Published:Updated:

``கிரிக்கெட் விளையாடுவதைவிட வர்ணனை கடினம்!" - பிராட் ஹாக்

மு.பிரதீப் கிருஷ்ணா

"இந்தத் தொடரில் லெக் ஸ்பின்னர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது கொஞ்சம் ஆச்சர்யம்தான். மற்ற லெக் ஸ்பின்னர்களைப்போல், இவர்கள் பந்தை அதிகமாகச் சுழலச் செய்யவில்லை. பந்தையும், தோளுக்குக் கொஞ்சம் அருகே ரிலீஸ் செய்யாமல், தலைக்கு மேலே ரிலீஸ் செய்கிறார்கள்."

Brad Hogg
Brad Hogg

பிராட் ஹாக் - ஆஸ்திரேலியாவின் சீனியர் ஸ்பின்னர், இப்போது TNPL கமென்டேடர். தன் ஜாலியான பேச்சால் கமென்டரி பாக்ஸையே கலகலப்பாக்கும் அவரை, ஒரு செஷனின் இடைவெளியில் சந்தித்தேன். தனக்குப் பிடித்த வீரர்களைப் பற்றி தன்னுடைய லேப்டாப்பில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தவர், கேள்விகளுக்குப் பதிலளிக்கத்தொடங்கினார்.

உலகக் கோப்பை சாதனையை டிஎன்பிஎல்-லிலும் நிகழ்த்திய விஜய் சங்கர்!

TNPL தொடரில் வர்ணனை செய்யும் அனுபவம் எப்படியிருக்கிறது?

நான் இரண்டாவது ஆண்டாக இங்கு வந்துள்ளேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கொடுக்கிறது. முதல் தரப் போட்டிகளில் விளையாடாத வீரர்கள் பலருக்கும், அதற்கான வாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கிறது TNPL. இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கும் வீரர்கள் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நன்றாக உழைத்து, இந்தத் தொடரில் கிடைக்கும் அனுபவத்தை முக்கிய தொடர்களில் காட்டவேண்டும்.

இந்த சீசனில் உங்களைக் கவர்ந்த வீரர்கள் யார்?

Brad Hogg
Brad Hogg

ஒருசில வீரர்கள் தனி ஆளாக ஆட்டத்தின் போக்கை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜெகதீசன். அலெக்சாண்டர், சிலம்பரசன் ஆகியோரின் செயல்பாடுகள் அற்புதமாக இருந்தன. கடந்த ஆண்டு கலக்கிய இளம் வீரர் சாய் கிஷோருக்கு, இந்த வருடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதை அவர் நன்றாகக் கையாண்டார். அவரது தனிப்பட்ட பர்ஃபாமன்ஸ் சிறப்பாக இல்லையென்றாலும், அவரால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். (தான் எடுத்துவைத்திருந்த குறிப்பைப் பார்த்துவிட்டுத் தொடர்கிறார்) அதேபோல், ஷாரூக் கான்... அவர், திண்டுக்கல் அணியின் ஹரிநிஷாந்த் போலத்தான். திறமை இருக்கிறது. ஆனால், அவர்களால் அதை முழுமையாகக் காட்ட முடியவில்லை.

கிரிக்கெட் விளையாடுவதைவிட, அதைப் பற்றிப் பேசுவது எளிது என்பார்கள். உங்களைப் பொறுத்தவரை எது எளிதென்று நினைக்கிறீர்கள்?

என்னைக் கேட்டால் நான் திரும்ப விளையாடிவிடலாம் என்றே நினைக்கிறேன் (பலமாகச் சிரிக்கிறார்). வர்ணனை ஒன்றும் அவ்வளவு எளிதில்லை. என்ன, இப்போது சர்வதேச தரத்துக்கு விளையாட முடியாது. இல்லையெனில், விளையாடிவிடுவேன்.

Vikatan

டி-20 ரிஸ்ட் ஸ்பின்னர்களின் கேம் என்றார்கள். ஆனால், இந்த TNPL தொடரில், ஃபிங்கர் ஸ்பின்னர்கள்... அதிலும் குறிப்பாக இடது கை ஸ்பின்னர்கள்தான் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆம், இந்தத் தொடரில் லெக் ஸ்பின்னர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது கொஞ்சம் ஆச்சர்யம்தான். மற்ற லெக் ஸ்பின்னர்களைப்போல், இவர்கள் பந்தை அதிகமாக சுழலச் செய்யவில்லை. பந்தையும், தோளுக்குக் கொஞ்சம் அருகே ரிலீஸ் செய்யாமல், தலைக்கு மேலே ரிலீஸ் செய்கிறார்கள். முருகன் அஷ்வின் போன்ற முன்னணி ஸ்பின்னர்களே அதிகம் விக்கெட் வீழ்த்தாது ஆச்சர்யம்தான்.

ஆஷஸ் தொடர் பற்றிய உங்கள் கருத்துக்கணிப்பு...

5-0 ஆஸ்திரேலியா (மிகவும் பலமாகச் சிரிக்கிறார்).

Brad Hogg
Brad Hogg
Source: BCCI

தமிழ்நாட்டு அனுபவம் எப்படி இருக்கிறது?

நான் இதை மிகவும் விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவின் கிராமப் புறத்திலிருந்து வந்தவன் நான். ஆஸ்திரேலியாவின் கிராமப் புறத்தை ஒப்பிட்டால், இந்தியாவின் கிராமங்கள் மிகவும் அற்புதமாக இருக்கின்றன. அங்கெல்லாம், வீட்டிலிருந்து கிளம்பி பயணித்தால், அடுத்து ஒரு வீட்டைப் பார்ப்பதற்கு 2 மணி நேரங்கள் ஆகும் (சிரிக்கிறார்). ஆனால், இங்கு 2 நிமிடங்கள்... இல்லையில்லை 2 நொடிகளில்கூட கட்டடங்களைப் பார்க்காமல் பயணிக்க முடியவில்லை. இது மட்டுமல்ல, கலாசாரத்திலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய மக்கள் சில விஷயங்களில் மிகவும் ரிலாக்ஸாக இருப்பார்கள். ஆனால், இங்கு அப்படியில்லை. நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆனால், திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற ஊர்களில் பயணிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.