவாங்களோ அப்டின்ற ஒரு எண்ணம். எனக்கு இந்த ஷாட்ல பிரச்னை இருக்கு, இந்த விஷயத்துல சிக்கல் இருக்குனு சொன்னா என்ன நினைப்பாங்களோ, அடுத்த மேட்ச்ல என்னை இறக்குவாங்களோ’ அப்டின்ற பயம் ஏற்படும். அந்தக் குழப்பங்களை கோச்கிட்ட சொல்றது வீக்னஸ்னு நினைக்கிறாங்க. ஆனா, அதுதான் அவங்க பலம்னு உணரணும். ஒரு பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையில் நல்ல நெருக்கம் இருக்கணும். நம்பிக்கை இருக்கணும். அதுக்காக நாங்க முதல்ல பயிற்சியாளர்கள்கிட்ட இருந்து தொடங்கலாம்னு இருக்கோம். ஒரு வீரரைச் சுத்தி நல்ல சூழ்நிலையை உருவாக்கணும் அப்டின்றதுதான் எங்களோட இலக்கு. எந்த வீரருக்கும் அவங்களோட பயிற்சியாளர்கிட்ட பேசுறதுக்குத் தயக்கம் இருக்கக்கூடாது."

``இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தணும் அப்டின்ற எண்ணம் எந்த இடத்துல உங்களுக்குத் தோணுச்சு... நீங்க உளவியல் ரீதியான சிக்கல்களைச் சந்திருச்சிருக்கீங்களா?"

``நிச்சயமா. என்னுடைய கரியர் முழுக்கவே உளவியல் பிரச்னைகள் இருந்திட்டேதான் இருந்துச்சு. 2006-ல என்னோட பர்சனல் வாழ்க்கைல சில சிக்கல்கள். அடுத்த வருஷம் கல்யாணம். ஒருகட்டத்துல தமிழ்நாடு அணிக்கு ஆடுறதே கஷ்டம்னு ஆகிடுச்சு. 2014-ல முழுசா உடைஞ்சிட்டேன். கிரிக்கெட்டை விட்டே விலகிடலாம் அப்டின்ற எண்ணம்லாம் வந்துச்சு. அப்போதான் மைண்ட் ட்ரெய்னிங் புரொக்ராம் ஒண்ணுல சேர்ந்தேன். அந்த ஒரு வருஷம் மென்ட்டல் ஸ்ட்ரெங்த் பற்றிய என்னோட பார்வை அப்படியே மாறுச்சு. அதனாலதான் என்னால 2015-ல ஆர்.சி.பி-க்காக ஆட முடிஞ்சுது. அடுத்த 3 வருஷம் முதல் தரப் போட்டிகள்ல ஆடமுடிஞ்சது. விதர்பா, ஹைதராபாத் டீம்களுக்குக் கேப்டனா இருக்க முடிஞ்சுது. லீடர்ஷிப்... அது இன்னும் வேற விஷயம். அதெல்லாம் என்னால முடிஞ்சுதுனா அதுக்கு அந்த 1 வருஷ உளவியல் பயிற்சிதான் காரணம். ஓய்வுக்கு அப்புறம் கோல்ஃப் ஆடத் தொடங்கினேன். அங்க என்னோட விளையாட வந்தவர்தான் இப்போ பார்ட்னரா இருக்கார். மைண்ட் டிரெய்னிங்கோட முக்கியத்துவத்தை நிறைய பேசினோம். சரியான முறையில சுமார் 8 மாசமா இதை வடிவமைச்சிட்டு இருக்கோம்."

``இந்த லாக்டௌனே உளவியல் ரீதியா மிகப்பெரிய சவால். இப்படியான சூழ்நிலையில் வீரர்கள் பயிற்சியாளர்களுடன் இணைய என்ன மாதிரியான திட்டங்கள் வெச்சிருக்கீங்க? இப்போது பலரும் வெபினார் மாதிரியா முயற்சிகளை தொடர்ந்து செஞ்சிட்டு இருக்காங்க. அப்படியான திட்டங்கள் இருக்கா?"

``நிச்சயமா. இந்த லாக்டெளன் நேரத்துல செய்றதுக்கான நிறைய திட்டங்கள் ரெடியாகிட்டிருக்கு. இப்படிப்பட்ட நேரத்துல ப்ளேயர்ஸ்கிட்ட மோட்டிவேஷன் இருக்காது. அவங்களால் விளையாட முடியாத, பயிற்சியில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்போது கஷ்டமா இருக்கும். அதனால மாதம் 2 வெபினார்கள் நடத்தணும்னு திட்டமிட்டிருக்கோம். வீட்ல இருந்தாலும அவங்களை பிஸியா வெச்சிக்கிறதுக்கான வழிகள் என்னென்னு பார்த்திட்டிருக்கோம். அதுல மிகவும் முக்கியமான விஷயம் `Goal resetting’. இதைச் செய்யணும், அதைச் செய்யணும்னு பல விஷயங்களை நாம சிந்திச்சுவெச்சிருப்போம். இப்போ அதையெல்லாம் செய்ய முடியாது. அதை நாம ஏத்துக்கணும். `கிளீன் தி ஸ்லேட்’ என்பார்கள். அப்படி நம்முடைய பழைய ஐடியாக்களை முழுசா அழிச்சிட்டு, புதிய இலக்குகளை நிர்ணயிக்கணும். நாங்க வொர்க் பண்ணிட்டு இருக்க இன்னொரு முக்கியமான விஷயம் - visualization! பயிற்சி செய்ய கிரவுண்டுக்கே போகணும்னு இல்ல. வீட்ல இருந்துட்டே அவங்க செய்யவேண்டியதைக் காட்சிப்படுத்திக்கலாம். அதன்மூலமா அவங்களால சரியா ஒருங்கிணைய முடியும். இந்த ஞாயிற்றுக்கிழமைல இருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்ல `மைண்ட் மாஸ்டர்ஸ்’னு ஒரு ஷோ டெலிகாஸ்ட் பண்ணப் போறோம். அஷ்வின், தினேஷ் கார்த்திக், தீபிகா பல்லிகல்னு நிறைய அத்லெட்ஸ் மைண்ட் ஸ்கில்ஸோட முக்கியத்துவத்தைப் பத்திப் பேசப்போறாங்க. ஈவ்னிங் 7 மணிக்கு அந்த ஷோ ஒளிபரப்பாகும்."

``ஒரு வீரர் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாவதற்கான காரணங்கள் என்னென்னனு நினைக்கிறீங்க?"

``அது நிறையவே இருக்கிறது. ஒரு வீரரை குழப்பத்துக்குள்ள தள்ள எக்கச்சக்க காரணங்கள் இருக்கு. `Expectation pressure’ அதுதான் பொதுவா ஏற்படும் மிகப்பெரிய சிக்கல். ஒவ்வொரு முறையும் களத்துக்குள்ள போகும்போது `இன்னைக்கு நல்லா ஆடணும். சென்சுரி போடணும்’ அப்டினுலாம் தோண ஆரம்பிச்சிடும். உடம்பு முழுதும் பதற்றமடைய ஆரம்பிச்சிடும். உடல் இறுகிடும். எல்லாமே கடினமாகத் தொடங்கும். மனசு முடிவைப் பற்றி யோசிக்க ஆரம்பிச்சிடும். அதுதான் பிரச்னை. அது எல்லோருக்குமே நடக்கும். சச்சின், தோனி, கோலினு எவ்ளோ பெரிய கிரிக்கெட்டருக்கும் நடக்கும். அமெச்சூர் வீரர்களுக்கும் நடக்கும். ஆனா, அதைச் சரியா கையாளத் தெரிஞ்சவங்கதான் சச்சினாவும், தோனியாவும், கோலியாவும் ஆகமுடியும். அதை கிரிக்கெட் ஆடுற இளைஞர்களுக்குக் கத்துக்கொடுக்கணும்.''

S.Badrinath with Sachin  Tendulkar
S.Badrinath with Sachin Tendulkar

``ஒரு புரொஃபஷனல் வீரரைக் கையாள்வதும், ஒரு அமெச்சூர் வீரரைக் கையாள்வதும் வித்தியாசமான விஷயமாச்சே. உளவியல் பத்தின புரிதல் இல்லாத இளைஞர்களைக் கையாள்வது பெரிய சவாலா இருக்குமே?!"

``ஆமாம். மிகவும் வித்யாசமாக் கையாளணும். அதுதான் எங்களுளோட ஸ்பெஷாலிட்டி. ஒரு அமெச்சூர் வீரருக்கும், புரொஃபஷனல் பிளேயருக்குமான பிரச்னைகள் வெவ்வேறையா இருக்கணும். புரொஃபஷனல் வீரர்களிலும் 25 வயது வீரருக்கும் 35 வயது வீரருக்குமான பிரச்னைகள் வேறையா இருக்கும். ஒருத்தருக்கு அணில இடத்தை நிலைநாட்டணும்னு டென்ஷன், இன்னொருத்தருக்கு அவங்க அந்தஸ்தைத் தக்கவச்சிக்கணும்னு டென்ஷன். ஒருத்தருக்குப் பெயர் எடுக்கணும்னு நெருக்கடி, ஒருத்தருக்குப் பெயரு கெட்டுடக்கூடாதுனு கவலை. இப்படிப் பலருக்கும் பலவிதமான பிரச்னைகள் இருக்கு. அதுமாதிரி ஒரு 12, 13 வயசுப் பையனுக்கான சிக்கல்கள் இன்னும் வித்தியாசமானது. அவன் அப்போதான் கிரிக்கெட் விளையாட வருவான். அவன் மனசுக்குள்ள இன்னும் வித்தியாசமான சவால்கள் இருக்கும். அது எல்லாத்தையும் புரிஞ்சிக்கணும். அது நிச்சயமா சவாலான விஷயம்தான். எங்ககிட்ட உலக அளவில் பெயரெடுத்த பல ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட்ஸ் இருக்காங்க. அதனால, அதை எங்களால சிறப்பாகக் கையாளமுடியும்."

இன்னைக்கு ரிசப் பன்ட் அவ்ளோ நெருக்கடியை சந்திச்சிட்டு இருக்காரு. ஒரு இளம் வீரர் மீது தோனி மாதிரியான ஜாம்பவானின் இடத்தை நிரப்பும் நெருக்கடியை நாம் இப்போ இருந்தே சுமத்திட்டு இருக்கோம். கிட்டத்தட்ட நீங்களும் அப்படியொரு சூழ்நிலையில்தான் இருந்தீங்க. டிராவிட், லட்சுமண் மாதிரியான ஜாம்பவான்கள் இருந்த அணியில் பெரும்பாலும் பெஞ்ச்லயேதான் இருந்தீங்க. வெளிய இருந்து நெருக்கடி இல்லைனாலும், பெர்சனலா உங்களோட எதிர்பார்ப்பே பெரிய நெருக்கடியா இருந்திருக்குமே! ஒரு லெஜண்டோட இடத்தை நிரப்பறதும், அவங்ககூட இடத்துக்கு போட்டி போடறதும் என்ன மாதிரியான நெருக்கடியை ஏற்படுத்தும்?

``நீங்க சொல்றது ரொம்ப சரி. இது ரொம்பப் பெரிய நெருக்கடி. பன்ட் மேல எக்கச்சக்க நெருக்கடி ஏற்பட்டிருக்கு. ஃபாரீன் டூர்ல 2 சென்சுரி அடிச்சிருக்கார். அது ஒண்ணும் சாதாரண விஷயம் கிடையாது. அதேசமயம், தோனியோட இடத்தை நிரப்புறதும் ஈசியில்ல. இந்தியன் டீமுக்காக 400 மேட்ச்களுக்கு மேல ஆடியிருக்க ஒரு ப்ளேயர் அவர். 20 மேட்ச் ஆடின ஒரு பிளேயர், தோனியோட இடத்தை உடனே நிரப்புவார்னு எதிர்பார்க்கிறது ரொம்ப தப்பு. எனக்கும் அப்டியான ஒரு சூழ்நிலைதான், அதே நெருக்கடிதான் இருந்துச்சு. சச்சின், டிராவிட், லட்சுமண் இவங்களையெல்லாம் ரீப்ளேஸ் பண்ணாத்தான் நமக்கு அணியில வாய்ப்பு. இப்போ இருக்க மாதிரி மைண்ட் ஸ்கில் ட்ரெய்னிங் அப்போ இருந்திருந்தா அந்தச் சூழ்நிலைய என்னால சரியா கையாண்டிருக்க முடிஞ்சிருக்கும்னு தோணுது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் நாம அந்த விஷயத்தை எப்படி அணுகுறோம் அப்டின்றதுதான். என்னோட முதல் டெஸ்ட் போட்டில ஷேவாக் கூட ஆடிட்டு இருந்தேன். நான் 80 பாலுக்கு 20 ரன் என்னவோ அடிச்சிருந்தேன். அந்தப் பக்கம் ஷேவாக் பிரிச்சி மேஞ்சிட்டு இருக்கார். 120 பால்ல 95 ரன்னுக்குப் பக்கமா அடிச்சிட்டார். ஸ்டெய்ன், மோர்கல்னு வெறித்தன பௌலிங் அட்டாக். ஆனா, வெளுத்து வாங்குனாரு மனுஷன். `என்னடா இப்படி ஆடிட்டு இருக்கார்னு’ ஆச்சர்யப்பட்டு பாத்துட்டு இருந்தேன். ஆனா, அந்த இடத்துல நானும் அப்படி ஆடணும்னு யோசிக்கக் கூடாது. அது ரொம்பத் தப்பு. என்னோட முதல் போட்டில அது முடியாதுனு எனக்குப் புரியணும். அவங்ககூட என்னை ஒப்பிடக்கூடாதுனு தெரியணும். அதே மாதிரி தோனியோட இடத்தை நிரப்பணும்னு பன்ட் நினைச்சா அதுவுமே பெரியுமே தப்பு. அது முட்டாள்தனம். அவரும் ஒரு தெளிவோட அதை அணுகணும். பன்ட்னால தோனி மாதிரி ஆடமுடியும். இன்னும் சில போட்டிகள்ல ஆடி அனுபவம் அடையும்போது அவராலையும் நிச்சயமா தோனி மாதிரி ஆட முடியும். அதை அவரும் புரிஞ்சிக்கணும். வெளிய இருந்து பார்க்கிறவங்களும் புரிஞ்சிக்கணும்.

``இந்திய அணிக்கு விளையாடிய உங்களோட நினைவுகள் பத்தி சொல்லுங்க?"

``என்னோட டெஸ்ட் அறிமுகத்தை என்னால மறக்கவே முடியாது. அது என்னோட மிகச் சிறந்த நினைவு. அந்த தென்னாப்பிரிக்க பௌலிங் யூனிட் ரொம்ப பலமா இருந்துச்சு. ஸ்டெய்ன், மோர்னே மோர்கல்னு பயங்கர ஃபார்ம்ல இருந்த ஃபாஸ்ட் பௌலிங் யூனிட். சச்சின் அவுட்டாகி, அதுவும் என்னோட முதல் மேட்ச்ல நான் இறங்குறேன்… சச்சினைக் கிராஸ் பண்ணி. அதுவே என்னமோ மாதிரி இருந்துச்சு. அப்போ இந்தியா கொஞ்சம் மோசமான நிலைமைல இருந்துச்சு. நாற்பதோ, ஐம்பதோ ரன்தான் அடிச்சிருந்தோம். ஆனா 3 விக்கெட் போயிடுச்சு. அதுக்கு அப்புறம் நானும் ஷேவாக்கும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் ஃபார்ம் பண்ணோம். 50 அடிச்சேன். அதேமாதிரி வெஸ்ட் இண்டீஸ்கூட ஆடின என்னோட முதல் டி-20 மேட்ச். அதுல மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்கினேன். ஆனா, என்னை யாருமே ஒரு டி-20 ப்ளேயரா பார்க்கல. சிஎஸ்கே டீமுக்காக 120 மேட்ச்ல ஆடியிருந்தேன். இருந்தாலும் டி-20 பிளேயரா மதிக்கல. அப்படியிருக்கும்போது என்னோட முதல் மேட்ச்ல அப்படி ஒரு பர்ஃபாமன்ஸ் கொடுத்தது என்னால மறக்கவே முடியாது."

``சிஎஸ்கே-வின் மிகமுக்கிய அங்கமா இருந்தீங்க. அந்த ஐகானிக் டீம்ல ஆடிய அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``சூப்பர் கிங்ஸ்காக விளையாடியது என்னோட மிகச் சிறந்த நினைவுகள்ல ஒண்ணு. ஜாம்வான்கள் நிறைந்த ஒரு அணிக்காக நாம சிறப்பா ஆடியிருக்கோம் அப்டின்ற எண்ணம் எனக்கு எப்போதுமே நல்ல உணர்வைக் கொடுக்கும். 2010 சீசன்ல கிங்ஸ் லெவன்கூட தரம்சாலால ஆடின ஆட்டம் என்னாலே எப்போதுமே மறக்க முடியாதது. செமி ஃபைனல் போகணும்னா ஜெயிச்சே ஆகணும்ன்ற சூழல். அதை ஜெயிச்சு, ஃபைனலுக்கும் போய் முதல் முறையா கப் ஜெயிச்சோம். அந்த ஆட்டம்… என்னோட கரியர்ல ரொம்ப முக்கியமானது (36 பந்துகளில் 53 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார் பத்ரிநாத்). அதனால அது எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்."

``தோனியிடம் நீங்க ரொம்ப வியக்கும் விஷயம்?"

``அவர் ஆட்டத்தை அணுகும் விதமே அவ்ளோ அட்டகாசமா இருக்கும். அவரோட கரியர், கேப்டன்சி, அவரோட திறமை எல்லாமே எந்தவொரு கிரிக்கெட்டருக்குமான பாடம். என்னோட கரியர்ல மிகமுக்கிய அங்கம் வகிச்சிருக்கார் அவர். எப்போதுமே எனக்கு ஆதரவா இருந்திருக்கார். எல்லாச் சூழலிலுமே கூலா இருப்பார். mental conditioning அப்புறம் mental skills ரெண்டுத்துலயும் முழுமையா தேர்ச்சி பெற்ற ஒருவர்னு சொல்லுவேன்."