Published:Updated:

Independence Day Cup 1997: "அச்சமா, அரை கிலோ என்ன விலை?!" டார்கெட் - 226; ஜெயசூர்யா - 151*

பெப்ஸி இண்டிபெண்டன்ஸ் டே கப் ஜெயசூர்யா
பெப்ஸி இண்டிபெண்டன்ஸ் டே கப் ஜெயசூர்யா ( Screenshot from YouTube )

ஜெயசூர்யாவை எப்படி அடக்குவது என்ற வழியை இந்தியா அறியவே இல்லை. வெங்கடேஷ் பிரசாத் மற்றும் குருவில்லாவின் வேகமோ இல்லை கும்ப்ளே மற்றும் சுனில் ஜோஷியின் சுழல் மாயமோ அவரை எதுவும் செய்ய முடியவில்லை.

டி20 தொடர்களின் யுகத்தில் வாழும் நமக்கு, பேட்ஸ்மேன்கள், 200+ ஸ்ட்ரைக்ரேட்டோடு, ரன்களைக் குவிப்பதெல்லாம், அசாதாரண விஷயமல்ல. ஆனால், இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம், அணியின் ஸ்கோர், 240-250ஐ எட்டி, இலக்கை நிர்ணயித்து விட்டாலே, டிஃபெண்ட் செய்து விடலாம் என அணிகள் நம்பும். காரணம், அந்தக் காலகட்டத்தில் பேட்டிங் பவர்பிளேக்கள் இல்லை, லாங் பவுண்டரிகள், அச்சுறுத்தும் பௌலிங் யூனிட்கள் அவர்கள் இறுதி ஒவர்களில் வீசும் ரிவர்ஸ் ஸ்விங் ஆகியவை ரன்னெடுப்பதை கடினமாக்கும். இத்தனையையும்மீறி, ஒருநாள் போட்டிகளையே டி20 ஃபார்மட் போல் ஆடிக் காட்டியதுதான், சனத் ஜெயசூர்யாவின் அதிரடித்திறமை.

இந்திய பௌலிங் யூனிட்டுக்குச் சவால்விட்ட வீரர்களுள் ஜெயசூர்யா மிக முக்கியமானவர். 2000-மாவது ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான கோகோ கோலா சாம்பியன்ஸ் டிராபியில், 161 பந்துகளில் அவர் குவித்த 189 ரன்கள், 1997-ஆம் ஆண்டு, இலங்கையில் நடைபெற்ற முதல் டெஸ்டில், அவர் அடித்த 340 ரன்கள், 2004 ஆசியக் கோப்பையில் அவர் அடித்த, 130 ரன்கள் என எல்லாமே இந்தியர்கள் கண்களில் ரத்தக் கண்ணீர் வர வைத்தவை. ஒவ்வொரு முறையும் அவருக்கான சிறப்புத் திட்டத்தை வகுத்தே இந்தியா களமிறங்கினாலும், எந்த வரையறைக்கும் நிற்காத காட்டாறாய், அடித்து நொறுக்கி ஓடிக் கொண்டே இருப்பார்! அதுதான் ஜெயசூர்யா!

சனத் ஜெயசூர்யா
சனத் ஜெயசூர்யா
ஹாசிப்கான்
இந்த எல்லா அதிரடி இன்னிங்க்ஸையும் தூக்கிச் சாப்பிடும் இன்னொரு இமாலய நாக், 1997-ம் ஆண்டு, பெப்ஸி இண்டிபெண்டன்ஸ் டே தொடரில், இந்தியாவின் கோப்பைக் கனவை அவர் சுக்குநூறாக்கி அடித்த 151 ரன்கள்தான்.

இந்தியாவின் 50-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து நாடுகள் பங்கேற்ற இத்தொடர் நடைபெற்றது. ஒவ்வொரு நாடும், மற்ற நாடுகளுடன், ஒரே ஒருமுறை மோதும். பின் புள்ளிகள் அடிப்படையில், டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஏற்கெனவே ஒரு போட்டியில், பாகிஸ்தானுடன் தோல்வியைச் சந்தித்திருந்த இலங்கைக்கு, இந்தியாவுடனான இப்போட்டி, நாக்அவுட் போட்டியாக அமைந்தது. 96-க்கு முந்தைய காலகட்டமாக இருந்தால், இப்போட்டியை இந்தியா வெல்லும் எனக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். ஆனால், 96-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இலங்கையும், அதில், தொடர் நாயகன் விருது வாங்கிய ஜெயசூர்யாவும், வெற்றி என்பது இந்தியாவுக்கு அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை என ஆணித்தரமாக அதற்கு முந்தைய சில போட்டிகளில் நிரூபித்திருந்தனர்.

வான்கடேயில், பகலிரவு ஆட்டமாக நடைபெற்றிருந்த இப்போட்டியில் டாஸை இந்தியா வெல்ல, கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கங்குலியும் சச்சினும் ஓப்பனிங் இறங்கினர். சந்தித்த முதல் பந்திலேயே கங்குலி ஆட்டமிழக்க, சச்சினின் விக்கெட்டும் அடுத்த சில நிமிடங்களிலேயே விழுந்தது. எனினும், அஜய் ஜடேஜா, ராகுல் டிராவிட் மற்றும் ராபின் சிங்கின் அரைசதங்கள் மூலமாக, தத்தித் தடுமாறி மேடேறி, 226 ரன்களை இலக்காய் நிர்ணயித்தது இந்தியா.

226 ரன்கள் எடுத்தால் வெற்றி, இறுதிப்போட்டியில் நுழைவதற்கான பாதிக்கிணறு தாண்டலாம் என்பதால், வெல்லும் உத்வேகத்தோடு களமிறங்கினர், ஜெயசூர்யாவும், ரோமேஷ் கலுவிதரனாவும்.

பொதுவாக, அந்தக் காலத்தில், ஓப்பனர்கள், முதல் 15 ஓவர்கள், நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்துவர். ரிஸ்க் எடுத்து ஆட யோசிப்பார்கள். அந்த அணுகுமுறையையே மாற்றியவர் ஜெயசூர்யாதான். ஓரிரு பந்துகள் களத்தைப் பழக, செட்டில் ஆக எடுத்துக் கொள்வதென்பதெல்லாம் அவரது அகராதியில் இல்லவே இல்லை. சந்திக்கும் முதல் பந்திலிருந்து ரன்னெடுப்பதுதான் அவரது பாணி. முதல் 15 ஓவர்களுக்குள், வேண்டிய அத்தனை பாதிப்புகளையும் எதிரணிக்குச் செய்துவிட்டு, பின்வரிசை வீரர்களது பணியைச் சுலபமாக்கிச் சென்றுவிடுவார்.

சனத் ஜெயசூர்யா
சனத் ஜெயசூர்யா
Reuters

1996-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 134 ரன்களை, 65 பந்துகளில் குவித்திருந்தார் ஜெயசூர்யா. அந்தப் போட்டியில், 17 ஓவர்களில், அணியின் ஸ்கோர், 180! இலங்கையின் இறுதி ஸ்கோர், 349. சுலபமாய் வெற்றிக்கனியைச் சுவைத்தது இலங்கை. 15 ஓவர்களிலேயே, அதிரடி மூலமாக, போட்டியைத் தங்கள் கைக்குள் கொண்டு வருவதுதான், இலங்கையின் ஸ்டிராடஜி. இந்த டெக்னிக்தான், 1996 உலகக்கோப்பையின் போது, இலங்கையின் கோப்பைக்கனவை நனவாக்கியது.

இந்தக் குறிப்பிட்ட போட்டியில், கலுவிதரனா சில்வர் டக்காகி வெளியேற, ஜெயசூர்யாவுடன் இணைந்தார் அட்டபட்டு‌. அசராமல் அடிக்கத் தொடங்கினார் ஜ்ஜெயசூர்யா. சென்டிமீட்டர் அளவுக்குக் கூட, இந்திய பௌலர்களுக்கு வாய்ப்பளிக்காது, வந்த பந்துகளை எல்லாம், பவுண்டரி லைனுக்கு அனுப்பத் தொடங்கினார். உதாரணத்திற்கு, 29 ரன்களை அவர் எட்டியிருந்த போது, அதில் 26 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமே அவர் சேர்த்திருந்தார்.

அத்தனை ஃபீல்டர்களுக்கும் வேலை வைத்திருந்தார். ஆம், பந்துகளை பவுண்டரி லைனிற்கு வெளியே இருந்து எடுத்து வருவது மட்டுமே அவர்களது வேலையாக இருந்தது. சரியான லைன் அண்ட் லெங்க்தில் வீசப்பட்டாலும், அதை ஃபீல்டர்களுக்கு நடுவே இடைவெளி கண்டுபிடித்து ரன்களாக மாற்றினார். சரி, அவுட் சைட் த ஆஃப் ஸ்டெம்ப்பில் எறிந்து பார்க்கலாம் என்றால், மிட் விக்கெட்டில் அது பவுண்டரியானது. தான் சந்தித்த 41-வது பந்தில் இறங்கி வந்து ஸ்ட்ரெய்டில் சிக்ஸராக்கி, 54 ரன்களைச் சேர்த்தார் ஜெயசூர்யா. ரன்ரேட் 6 ஐ விட்டு இறங்காமலே பார்த்துக் கொண்டார். அவரை எப்படி அடக்குவது என்ற வழியை இந்தியா அறியவே இல்லை.

வெங்கடேஷ் பிரசாத் மற்றும் குருவில்லாவின் வேகமோ இல்லை கும்ப்ளே மற்றும் சுனில் ஜோஷியின் சுழல் மாயமோ அவரை எதுவும் செய்ய முடியவில்லை. சுனில் ஜோஷி, அரவுண்ட் தி விக்கெட்டில் எல்லாம் வந்து பந்து வீசிப் பார்த்தார், சில டாட் பால்களாக அதை மாற்ற முடிந்ததே ஒழிய விக்கெட் எடுக்க முடியவில்லை.

Sanath Jayasuriya
Sanath Jayasuriya

சதத்தை ஜெயசூர்யா நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், அட்டபட்டு, 38 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஜெயசூர்யா, தனது ஸ்டைலில், பவுண்டரியுடன் 85 பந்துகளில், சதத்தைக் கடந்தார். ஒருநாள் போட்டிகளில் அது அவரது நான்காவது சதம் ஆகும்‌. அட்டபட்டுவுக்கு அடுத்ததாக வந்த அரவிந்தா டீ சில்வாவும், டக் அவுட்டாகி வெளியேற, இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவுக்கு, மிக மெல்லியதாய், நம்பிக்கைத் துளிர்விட்டது. அர்ஜுனா ரணதுங்கா உள்ளே வந்தார். ஆனாலும், 25 ஓவர்களுக்கு மேல் இலங்கையிடமிருப்பதும், கைவசம் ஏழு விக்கெட்டுகளிருப்பதும், அடிக்க வேண்டிய ரன்கள், வெறும் 75தான் என்பதெல்லாம் ஏற்படுத்திய சோர்வை விட, "அச்சமா, அரை கிலோ என்ன விலை?!" என்னும் ரீதியில் எல்லாப் பந்துகளையும் சந்தித்துக் கொண்டிருந்த ஜெயசூர்யாதான், அதிக மனச்சோர்வை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட போட்டி முழுமையாய் தங்களை விட்டுப் போய் விட்டதையுணர்ந்த இந்திய பௌலர்கள், ஒருகட்டத்தில் சம்பிரதாயத்துக்காக பந்து வீசத் தொடங்கிவிட்டனர்.

தனது இருப்புக்கும், எதிரணியின் வெற்றி வாய்ப்புக்குமான தொடர்பு தலைகீழ் விகிதம் என்பதை அன்றும் அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். 50 ஓவர்கள் எல்லாம் நிற்கப் பொறுமையில்லாமல், அதன்பின் மிக அதிரடியாக மாறினார். அந்தக் காலத்திலேயே, ஒரே ஓவரில், ஆறு பவுண்டரிகளை விளாசியவருக்கு, இதெல்லாம் பெரிய விஷயமா?! ரணதுங்கா, திலகரத்னே விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ, ரோஷன் மகானாமாவோடு சேர்ந்து, இலக்கைத் துரத்த ஆரம்பித்தார். 146 ரன்களை அடைந்த போது, ஒருநாள் போட்டியில், இலங்கை வீரர் ஒருவரின், அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை ஜெயசூர்யா எட்டினார். அதற்கு முன்னதாக, அரவிந்தா டீ சில்வா, கென்யாவுக்கு எதிராக எடுத்திருந்த 145 ரன்கள்தான், தனியொரு இலங்கை வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

இறுதியாக, 119 பந்துகளில் 150 ரன்களை எட்டினார் ஜெயசூர்யா. இலங்கை வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் 150 ரன்களை எட்டியது அதுவே முதல்முறை. அவரது இன்னிங்க்ஸில் 17 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடக்கம். 40.5 ஓவர்களில், மகானாமா அடித்த பவுண்டரி மூலமாக, ஒன்பது ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே வெற்றிக் கோட்டை எட்டிவிட்டது இலங்கை. ஓப்பனராக இறங்கி, 41 ஓவர்கள் நின்று கடைசிவரை ஆட்டமிழக்காமல், அணியை வெல்ல வைத்த ஜெயசூர்யா, ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விட்டிருந்தால், இரட்டைச் சதம் அன்று எளிதாய் வந்திருக்கும்.

சனத் ஜெயசூர்யா
சனத் ஜெயசூர்யா
Wikimedia Commons

இந்தப் போட்டியையடுத்து, நியூசிலாந்துடனான போட்டியையும் வென்ற இலங்கை, இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பாகிஸ்தானைச் சந்தித்து, அதில் இரண்டு பைனல்களை அபாரமாக வென்று, மூன்றாவது பைனலே தேவைப்படாது, மிக அற்புதமாக, இண்டிபெண்டன்ஸ் டிராபியைக் கைப்பற்றியது. இது நடந்து அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே, 189 ரன்களைக் குவித்து, ஒரு இலங்கை வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக அதை மாற்றி, தன்னுடைய முந்தைய சாதனையை தானே முறியடித்தார் ஜெயசூர்யா.

ஹேன்ஸி க்ரோனியே - பாப் உல்மர் இயர்பீஸ் சர்ச்சை: விவாதங்களைக் கிளப்பிய சம்பவத்தின் நினைவுகள்!

இந்தப் போட்டி மட்டுமின்றி, பல போட்டிகளில், இந்தியாவை மண்ணைக் கல்வச் செய்து, இந்திய ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்த பணியை செவ்வனே செய்திருந்தார் ஜெயசூர்யா. 2003 உலகக் கோப்பையின் போது எப்படி பாண்டிங்கின் பேட்டில் ஸ்பிரிங்க் இருக்கிறதென்ற வதந்திகள் உலா வந்ததோ, அதே போல், ஜெயசூர்யாவின் பேட்டிலும் உலோகம் இருக்கிறது, அதனால்தான் அவர் இப்படியொரு பவர் ஹிட்டராக இருக்கிறார் என்ற கதைகளெல்லாம் சுற்றிவரத்தான் செய்தன. காரணம், அந்தக் காலத்தில் 17 பந்துகளில் அவர் அடித்த அதிவேக அரைசதம், 48 பந்துகளில் அவர் அடித்த அதிவேக சதம் ஆகியவை தந்த பிரமிப்புதான். இது நம்முடைய கண்களுக்கு, பார்த்துப் பழகியவைதான். ஆனால், 90ஸ் கிட்ஸுகளுக்கு அதை முதல்முறையாக கண்முன் நிகழ்த்திக் காட்டியவர் ஜெயசூர்யாதான். அவருடைய ஒவ்வொரு இன்னிங்ஸையும், அவரே மறந்தாலும் எதிரணி ரசிகர்கள் மறக்க மாட்டார்கள், அப்படி காலமெல்லாம் நின்று பேசும் ஒரு இன்னிங்ஸ்தான் இதுவும்!

அடுத்த கட்டுரைக்கு