Election bannerElection banner
Published:Updated:

சேப்பாக்கம் டெஸ்ட்: ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து... ரூட்டை வீழ்த்தப் போராடும் கோலி அண்ட் கோ!

#INDvsENG
#INDvsENG

சந்தோஷத்தோடு ஆரம்பித்த சேப்பாக்கத்தின் முதல்நாள் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும், இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவும் முடிந்திருக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் பேரடைஸான சேப்பாக்கத்தில் எதிர்பார்த்ததைப் போல பேட்டிங்கையே தேர்ந்தெடுத்தது‌. கடைசி இரண்டு நாட்கள் சுழல் ஜாலம் இங்கே சிறப்பாய் எடுபடும் என்பதை மனதில் நிறுத்தி, இந்தியா பும்ரா, இஷாந்த்தின் வேகத்துடன் மூன்று ஸ்பின்னர்கள் சூழ, களம் கண்டது. தவிர்க்கவே முடியாத தேர்வான அஷ்வினோடு, சென்னையின் செல்லப்பிள்ளை சுந்தரும் அணிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார். காயத்தால் அக்ஸர் பட்டேல் விலக, குல்திப் யாதவ் வருவார் என நினைத்த நிலையில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக ஷபாஸ் நதீமை கோலி கொண்டு வந்திருந்தார்.

இங்கிலாந்தின் பக்கமோ, ஓப்பனர் க்ராலி காயம் காரணமாக விலக, அதனால் என்ன என ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், பர்ன்ஸ் என அதனை சமன்செய்யும் அசுர பலத்தோடு களத்தினுள் குதித்தது. போதாக்குறைக்கு ரூட்டின் 100-வது போட்டி, பட்லரின் 50-வது போட்டி என வண்ணமயமாகவே இருந்தது இங்கிலாந்தின் பக்கம்.

#INDvsENG
#INDvsENG

பர்ன்ஸ் மற்றும் சிப்லியின் ஓப்பனிங்குடன் இங்கிலாந்து இன்னிங்ஸ் தொடங்கியது. இஷாந்த் மற்றும் தன்னுடைய முதல் ஹோம் டெஸ்ட்டில் விளையாடும் பும்ராவின் வேகத்தோடு தொடங்கியது இந்தியா. பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே, பர்ன்ஸ் கொடுத்த ஒரு கடினமான கேட்சை பன்ட் தவறவிட மங்களகரமாய்த் தொடங்கியது இந்தியாவின் இன்றைய நாள்.

மைதானம் பெரிதாகப் பந்துவீச்சுக்கு உதவிசெய்யாது, பந்தும் தேய்ந்து அதன் பொலிவை இழந்துவிட்டது என முதல் பத்து ஒவர்களிலேயே தெரிந்துவிட்டது.

சுழலின் சூரர் அஷ்வினை எட்டாவது ஓவரிலேயே உள்ளே கொண்டு வந்தார் கோலி. எனினும் பேட்டிங்கிற்காகவே பட்டா போட்டுக் கொடுத்த நிலம் போல, இங்கிலாந்து பேட்ஸமேன்களுக்குக் கருணை மழை பொழிந்தது சென்னை மண்.

விக்கெட் எடுக்கச் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே முடிய, இந்திய பெளலிங் படையைப் பதறாமல் பத்திரமாய்க் கையாண்டது இங்கிலாந்து. இலங்கையில் எடுத்த பயிற்சியும் கைகொடுக்க கேக் வாக்காக லாகவமாகப் பந்துகளை எதிர்கொண்டார்கள்.

இந்தியா தரப்பிலோ அட்டாக்கிங் ஃபீல்ட் செட் அப்புடன் இங்கிலாந்தை மிரட்டும் தோரணையுடன் வாய்ப்புக்காகக் காத்திருக்கத்தான் செய்தனர். இறுதியாக, அஷ்வினின் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று, பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து, 33 ரன்களுடன், தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார் பர்ன்ஸ். உணவு இடைவேளைக்கு சற்றுமுன்பு இந்தியா காத்திருந்த அந்த திருப்புமுனை கிடைத்தது. இதற்கடுத்தாக சூட்டோடு சூடாய் இன்னொரு விக்கெட் எடுத்து விடும் நோக்கில், பும்ராவிடம் கோலி பந்தை கொடுக்க, புதிதாக உள்ளே வந்திருந்த டானியல் லாரன்ஸை எல்பிடபிள்யூவால் வெளியேற்றினார். இந்தியாவில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா.

#INDvsENG
#INDvsENG

அவர் வெளியேறியதைத் தொடர்ந்து அசுர ஃபார்மில் இருக்கும் ஜோ ரூட் உள்ளே வந்தார். முதல் செஷனின் பெரும்பகுதியை இங்கிலாந்தே ஆக்ரமித்திருந்தாலும், கடைசி பதினைந்து நிமிடங்களில் இழந்ததைப் பிடித்தது இந்தியா.

ரூட்டின் ஆட்டம் இனிமேல்தான் ஆரம்பம் என்ற முன்னுரையுடன் தொடங்கியது இரண்டாவது செஷன். சுழலும் பந்துகளை லாகவமாய் எதிர்கொண்டு சவால் விடும் ரூட் ஒருபுறமெனில், கடந்த தொடரில் ஸ்மித்தையே சுழலால் சுழற்றியவன் நான் என அஷ்வின் மறுபுறம் எனப் போட்டாபோட்டி நடந்தது. அஷ்வின், சுந்தர், நதீம் என மும்முனை தாக்குதலால் இங்கிலாந்தை இக்கட்டை நோக்கி இன்ச் இன்ச்சாக நகர்த்த இந்தியா முனைய, கொஞ்சமும் தளரவில்லை அந்த இருவரணி.

இலங்கை தொடர் தந்த புத்துணர்வோடு தன்னம்பிக்கையும் நிரம்பவே கலந்திருந்தது ரூட்டின் ஆட்டத்தில். சிப்லியோ கொஞ்சமும் அசராமல், தனது அற்புதமான ஃபுட் வொர்க்கோடு, நேர்த்தியான ஷாட்களின் தேர்வோடு, மிகச் சிறப்பான முறையில் ஆடி, அரைச்சதத்தைக் கடந்தார். ஒருவேளை ஜடேஜா இருந்திருந்தால் கடந்த தொடரில், இந்த மைதானத்தில் செய்த மாயாஜாலத்தை மறுபடியும் நிகழ்த்தி இருப்பாரோ என்ற எண்ணம் வந்து போனது. இறுதியாக, தேநீர் இடைவேளையில், 73 ரன்களைத் கொடுத்து விக்கெட்டையே எடுக்காமல் வீழ்ச்சியைச் சந்தித்தது இந்திய முகாம். ரூட் மற்றும் சிப்லி முன்வைத்திருக்கும் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா என்னும் கேள்வி எழுந்தாலும், கம்பேக் கொடுப்பதில் வல்லவர்களான இந்தியப் பக்கத்தை ஆஸ்திரேலிய தொடரில் பார்த்திருப்பதால், இதையும் கடப்போம், எதையும் கடப்போம் என்ற நம்பிக்கை இருந்தது இந்திய ரசிகர்களிடம்.

#INDvsENG
#INDvsENG

எனினும் தோல்வியின் வடுக்களை சமீப காலங்களில் தோலில் ஏற்றிக் கொண்டிருந்த ரூட்டின் முன் யாராலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நதீமின் பந்தில் அரைசதத்தைத் தொட்டார் அவர். ஒருபக்கம் பந்து தேய, மறுபுறம் இந்திய பௌலர்கள் ஓய, சத்திமின்றி சம்ஹாரம் செய்தது இந்த இருவரணி. இரக்கமில்லா அரக்கர்களாய், இந்திய பெளலிங் யூனிட்டின் பொறுமையை நிரம்பவே சோதித்தனர் இவர்கள்.

ரூட் இந்திய ஸ்பின்னர்களை உண்டு எல்லை என செய்து விட்டார். எப்படி போட்டாலும் அற்புதமாக ஆடினார். அதுவும் 9 முறை ஸ்வீப் ஷாட் ஆடி அனைத்திலும் வெற்றிபெற்றார். இந்தத் தொடரில் ரூட் ஸ்வீப்ஷாட் மூலமாகத்தான் இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்ளபோகிறார் என்று தெரிந்தும் இந்திய ஸ்பின்னர்கள் அதற்கு ஏற்றார்போல் பயிற்சி செய்யவில்லையோ என்றுதான் தோன்றியது.

அஷ்வின் ஆஸ்திரேலியாவில் வீசியதுபோல் லெக் சைடிலேயே வீசிகொண்டிருந்தார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் வீசி பேட்ஸ்மேனை கவர் டிரைவுக்கு போகுமாறு தூண்டி ஸ்லிப்பில் கேட்ச் ஆக்கும் முறையை செய்யவில்லை. அதையே தான் மற்ற இரண்டு ஸ்பின்னர்களும் செய்தார்கள். இது பத்தாது என்று இன்று 10 நோ பால்களை வீசி எக்ஸ்ட்ரா ரன்களை வாரிவழங்கினார்கள் இந்திய பெளலர்கள்.

ஒருபக்கம் நமது பெளலர்கள் திணறிகொண்டிருக்க மறுபுறம் எந்தவித பிழையுமின்றி ஆடிய ஜோ ரூட் தனது நூறாவது போட்டியில் அற்புதமான சதத்தைப் பூர்த்தி செய்தார். தனது 98, 99, 100-வது போட்டிகளில் வரிசையாக ஹாட்ரிக் சதத்தைத் தொட்ட ஒரே வீரர் என்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டார்.

#INDvsENG
#INDvsENG

400 ரன்களையும் இந்தக் கூட்டணியே எட்டிப்பிடித்து விடுமோ என்ற மலைப்பு மனதை நிரப்பிய நேரம், இன்றைய நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில், 87 ரன்களுடன், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த சிப்லியை பும்ரா ஆட்டமிழக்கச் செய்ய, 263/3 என்ற வலிமையான நிலையில் முதல் நாளை முடித்தது இங்கிலாந்து.

3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வலிமையுடன் நிற்கும் இங்கிலாந்தின் விக்கெட்டுகளை நாளை சீட்டுக்கட்டாய்ச் சரியச் செய்தால் மட்டுமே, இந்தியா போட்டியை வெல்வதைப் பற்றி கனவு காண முடியும். எனினும் ரூட்டின் விக்கெட்டை வேரறுக்காதவரை, அந்தக் கனவு கூட பகல் கனவே!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு