Published:Updated:

`இந்தியாவின் தாய்மொழி; கட்டாயம் இந்தி தெரிந்திருக்க வேண்டும்!' - ரஞ்சிக் கோப்பை வர்ணனை சர்ச்சை

பிசிசிஐ
பிசிசிஐ

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி ஒன்றில் வர்ணனையாளர்கள் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று கர்நாடகா பரோடா அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வந்தது. இந்த ஆட்டத்தின் போது பரோடா அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் 7 -வது ஓவரில்தான் அந்த சர்ச்சை கருத்து பேசப்பட்டது. போட்டி குறித்து வர்ணனை செய்துகொண்டு இருந்தவர்களில் ஒருவர், `இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியில் வர்ணனை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். தனது சிறப்பான கருத்துகளை அவர் தொடர்ந்து அந்த மொழியில் தந்து வருகிறார். டாட் பால்கள அவர் `பிந்தி பால்' என அழைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்" என்றார்.

ரஞ்சி  போட்டி #KARvBRD
ரஞ்சி போட்டி #KARvBRD

அப்போது மற்றொரு வர்ணனையாளரான ராஜேந்தர் அமர்நாத், `அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். அது நமது தாய் மொழி. அதை விட பெரிய மொழி வேறு இல்லை. கிரிக்கெட்டர்களான நாம் ஏன் இந்தியில் பேச வேண்டும் எனக் கேட்பவர்கள் மீது எனக்குக் கோபம் வரும். நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் உங்கள் தாய் மொழியில்தானே பேச வேண்டும்?" என்றார்.

இவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவ, சர்ச்சை வெடித்தது. போட்டி நடப்பதோ, கர்நாடகாவுக்கும் பரோடாவுக்கும். அதாவது கன்னட மொழி பேசும் அணிக்கும் குஜராத்தி மொழி பேசும் அணிக்கும். ஆனால் அங்கு வந்து பிசிசிஐ-யின் வர்ணனையாளர் ஒருவர், இந்தியாவின் தாய் மொழி இந்தி. அதைத்தான் அனைவரும் பேச வேண்டும் எனக் கூறும் கருத்துகளை ஏற்க முடியாது எனக் கொதித்தனர் நெட்டிசன்கள். மேலும் பிசிசிஐ கிரிக்கெட் மூலம் இந்தியைத் திணிக்கிறதா என்னும் கேள்வியையும் முன்வைத்தனர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவே அமர்நாத் வருத்தம் தெரிவித்தார். அவர், `நாங்கள் நாட்டில் பேசும் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம். எனது கருத்து யாரையாவது காயப்படுத்திருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் அந்த மொழியை விரும்புவதாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். அதை வேறு வழியில் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்திய நாட்டில் பல மொழிகள் இருக்கிறது. அனைவரின் மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம்" என்றார்.

பின் செல்ல