`வங்க தேசத்துக்காக விளையாடுவதைத் தவிர்ப்பது மிகப்பெரிய பாவம் என எனக்குத் தெரியும். ஆனால், போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் நான் விலகுகிறேன்’ என முஷ்பிகுர் ரஹீம் அதிர்ச்சி கொடுத்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 2009-ம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது இலங்கை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் உயிர்தப்பினர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை மற்ற அணிகள் தவிர்த்து வருகின்றன. இந்நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது.

இதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வங்கதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் விளையாடுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த வங்கதேசம் கிரிக்கெட் போர்டு ஐக்கிய அமீரகத்தில் போட்டியை வைத்துக்கொள்ளலாம் பாகிஸ்தானில் வேண்டாம் எனக் கூறியது. பாகிஸ்தான் விடாப்பிடியாக இருந்தது.
டி-20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தது பாகிஸ்தான். டி-20, ஒருநாள் போட்டிகளுக்கு ஓகே சொன்ன வங்கதேசம் கிரிக்கெட் போர்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், பாகிஸ்தானில் சென்று விளையாட ஒப்புக்கொண்டது வங்கதேசம். ஆனால், தொடர்ச்சியாக வேண்டாம் இரண்டு பிரிவுகளாக விளையாடலாம் என்றது வங்கதேச தரப்பு. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது. இந்நிலையில்தான் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகுவதாக முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள முஷ்பிகுர் ரஹீம், `நான் பாகிஸ்தானுக்குப் போவதில்லை என முன்பே கூறியுள்ளேன். என் குடும்பத்தினர் கவலை கொள்கின்றனர். நான் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை. பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்கின்றனர். எனது முடிவை வெகுநாள்களுக்கு முன்பே கடிதம் மூலம் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துவிட்டேன். வங்கதேசத்துக்காக விளையாடுவதைத் தவிர்ப்பதைவிட மிகப்பெரிய பாவம் எதுவுமில்லை. போட்டிகள் முழுவதுமாக பாகிஸ்தானில் நடைபெறும் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் விளையாட கிடைத்த வாய்ப்பை மறுத்தேன்.

வாழ்க்கையைவிட கிரிக்கெட் பெரியதல்ல. பாகிஸ்தானில் தற்போது சூழ்நிலைகள் மாறியுள்ளன என்பதை நம்புகிறேன் ஒப்புக்கொள்கிறேன். இரண்டு ஆண்டுகளில் அங்கு அணியில் சென்று விளையாடுவதைப் பார்க்கும்போது நான் நம்பிக்கை பெறுவேன். இதற்கு முன்பு நான் பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். இலங்கை அணி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அங்கு சென்று விளையாடி இருக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதற்கு பாகிஸ்தான் சிறந்த இடம்'' என முடித்துக்கொண்டார்.