அந்த நீண்ட இரவு இன்னும் நினைவில் நிற்கிறது. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. மும்பை சர்ச்கேட் பகுதியில் இருக்கும் வான்கடே ஸ்டேடியத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் வெல்கம் ஹோட்டலுக்குப் போகவேண்டும். கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தூரம்.
ஆட்டோ, டாக்ஸி, பேருந்து என எதிலும் பயணிக்க விருப்பம் இல்லை. நடக்கவே கால்கள் விரும்புகின்றன. மதியத்தில் இருந்து இரவுவரை நடந்த அத்தனை சம்பவங்களையும், நேரில் கண்ட அற்புதக் காட்சிகளையும் மனம் அசைபோட விரும்புகிறது. உடல் சிலிர்க்கிறது, கண்கள் கலங்குகிறது. நான் மட்டும் அந்தச் சாலைகளில் தனியாக நடக்கவில்லை. என்னைப்போல ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வேகவேகமாக நடந்துகொண்டேயிருந்தார்கள். அவர்கள் எல்லோரின் நடையிலும் ஒரு ராஜநடை தெரிந்தது. வெற்றிநடை அது!
மரைன் டிரைவ் சாலையில் மக்கள் வெள்ளத்துக்கு நடுவே திடீரென வாகனத்தின் மேல் ஏறி வெற்றி ஊர்வலம் வந்த சோனியா காந்தி, தெருவெங்கும் பட்டாசு சத்தம், கார்களின் மேல் உட்கார்ந்து கொண்டு, கூச்சல்போட்டுகொண்டே பயணித்த இளைஞர்கள், அந்த நள்ளிரவிலும் ஹோட்டல்களில் கூடியிருந்த கூட்டம் என அந்த இரவே கொண்டாட்டத்தின் அடையாளமாக இருந்தது.

இதுவரை அப்படி ஒரு இரவை நான் சந்திக்கவேயில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது அந்த இரவு இப்படித்தான் இருந்திருக்குமோ?! இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த இரவு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோன்ற உணர்வைத்தான் கொடுத்தது. "When the world sleeps, India will awake to life and freedom" என ஆகஸ்ட் 14-ம் தேதி நள்ளிரவில் நேரு சொன்னதும், ஏப்ரல் 2-ம் தேதி இரவில் "A magnificent strike into the crowd... India lift the World Cup after 28 years" என்கிற ரவி சாஸ்திரியின் குரலும் எனக்கு ஒன்றுபோலவே கேட்கிறது.
ஒட்டுமொத்த நாடுமே மகிழ்ச்சியாக இருப்பதுபோன்ற உணர்வு. இதன்பிறகு இப்படி ஒரு சம்பவம் இந்த இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நடைபெறவேயில்லை.
1996 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியின் தோல்வியின் வடுக்கள் அப்போது ஆறியிருக்கவில்லை. ஜெயசூர்யா பெளலிங்கில் சச்சின் ஸ்டம்ப்பிங் செய்யப்பட்டு வெளியேறிய அந்தக் காட்சி, அதற்கடுத்து வந்த ஜடேஜா, அசாருதின் என அத்தனைப்பேரும் அவுட் ஆனவிதம், ஸ்டேடியத்தில் கலவரம், வினோத் காம்ப்ளியின் கண்ணீர் என அந்த நாள் தந்த வலி மறக்கமுடியாதது.
மீண்டும் இலங்கையோடு உலகக்கோப்பை போட்டி, அதுவும் இறுதிப்போட்டி... மும்பைக்கு டிக்கெட் போடலாமா வேண்டாமா, இந்தியா ஜெயிக்குமா, தோற்குமா என என் மனதுக்குள் கேள்விகள் அதிகம் இருந்தன. காரணம் 2011 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு இணையாக சிறந்த அணியாகவே இருந்தது இலங்கை. லீக் போட்டிகளில் பாகிஸ்தானிடம் மட்டுமே தோல்வியடைந்த இலங்கை, காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்தையும், அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்தையும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இலங்கையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் திலகரத்னே தில்ஷன் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். சதங்களாக அடித்துக்கொண்டிருந்தவர் இறுதிப்போட்டிக்கு முன்பாகவே 450 ரன்களுக்கு மேல் தாண்டிவிட்டார். இன்னொரு ஒப்பனிங் பேட்ஸ்மேனான உபுல் தரங்காவும் மிரட்டிக்கொண்டிருந்தார். ஓப்பனிங் தில்ஷன் - தரங்கா, 1 டவுன் சங்ககாரா, 2 டவுன் மஹிலா ஜெயவர்தனே, அடுத்து ஏஞ்சலோ மேத்யூஸ் என இலங்கையின் பேட்டிங் ஆர்டர் ஸ்ட்ராங்காக இருந்தது. லசித் மலிங்கா, அஜந்தா மெண்டிஸ், முத்தையா முரளிதரன் என நல்ல பெளலர்களும் இலங்கையில் இருந்தார்கள். இதற்கிடையே இறுதிப்போட்டி நடக்கயிருந்த மும்பை வான்கடே மைதானத்தில் லீக் போட்டிகளின்போது நியூஸிலாந்தை 153 ரன்களுக்குள் சுருட்டி வெற்றிபெற்றிருந்தது இலங்கை. இந்த மும்பை பிட்சில் முரளிதரன் 4 விக்கெட்கள் எடுத்திருந்தார்.
அதனால், யார் வெற்றிபெறுவார்கள் என்பது யூகிக்கமுடியாததாகவே இருந்தது. மேலும் இலங்கை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அவமானத்தை பரிசளிக்கக்கூடியவர்கள் என்பதால் பெரிய யோசனைக்குப்பிறகே மும்பைக்கு டிக்கெட் போட்டேன்.
விமானநிலையத்தில் இருந்து அப்படியே நேராக வான்கடே ஸ்டேடியத்துக்குப் பயணம். போட்டி தொடங்க இரண்டு மணி நேரம் இருப்பதற்கு முன்பாகவே ஆயிரக்கணக்கில் கூட்டம். ஏகப்பட்ட போலீஸ் கெடுபிடிகள், பாதுகாப்பு செக்கிங்குகள் முடிந்து மீடியா அறைக்குள் நுழையவே அரைமணி நேரத்துக்கும் மேலானது. மீடியா அறைக்கு அருகில் இருந்த விஐபி கேலரியில் அம்பானி குடும்பத்தோடு ரஜினிகாந்தும், ஆமீர்கானும் நின்றுகொண்டிருந்தார்கள்.
டாஸே சர்ச்சைகளோடுதான் தொடங்கியது. தோனி டாஸ் போட சங்ககாரா ஹெட்/டெய்ல்ஸ் சொன்னார். காயின் கீழே விழுந்ததும் தோனிதான் டாஸ் வென்றதாகச் சொல்ல, சங்ககாராவும் தான்தான் டாஸ் வென்றதாகச் சொன்னார். மேட்ச் ரெஃப்ரியாக இருந்த ஜெஃப் க்ரோ ரசிகர்களின் சத்தத்தால் சங்ககாரா ஹெட் சொன்னாரா டெய்ல்ஸ் சொன்னாரா என்பது கேட்கவில்லை என சொல்ல மீண்டும் டாஸ் போடப்பட்டது. இந்தமுறை டாஸை வென்றவர் சங்ககாரா. பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் சங்ககாரா. அதன்பிறகு என்னவெல்லாம் நடந்தது என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.
2011 உலகக்கோப்பை முழுக்க கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ஓர் அசாத்திய துணிச்சல் இருந்தது. தான் நினைத்ததை நடத்திக்கொண்டேயிருந்தார். அவரின் ஒவ்வொரு முடிவுகளும் அதிர்ச்சிகரமாகவே இருந்தன. கரணம் தப்பினால் மரணம் என்கிற அளவில்தான் 2011 உலகக்கோப்பையில் தோனியின் பல முடிவுகளும் இருந்தன.
"தோனி ஒரு அசட்டுத் துணிச்சல்காரர். வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துவிட்டு, அதை வெற்றிகரமாக மாற்றக் கடுமையான முயற்சிகள் எடுப்பவர்."கபில்தேவ்

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அஷ்வினுக்குப் பதிலாக நெஹ்ரா சேர்க்கப்பட்டது குறித்து கபில்தேவ் இப்படித்தான் சொன்னார்.
ஆனால், கபில் சொன்னதுபோலவே இறுதிப் போட்டியிலும் இன்னொரு அதிர்ச்சி கொடுத்தார் தோனி. கை விரலில் காயம் என அரையிறுதிப்போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய நெஹ்ரா வெளியேறி, அவருக்கு பதில் அஷ்வின் வருவார் என எதிர்பார்க்க, ஶ்ரீசாந்த்தைக் கொண்டுவந்தார் தோனி. இறுதிப்போட்டிக்கு முன்பாக வெளியேறிய நெஹ்ரா மீண்டும் அணிக்குள் வருவதற்கு 5 ஆண்டுகள் ஆனது தனிக்கதை.
அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்த்தைச் சேர்த்தது, ஃபார்மில் இருக்கும் யுவராஜை முந்திக்கொண்டு களம் இறங்கியது என ஃபைனலிலும் சர்ச்சைக்குரிய முடிவுகள் எடுத்தார் தோனி. ஆனால், எடுத்த முடிவுகள் தவறாக முடிந்துவிடக் கூடாது என்று அவர் காட்டிய துணிச்சலும் திறமையான ஆட்டமும் தோனி சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்தது.
சச்சினின் அனுபவம்!
சச்சின் கலந்துகொண்டு விளையாடிய ஆறாவது உலகக் கோப்பைப் போட்டி இது. "100-வது சதம், மூன்றாவது முறையாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பு" என்று அப்போதும் பல மைல்கற்கள் அவரை ஒவ்வொரு போட்டியின்போதும் துரத்திக்கொண்டு இருந்தன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும், தனக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடினார் சச்சின். "தனிப்பட்ட சாதனைகளைவிட, இந்தியா வெற்றிபெறுவதுதான் எனக்கு சந்தோஷம். வெற்றிபெறும் அணியில் இருக்கத்தான் நான் விரும்புகிறேன்" என்றார் சச்சின். 18 ஆயிரம் ரன்களைத் திரட்டிய ரன் மெஷினுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது உலகக் கோப்பை. அதை சச்சினுக்காகவே விளையாடி வாங்கித் தந்தார்கள் இளம் வீரர்கள்!
கோலியும் - சச்சினும்!
இந்தியா வெற்றி பெற முக்கியக் காரணம்... டீம் ஸ்பிரிட். முகமது அசாருதின், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத் எனத் திறமையான வீரர்கள், இதற்கு முன்பும் இந்திய அணியில் இருந்தனர். ஆனால், டீம் ஸ்பிரிட் என்பது அவர்களது காலங்களில் எப்படி இருந்தது என்பது 80'ஸ், 90'ஸ் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். எதிரணி இந்தியாவுக்கு குழிபறிப்பதைவிட இந்திய அணி வீரர்களே இந்தியாவின் தோல்விக்குப் பள்ளம் தோண்டுவார்கள்.

தோனி கேப்டனாக பொறுப்பு ஏற்கும்போது, சச்சின் அணியில் இருந்தார். யுவராஜ் சிங், ஜாகீர் கான் எல்லாம் அவருக்கு சீனியர்கள். ஆனால், எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல், சீனியர் வீரர்களுக்கு மதிப்பளித்து, ஜூனியர் வீரர்களையும் அரவணைத்து, அணிக்குள் ஒற்றுமையை வளர்த்தார் தோனி. அந்த ஒற்றுமையும், சீனியர் - ஜூனியர் பிரிவினைகள் இல்லாததும் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கியக் காரணம்.
சச்சின், 1989-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த வருடத்தில்தான் தற்போதைய கேப்டன் விராட் கோலி பிறந்திருந்தார். "21 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கிறார் சச்சின். அவரை நாங்கள் இன்று தூக்கிச் சுமப்பது எங்களுக்கான கெளரவம்!" என்று போட்டி முடிந்ததும் சச்சினை மைதானம் முழுக்க தூக்கிச் சுமந்த அனுபவம் பற்றி சொல்லியிருந்தார் கோலி. விராட் கோலியின் வார்த்தைகளில் தெரிந்தது சீனியர் சச்சின் மேல் இருந்த அபரிவிதமானக் காதல்!
ஹார்ஸஸ் ஃபார் கோர்ஸஸ்!
உலகக் கோப்பை தொடங்குவதற்குமுன்பு வரை யுவராஜ் சிங் ஃபார்மிலேயே இல்லை. யுவராஜுக்குப் பதில் யூசுப் பதானையும், சுரேஷ் ரெய்னாவையும் விளையாடவைக்கலாம் என்பதுதான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், உலகக் கோப்பை ஆரம்பித்ததும் யுவராஜ் சிங்கின் ஆட்டம் உச்சத்தைத் தொட்டது. நான்கு அரை சதம், ஒரு சதம், ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது இரண்டு முக்கிய விக்கெட்டுகள் என இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார் யுவராஜ் சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா வெளிப்படுத்திய பொறுப்பான ஆட்டம்தான், இரண்டு கண்டங்களில் இருந்தும் இந்தியா தப்பிக்க உதவியது. தனக்கு விளையாடக் கிடைத்த இரண்டு ஆட்டங்களிலும் திறமையான பௌலிங்கை வெளிப்படுத்தினார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

கேரி கிரிஸ்டனின் புரிதல்!
இப்போதைய யோ யோ டெஸ்ட்டுகள், ஃபிட்னெஸ் ட்ரில்கள் அப்போது இல்லை. பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனின் பலமே, இந்திய வீரர்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டதுதான். உடல் பயிற்சியைவிட, பேட்டிங் பயிற்சியில்தான் இந்திய வீரர்கள் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டார் கிரிஸ்டன். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங் பயிற்சியோடு ஃபிட்னெஸ் பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஷேவாக், கம்பீர் உள்ளிட்ட இந்திய வீரர்கள், 'ஃபிட்னெஸ் டிரெயினிங் நேரத்தில் ஒரு பகுதியை நாங்கள் பேட்டிங் பயிற்சிக்குச் செலவிடுகிறோம். அப்போதுதான் எங்களால் சிறப்பாக விளையாட முடியும்!’ என்று சொன்னதை ஏற்றுகொண்டார் கிரிஸ்டன். ஒன்று, இரண்டு ரன்களை ஓடி ஓடி எடுப்பதைவிட 4, 6 அடிப்பது சூப்பர்தானே என்பது இந்திய வீரர்களின் லாஜிக். அதே சமயம், ஃபீல்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கு மத்தியில், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, விராட் கோலிக்குச் சிறப்பான ஃபீல்டிங் பயிற்சி கொடுத்து அவர்களை இன்னும் மெருகேற்றியிருந்தார் கிரிஸ்டன்!
பெளலிங் சூப்பர் ஸ்டார்!
பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர் கான்தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர் கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர் கான்!

1996 உலகக் கோப்பைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் அசைக்க முடியாத அணியாக உலக கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது ஆஸ்திரேலியா. இடையில் 1999, 2003, 2007 என மூன்று உலகக்கோப்பைகளைக் கைப்பற்றியிருந்தது. இதேபோல 2011 உலகக்கோப்பையை வென்றதும் இந்தியாவின் எழுச்சி ஆரம்பிக்கிறது என்றுதான் எல்லா இந்திய ரசிகர்களும் நினைத்தார்கள். ஆனால், 2015, 2019 என அடுத்த இரண்டு உலகக்கோப்பைகளையும் கோட்டைவிட்டுவிட்டது இந்தியா. 2023 உலகக்கோப்பை 2011 உலகக்கோப்பை போலவே இந்தியாவில் நடைபெற இருக்கிறது. கோலி அண்ட் கோ என்ன செய்யப்போகிறது எனப் பார்ப்போம்!