சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஐ.பி.எல் பாசிட்டிவ்!

ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.எல்

இந்தத் திங்கள்கிழமைக் காலையில் மட்டும் ஒவ்வொரு அணியிலிருந்தும் பல கொரோனா அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.

பயோ பபுள்களையும், பபுள்களுக்குள் இருப்பதால் வைரஸிலிருந்து விலகி இருக்க முடியும் என்ற ஐ.பி.எல் நிர்வாகத்தின் எண்ணத்தையும் உடைத்தெறிந்திருக்கிறது கொரோனா. 2021 ஐ.பி.எல் சீசனை எப்படியேனும் நடத்திவிடவேண்டும் என்ற பி.சி.சி.ஐ முடிவை ஆட்டிப் பார்த்திருக்கிறது.

கொரோனா இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஐ.பி.எல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ‘‘இதுபோன்ற கடினமான சூழ்நிலை நிலவும் நிலையில் இந்தத் தொடர் நடக்கவேண்டுமா’’ என்று பலரும் விமர்சித்த நிலையில், ‘‘நிச்சயம் இந்தத் தொடர் நடக்கும்’’ என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் எனப் பலருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி வந்திருப்பது மிகப்பெரிய பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது.

இந்தத் திங்கள்கிழமைக் காலையில் மட்டும் ஒவ்வொரு அணியிலிருந்தும் பல கொரோனா அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட, அன்றிரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக நடக்கவிருந்த அந்த அணியின் போட்டி ரத்து செய்யப்பட்டது. தோள்பட்டை ஸ்கேனுக்காக பபுளிலிருந்து வெளியேறியதால் வருண் சக்ரவர்த்திக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

அந்தச் செய்தி வெளிவந்த சில நிமிடங்களில், டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பணியாற்றிய சிலருக்கும் கொரோனா இருப்பதாகச் செய்தி வந்தது. அதைப் படித்து முடிப்பதற்குள்ளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த அப்டேட் கொடுத்தது. அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அணியின் பேருந்து ஓட்டுநர் ஆகியோருக்குக் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

ஐ.பி.எல் தொடர் தொடங்கியதிலிருந்து கொரோனாவால் சவால்கள் ஏற்படாமல் இல்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தபோதே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற வீரர்கள் விலகினார்கள். அதேபோல், இந்த சீசனிலும் வீரர்கள் விலகுவது தொடர்ந்தது. ஆனால், அது கடந்த ஆண்டை விடவும் மிகவும் அதிகமாக இருந்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜாஷ் ஃபிலிப்பே சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக மார்ச் மாதமே அறிவித்தார். சில தினங்கள் கழித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகினார். போட்டிகள் தொடங்குவதற்கு இரு தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜாஷ் ஹேசில்வுட் ஆஸ்திரேலியாவிலேயே இருக்கப்போவதாக அறிவித்தார்.

போட்டிகள் தொடங்கிய சில நாள்களிலேயே பபிள்களில் இருந்து சோர்ந்துபோன ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் உடனடியாக இங்கிலாந்து திரும்பினார். இப்படி வெளிநாட்டு வீரர்கள் வெளியேறிக்கொண்டிருக்க, தன் குடும்பத்தினர் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பதால், அவர்களோடு உடனிருப்பதற்காகத் தொடரிலிருந்து வெளியேறுவதாக டிவிட்டரில் பதிவிட்டார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். அடுத்த நாளே, ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை தான் நாடு திரும்புவதாக அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே ஆர்.சி.பி அணிக்காக ஆடிவரும் சக ஆஸ்திரேலிய வீரர்கள் கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோரும் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

ஐ.பி.எல் பாசிட்டிவ்!

ஒருகட்டத்தில் வீரர்கள் மட்டுமல்லாமல், இந்திய நடுவர் நிதின் மேனன், ஆஸ்திரேலிய நடுவர் பால் ரைஃபிள் ஆகியோரும் விலகுவதாக அறிவித்தனர். ‘இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தால் பயணம் மிகப்பெரிய பிரச்னையாக அமையும்’ என்பது ஆஸ்திரேலியர்களின் விலகலுக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும் என்றும் கருதப்பட்டது. தடை தொடர்ந்ததால், பால் ரைஃபிள் ஐ.பி.எல் தொடரில் தொடர்ந்தார்.

“ஐ.பி.எல் முடிந்ததும் ஆஸ்திரேலிய வீரர்களை நாட்டுக்கு அழைத்துச்செல்ல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் ஒரு தனி விமானம் ஏற்பாடு செய்யவேண்டும். எங்களின் ஊதியத்தில் 10 சதவிகிதம் பெறுபவர்கள், எங்கள் பாதுகாப்புக்கு குறைந்தபட்சம் இதையாவது செய்யவேண்டும்” என்றார் மும்பை இந்தியன்ஸ் ஓப்பனர் கிறிஸ் லின்.

ஒருசில வீரர்களோ நேரடியாகவே இந்தத் தொடரை விமர்சித்தனர். ஆடம் ஜாம்பா, ஐ.பி.எல் நடப்பதை வெளிப்படையாகவே விமர்சித்தார். “தங்கள் குடும்பத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது எப்படி மக்களால் கிரிக்கெட்டை ரசிக்கமுடியும்” என்று கேள்வி எழுப்பினார் ஆடம் ஜாம்பா. “இந்தியர்களின் பார்வையில் யோசித்தால், மக்கள் மருத்துவமனையில் சேர்வதற்கே கஷ்டப்படும்போது, எப்படி இந்த அணிகளாலும், நிறுவனங்களாலும், அரசாலும் ஐ.பி.எல் நடத்தமுடிகிறது என்ற கேள்வி எழுகிறது” என்றார் ஆண்ட்ரூ டை.

அதேசமயம், “மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கும், அவர்களின் மனச்சோர்வைப் போக்குவதற்கும் விளையாட்டு உதவும் என்றால், இந்தத் தொடர் நடப்பது சரிதான்” என்று அதே ஆண்ட்ரூ டை சொல்லியிருந்தார். கொரோனா காலகட்டதில் ஐ.பி.எல் போன்ற ஒரு தொடர் நடப்பது மக்கள் பதற்றம் அடையாமல் இருப்பதற்கு ஓரளவேனும் உதவும் என்று பலரும் கருதினார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங், “பபிளில் இருப்பது ஒருவகையில் பாதுகாப்பானது” என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருக்கும் அதே கருத்தைத்தான் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் நாதன் கூல்டர்நைலும் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அந்தப் பாதுகாப்பு என்பதே பிரச்னையாக இருக்கும்போது இந்தத் தொடர் நடப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

பபுள்களில் இருப்பது ஃபிட்டாக இருக்கும் வீரர்கள் மட்டும் இல்லை. 60 வயதைத் தாண்டிய பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், குடும்பத்தினர், சிறுவர்கள், குழுந்தைகள், பெற்றோர்கள்… இப்படிப் பலரும் இருக்கிறார்கள். மரபணு மாற்றம் அடைந்திருக்கும் கொரோனா எந்த வயதினருக்குமே சிக்கலாக இருக்கும்போது, இது மிகப்பெரிய விஷப்பரீட்சை.

நீரில் பாதுகாப்பாகப் பயணிக்கத்தான் படகுகள். ஆனால், அந்தப் படகில் இப்போது ஓட்டை ஏற்பட்டிருக்கிறது. இனியும் பயணத்தைத் தொடர்வது ஆபத்து. அதே இடத்தில் இருப்பதும் ஆபத்து. பி.சி.சி.ஐ சரியான முடிவை எடுப்பது அவசியம்.