Published:Updated:

அவுட், நாட் அவுட் - நடுவே குழப்பும் அம்பயர்ஸ் கால்... DRS ஆல் பாதிக்கப்படும் அணிகள்!

கிரிக்கெட்டில் ஒரு சில விதிமுறைகளை எப்போதுமே புரிந்துக்கொள்ள முடியாது. டக் வொர்த் லீவிஸ் போல், DRS-ல் வரும் அம்பயர்ஸ் கால் அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது.

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. முஜிபுர் ரஹ்மான் 5 விக்கெட்டுகளையும் ரஷீத்கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். ஆச்சர்யப்படும் வகையிலான இந்த வெற்றியிலும் சிறு சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷித் கானின் சுழலில் சிக்கி ஸ்காட்லாந்து வீரர்கள் சின்னாபின்னமாகியிருந்தனர். இருவரும் சேர்ந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இந்த 9 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகள் LBW முறையில் வந்தவை.

இதில்தான் பிரச்சனை. இந்த 5 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகள் பேட்ஸ்மேன்களால் ரிவ்யூ செய்யப்பட்டு அம்பயர்ஸ் கால் என முடிவு வந்தவை. அம்பயர்கள் ஏற்கெனவே அவுட் கொடுத்திருந்ததால் பேட்ஸ்மேன்களும் வேறு வழியின்றி வெளியேறியிருந்தனர். இந்த அம்பயர்ஸ் கால் முடிவுகள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. முக்கிய வீரர்களான மெக்ளௌட், பெர்ரிங்டன் ஆகியோர் அம்பயர்ஸ் கால் முடிவால் அவுட் ஆகியிருந்தனர். ஒருவேளை அம்பயர்கள் இவர்களுக்கு நாட் அவுட் என கொடுத்திருந்தால் ஸ்காட்லாந்து உறுதியாக 60 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்காது. ஆப்கானிஸ்தானும் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது. அவர்களின் நெட் ரன்ரேட்டும் +6.500 என்றளவுக்கு உயர்ந்திருக்காது.

முஜிபுர் ரஹ்மான்
முஜிபுர் ரஹ்மான்
T20 Worldcup
கிரிக்கெட்டில் ஒரு சில விதிமுறைகளை எப்போதுமே புரிந்துக்கொள்ள முடியாது. டக் வொர்த் லீவிஸ், DRS இல் அம்பயர்ஸ் கால் போன்றவை அந்தப் பட்டியலில் வருபவை.

LBW முறையிலான அவுட்களை சரியாக கணிப்பதில் அம்பயர்களுக்கு சிரமம் இருப்பதால் அதிகப்படியான தவறுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அதை குறைப்பதற்காகவே பால் ட்ராக்கிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி LBW முறையிலான அவுட்களைத் தீர்மானிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. LBW க்கு ஒரு பேட்ஸ்மேனோ பௌலரோ அப்பீல் செய்யும்போது மூன்று விஷயங்கள் குறிப்பிட்டு கவனிக்கப்பட்டும். அவை, Pitching, Impact, Wickets.

Pitching:

பந்து பிட்ச் ஆகும் இடத்தை பொறுத்தது இது. ஸ்டம்ப் லைனிலோ அல்லது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயோ பந்து பிட்ச் ஆகியிருந்தால் அவுட் வழங்க பரிந்துரைக்கும். பந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்ச் ஆகியிருந்தால் நாட் அவுட் வழங்க பரிந்துரைக்கப்படும்.

Impact:

பந்து பிட்ச்சாகி பேட்ஸ்மேனின் பேடில் படும் இடத்தை பொறுத்தது இது. இது சில நேரங்களில் குழப்பத்தை ஏற்பத்தும் விஷயமாக மாறிப்போகும். பேட்ஸ்மேன் ஷாட் ஆட ஆயத்தமாகும் பட்சத்தில் பிட்ச் ஆன பந்து பேட்ஸ்மேனின் பேடில் படும்போது அது ஸ்டம்ப் லைனுக்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அப்போது அவுட் வழங்க பரிந்துரைக்கப்படும். இல்லையேல் நாட் அவுட் வழங்க பரிந்துரைக்கப்படும். பேட்ஸ்மேன் ஷாட் ஆட பிரயத்தனப்படாமல் பந்தைத் தடுக்கும் முயற்சியோடு மட்டும் காலை விட்டு பேடில் வாங்கியிருந்தால் பந்து பேடில் படும் புள்ளி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இருந்தாலும் அவுட் வழங்க பரிந்துரைக்கப்படும். குறைந்தபட்சம் பந்தின் 50% பகுதியாவது இந்தப் பகுதிக்குள் இருக்கவேண்டும். பாதி இருந்தால் அம்பயர்ஸ் கால் வழங்கப் பரிந்துரைக்கப்படும்.

Wickets:

பந்து ஸ்டம்பைத் தாக்கும் விதத்தை பொறுத்தது இது. குறைந்தபட்சம் பந்தின் 50% பகுதியாவது ஸ்டம்பை தாக்கியிருந்தால் அவுட் வழங்க பரிந்துரைக்கப்படும். அதற்கும் குறைவான பகுதியே ஸ்டம்பைத் தாக்கியிருந்தால் அம்பயர்ஸ் கால் வழங்க பரிந்துரைக்கப்படும்.

ரஷீத் கான் & முஜிபுர் ரஹ்மான்
ரஷீத் கான் & முஜிபுர் ரஹ்மான்
T20 Worldcup

Wickets - இதில்தான் பல நேரங்களில் அம்பயர்ஸ் கால் பிரச்னை தலைதூக்கும். நேற்று முஜிபூர் ரஹ்மான் மெக்ளௌட்டையும் பெர்ரிங்டனையும் வீழ்த்தியபோது இந்த சர்ச்சைதான் ஏற்பட்டது. இந்த இருவருக்கும் ஆப்கன் வீரர்கள் அப்பீல் செய்த உடனேயே அம்பயர் குமார் தர்மசேனா அவுட் வழங்கிவிட்டார். பேட்ஸ்மேன்கள் அம்பயரின் முடிவில் திருப்தியில்லாததால் ரிவ்யூ எடுத்தனர். அதில், இருவருக்குமே பந்து ஸ்டம்பைத் தாக்கியிருந்தது. ஆனால், பந்தின் 50% க்கும் குறைவான பகுதியே ஸ்டம்பைத் தாக்கியிருந்தது. ஒருவேளை கள நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்து ஆப்கானிஸ்தான் ரிவ்யூவிற்குச் சென்றிருந்தால் இந்த இரண்டு விக்கெடுகளுக்கும் முடிவு நாட் அவுட் என்றே வந்திருக்கும். லீஸ்க்கின் விக்கெட்டை ரஷீத் கான் வீழ்த்தியிருந்தார். அதுவும் அம்பயர்ஸ் கால் என்றே வந்தது. அதில் impact இல் பிரச்னை இருந்தது. குறைந்த பகுதியிலான பந்தே பேடில் படும்போது ஸ்டம்ப் லைனுக்குள் இருந்ததால் அம்பயர்ஸ் கால் என வந்திருந்தது. அம்பயர் ஏற்கெனவே அவுட் எனத் தீர்ப்பு வழங்கியிருந்ததால் அவரும் நடையை கட்ட வேண்டியிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பயர்களுக்கு LBW-வை தீர்மானிப்பதில் இருக்கும் குழப்பங்களை அகற்றவே பால் ட்ராக்கிங் போன்ற தொழில்நுட்பங்கள் கிரிக்கெட்டுக்குள் வந்தன. ஆனால், அம்பயர்ஸ் கால் என்ற பெயரில் மீண்டும் அம்பயர்களின் தவறான முடிவை அங்கீகரித்துக் கொண்டே இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதே பல வீரர்களின் கேள்வியாகவும் இருக்கிறது.

அம்பயர்ஸ் காலினால் அதிகம் பாதிக்கப்பட்ட அணியாக இந்தியாவே இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என சமீபத்தில் இந்தியா ஆடிய தொடர்களில் அம்பயர்ஸ் கால்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்திய கேப்டன் கோலியே இந்த முறைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி
எனக்கு பயங்கர குழப்பமாக இருக்கிறது. பந்து ஸ்டம்பில் பட்டாலே பெய்ல்ஸ் கீழே விழுந்துவிடும். பேட்ஸ்மேன் அவுட் ஆகிவிடுவார். 50% பந்து ஸ்டம்பில் பட்டால்தான் அவுட் என கூறுவது சரியாக இல்லை. பந்து லேசாக கொஞ்சம் ஸ்டம்பில் மோதினால் பெய்ல்ஸ் கீழே விழாதா? எனக்கு புரியவில்லை. அம்பயர்ஸ் கால் அகற்றப்பட வேண்டும். இது அப்படியே தொடரும்பட்சத்தில் வருங்காலத்தில் நிறைய பெரிய தொடர்களை ஆடப்போகிறோம். அவற்றில் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
இந்திய கேப்டன் விராட் கோலி
IPL பிசினஸ் Explained: ஆயிரமாயிரம் கோடிகளை கொட்டும் ஐபிஎல் அணிகள் எப்படி லாபம் பார்க்கின்றன?

இவ்வாறு இங்கிலாந்துக்கு எதிரான ஹோம் சீரிஸின்போது அதிருப்தியை தெரிவித்திருந்தார் கோலி.

அம்பயர்ஸ் கால் மூலம் பெரிய தொடர்களில் பெரிய பிரச்னைகளை சந்திக்கப்போகிறோம் என கோலி பேசியிருந்தது இப்போது அரங்கேற தொடங்கியிருக்கிறது. ஸ்காட்லாந்தை 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியதன் மூலம் +6.500 என்ற நெட் ரன்ரேட்டோடு ஆஃப்கானிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டு க்ரூப்பிலும் முதல் இரண்டு அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும். அந்த இரண்டு அணிகளை தீர்மானிப்பதில் நெட் ரன்ரேட் பெரிய பங்கு வகிக்கும். அப்போதுதான் ஆப்கானிஸ்தானின் இவ்வளவு பெரிய ரன்ரேட் வேலையை காட்டும். அது இந்தியாவுக்குமே கூட ஆபத்தாக முடியும். ஒருவேளை நேற்று ஆப்கானிஸ்தானுக்கு அந்த மூன்று விக்கெட்டுகளும் அம்பயர்ஸ் கால் மூலம் கிடைக்காமல் போயிருந்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தானால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது. நெட் ரன்ரேட்டும் இவ்வளவு அதிகமாக இருந்திருக்காது. இதே மாதிரி ஒவ்வொரு போட்டியிலும் அம்பயர்ஸ் காலினால் ஏற்படும் சிறு சிறு தாக்கங்கள் கடைசியில் பூதாகரமாக பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

அம்பயர்ஸ் கால் ஒரு விக்கெட்டை ஒரு போட்டியை மட்டுமில்லை ஒரு பெரிய தொடரையே பெரிதாக மாற்றப்போவதை விரைவிலேயே காண்போம்.
சச்சின், DRS
சச்சின், DRS
அம்பயரின் முடிவில் திருப்தி இல்லாததால்தான் ஒரு பேட்ஸ்மேனோ பௌலரோ ரிவ்யூ எடுக்கிறார். அந்த ரிவ்யூவிலும் அம்பயர்ஸ் கால் என முடிவு வழங்குவது நியாயமாக இல்லையே!
சச்சின் டெண்டுல்கர்

இவ்வாறு சச்சின் டெண்டுல்கரும் அம்பயர்ஸ் கால் குறித்த தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்திய வீரர்கள் மட்டுமில்லை. பல வெளிநாட்டு வீரர்களும் முன்னாள் வீரர்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்துவிட்டனர். ஆனால், ஐசிசி இந்த விஷயத்தில் இன்னமும் ஒரு முடிவை எடுக்காமல் இருக்கிறது. ஒவ்வொரு முறை இது சார்ந்து குரல்கள் எழும்போதும், அம்பயர்ஸ் கால் என வந்தால் ரிவ்யூ ரீட்டெய்ன் செய்யப்படும். பௌலர்கள் அம்பயரிடம் பேட்ஸ்மேன் ஷாட் ஆட முற்பட்டாரா என்பதை கேட்டுவிட்டு ரிவ்யூ எடுக்கலாம் என அரைகுறை தீர்வையே வழங்கிக் கொண்டிருக்கிறது. அவற்றால் பெரிய பலன் எதுவும் இல்லை.

சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க சாரே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு