Published:Updated:

TNPL: ஒற்றை ஆளாகப் போராடிய ஷதுர்வேத்; சேப்பாக் கில்லீஸின் சித்தார்த் சுழலால் சுருண்ட மதுரை!

புதுப்பந்தில் நான்கு ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் - 'நேம் இஸ் மணிமாறன் சித்தார்த்' எனப் பயங்காட்டி, மதுரையின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒவ்வொரு அணிக்கும் ஓரிரு போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், டிஎன்பிஎல்லின் கடைசிக் கட்ட ஆட்டங்கள் ப்ளேஆஃப்புக்கான ஆயத்தங்களாக அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், சாய் கிஷோரின் வருகைக்குப்பின் புதிய எழுச்சி கண்டுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பான்தர்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது.

டாஸை வென்ற ஷதுர்வேத், கடந்த 14 போட்டிகளில், கேப்டன்கள் கூறிய சேஸிங் மந்திரத்தை உச்சரிக்காமல் பேட்டிங் என்றார். பிட்ச் ரிப்போர்ட் அவரை அப்படிச் சொல்லத் தூண்டி இருந்தாலும் அவர்களது நிலைத்தன்மையில்லா பேட்டிங் வரிசையைக் கருத்தில் கொண்டேனும் அவர் மாற்று முடிவை எடுத்திருக்கலாம்.

ப்ரவீன் குமாரோடு, சுகேந்திரன் ஓப்பனராகக் களமிறங்க, முதல் ஓவரிலேயே அதிரடித் தொடக்கமாக, மணிமாறன் சித்தார்த்தின் பந்துகளை ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என இரண்டு பெரிய ஷாட்டுகளாக ப்ரவீன் மாற்றினார். ஆனால், அந்த ஓவரிலேயே, அவரது விக்கெட்டை வீழ்த்தினார் மணிமாறன். அதுவும் ஃபீல்டருக்கெல்லாம் வேலை வைக்காமல் லெக் ஸ்டம்பையே கழறச் செய்து தன் பழியைத் தீர்த்துக் கொண்டார். இன்னொரு ஓப்பனர் சுகேந்திரனும் சில பந்துகளைச் சந்தித்த கையோடு, மணிமாறனிடமே மறுபடி சிக்கினார். இத்தொடரில், ஸ்பின்னர் கையில் புதுப் பந்தைக் கொடுக்கும் அணிகளின் முயற்சி, சமயத்தில் அற்புதமாக பலனளிக்கிறது.

TNPL | #SMPvCSG
TNPL | #SMPvCSG

இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது மதுரையை மொத்தமாக முடக்கிப் போட்டிருந்தது. நிலை அறிந்து அடுத்தடுத்த வீரர்களாவது தங்கள் விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்வார்கள் என்று பார்த்தால், மணிமாறனுக்கு எதோ முன் ஜென்மத்தில் கடன்பட்டதைப் போல் அவர் கையிலேயே விக்கெட்டைக் கொடுத்து வெளியேறினர் அனிருத் மற்றும் அருண் கார்த்திக்.

அணியின் ரன்ரேட் அதள பாதாளத்தில் கிடந்ததை உணர்ந்த அனிருத், ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை பவுண்டரியாக்க முற்பட, அது அந்தோ பரிதாபமாக டீப் மிட் விக்கெட்டில் இருந்த சாய் கிஷோரிடம் அடைக்கலமானது. அடுத்ததாக, அருண் கார்த்திக்குக்கு ஆர்ம் பாலை அனுப்பினார் மணிமாறன் சித்தார்த். அதை ஸ்வீப் ஆட அருண் கார்த்திக் முயல, அது கொஞ்சமும் தயங்காமல் அவரது ஆஃப் ஸ்டம்ப்பை கழறச் செய்தது. அருண் கார்த்திக்கை ஆர்டர் மாற்றி இறக்குவதன் பாதிப்பு, போன போட்டியில் உணரப்படாவிட்டாலும், இப்போட்டியில் நன்றாகவே தெரிந்தது. தொடரின் தொடக்கத்தில் செய்து பார்க்க வேண்டிய பரிசோதனைகளை மதுரை இறுதிச் சுற்றில் செய்வது அவர்களுக்கே வினையாகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, மணிமாறன் சித்தார்த்தின் தாக்குதல், இப்போட்டியில் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு வீரியம் நிறைந்ததாகக் காணப்பட்டது. இதில் விஷயம் என்னவெனில், சாய் கிஷோர் மற்றும் சந்தீப் வாரியர் என மிரட்டும் பௌலர்கள் இருந்தாலும், எல்லோரையும் சுழற்சி முறையில் வைத்துக் கொண்டு, மணிமாறனை மட்டுமே நான்கு ஓவர்களையும் வீச வைத்தார் கௌசிக் காந்தி. அது மூன்று விக்கெட்டுகளுக்கு வித்திட்டு, பவர்பிளே ஓவர்களிலிருந்தே அவர்களை ஆதிக்கம் செலுத்த வைத்தது.

மதுரையை மீட்டெடுக்க எப்போதும் போராடும் ஷதுர்வேத்தும், கௌசிக்கும் இணைந்தனர். ஆனாலும், விழுந்த அதிவேக விக்கெட்டுகள், இந்த இருவரின் மீதான அழுத்தத்தை இன்னமும் அதிகரித்தது. அவர்களது இன்னிங்ஸின் சரிபாதியான 60 பந்துகள் வீசப்பட்ட போதும்கூட, வெறும் 42 ரன்களை மட்டுமே மதுரை எடுத்திருந்தது. அதற்கடுத்த ஓவர்களில், ஷதுர்வேத் ரன்களை ஓரளவு ஏற்றி இருந்தாலும், இந்த மிக மந்தமான தொடக்கம்தான் இதனை லோ ஸ்கோரிங் கேமாக மாற்றிவிட்டது.

TNPL | #SMPvCSG
TNPL | #SMPvCSG

குறிப்பாக, கௌசிக்கிடம் எப்பொழுதும் காணப்படும் அந்த உயிரோட்டமான ஆட்டம், இப்போட்டியில் பேட்டிங்கின் போது காணப்படவில்லை. கேப்டன் ஷதுர்வேத், முட்டி மோதி ரன்களை ஏற்ற முயல, அவர் சேமித்த பந்துகள் எல்லாம் கௌசிக்கின் பேட்டால் விரயமாகிக் கொண்டு இருந்தன. வெறும் 10 ரன்களை மட்டுமே 22 பந்துகளில் எடுத்திருந்தார் கௌசிக்.

ஷதுர்வேத் நீரிழப்பு ஏற்பட்டு அவதியுற்றாலும், அதையும் பொருட்படுத்தாது இழந்ததை மீட்டெடுக்க முயன்றார். ஆனால், அடுத்த முனையில் இருந்து அவருக்கான உதவி வரவே இல்லை. 35 பந்துகளில் ஷதுர்வேத்தின் அரை சதமும் வந்து சேர, அதைப் பார்த்த மகிழ்வோடே கிரண் ஆகாஷ் கிளம்பிப் போனார். சந்தீப் வாரியர் அந்த ஓவரில் வீசிய முதல் இரண்டு பந்துகள் ஷதுர்வேத்தால் பவுண்டரியாக்கப்பட்டு இருந்தாலும், அந்த ஓவர் முடிவதற்கு முன்னரே வாரியர் பதிலடி கொடுத்தார். அவர் வீசிய பந்தில், ஃப்ளிக் ஷாட் ஆட முயன்ற கிரண் ஆகாஷ் வெறும் ஒரு ரன்னோடு வெளியேறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதி ஓவர் வரை போராடிய ஷதுர்வேத், 70 ரன்களைக் குவித்ததோடு ஆட்டமிழந்தார். சோனு யாதவ்வின் யார்க்கர், பாய்ந்து வர, அதை ஸ்வீப் செய்ய முனைந்து மிடில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார் ஷதுர்வேத். அவரது அற்புதமான ஆட்டம் முடிவுக்கு வந்தது. தொடரின் தொடக்கத்தில் சற்றே திணறினாலும், சமீப காலமாக அவரது ஆட்டம் மேம்பட்டுள்ளது. அதுவும், உடல் ஒத்துழைக்காத போதும் மன வைராக்கியத்தோடு ஆடிய அவரது இந்த இன்னிங்ஸ், மதிக்கத்தக்க கேப்டன் இன்னிங்ஸ்.

ஷதுர்வேத் ஆட்டமிழக்கக் காத்திருந்ததைப் போல அடுத்த இரண்டு விக்கெட்டுகள் அடுத்த மூன்று பந்துகளுக்குள்ளாகவே முறிந்துவிழ, வெறும் 124 ரன்கள் மட்டுமே மதுரையின் கணக்கில் சேர்ந்திருந்தது.

TNPL | #SMPvCSG
TNPL | #SMPvCSG

125 ரன்கள் என்பது, சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு, 15 ஓவர்களில் அடிக்கும் ஸ்கோர் என்றே தோன்ற, இரண்டாவது பாதியில் சண்டை செய்தது மதுரை. எனினும் இம்முறை, எதிரணியின் கேப்டனான கௌசிக் காந்தி, பதிலடி கொடுத்தார். சிலம்பரசனின் முதல் ஓவரிலேயே, இரண்டு பேக் டு பேக் பவுண்டரிகளோடு ஆட்டம் ஆரம்பம் என்று சொன்னவர், இலக்கை எட்டாமல் போக மாட்டேன் என்பதைப் போல் பிட்சிலேயே செட்டில் ஆகி விட்டார்.

ஜெகதீசனும் வழமை மாறாமல் அட்டகாசமாகத் தொடங்கினார். ஆனால், கிரண் ஆகாஷின் ஷார்ட் பால் அவரைத் தொடர விடாது துரத்தியது. அடுத்த சில பந்துகளிலேயே ஜெகன்னாத்தின் ஓட்டத்துக்கும், மதுரை முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. விரைவாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்துவிட்டாலும், ரன்களைக் கசிய விட்டுவிட்டது மதுரை. பவர்பிளே ஓவர்களின் முடிவிலேயே 46 ரன்கள் வந்துசேர, அதுதான் அவர்களுக்கான வாய்ப்பில் மண்ணைப் போட்டு மூடியது.

TNPL: மரண மாஸ் கம்பேக் கொடுத்த மதுரை, ஸ்தம்பித்த திருப்பூர் - ப்ளே ஆஃப் சஸ்பென்ஸ் ஆரம்பம்!

அதேபோல், கௌசிக் காந்தி - சசிதேவ்வின் கூட்டணியை முறிக்கவும் விசேஷ முயற்சிகள் எதுவும் செய்யாமல் கோட்டைவிட்டது மதுரை. அது பத்து ஓவர்கள் இறுதியிலேயே தேவைப்பட்டதில் சரிபாதிக்கும் மேலான ரன்களை எட்ட வைத்துவிட்டது. அதற்கடுத்தாக, சசிதேவ்வை 11-வது ஓவரில் அனுப்பி வைத்திருந்தாலும், அதே மொமண்டத்தைப் பயன்படுத்தி விக்கெட் எடுக்க மதுரை தவறவிட, அடுத்த பார்ட்னர்ஷிப்பை சாய் கிஷோரோடு, கௌசிக் காந்தி கட்டமைத்துவிட்டார். எப்பொழுதும் மும்முகம் காட்டி களத்தைத் தனதாக்கும் கௌசிக்கிற்கும், இந்த நாள் சிறப்பாக அமையாமல் போனது மதுரைக்குப் பின்னடைவானது. மற்ற அத்தனை பௌலர்களும், தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருப்பினும், இரண்டு பெரிய பார்ட்னர்ஷிப்கள் அவர்களுக்கு உலை வைத்துவிட்டன.

கௌசிக் காந்தி, கிட்டத்தட்ட எல்லாவற்றையும் முடித்து வைத்த திருப்தியோடு 64 ரன்களோடு 18-வது ஓவரில்தான் வெளியேறி இருந்தார். முன்னதாக, 36 பந்துகளிலேயே வந்து சேர்ந்திருந்த, கௌசிக் காந்தியின் அரைசதம்தான் மதுரையை முற்றிலுமாக தோல்வி முகம் காண வைத்திருந்தது.

TNPL | #SMPvCSG
TNPL | #SMPvCSG
இறுதியாக 7 பந்துகள் எஞ்சியிருந்த போதே ஹரீஸ் குமார், வின்னிங் ஷாட்டோடு போட்டியை நிறைவு பெறச் செய்திருந்தார். ஆட்டநாயகனாக கௌசிக் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இழந்த ஃபார்மை சரியான தருணத்தில் மீட்டு எடுத்திருக்கிறார் கௌசிக் காந்தி.
போட்டியின் முக்கிய ஹைலைட்டாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், கமெண்டரி பாக்ஸில் வந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். ஐபிஎல்லின் வழியே, டிஎன்பிஎல் டு இந்தியன் அணி என தனது பயணப் பாதையையும், தனது அடுத்த திட்டங்கள் பற்றியும் பேசி இருந்தார்.

இரண்டு கேப்டன்களுமே தனிப்பட்ட வகையில் போராடி, அரைசதம் அடித்திருந்தாலும், மற்ற வீரர்களின் செயல்பாடு, மதுரைக்குக் கை கொடுக்கவில்லை. இரண்டாவது பாதியில் காட்டிய முனைப்பை, மதுரை வீரர்கள் முதல் பாதியில் காட்டி இருந்தால் வெற்றி வசப்பட்டிருக்கும். இரண்டாவது இடத்தில், அவர்கள் ஒய்யாரமாக உட்கார்ந்திருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு