Published:Updated:

`கேம்சேஞ்சர் பெரியசாமி..!' இரண்டாவது முறையாக சாம்பியன் ஆன சேப்பாக் கில்லீஸ்! #TNPL

அறிமுக சீஸனிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பெரியசாமி, பார்வைக் குறைபாடு உடையவர். ஒரு கண்ணில் மட்டுமே பார்வைகொண்டிருக்கும் இந்த 25-வயது இளம் வீரர்தான், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகன்.

Chepauk Super Gillies
Chepauk Super Gillies ( TNPL )

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் இந்த சீஸனில், ரைவல் அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் ஃபைனலில் மோதின. இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் சேப்பாக் மைதானத்துக்கு படையெடுத்திருந்தனர். விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற சேப்பாக், இந்த சீசனின் சாம்பியனானது.

சென்னை சேப்பாக் மைதானத்தில் தொடங்கிய இறுதிப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதல் ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கோபிநாத் டக்-அவுட்டானார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் அபினவ், கெளசிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சசிதேவ் 44 ரன்கள் எடுக்க, சேப்பாக் அணியின் ஸ்கோர் 100 ரன்களை எட்டியது.

Saisdev
Saisdev
TNPL

18-வது ஓவரின் முடிவில் 116 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். குறைவான ஸ்கோர் என்பதால், கடைசி இரண்டு ஓவர்களில் ரன் சேர்க்க முயன்றனர், சேப்பாக் பேட்ஸ்மேன்கள். ஆனால், திண்டுக்கல் விக்கெட் கீப்பர் ஜெகதீசன், அடுத்தடுத்து மூன்று பேட்ஸ்மேன்களை ரன்-அவுட்டாக்கினார். 20 ஓவர் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது, சேப்பாக் அணி.

எளிதான இலக்கை சேஸ் செய்த திண்டுக்கல் பேட்ஸ்மேன்களுக்கு, சேப்பாக் பெளலர்கள் டஃப் கொடுத்தனர். இந்த சீசனில் அதிரடி ஃபாரமில் இருந்த ஜெகதீசனை, ரன் ஏதும் எடுக்கவிடாமல் பெவிலியன் அனுப்பினார், வேகப்பந்துவீச்சாளர் பெரியசாமி. அதே ஓவரில் ஒன்-டவுன் களமிறங்கிய சதுர்வேத் டக்-அவுட்டாக, சேஸிங்கில் திணறியது திண்டுக்கல் டிராகன்ஸ்.

Periyasamy
Periyasamy
TNPL
இந்த சீஸனில், பெரியசாமி - 9 போட்டிகள் - 21 விக்கெட்டுகள்.

டிஎன்பிஎல் தொடரில், தன்னுடைய அறிமுக சீஸனிலேயே அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக அசத்திய பெரியசாமி, பார்வைக் குறைபாடு உடையவர். ஒரு கண்ணில் மட்டுமே பார்வைகொண்டிருக்கும் இந்த 25-வயது இளம் வீரர், இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேப்பாக் vs திண்டுக்கல் இறுதிப்போட்டி 

பெரியசாமி - 4 ஓவர்கள் -15 ரன்கள் - 5 விக்கெட்டுகள்.

பெரியசாமியின் ஓவர்களைத் தவிர்த்து மற்ற பெளலர்களின் ஓவர்களில் ரன் சேர்த்த திண்டுக்கல் பேட்ஸ்மேன்கள், 19-வது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்தனர். 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரை வீசினார் பெரியசாமி. டெத் ஓவரில் எதிரணியினரை ரன் எடுக்கவிடாமல் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்தார் பெரியசாமி. 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்த திண்டுக்கல் அணி, 114 ரன்கள் எடுத்தது.

"இந்திய அணியில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை!" - விஜய் சங்கர்
டிஎன்பிஎல் தொடரில் நான் பங்கேற்ற முதல் சீஸனிலேயே கோப்பை வெல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த சீஸனில் தவிர்க்க முடியாத வீரரான பெரியசாமி, முதல் போட்டியில் இருந்து கலக்கிவருகிறார்.
விஜய் சங்கர்

12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோப்பையைக் கைப்பற்றியது. 2017-ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎல் டி-20 இரண்டாவது சீஸனில், சேப்பாக் அணிதான் சாம்பியன். இதுவரை மூன்று முறை ஃபைனலில் விளையாடியுள்ள சேப்பாக் அணி, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது.