Election bannerElection banner
Published:Updated:

சுழலால் சுருட்டிய அஷ்வின்; கைகொடுத்த அக்ஸர், இஷாந்த்... வெற்றிப் பாதையில் இந்தியா! #INDvENG

#INDvENG
#INDvENG

ஐந்து விக்கெட் ஹாலைப்பதிவு செய்து அசத்திய அஷ்வின், டெஸ்டில் 200 இடக்கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் பௌலர் என்னும் பெருமையையும் பெற்றார்.

பன்டின் பிழையில்லா அரைச்சதம், இந்திய பௌலர்களின் பிசகில்லா விக்கெட் வேட்டை எல்லாம் சேர்ந்து, இந்தியாவை ஒட்டுமொத்தமாக இரண்டாம் நாளில் சேப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்த வைத்திருக்கிறது. முதல் போட்டியில் வாங்கிய அடியையும், அனுபவித்த வலியையும் இருமடங்காய் இங்கிலாந்துக்குத் திரும்பிக் கொடுக்க ஆரம்பத்திருக்கிறது இந்தியா. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, இங்கிலாந்தின் பத்து விக்கெட்டுகளை 'வேலன்டைன்ஸ் டே' பரிசாகக் கொடுத்துள்ளது, இந்திய பௌலிங் படை.

ஸ்பின்னர்களின் சாம்ராஜ்யமாய், பேட்ஸ்மேன்களுக்கு சவாலாய், சேப்பாக்கம் உருமாறி நிற்க, 'பன்டிருக்க பயமேன்?!' என நாளைத் தொடங்கியது இந்தியா. இங்கிலாந்து எதிர்பார்த்ததைத்தான், இந்தியா எதிர்கொண்டது‌. இன்றைய போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, அக்ஸரையும் அவரைத் தொடர்ந்து உள்ளே வந்த இஷாந்தையும் மொயின் அலி ஒரே ஓவரில் வெளியேற்றினார்.

#INDvENG
#INDvENG

அடுத்தடுத்த இரண்டு விக்கெட்டுகளால் எழுந்த பரபரப்பு பன்டின் நிழலைக்கூடத் தீண்டவில்லை. இவையெல்லாம் ஏதோ வேறு மைதானத்தில் நடப்பதைப் போன்றே தொடர்ந்தது பன்டின் ஆட்டம். 140+கிமீ/மணி வேகத்தில் வரும் பந்தையே கிரிஸுக்கு வரும்வரை காத்திருக்காமல் முன்வந்து சந்திக்கும் எனக்கு, ஸ்பின்னெல்லாம் எம்மாத்திரம் என்பதைப் போலத்தான் இருந்தது, பன்டின் ஆட்டம். விக்கெட் விழுந்ததால் விளைந்த பதற்றத்தை பூமராங்காய், இங்கிலாந்தின் பக்கமே திருப்ப ஆரம்பித்தார். ரூட்டின் பந்தில், சிக்ஸரைத் தூக்கி, மொயின் அலியின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளைப் பறக்கவிட்டு, அரைச்சதத்தை 65 பந்துகளில் அடைந்தார். லாங்க் ஆஃப்பில் சிக்ஸருக்குப் பறக்கவிட்ட மொயின் அலி வீசிய அந்தப் பந்து சொல்லும், பன்ட் யார் என்பதனை!

எனினும், மறுபுறம் வந்த குல்தீப்பும் சிராஜும் கொஞ்சமும் பொறுமையும் பொறுப்புமின்றி ஆட, சதத்தைத் தொட சகலவிதலட்சணமும் பொருந்தியிருந்த, 'ரோஹித் சர்மா - பார்ட் டூ' போல போய்க் கொண்டிருந்த பன்டின் ஆட்டம், மற்ற பேட்ஸ்மென்கள் அனைவரும் ஆட்டமிழந்ததால், 58-ல் முடிவுக்கு வந்தது. 329 ரன்களோடு முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது இந்தியா. இன்று ஆட்டமிழந்த நான்கு பேட்ஸ்மேன்களும், பன்டுக்கு சப்போர்டிங் ரோலை மட்டும் செய்திருந்தாலே, இந்தியா இன்னும் 50 ரன்களுக்குக் குறையாமல் சேர்த்திருக்கும் என்பது ரசிகர்களுக்கு ஒரு குறையாகத்தான் இருந்தது.

தங்களது முதல் இன்னிங்சை ஆரம்பித்தது இங்கிலாந்து. காயத்தின் காரணமாக, புஜாராவுக்குப் பதில் மயாங்க் ஃபீல்ட்ராக இறங்கினார். போட்டியின் முதல் ஓவரிலேயே பர்ன்ஸை டக்அவுட்ஆக்கி மிரட்டலான தொடக்கத்தைக் கொடுத்தார் இஷாந்த். இந்தியாவில் நடந்த டெஸ்ட்போட்டிகளின் வரலாற்றிலேயே, போட்டியின் ஒரே இன்னிங்சில், இரண்டு அணிகளுமே, ரன் எதுவுமே எடுக்காமல், தங்களது முதல் விக்கெட்டைப் பறிகொடுப்பது, இது மூன்றாவது முறை மட்டுமே. இதனையடுத்து அஷ்வினை இரண்டாவது ஓவரிலேயே கொண்டு வந்தார் கோலி. இஷாந்தின் பந்துகளில் மூன்று பவுண்டரிகளை அடித்து பயங்காட்டத் தொடங்கியிருந்த அடுத்த ஓப்பனரான சிப்லியை அனுப்பி வைத்தார் அஷ்வின்.

#INDvENG
#INDvENG

இரண்டு விக்கெட்டுகளை துரிதக்கதியில் இழந்து தவித்த இங்கிலாந்துக்கு, ரூட்டின் வருகை புதுநம்பிக்கை ஒளியைக் கொணர்ந்தது. தனது ஸ்வீப் ஷாட்களால் இன்றும் இந்திய பௌலர்களைக் கலங்கடிக்கப் போகிறாரோ என்ற பயம் எழ, சுழலால் சுருட்டும் அஷ்வின் என்னும் ஆழிப்பேரலையை பெரிதும் நம்பியது இந்தியா. எனினும் 'சிஷ்யனிருக்க குருவெதற்கு?!' என, ஆக்ஸா பிளேடாய், அக்ஸர் படேல், தனது முதல் டெஸ்ட் விக்கெட்டாய் ரூட்டின் விக்கெட்டை வேரறுக்க, மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது கோலி அண்ட் கோ! இதன்பின் இணைந்த லாரன்ஸ்-ஸ்டோக்ஸ் கூட்டணியை, உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசிப் பந்தில் அஷ்வின் முறித்தார். அஷ்வின் வீசிய பந்தை, ஷார்ட் லெக்கில் நின்றிருந்த கில்லிடம் வாரித் தந்து விடைபெற்றார், லாரன்ஸ். 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.

விக்கெட்டுகள், வெற்றிக் களிப்புகள், ரிவ்யூக்கள், அப்பீல்கள் என பந்துக்குப் பந்து விறுவிறுப்பு நிறைந்த முதல் செஷனில் இரண்டு அணிகளும் சேர்ந்து மொத்தமாய்த் தங்களது எட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தனர். இந்த செஷன் இந்தியாவுடையதா இங்கிலாந்துடையதா என்பதைவிட, இரு பக்கமுமுள்ள பௌலர்களுக்குரியதென்பதே, இன்னமும் பொருத்தமானதாய் இருக்கும்.

இடைவேளைக்குப்பின் இணைந்த, ஸ்டோக்ஸ் - போப் கூட்டணிக்கு ஆயுசு ஐந்தே ஓவர்கள்தான். அவர்களது ஆறாவது ஓவரிலேயே, ஸ்டோக்ஸின் ஸ்டெம்பை சிதறவைத்து இங்கிலாந்து ரசிகர்களின் முதுகுத்தண்டைச் சில்லிடச் செய்தார் அஷ்வின். ஒவ்வொரு பார்னர்ஷிப்பும் உருவாகும் போதே, கத்தரித்துவிட்டுக் கொண்டே இருந்தது இந்திய பௌலிங் படை.

#INDvENG
#INDvENG

விக்கெட் கீப்பராக சிறப்பாகச் செயல்பட்ட ஃபோக்ஸ் போப்புடன் கரம்கோத்தார். இங்கிலாந்தின் இந்தக் கூட்டணிதான் சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. விக்கெட் இழப்பின்றி கொஞ்சம் மந்தமாக ஓவர்கள் நகர்ந்தன. ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆதரவுக்குரல் எழுப்பி வந்த ரசிகர்களும், ஸ்டெம்புக்குப்பின் நின்று குரலெழுப்பிக் கொண்டிருந்த பன்டும் சற்றுநேரம் சலிப்பிலும் அலுப்பிலும் மௌனமாக, ரசிகர்களை விசிலடித்து, குரல் எழுப்புமாறு சைகைக் காட்டினார், கோலி. இத்தனை நாள், இதற்காகத்தானே காத்திருந்தன, இந்திய மைதானங்கள்?! நேற்றைய தினம் உற்சாகமிகுதியால், 'ரோஹித், ரோஹித்' என ரோஹித் விளையாடியபோது குரலெழுப்பிய சென்னை ரசிகர்கள், இப்பொழுது கோலியின் கோரிக்கையால், இன்னும் குஷியாகி சத்தமெழுப்பத் தொடங்க, புதுத்தெம்பு வந்தது இந்திய முகாமில்!

அதே உற்சாகத்தோடு, சொந்த மண்ணில், டெஸ்ட் போட்டியில், தனது முதல் பந்தை வீச வந்த சிராஜ், அமர்க்களமாய்த் தொடங்கினார். அவர் வீசிய முதல்பந்தே விக்கெட் எடுக்கும் பந்தாக மாறியது. 22 ரன்கள் எடுத்திருந்த போப், பன்ட் பிடித்த ஓர் அற்புதமான கேட்சால், ஆட்டமிழந்தார். மொயின் அலி உள்ளே வந்தார். கடைசி 9 இன்னிங்ஸ்களில், மொயின் அலி அணிக்காக எடுத்த ரன்களின் கூட்டுத்தொகையே 90தான். இன்றாவது அவரிடமிருந்து ஒரு நல்ல ஆட்டம் வெளிப்படும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தது இங்கிலாந்து. மறுபுறமோ, ஃபோக்ஸ் மிகுந்த போகஸ்ஸோடு ஆடிக் கொண்டிருந்தார். விக்கெட்டை விட்டு விடக்கூடாதென்பதில்தான் அவரது மொத்த கவனமும் இருந்தது. அஷ்வின் பந்தில், ஃபோக்ஸுக்கு எதிராக, ரிவ்யூக்குப் போய், கைவசமிருந்த கடைசி ரிவ்யூ வாய்ப்பையும் பறிகொடுத்தது இந்தியா. அதற்கு முன்னதாக, அஷ்வின் மற்றும் அக்ஸர் பந்துகளுக்காகத் தலா ஒருமுறை ரிவ்யூக்களைப் இழந்திருந்தார் கோலி. ரிவ்யூ என்னும் பிரம்மாஸ்திரத்தை இந்தியா இன்னும் கொஞ்சம் கவனமாய்க் கையாள வேண்டும்.

#INDvENG
#INDvENG

தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஃபோக்ஸின் விக்கெட்டுக்கு இந்தியாவிடமுள்ள திட்டமென்ன எனக் கணித்துக் கொண்டிருக்கும் போதே, மொயின் அலியின் விக்கெட்டை, அக்ஸர் வீழ்த்தினார். ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானே பிடித்த அந்த அற்புதமான கேட்ச், இங்கிலாந்தின் ஏழாவது விக்கெட்டை வீழ்த்தியது. அடுத்த ஓவரிலேயே, புதிதாக உள்ளே வந்த ஸ்டோனையும் அனுப்பி வைத்தார் அஷ்வின். அந்த விக்கெட்டோடு தேநீர் இடைவேளையும் விடப்பட, இரண்டாவது செஷனிலும் முதல் செஷனைப் போன்றே, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப்பெருமிதத்தோடு முடித்தது இந்தியா.

இடைவேளைக்குப்பின், ஃபாலோ ஆனைத் தடுக்க இன்னும் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடங்கியது இங்கிலாந்து. அதைப் பக்குவமாய்ச் செய்து முடித்த ஃபோக்ஸ் - லீச் கூட்டணியை தன் வேகத்தால் பிரித்தார் இஷாந்த். போப்புக்குப் பிடித்ததைப் போன்றே அச்சுப்பிசகாத அதேபோன்ற ஒரு கேட்சால், லீச்சையும் வெளியேற்றினார் பன்ட். இறுதியாக உள்ளே வந்த பிராட், ஸ்வீப் ஷாட் ஆட முயன்று, அஷ்வின் பந்தில் போல்டாகி வெளியேற, வெறும் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது இங்கிலாந்து.

#INDvENG
#INDvENG
ஐந்து விக்கெட் ஹாலைப்பதிவு செய்து அசத்திய அஷ்வின், டெஸ்டில் 200 இடக்கை ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் பௌலர் என்னும் பெருமையையும் பெற்றார்.

195 ரன்கள் முன்னிலையோடு கம்பீரமாய் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்தியா. கில்லும் ரோகித்தும் நல்ல அடித்தளம் அமைக்கத் துவங்க, இந்த இணையை, லீச் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாக முடிவுக்குக் கொண்டு வந்தார். வெறும் 14 ரன்களுடன் வெளியேறினார் கில். மறுபுறம் ரோஹித் முதல் இன்னிங்சைப் போலவே நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். காயத்தால் ஃபீல்டிங்கில் ஈடுபடா விட்டாலும், பேட்டிங் செய்ய ஒன்டவுனாக புஜாராவே இறங்கினார். ஆட்டநேர முடிவில் இந்தியா வேறு எந்த விக்கெட்டையும் இழக்காமல், 54/1 என நாளை முடித்தது.

249 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது இந்தியா. நேற்றைய நாளை, நானோமீட்டர் கணக்கில் இந்தியா ஆக்கிரமித்ததெனில், இன்றைய நாளை இடைவெளியின்றி ஒட்டுமொத்தமாய் அங்குலம் அங்குலமாய் ஆக்கிரமித்துவிட்டது. பேட்டிங்கில் நேற்று ரோஹித் பட்டையைக் கிளப்பினார் எனில், இன்று பௌலிங்கில் தன் ராஜ்ஜியத்தை நிறுவிக் காட்டியுள்ளார் சென்னையின் சுழல் சூப்பர் கிங் அஸ்வின்.

#INDvENG
#INDvENG
இந்த இரண்டாவது போட்டியை வென்று, தொடரை 1-1 என இந்தியா சமன் செய்துவிட்டே அகமதாபாத் கிளம்பும் என்று தெரிகிறது. முடிவைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட இந்தப் போட்டியில், இனி எஞ்சியிருப்பது ஒருநாள் ஆட்டமா இரண்டு நாள் ஆட்டமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு