சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் இடையேயான போட்டி வருகிற ஏப்ரல் 30 சென்னையில் நடக்கவிருகிறது.
அதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியிருந்தது. சென்னையில் நடைபெற்ற கடந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் பல மோசடிகள், குளறுபடிகள் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து இம்முறை டிக்கெட் விற்பனையில் பல மாற்றங்கள் செய்திருப்பதாக ஒரு செய்தி வந்தது. ”சரி,அங்க என்ன நடக்குதுனு போய் பாப்போம்” என்ற மனநிலையுடன் கேமராமேனை அழைத்துக் கொண்டு சேப்பாக்கம் விரைந்தேன்.

வாகனத்தை பார்க் செய்துவிட்டு நானும் கேமராமேனும் ,2500 ரூபாய்க்கான டிக்கெட்களை விற்பனை செய்யப்படும் இடத்திற்கு முதலில் சென்று சுற்றி பார்த்தோம். மக்கள் கூட்டம் அலைமோதியது. டிக்கெட்களைப் பெற்ற மகிழ்ச்சியுடனும், வெயிலில் பல மணி நேரமாக காத்திருந்த களைப்புடனும் ஒருவர் கவுண்டரிலிருந்து வெளியே வந்தார். சொட்டும் வியர்வையை துடைத்துகொண்டே, ``மாமே,அங்தாண்ட கூட்டம், கம்மியா இருக்குடா.” என்று கத்தி பேசிக்கொண்டு கவனத்தை ஈர்த்தவரிடம் சென்று பேசினேன். கடுமையான நெருக்கடி சூழலிலும்,

”நேத்து நைட்டு 12 மணிக்கு இங்க வந்தேன், வரும் போதே ஆக்சிடெண்ட். ஆம்புலன்ஸிலையே மருந்து போட்டுட்டு, இங்க வந்து கியூல நின்னுட்டு இருக்கேன்.”
என்றார் வியர்வை சிந்தி டிக்கெட் வாங்கியவர்களின் மத்தியில் இரத்தம் சிந்தி டிக்கெட் வாங்கிய அந்த ரசிகர்.
தனது குழந்தைகள் ஆசைப்பட்டார்களென்று ,பல தாய்மார்கள் தங்களது கணவர்மார்களை வேலைக்கு அனுப்பிவிட்டு பெண்களுக்கான வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களது கண்களில் அவ்வளவு ஏக்கம் தெரிந்தது. சற்று நகர்ந்து சென்றேன். ஒருவர் தனது குழந்தையை தோளில் தூங்கவைத்துவிட்டு தனது மனைவியை பெண்களுக்கான வரிசையில் நிற்க வைத்துவிட்டு வரிசைக்கு வெளியே நின்று அவரது மனைவியைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே பின் தொடர்ந்தார். சரி, தாய்மாரிடம் சென்று பேசிப் பார்ப்போம் என ஒருவரிடம் பேச்சை தொடங்கினேன்.”தம்பி, ப்ளீஸ்ப்பா.. நானே ஆபீஸ் லீவு போட்டுட்டு வந்து இங்க நிக்குறேன்.” என புன்முறுவலோடு எனது கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகு ஒரு அக்காவை சந்தித்துப் பேசினேன்.”ப்ரோ,என் ஃபிரண்ட்டுக்காக தான் வந்து நிக்குறேன்,அவனுக்கு தோனினா பிடிக்கும்.” என வாட்டும் வெயிலிலும் இதனிடையே பலர் வழக்கம் போல,பிளாக்கில் அதிக தொகைக்கு டிக்கெட் விற்பதற்காக கியூவில் நின்று டிக்கெட் பெற்று திரும்பினர். அதன் பிறகு ஒருவர் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் குறுகிய கண்களுடன்,களைப்புற்று நின்று கொண்டிருந்தார்.அவரிடம் பேச்சை தொடங்கினேன்.

”அண்ணா,திருச்சில இருந்து வரேன்,தோனி அண்ணா...,தலைவனோட கடைசி சீசன் பார்க்கனும்னு ஆசையா வந்தேன் அண்ணா,டிக்கெட் கிடைக்கல அண்ணா,நைட்டு இருந்து சாப்பிடாம நிக்குறேன்.”
என்று ஏங்கியவர் கண்களில் கண்ணீர் ததும்பியது.1500 ரூபாய்க்கான டிக்கெட் கவுண்டரிலிருந்து வெளியே வந்த ஒருவரிடம் சென்று பேசினேன்.அவர்” இங்க பாருங்க ப்ரோ..” என்று தனது காலை காண்பித்தார். இரத்தம் வழிந்தது,” என்னாச்சு” என்று கேள்வி எழுப்பினேன். ”போலீஸ் அடிச்சுட்டாங்க.” என்று கோபமாகக் கூறி சென்றுவிட்டார்.அதன் பிறகு ஒரு இளைஞர்கள் குழுவை நோக்கி நகர்ந்தேன்,

ப்ரோ,ப்ரீத்தி ஜிந்தாகாக தான் வந்தேன், அவங்கள பார்கணும்னு ஆசைல தான் வந்தேன்.” என்று கண்ணடித்தபடியே பேசிவிட்டு சென்றனர்.
போட்டியைப் பார்ப்பதற்காக அல்ல தோனியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையும், ஏக்கமும் தான் பலரது பதிலில் இருந்தது.