Published:Updated:

கோலி டக் அவுட்... ஆனால், செம ஃபார்மில் ரோஹித் ஷர்மா! #INDvENG #Chepauk

அடுத்த டெஸ்ட் போட்டி, சவாலான பகலிரவு போட்டியாக நடைபெற இருப்பதனால், நிச்சயம் இந்தப் போட்டியில் வென்று, தொடரைச் சமன் செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது.

ஒரே ஒரு தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணியை கிடுகிடுவென இறக்கி, நான்காவது இடத்திற்கு தள்ளிவிட்டது. இந்தியா திரும்பித் தாக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கொஞ்சம் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு செட் ஆகமாட்டர் என்று சொல்லப்பட்ட ரோஹித் ஷர்மாதான் அரைசதம் அடித்து களத்தில் நின்று காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். கிங் கோலி மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

இங்கிலாந்தோ அணியில் ஹோல்சேல் மாற்றங்கள் செய்து புதுவீரர்களை கொண்டே உங்களை வீழ்த்துவோம் என புதுதெம்புடன் களமிறங்கியிருக்கிறது.

ரசிகர்கள் அனுமதி!

கிட்டத்தட்ட ஓராண்டு காலம், உயிரற்றுக் கிடந்த இந்தியக் கிரிக்கெட் ஸ்டேடியங்கள் மெல்ல மெல்ல உயிர்பெறத் தொடங்கியுள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஐம்பது சதவிகிதம் இருக்கைகளை நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, 15,000 ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

#INDvENG
#INDvENG

கோலியின் இருக்கை காலியா?

வரிசையாக நான்கு போட்டிகளில் அடைந்த தோல்விகள், கோலியின் கேப்டன்ஷிப் குறித்த பல கேள்விகளோடு, அவரை விசாரணை கூண்டில் ஏற்றி வைத்துள்ளன. வீரர்கள் தேர்வில் இருந்து, ஃபீல்ட் செட்டிங் செய்வது வரை, எல்லாவற்றிலும் இவரது குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என அத்தனையும் கோலியை வறுத்தெடுக்கின்றன. கேப்டன் பதவிக்கு, தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் காரணத்தால், 'வாழ்வா சாவா?!' என்பதுதான் தற்போதைக்கு இந்தியா விளையாடும் எஞ்சிய போட்டிகளில் கோலியின் நிலை. மேலும் சமீப காலங்களில், ஃபேபுலஸ் ஃபோரில் உள்ள மற்ற மூவரும் மீண்டெழுந்து வந்ததைப் போல், 'கிங் கோலி இஸ் பேக்' என்ற தலையங்கத்துக்காகவும் பல கண்கள் காத்திருந்தன.

ஆனால் மொயின் அலியின் ஓர் அற்புதமான சுழற்பந்தில் டக் அவுட் ஆகி, நம்பமுடியாமல் திகைத்துப்போய் வெளியேறினார் கோலி.

பேட்டிங் - தொடர்ந்து கவலைக்கிடம்!

ரோஹித் ஷர்மா மற்றும் ரஹானே ஆகிய இரண்டு சீனியர் வீரர்களிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸுக்காக இந்தியா நெடுங்காலமாகத் தவமிருக்கிறது. கடந்த ஆஸ்திரேலியா தொடரில், ரஹானே அடித்த சதத்தைக் கழித்துப் பார்த்தால், கடந்த 7 போட்டிகளில், வெறும் 248 ரன்களை, வெறும் 20.67 என்ற சராசரியுடன் அடித்துள்ளார் ரஹானே. ரோஹித்தோ, டெஸ்ட் போட்டிகளுக்கேற்றாற் போல் தன்னைத் தகவமைத்துக் கொள்ளத் திணற, மொத்தத்தில், இவர்களால் இழப்பு என்னவோ இந்தியாவுக்குத்தான். இருவரும் தமது பொறுப்பையுணர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது, அணிக்கு அவசிய, அவசரத் தேவையாக இருக்கிறது.

அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ரோஹித் அரை சதம் அடித்து களத்தில் நிற்கிறார். அவரோடு ரஹானே களத்தில் நிற்கிறார்.

#INDvENG
#INDvENG

ஃபீல்டிங் பாவக்கதைகள்:

ஆஸ்திரேலியாவில் ஆரம்பித்த இந்தியாவின் ஃபீல்டிங் பாவக்கதைகள், முற்றுப் பெறாமல் சொந்த மண்ணிலும் தொடர்கதையாகித் தொடர்கின்றன. கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்டிங், ஸ்டம்ப்பிங் வாய்ப்பை நழுவ விடுதல், ரன்அவுட் வாய்ப்பைக் கோட்டை விடுதல் என எப்படி எல்லாம் ஃபீல்டிங் செய்யக் கூடாதென்பதற்கு செயல்முறை வகுப்பெடுத்துக் கொண்டுள்ளனர் இந்திய வீரர்கள். இதனைச் சரி செய்ய முற்படாத வரை, வெற்றி பெறுவோமென்பதே வெட்டிக் கதைதான்.

பெளலிங் ஓட்டைகள்!

சென்ற போட்டியில், இஷாந்த், பும்ரா மற்றும் அஷ்வின் இணைந்து, ஒருபக்கம் கட்டுக்கோப்பாய்ப் பந்து வீசினாலும், இந்தியக்கப்பல் மூழ்கிப் போனதற்குக் காரணம், சப்போர்ட்டிங் ஸ்பின்னர்களான நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் ரன்களை வாரி வழங்கிய வள்ளல்தன்மையே. இந்தப் போட்டியில் இருவருமே இல்லை. நதீமுக்குப் பதில் அக்ஸரும் சுந்தருக்குப் பதில் குல்தீப்பும் உள்ளே வந்துவிட்டார்கள். ஆனால், எதிர்பாராத ட்விஸ்டாக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சிராஜ் உள்ளே வந்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள்!

கிரிக்கெட் களத்தில் பொதுவாக வெற்றிபெறுகிற அணி கூட்டணியை மாற்றமாட்டார்கள் என்பார்கள். ஆனால் அந்த கூற்றை இங்கிலாந்து கொரோனவிற்கு பிறகு உடைத்துகொண்டிருக்கிறது. முக்கியமான வீரர்கள் காயம் ஆகிவிடக்கூடாது என சுழற்சிமுறையில் அவர்களை மாற்றும்முறையை கையில் எடுத்திருக்கும் இங்கிலாந்து பட்லருக்குப் பதிலாக ஃபோக்ஸ், ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர்க்குப் பதிலாக ஸ்டோன், பெஸ்க்கு பதிலாக மொயின் அலி என 4 மாற்றங்களைச் செய்திருக்கிறது.

#INDvENG
#INDvENG

ரூட்டின் விக்கெட் வரம் கிடைக்குமா?

சுழல் பந்து வீச்சை இப்படித்தான் சமாளிக்க வேண்டும் என இலக்கணம் எழுதிச் சென்றுள்ளார், ரூட்! டிரைவ்களையும் ஸ்வீப் ஷாட்டுகளையும் லாவகமாக ஆடிக்கொண்டிருக்கும் இவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வியூகம் மட்டுமே, இந்தியாவின் வெற்றிப் பாதைக்கான திறவுகோலாய் இருக்கப் போகிறது.

பிட்ச் நிலவரம்:

கடந்த போட்டியில், பிட்சின் நிலை குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் விளையாடுவது பிட்ச்சா இல்லை தார் ரோடா என்ற விமர்சனங்களை இந்திய வீரர்களே முன்வைத்தனர். முதல் மூன்று நாட்களும் பேட்ஸ்மேன்களோடு ஒட்டி உறவாடிய பிட்ச், கடைசி இருநாட்களில், பெளலர்கள் சுற்றவிட்ட பம்பரமாய் சொன்னதெல்லாம் கேட்டது. அப்படி இல்லாமல், முதல் நாளில் இருந்து பெளலர்களுக்குச் சாதகமாக இருப்பது மட்டுமே, டெஸ்ட் போட்டியை உயிரோட்டமுடையதாய் வைத்துக்கொள்ளும் என்பதுபோன்ற கடும்விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்து 3 நாள்களே ஆகியுள்ளதால் சிறிய மாற்றங்கள் செய்து முதல் நாள் முதல் போட்டியை உயிர்ப்பாக வைத்திருக்கும் வேலையில் பிட்ச் வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டாஸ் மட்டுமே போட்டியை வெல்வதற்கான காரணியாக மாறிப் போய் விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டே பிட்ச் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. அதேநேரம் டாஸ் இந்தியாவுக்கு சாதகமாகி இந்தியா முதலில் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறது.

#INDvENG
#INDvENG

அடுத்த டெஸ்ட் போட்டி, சவாலான பகலிரவு போட்டியாக நடைபெற இருப்பதனால், நிச்சயம் இந்தப் போட்டியில் வென்று, தொடரைச் சமன் செய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் இந்திய அணி உள்ளது. இல்லையெனில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை விட்டு இந்தியா வெகுதூரம் எடுத்துச் செல்லப்பட்டுவிடும்‌. தோல்விகளும் வீழ்ச்சிகளும் இந்தியாவுக்கொன்றும் புதிதல்ல. இந்தியா மீண்டு வரும் என நம்புவோம்.

தற்போது இந்திய அணி 121 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ஆடிக்கொண்டிருக்கிறது. ரோஹித் ஷர்மா 83 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு