Published:Updated:

தோனி சரவணன் முதல் தோனிக்குப் பிடித்த பாகிஸ்தானி வரை! - வெறித்தன கிரிக்கெட் ரசிகர்கள்

 சரவணன்
சரவணன்

விளையாட்டு என்பது விளையாடுவது மட்டுமல்ல, விளையாட்டை ரசிப்பதையும் சேர்ந்தது. அப்படி, வெறித்தன கிரிக்கெட்டின் வேற லெவல் ரசிகர்களின் பட்டியல் இது.

விளையாட்டு என்பது விளையாடுவது மட்டுமல்ல, விளையாட்டை ரசிப்பதையும் சேர்ந்தது. அப்படி, வெறித்தன கிரிக்கெட்டின் வேற லெவல் ரசிகர்களின் பட்டியல் இது.

கிரிக்கெட் ரசிகர்கள்
கிரிக்கெட் ரசிகர்கள்

ஆலன் ஜோன்ஸ் :

ஆலன் ஜோன்ஸ்
ஆலன் ஜோன்ஸ்

நியூசிலாந்தைச் சேர்ந்த 78 வயது ஆலன் ஜோன்ஸ், மிகவும் தனித்துவமான ஒரு ரசிகர். கடந்த 40 வருடங்களாக, நியூசிலாந்தின் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கும் அனைத்து டெஸ்ட் போட்டிகளுக்கும் வந்துவிடுவார். களைந்த சிகை, சுருங்கிய உடை, கையில் ரேடியோ என 40 வருடங்களாக ஒரே இடத்தில் அமர்ந்து வருகிறார். இதில் என்ன தனித்துவம் என்கிறீர்களா? ஆலன், பிறவியிலிருந்தே கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி! கையிலிருக்கும் ரேடியோ மூலம் வர்ணனைகளைக் கேட்டுக்கொண்டே, மைதானத்தில் எழும் ஒலிகள் மூலம் கிரிக்கெட்டை ரசித்துவருகிறார். மட்டையால் அடிக்கப்படும், சத்தம் அவருக்கும் மிகவும் பிடிக்குமாம். ஆலன், மனோ தத்துவவியலில் பட்டம் பெற்றவர். மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கிவருகிறார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

சுதிர் குமார் கௌதம் :

சுதிர் குமார் கௌதம்
சுதிர் குமார் கௌதம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு, சில வீரர்களைக்கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால், சுதிர் குமாரைத் தெரியாமல் இருக்காது. பீகாரைச் சேர்ந்த சுதிர், 2003-ம் ஆண்டிலிருந்து இந்திய ஆண்கள் அணி விளையாடும் அத்தனை போட்டிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இவரின் தனித்துவம், உடல் முழுதும் தேசியக்கொடியின் மூவர்ணத்தைப் பூசிக்கொள்வதும், இந்திய வரைபடம் போல சிகையலங்காரம் செய்துகொள்வதும் மற்றும் `கிரிக்கெட்டின் கடவுள்' சச்சின் டெண்டுல்கரின் பெயரை உடலில் எழுதிக்கொள்வதும்தான். கிட்டதட்ட, BCCI-யின் அஃபீசியல் ரசிகர் இவர்.

கிராவி :

கிராவி
கிராவி

கிராவி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் முகம். அவரது நடை, உடை, பாவனை மூலம் உலகம் முழுவதும் பிரபலமானர். அவர் மைதானத்தினுள் அடியெடுத்து வைக்கும்போதே, அவருடன் இசைக்கருவிகளை இசைக்கும் குழுவும் வரும். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு வித்தியாசமான உடையில் வந்து பகீர் கிளப்புவார். அப்படி அவர் திருமண கவுன்கள் அணிந்துவந்த சம்பவங்களும் இருக்கின்றன. கிராவியின் முழுப்பெயர் என்ன தெரியுமா? லேபன் கென்னத் ப்ளாக்பர்ன் லீவெல்டினி பக்கனன் பெஞ்சமின்...! ஸப்பாடா...

சோயப் அல் பொகாரி :

சோயப் அல் பொகாரி
சோயப் அல் பொகாரி

வங்கதேசத்தைச் சேர்ந்த சோயப் அல் பொகாரிதான் அந்த நாட்டு கிரிக்கெட் உலகின் வங்கப்புலி! வரிப்புலியைப் போல் வேடமணிந்து கடந்த 9 ஆண்டுகளாக , வங்கதேச ஆண்கள் கிரிக்கெட் அணி எங்கு விளையாடினாலும், அங்கு சென்று அவர்களுக்கு உற்சாகம் கொடுத்துவருகிறார். பொருளாதார நெருக்கடி எனும் பெரும் சுமையிலும் கடும் குளிரிலானாலும், வெயிலானாலும் சட்டைக்கூட அணியாது தன் அணிக்கு சப்போர்ட் செய்துவருகிறார் இந்த சோயப்.

ஹெச்.சரவணன் :

ஹெச்.சரவணன்
ஹெச்.சரவணன்

இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.சரவணன், தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் வெறித்தன ரசிகர். உடல் முழுவதும் மஞ்சள் பெயின்ட் அடித்துக்கொண்டு அதில் தோனியின் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை வரைந்துகொண்டு மைதானத்துக்கு வரும் ஹெச்.சரவணன் பலருக்கும் பரீச்சயம். தலையில் யோகிபாபு ஸ்டைல் விக் ஒன்றை அணிந்துகொண்டு சிஎஸ்கே கொடியை ஆரவாரத்துடன் ஆட்டுவது இவரின் வழக்கம்.

பெர்ஸி அபய்சேகரா :

பெர்ஸி அபய்சேகரா
பெர்ஸி அபய்சேகரா

இலங்கையைச் சேர்ந்த பெர்ஸி அபேய்சேகரா 79 வயதானவர். இளமையின் துடிப்புடன் மைதானத்தைக் கலக்கும் அதிதீவிர கிரிக்கெட் ரசிகர். ``நான் முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கை அணிக்கு உற்சாகமூட்டி வருகின்றேன். பல கிரிக்கெட் அணிகள் என்னைப் பாராட்டியுள்ளன. இந்த முப்பது ஆண்டுப் பயணம் மிக மிக நெகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டது. கிரிக்கெட் மீதான என் காதல் நான் உயிருடன் இருக்கும்வரை ஓயாது" என பெருமிதத்துடன் கூறுகிறார் பெர்ஸி.

லேரி - தி லெப்ரிஷான் :

லேரி - தி லெப்ரிஷான்
லேரி - தி லெப்ரிஷான்

வித்தியாசமான ரசிகர்கள் பட்டியலில் லேரி புதிய வரவாகும். லெப்ரிஷான் என்றால் ஐரிஸ் நாட்டுத் தேவதை. அந்தத் தேவதை போல் உடையணிந்து வந்து உற்சாகப்படுத்துவது இவர் வழக்கம். இவருடன் இவரது குட்டி மகனும் இணைந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள். பளபளக்கும் பச்சை உடையில் காட்சியளிக்கும் இந்த ரசிகருக்கே தனி ரசிகர் பட்டாளம் ஒன்றும் உருவாகியிருக்கிறது.

சாச்சா கிரிக்கெட் :

சாச்சா கிரிக்கெட்
சாச்சா கிரிக்கெட்

பாகிஸ்தான் கொடி பதித்த தொப்பி மற்றும் சட்டை, நீளமான வெள்ளைத்தாடி, இவைதான் சாச்சாவின் அடையாளம். 1980-களில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளிச்சத்துக்கு வந்தவர். இவரின் கிரிக்கெட் ஆர்வத்தைக் கண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எங்கு விளையாடினாலும் அங்கு செல்ல சாச்சாவுக்கு ஏற்பாடு செய்து தருகிறது. `பாகிஸ்தான் ஜிந்தாபாத்', சாச்சாவின் பிரபலமான கூவல்களில் ஒன்று!

முகமது பஷீர் :

முகமது பஷீர்
முகமது பஷீர்
WILLIAM WEST

முகமது பஷீர், சிகாகோவில் வாழும் 55 வயது பாகிஸ்தானியர். இவரது மனைவியோ இந்தியாவைச் சேர்ந்தவர். இப்போது இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவா அல்லது இந்தியாவுக்கு ஆதரவா என சந்தேகம் வரலாம். ஆனால், பஷீரோ இரண்டு அணிகளையுமே முழு மனதாக ஆதரித்துவருகிறார். 2014-ல் நடந்த ஐ.சி.சி டி20 வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டிகளைக் காண வந்ததன் மூலம் கவனத்துக்கு வந்த பஷீருக்கு, அதன் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டை பரிசளித்தவர் தோனி.

சுதேஷ் பியாட்டிஸா :

சுதேஷ் பியாட்டிஸா
சுதேஷ் பியாட்டிஸா

இலங்கை அணியின் தீவிர ரசிகர் சுதேஷ். சில முன்னணி இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஒருங்கிணைத்து இவர் செய்த வீடியோ மிகவும் வைரல். 2015 உலகக் கோப்பையின்போது ஆரஞ்சு வண்ண உடை ஒன்றை அணிந்துவந்து அனைவரையும் கவர்ந்தார். அவர் போட்டிருந்த உடையைப் போலவே 100 உடைகளை இலங்கை ரசிகர்களுக்கு ஆன்லைனில் விற்று அதில் வந்த பணத்தை இலங்கையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்துக்கும் அளித்தார்.

கயன் செனநாயக :

கயன் செனநாயக
கயன் செனநாயக

கயன் செனநாயக, 1996-ம் ஆண்டில் 17 வயது இளைஞனாக இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கத் துவங்கியவர். இன்றுவரை, 2,000-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, இலங்கை கிரிக்கெட் உலகின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்கிறார். இலங்கை அணி உலகக் கோப்பை வென்றபோதே, கிரிக்கெட்டின் மீது இவருக்கு அளவு கடந்த ஆர்வம் பிறந்ததாம்.

ராம் பாபு :

ராம் பாபு
ராம் பாபு

ஹரியானாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராம், பஞ்சாப் மாநிலத்தின் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர். தன் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, பொருளாதாரச் சூழல் காரணமாக கிரிக்கெட்டை கைவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார். ஆனால், கிரிக்கெட் அவரை விட்டு விலகவும் இல்லை, கைவிடவும் இல்லை! தோனியின் அதிதீவிர ரசிகரான இவர், தோனி பங்கேற்கும் எல்லாப் போட்டிகளிலும் கலந்துகொண்டு அணிக்கு உற்சாகமூட்டுவார். 2014-ல் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில், ராமுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, கிரிக்கெட் குழுவின் மருத்துவரைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தார் தோனி. உடலில் மூவர்ண கொடியின் வண்ணமும் அதில் எழுதப்பட்டிருக்கும் தோனியின் பெயரும் இவரது தனித்த அடையாளம்.

முகமது ஜமான் கான் :

முகமது ஜமான் கான்
முகமது ஜமான் கான்

57 வயதான முகமது ஜமானுக்கு இன்னொரு பேர் இருக்கு, சாச்சா டி20! பாகிஸ்தான் மீது கொண்ட அளவுகடந்த பற்றால், ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென லட்சியம் கொண்டிருந்தாராம். படிப்பை நிறைவு செய்யாததால், அந்த லட்சியமும் நிறைவேறாமல் போக, துபாயில் இனிப்புகள் தயாரிக்கும் வேலையில் சேர்ந்தார். ஆனால், 2011-ல் நடந்த ஆசியகோப்பை கிரிக்கெட்டை காண விடுமுறை கிடைக்காமல் போக, அந்த வேலையையே உதறித்தள்ளிய உக்கிர ரசிகர் இவர்.

அடுத்த கட்டுரைக்கு