சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்!”

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜன்

கிரிக்கெட் வீரர் நடராஜன் சிறப்புப் பேட்டி

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

`காயம்பட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து கர்ஜனையைவிட பயங்கரமா இருக்கும்' என்ற கே.ஜி.எஃப் வசனம், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ரொம்பவே பொருந்தும். விளையாட்டின்போது ஏற்பட்ட காயத்தின் விளைவாக சில மாதங்களாக மைதானத்துக்கு வராமல் இருந்த நடராஜன், தற்போது மீண்டு களம்காணக் காத்திருக்கிறார். அவரைச் சந்தித்து உரையாடினேன்.

“காயம் காரணமாக ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியபோது கொஞ்சம் பதற்றமாக இருந்தது. முதல் இரண்டு ஓவர்களுக்குப் பிறகு நார்மல் ஆகிவிட்டேன். கிரிக்கெட்டில் திரும்பவும் கம்பேக் கொடுப்பது ஈஸி கிடையாது. விளையாட்டில் யாருக்கு, எப்போது, எப்படி அடிபடும் என்பதைச் சொல்லவே முடியாது. அதனால், அடுத்து காயம் இல்லாமல் எப்படி விளையாடவேண்டும் என்பதை மட்டும்தான் யோசித்தேன். அதனால்தான் என்னால் மன உறுதியுடன் மீண்டுவர முடிந்தது” என்கிறார் நடராஜன்.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் நடராஜன் இடம்பெறாதபோது, அவர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று இந்திய அணியின் முன்னணி வீரர்கள் பேசியதே சாட்சி. எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், நடராஜன் மனம் திறந்து பேசினார்.

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்!”

"இந்தியாவுக்காக விளையாடியபோது பெரிதும் கவனிக்கப்பட்டீர்கள். அந்த நேரத்தில் காயத்தால் விலகியது எவ்வளவு கடினமாக இருந்தது?”

``காயங்கள் ஏற்படுவது எதிர்பாராத விதமாக நடப்பது. நம் கையில் கிடையாது. கடவுள் ஒரு கெட்டது கொடுத்தால், ஒரு நல்லது கொடுப்பார். அப்படித்தான் இதைப் பார்க்கவேண்டும். அதேசமயம், தொடர்ந்து காயங்கள் ஏற்படுவது எனக்குப் பழகிவிட்டது. ஏற்ற இறக்கங்கள் விளையாட்டு வீரர்கள் வாழ்வில் வரத்தான் செய்யும். கவலைப்படாமல் தடைகளைத் தாண்டிச் செல்லவேண்டும். எனக்கு பக்க பலமாக குடும்பமும் நண்பர்களும் இருந்தார்கள். குறிப்பாக, சன் ரைசர்ஸ் அணி எனது இன்னொரு குடும்பம் மாதிரி. நிர்வாகத்தினரிலிருந்து பயிற்சியாளர்கள்வரை முழுமையாக சப்போர்ட் செய்தார்கள். என்னைத் தயார் செய்து மீண்டும் மைதானத்துக்குக் கொண்டுவந்தார்கள். அவர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.''

" `நடராஜன் கிரிக்கெட் அகாடமி' ஆரம்பித்தீர்களே…அதில் பெண் வீரர்களுக்கும் பயிற்சியளிக்கிறீர்களா?”

``பெண் வீரர்கள் என்றால் அவசர அவசரமாகக் கிளம்பி வரவேண்டும். ஏதாவது, சின்ன அசம்பாவிதம் ஆகிவிட்டாலும் தேவையில்லாத பிரச்னைகள் வரும் என்பதால், பெண் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில்லை. ஆண்களிலும்கூட வெளியூர்க்காரர்களைச் சேர்ப்பதில்லை. எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் திறமையானவர்களைக் கண்டறிந்து பயிற்சியளிக்கிறோம். மொத்தம் 40 பேருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த பலர் தமிழக அணிக்காக விளையாடி வருகிறார்கள். மூன்று பேர் டி.என்.பி.எல் போட்டிகளில் விளையாடுகிறார்கள். இவர்கள் எல்லாம் கிரிக்கெட்டின் ஆட்ட நுணுக்கங்கள் தெரியாமல் வந்தவர்கள். எனக்கு சென்னையில் வழிகாட்டிய பயிற்சியாளர் பிரகாஷ் சார்தான் நடராஜன் அகடாமிக்கும் பயிற்சியளிக்கிறார். அவர், பொறுப்பில் அகாடமியை விட்டுவிட்டேன். அவ்வப்போது நானும் சென்று பயிற்சியளிக்கிறேன். கிராமப்புறங்களிலிருந்து கிரிக்கெட் வீரர்களை மெருகேற்றிக் கொடுக்கும் நிறைவு இந்த அகாடமி மூலம் எனக்குக் கிடைக்கிறது.''

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்!”

"இப்போதெல்லாம் இளம் வயதிலேயே பல வீரர்கள் ஐ.பி.எல் ஆடுகிறார்கள். உங்களுக்கும் அப்படி வாய்ப்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை மாறியிருக்கும் என்று நினைக்கிறீர்களா?”

``எந்தெந்த டைம்ல என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால், கொஞ்சம் முன்னாடியே நான் கிரிக்கெட் விளையாடியிருந்தால் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகி அடுத்த லெவல் போயிருக்கலாம். 20 வயதில்தான் கிரிக்கெட் விளையாடவே ஆரம்பித்தேன். ஐ.பி.எல் விளையாடுவதற்கு முன்பு என் கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய தடைகள். அப்போதும் ஒரு வருடம் விளையாடவில்லை. பிறகுதான், பஞ்சாப் அணிக்காகத் தேர்வானேன். பொதுவாக, ஒரு வருடம் விளையாடினால் அடுத்த வருடம் காயம் ஏற்பட்டுவிடுகிறது. இப்போதுவரை மூன்று சர்ஜரிகள் நடந்துள்ளது. தமிழ்நாடு அணியில் இடம் கிடைத்து ஆடினாலே போதும் என்று நினைத்து வந்தவன் நான். இந்தியா டீம் வரை விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவே கடவுள் கொடுத்த வரம்தான்.''

"தோனியின் விக்கெட் எடுப்பதுதான் உங்கள் ஆசை என்று சொல்லி சில நாள்களிலேயே அது சாத்தியமானது. அந்தத் தருணம் எப்படி இருந்தது?''

``நான் விக்கெட் எடுப்பதற்கு முன்புதான், ஒரு பந்தை சிக்ஸர் அடித்திருந்தார் தோனி. அதனால், அவரை வீழ்த்தியதை நான் கொண்டாடவில்லை. ஆனால், ரூமுக்கு வந்தபிறகு விக்கெட் எடுத்த வீடியோவைப் பார்த்தபோது சந்தோஷமாக இருந்தது. தோனி சொன்ன ஒரே விஷயம் `பெளலிங் நல்லா போடுற. ஃபிட்னஸ்ல நல்லா ஃபோகஸ் பண்ணு' என்பதுதான்.''

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்!”

"கிரிக்கெட்டில் உங்களுக்குப் பிடித்த ஃபார்மட் எது?''

``ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 மூன்று ஃபார்மட்டிலுமே விளையாடப் பிடிக்கும். ஆனால், ஐ.பி.எல் போட்டிகளில் நிறைய விளையாடி, டி20 செட் ஆகிவிட்டது. அதில்தான் கூடுதல் ஆர்வம்.''

"பொதுவாகவே, கீப்பருக்கும் பௌலருக்குமான கனெக்டிவிட்டி ரொம்பவும் முக்கியம். உங்களுக்கு இணக்கமான கீப்பர் யார்?''

``தமிழ்நாடு டீமில் தினேஷ் அண்ணன் பிடிக்கும். நிறைய கற்றுக்கொடுப்பார். அவர்கூட, எப்போதும் அந்தக் கனெக்டிவிட்டி இருக்கும். இந்திய அணியில் கே.எல் ராகுல் இருக்கும்போது, நல்ல கனெக்டிவிட்டி கிடைக்கும்.''

"உங்கள் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றிவிட்டீர்களா? அப்படி நிறைவேற்றிய ஆசைகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

``நான் நல்லா இருந்தா போதும் என்பதுதான் அம்மாவின் பெரிய ஆசை. இப்போது நன்றாகவே இருக்கிறேன். அம்மாவுக்கென்று என்னிடம் இதுவரைக்கும் எதுவும் கேட்டதில்லை. ஆனால் சொந்த வீடு கட்டவேண்டும் என்று எப்போதும் சொல்லிக்் கொண்டே இருப்பார். அதை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டேன். எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து பிள்ளைகள். நான்தான் மூத்தவன். ஒரே வீட்டில் எட்டுப் பேர் இருந்தோம். சரியான சாப்பாடுகூட கிடைக்காது. புது டிரஸ் எடுப்பது அபூர்வம். எப்போதாவதுதான் நான்வெஜ் சமைப்பார்கள். குடும்ப வறுமையை நினைத்து நினைத்து, அதை மீட்கும் வழி என் பந்துவீச்சில் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் விளையாடினேன். அதற்கான பலனும் கிடைத்தது. அம்மாவின் ஆசை அதானே.''

“என் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்!”

"மனைவி, மகள்?''

``என் பள்ளித் தோழியான பவித்ராவையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டேன். அவர் எம்.எஸ்ஸி கோல்டு மெடலிஸ்ட். கிரிக்கெட்டெல்லாம் ரொம்பப் பெரிசா தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்கிறார். லவ் பண்ணும்போது ரொம்பவே சப்போர்ட்டிவாக இருந்தார். எதையும் எதிர்பார்க்காமல் லவ் பண்ணினார். கூடவே இருந்து பாசிட்டிவா தட்டிக்கொடுத்தார். என்னை மாதிரி பசங்களுக்கு அதுவே போதும். பாப்பாவுக்கு ஒன்றரை வயசாகிறது. அவள் பிறந்த சமயத்தில்தான் இந்திய அணிக்கு விளையாட செலக்ட் ஆனேன். விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவளும் வந்திருந்தாள். என் பொண்ணு பிறந்த நேரம்தான் எனக்கு எல்லா வாய்ப்பையும் கொடுத்தது.''

"எளிமையான இடத்திலிருந்து வந்து இந்த உயரம் தொட்டு பலருக்கும் நம்பிக்கையாக மாறியுள்ளீர்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?''

``நேரத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப முக்கியமான விஷயம். எவ்வளவு பெரிய வேலையில் இருந்தாலும், சரியான நேரத்திற்குச் சென்றுவிடவேண்டும். அதோடு தன்னம்பிக்கையாகப் போராடுவது, விடாமுயற்சி, தன்னடக்கமும் ரொம்ப முக்கியம். இவையெல்லாம் ஜெயபிரகாஷ் அண்ணனிடம் இருந்து நான் கற்றுக்கொண்டவை. இந்த நான்கையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தேன். பலன் தானாகவே கிடைத்தது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருபவர்கள் நிறைய தடுமாறுவார்கள். அந்தத் தடுமாற்றங்களைத் தாண்டினால்தான் வெற்றி கிடைக்கும். கவனம் சிதறவிடாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லவேண்டும்.

அதேபோல், ஆங்கிலம் தெரியவில்லை என்று கவலைகொள்ளத் தேவையில்லை. அவரவர் மொழியில்தான் தற்போதெல்லாம் பேசுகிறார்கள். மொழி ஒரு பெரிய பிரச்னையே இல்லை. எந்த விளையாட்டாக இருந்தாலும் திறமைதான் முக்கியம். கடந்த 2017-ல் பஞ்சாப் அணிக்கு முதன்முறையாக ஆடினேன். பெரிய தொகைக்கு ஏலம் எடுத்தார்கள். ஆனால், மொழி தெரியாமல் சிரமப்பட்டேன். இப்போது நன்றாகப் பேச ஆரம்பித்துவிட்டேன். அதனால், கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் முக்கியம்.''

"கிராமப்புறங்களில் இருந்து விளையாட வரும் உங்களைப் போன்ற வீரர்கள் என்னமாதிரியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?''

``எந்த விளையாட்டாக இருந்தாலும் கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கு சரியான வசதி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. என்னை மாதிரி வருபவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். தற்போதுதான், அரசுகள் எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கிராமங்களிலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள். கிராமப்புற இளைஞர்கள் கிடைக்கும் அரிதான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி முன்னேறி வரவேண்டும். திறமை இருந்தால் எங்கிருந்தாலும் விளையாடலாம்.''

"உங்கள் வாழ்க்கைக்கதை படமாக எடுக்கப்பட்டால், யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''

``என்னுடைய பயோபிக் எடுக்க நிறைய பேர் கேட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் நான் தயக்கத்தில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதுதான் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டது. அதில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.''

"தீபாவளி என்றால் நினைவுக்கு வருவது எது? இந்த வருட தீபாவளியை எப்படிக் கொண்டாட முடிவு செய்துள்ளீர்கள்?''

``ஊரில் இருக்கும்போது எல்லா தீபாவளியையும் கொண்டாடுவேன். இப்போது அந்த நாள்களில் மேட்ச் அல்லது பயிற்சி இருக்கும்போது, அந்தக் கொண்டாட்டங்களை மிஸ் பண்றேன். முன்பு நிறைய தீபாவளிகளில் நண்பர்களுடன் இருப்பேன். இப்போது மனைவி, குழந்தையுடன் கொண்டாடுகிறேன். பட்டாசு என்றால் கொஞ்சம் பயம். இந்த வருடம் மேட்ச்சுக்குத் தேர்வானால் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். தீபாவளியை அடுத்த வருடம்கூடக் கொண்டாடலாம் அல்லவா?''

"சமீபத்தில் ரசித்துப் பார்த்த படம்?''

``விக்ரம் ரொம்பவே சூப்பர். பார்த்து ரசித்தேன். நல்ல கான்செப்ட். நடிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ரஜினி சாரை சின்ன வயசிலிருந்து பிடிக்கும். `படையப்பா’ பலமுறை பார்த்துள்ளேன்.''