Published:Updated:

`திரும்ப வந்துட்டேன்'னு சொன்ன ரோஹித்... பரிதாப கோலி... களத்தில் பன்ட்! #INDvENG

கிங் கோலி, ஷுபம் கில் என இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தாலும், சர்ப்ரைஸ் சென்சுரி அடித்து இந்தியாவை மீட்டிருக்கிறார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா.

ரசிகர்களின் வரவு தந்த புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும், அமர்க்களமாகத் தொடங்கியது, இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டெஸ்ட் போட்டி. டாஸை வெல்வது, கூடுதல் பலம் தரும் என்பதால், டாஸின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தைவிட சற்று தூக்கலாகவே இருந்தது. இதுவரை இங்கிலாந்துக்கு எதிராகப் பத்துப் போட்டிகளில் டாஸைத் தோற்று, ஒரு போட்டியில் மட்டுமே டாஸை வென்றிருந்த கோலி இன்று டாஸை வென்றார்.

இங்கிலாந்தின் பக்கம், பட்லர், பெஸ், ஆர்ச்சர், ஆண்டர்சனுக்குப் பதிலாக, ஃபோக்ஸ், மொயின் அலி, பிராட், ஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றனர். வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் இங்கிலாந்தின் திட்டத்தால், பல திறமைகளை வெளிக்கொணர்வதோடு, வீரர்களுக்குப் போதுமான ஓய்வும் கிடைக்க வழிவகை ஏற்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அசைக்க முடியாத இரண்டு அணிகளை, தங்களுக்காக உருவாக்கிக் கொள்வதும் இங்கிலாந்தின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவின் பக்கம், அக்சர், குல்தீப், சிராஜ் ஆகியோர், நதீம், சுந்தர் மற்றும் பும்ராவுக்குப் பதிலாக உள்ளே வந்திருந்தனர்.

#INDvENG
#INDvENG

ரெட்பால் கிரிக்கெட்டில், தன்மீதான விமர்சனங்கள் அத்தனையையும் அடித்து நொறுக்கும் நோக்குடன் இன்று உள்ளே வந்தார், ஹிட்மேன் ரோஹித்! எனினும் வாஸ்து சரியில்லாத அந்த ஓப்பனர் இடம், வழக்கம்போலக் களப்பலி கேட்க, போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, ஸ்டோனுக்கு தனது விக்கெட்டை எல்பிடபிள்யூவாகப் பரிசளித்து வெளியேறினார் கில். புஜாரா உள்ளே வந்தார்.

மறுபுறமோ, தொடக்கம் முதலே ரோஹித்தின் ஆதிக்கம், தடையறத் தொடர்ந்தது. தயக்கமின்றி தேர்ந்த ஷாட்டுகளை ஆடத் தொடங்கினார். டிரைவ், புல் ஷாட் என வகைக்கொன்றாய் விளாசி, ஒருநாள் போட்டியை ஆடும் அணுகுமுறையோடே இதையும் கையாள, ரன்கள் மளமளவென உயர்ந்தன. மறுபுறம் நிற்கும் புஜாராவின் மீது அழுத்தத்தை அதிகரிக்காமல், மொத்தப் போட்டியையும், தனது பேட்டிலேயே தூக்கிச் சுமந்தார்.

சுழலுக்கு எந்த அளவுக்கு களம் ஒத்துழைக்கிறதென்பதைக் காண விரும்பிய ரூட், ஒன்பதாவது ஓவரிலேயே, லீச்சைக் கொண்டு வந்தார். ஒருபுறம் லீச்சின் சுழலோடும், மறுபுறம் ஸ்டோக்ஸின் வேகத்தோடும் மிரட்ட முயன்றார். எனினும் எதுவும் வேலைக்காகாமல் போக, பின் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக மொயின் அலியுடன், சுழலால் சுற்றி வளைக்க முயன்றார். எனினும் வெகுநேரம் பௌலர்களுக்கு ஆட்டம் காட்டியது இந்தக் கூட்டணி. ஸ்பின்னர்களை தனது பாணியில் கையாண்ட ரோஹித், 49 பந்துகளிலேயே, தனது 12-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். அப்போது அணியின் ஸ்கோர் 60 மட்டுமே என்பதே சொல்லும் ரோஹித்தின் தனி ஆவர்த்தனத்தை! விட்டால், முதல் செஷனிலேயே சதத்தை அடித்து விடுவாரோ என்னும் ரீதியில்தான் இருந்தது ரோஹித்தின் ஆட்டம்‌. ஒரு விக்கெட்டை இழந்திருப்பினும், 20 ஓவர்கள்வரை முழுமையான கட்டுப்பாட்டுடன் ஆடிய இந்தியாவின் இன்னிங்ஸை கொஞ்சம் ஆட்டம் காண வைத்தது, அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகள்.

#INDvENG
#INDvENG

செட்டாகி ஆடிக் கொண்டிருந்த புஜாராவை, லீச் காலி செய்ய, கோலியை போல்டாக்கிக் காலி செய்தார், மொயின் அலி. 'இந்திய ரன்மெஷினுக்கு என்னவானது?' என ரசிகர்களைத் தொடர்ந்து ஏமாற்றத்தை எட்டித்தொட வைத்துக் கொண்டே இருக்கிறார் கோலி. அவருடைய சதத்துக்காகப் பல மாதங்களாக, இந்தியக் கிரிக்கெட் ஏங்கிக் கிடக்கிறது. கோலி, மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்து திரும்பும் போது, குல்தீப்புக்கும் அஷ்வினுக்கும் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் பந்துவீச்சு எத்தனை லாவகமானதாக இருக்கப் போகிறது என்ற ஆவலைத் தூண்டியது‌‌.

எனினும் அடுத்தடுத்த இரண்டு விக்கெட் வீழ்ச்சிதான், இந்தியாவின் வீழ்ச்சியின் தொடக்கமா, மறுபடியும் தள்ளாடப் போகிறதா இந்திய பேட்டிங் லைன்அப் என்ற கேள்வி எழுந்தது. அந்தப் பயத்தைப் பொய்யாக்கக் கைகோத்தது ரோஹித்-ரஹானே கூட்டணி! தனது நாளை பவுண்டரியுடன் தொடங்கிய ரஹானே, இன்றைய நாளில் கடந்த போட்டிகளில் பேட்ஸ்மேனாகச் செய்த தவறுகளை எல்லாம் திருத்திக் கொள்ள இறங்கி இருக்கிறேன் எனச் சொல்லாமல் சொன்னார். மறுபுறம் ரோஹித்தும் ஓவருக்கொரு பவுண்டரி என வஞ்சனையின்றி விளாச, உணவு இடைவெளியின்போது, 100 ரன்களைக் கடந்திருந்தது இந்தியா. முதல் செஷனில் பிட்ச் சற்று பயங்காட்டினாலும், அது எதுவுமே பாதிக்காமல் வேற்றுகிரகவாசி போல, தனது பேட்டினால் பொளந்துகட்டிய ரோஹித், அதுவரை அணியின் ஸ்கோரில் 80 சதவிகித ரன்களை, தனிஒருவனாய்ச் சேர்த்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவு இடைவேளையைத் தாண்டியும் தொடர்ந்தது, இந்த இரட்டையர்களின் மேலான ஆட்டம்‌. பெளலிங் அட்டாக்கையும், ஃபீல்டிங் பொசிஷன்களையும் மாற்றி மாற்றி பல்லாங்குழி ஆடினார், ரூட். அதற்கான பதிலை பவுண்டரிகளாலும் ரன்குவிப்பாலும் கொடுத்துக் கொண்டிருந்தனர் இவர்களிருவரும்!

#INDvENG
#INDvENG

இருவருமே கடந்த சில போட்டிகளாய் மோசமான‌ ஆட்டத்தின் காரணமாக இவர்களை நோக்கித் தொடுக்கப்பட்ட கேள்விக்கணைகளை ஆச்சர்யக்குறிகளாக மாற்றிக் கொண்டிருந்தனர். கிளாசிக்கல் இன்னிங்ஸை ரஹானே ஆடிக் கொண்டிருக்க, மறுபுறம் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மா, அந்தத் தருணத்தில், போட்டியில் கிட்டத்தட்ட, சரிபாதி பந்துகளைச் சந்தித்து எடுக்கப்பட்டதில் 75 சதவிகிதம் ரன்களைத் தானே எடுத்து, பௌலர்களுக்குப் பகிரங்க சவாலாக விளங்கினார். முடிவில் முத்தாய்ப்பாய், தனது ஏழாவது சதத்தை, பதினைந்து மாதங்கள் கழித்து அடித்தார் ரோஹித்.

கடைசியில், இரண்டாவது செஷனின் இறுதியில், 189 ரன்களுக்கு, மூன்று விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து மிக வலுவான நிலையில் இருந்தது இந்தியா. பந்தின் கடினத்தன்மை குறையக் குறைய, பௌலர்களின் நாளும் கடினமாக, மிக நேர்த்தியாக பேட்டிங் செய்யத் தொடங்கியது இந்தக் கூட்டணி.

#INDvENG
#INDvENG

தேநீர் இடைவேளைக்குப்பின், ரஹானே அரைசதத்தை அடைய, 150 ரன்களைத் தொட்டு ரோஹித்தும் அசத்தினார்‌. மொயின் அலி பந்துகளில், ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் 92. லீச் பந்துகளிலோ 47. லீச்சை விட்டுவிட்டு, ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை அட்டாக் செய்து கால்குலேட்டிவ் இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்தார் ரோஹித்‌.

போட்டி கிட்டத்தட்ட, இங்கிலாந்தின் கையிலிருந்து நழுவி, இந்தியாவிடம் தஞ்சம் புகுந்திருந்த சமயம்தான், விட்டதைப் பிடிக்கும் ஒரு வாய்ப்பு, இங்கிலாந்துக்குக் கிடைத்தது. ஸ்வீப் ஷாட் ஆட முயன்று, டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து, ஆட்டமிழந்தார் ரோஹித். இன்று அவர் இருந்த வேகத்திற்கு இரட்டை சதமா, முச்சதமா எதை எட்டப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், 161 ரன்களுடன் வெளியேறினார்.

கோலி டக் அவுட்... ஆனால், செம ஃபார்மில் ரோஹித் ஷர்மா! #INDvENG #Chepauk

அவரைத் தொடர்ந்து, கிலியூட்டிக் கொண்டிருந்த ரஹானேவையும் மொயின் அலி போல்டாக்கி, இங்கிலாந்தை, பேக் டூ த ட்ராக் கொண்டு வந்தார்.

#INDvENG
#INDvENG

அதன்பின் ஒரு மினி பார்ட்ன்ஷிப் போட்ட பன்ட்-அஷ்வின் கூட்டணியை ரூட் முறித்துக் காட்டினார். அணியின் ஸ்கோர் 28-4ஐ அடைந்திருந்தது. இதன்பின் தனது அறிமுகப் போட்டியில் களம் காண அக்சர் பட்டேல் உள்ளே வர, அவரை வந்த வேகத்தில் பெவிலியன் அனுப்ப புதுப்பந்தை எடுத்தது இங்கிலாந்து. ஆனால், அக்ஸர் அசரவில்லை. 300 ரன்களை எட்டித் தொட்ட இந்தியா, ஆறு விக்கெட்டுகளை இழந்து இன்றைய நாளை முடித்துள்ளது.

300 - 350 ரன்களை, இந்த மைதானத்தில் சிறந்ததாகக் கொள்ளலாம் எனக் கணிக்கப்பட்டிருந்த வேளையில், இன்னும் நான்கு விக்கெட்டுகளைக் கையில் வைத்திருக்கும் இந்தியா, இன்னும் எத்தனை ரன்களை நாளை சேர்க்கும் என்பதற்கு பன்ட்டின் ஒற்றை விக்கெட்தான் பதிலாக இருக்கப் போகிறது. இன்று வீசிய 88 ஓவரில் ஒரு உதிரி ரன்களைக் கூட, இங்கிலாந்து பௌலர்கள் வீசவில்லை. இதே ஒழுங்கோடு இந்திய வீரர்கள் பந்து வீசும் பட்சத்தில், நாளைய நாளும், நமதாகும்!

காதலர் தின ஸ்பெஷல்: உங்களது Flames பொருத்தத்தைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு