Election bannerElection banner
Published:Updated:

சென்னை டெஸ்ட் : விராட் கோலி Vs ஜோ ரூட்... ஆட்டம் ஆரம்பிக்கலாங்களா..?!#INDvENG

#INDvENG
#INDvENG

இந்தியா ஐந்து பெளலர்களுடன் களமிறங்குமா அல்லது 'ப்ளேயிங் லெவன் புகழ்' கோலி சமன்பாட்டையே மாற்றியமைத்து, நான்கு பெளலர்களுடன் களமிறங்குவாரா என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.

ஒர் ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்தியாவுக்கு கிரிக்கெட் மீண்டும் திரும்பியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, அதுவும் சென்னையில் ரசிகர்கள் யாரும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், நியூஸிலாந்துடன் மோத இருக்கும் அணியை இறுதி செய்யப்போகும் தொடர் இது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை காலை சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்குகின்றன. ஆஸ்திரேலியாவை 2/1 என வீழ்த்திய வெற்றிக்களிப்பில் இந்தியாவும், இலங்கையை 2/0 வீழ்த்திய பெருமிதத்துடன் இங்கிலாந்தும் இந்தப் போட்டியை எதிர்கொள்கின்றன. இதுவரை 122 போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதியிருக்கின்றன. அதில் இந்தியா 26 முறையும், இங்கிலாந்து 47 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கோலி ரிட்டன்ஸ்!

ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியோடு விடைபெற்ற கோலி, அணிக்குள் மீண்டும் திரும்பி இருக்கிறார். கேப்டனாகவும், தனியொரு வீரராகவும், டெஸ்ட் அணியை ஒவ்வொரு அங்குலம் அங்குலமாய் வெற்றிப் பாதையில் கொண்டு வந்து சேர்த்திருக்கும் கோலி, இறுதிச் சுற்றில் இணைவதற்கான கடைசி சுற்றில், அணியுடன் மீண்டும் கை கோத்திருப்பது, இந்தியாவுக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட பெளலர்களின் பந்துகளை திசைக்கொன்றாய் சிதற விடுவார் கோலி என எதிர்பார்ப்போம்.

யாரை எடுப்பது, யாரை விடுப்பது?

கடந்த ஆஸ்திரேலிய தொடரில், இந்தியாவுக்கு ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்வதில் இடியாப்பச் சிக்கல்கள் இருந்து கொண்டே இருந்தன. காரணம், காயம் செய்த மாயம்! மாற்று வழி இல்லாமலே, சிங்கத்திடம் சிட்டுக் குருவிகளை அனுப்புவதைப் போல, சில போட்டிகளில், அனுபவமற்ற வீரர்களை இறக்கி, சோதனை ஓட்டம் பார்க்க வேண்டிய நிர்பந்தத்தை, இந்தியா சந்தித்தது. அக்னிப்பரிட்சை செய்த தங்கங்களாய் பலர் ஜொலிக்க, இந்தியாவுக்கு இப்போது இருக்கும் குழப்பம், கொஞ்சம் வேறுமாதிரியானது. இருக்கும் மகா திறமையான பல வீரர்களில், எந்தப் பதினோரு பேரை இறுதி செய்வது என்பதுதான் தற்போதைய கேள்வி!

#INDvENG
#INDvENG

இந்தியாவின் பெளலிங் பாசறை!

வேகப் பந்து வீச்சாளர்களுக்கான நேர்காணல் நடக்கிறதா என்ற ஐயம் எழுமளவு, இருக்கின்ற அத்தனை வேகப்பந்து வீச்சாளர்களும், ஆஸ்திரேலிய தொடரில் ஒருவர்பின் ஒருவராகக் களம் கண்டனர். பும்ரா, அஷ்வின் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அறிமுகப் போட்டியில் வெற்றிமுகம் தரித்த இளம் வீரர்களுக்கு, இந்தப் போட்டியில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விதான்.

குழப்பமோ குழப்பம்!

இந்தியத் தரப்பில், இன்னொரு எதிர்பார்ப்பாக இருக்கப் போவது, இந்தியா ஐந்து பெளலர்களுடன் களமிறங்குமா அல்லது 'ப்ளேயிங் லெவன் புகழ்' கோலி சமன்பாட்டையே மாற்றியமைத்து, நான்கு பெளலர்களுடன் களமிறங்குவாரா என்பது. ஐந்து பேர் எனும் பட்சத்தில், இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் என்று களமிறங்கப் போகிறதா அல்லது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று ஸ்பின்னர்கள் என்று களம் காணப் போகிறதா என்பது அடுத்த குழப்பம். ஆனாலும் களத்தின் கடந்த கால நிலவரங்களை வைத்துப் பார்த்தால், இஷாந்த்/சிராஜ் மற்றும் பும்ரா ஆகியவர்களின் வேகங்களோடு அஷ்வின், குல்தீப், அக்சர்/சுந்தர் உள்ளிட்ட மூன்று ஸ்பின்னர்களோடு, இந்தியா சுழல்வலை பின்ன வாய்ப்புகள் அதிகம். அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பிருக்கும் அதே நேரத்தில், சுழல்பந்து மாயத்துடன் பேட்டிங்கையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்தால், சென்னை மைந்தன் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்படலாம்‌.

பன்ட்!

அணியில் விக்கெட் கீப்பராக நிரந்தர இடம்பிடித்துவிட்டார் ரிஷப் பன்ட். விக்கெட் கீப்பிங்கில் குறிப்பிடத்தக்க உயரங்களை அடையா விட்டாலும், ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய முத்திரையைப் பதித்து விட்ட பன்ட் தான் கீப்பராக இருக்கப்போகிறார் என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துவிட்டார் கோலி.

#INDvENG
#INDvENG

பேட்ஸ்மேன்கள் பலப்பரிட்சை!

இந்தியாவின் ஓப்பனிங்கைப் பொறுத்தவரை, கில் தனது அதிர்ஷ்டகரமான அந்த துண்டைப் போட்டு, தனது இடத்தை, கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டார். ஆஸ்திரேலிய தொடரில் சோபிக்கத் தவறினாலும், அவரது பழைய சாதனைகளாலும், இது இந்தியாவில் நடக்கும் போட்டிகள் என்பதாலும் ரோஹித்துக்கான இருக்கையும் நிச்சயிக்கப்பட்டு விட்டது. ரோஹித் மற்றும் கில்லுக்கு ஒப்பனர்களாக அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

தனது பேட்டின் கூர்மையால், எதிரணி பெளலர்களின் பந்துகள் என்னும் ஆயுதங்களையே முனைமழுங்கச் செய்யும் புஜாராவும், தான் திரும்பி வந்து விட்டதை விஸ்வரூபத்தோடு காட்டக் காத்திருக்கும் கிங் கோலியும், முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் களமிறங்குவார்கள்.

பேட்ஸ்மேனாக தனது முழுத் திறமையை நிரூபிக்காது போனாலும், கேப்டனாய் களப்பணி ஆற்றி, இந்திய அணியை கம்பீரமாய் தலை நிமிர்ந்து நடைபோட வைத்த ரஹானே, மிடில் ஆர்டரை வலுவூட்ட ஐந்தாவது இடத்திலும், கடந்த தொடரில், தனது நிகரில்லா ஆட்டத்தின் வழியாக, பாக்கெட் டைனமைட்டாக, விளையாடி அசத்திய பன்ட் ஆறாவது இடத்தை ஆக்ரமிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

இறுதியாக, ஏழாம் இடத்தை சுந்தர்/அக்சர், எட்டாவது இடத்தை, பார்ட்டைம் பேட்ஸ்மேனாக கலக்கும் அஷ்வினும் நிரப்பினால், ஒரு நீண்ட நெடிய பேட்டிங் லைன் அப்பைக் காட்டி, இங்கிலாந்து பெளலர்களுக்குச் சவால் விடுக்கலாம்.

இது ஓரளவு உத்தேசமான தேர்வே ஒழிய முதல் நான்கு இடங்களைத் தவிர்த்து மற்றவை, 'மற்றவை நேரில்' என்பதைப் போல், மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு பெரிய குழப்பம் நீடிக்கத்தான் செய்கிறது.

இங்கிலாந்தின் பெளலிங் யூனிட்!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பென் ஸ்டோக்ஸ் ஆல் ரவுண்டராக விளையாடுவார்‌. அதைத் தவிர்த்து, கடைசி இருநாட்கள், ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன், இரண்டு சுழல் சூறாவளிகளையும் இங்கிலாந்து அணியில் சேர்க்க வாய்புள்ளது. சுழல் படையில் டோம் பெஸ்ஸும், ஜாக் லீச்சும் பங்கேற்க வாய்ப்புள்ளது.

#INDvENG
#INDvENG

இங்கிலாந்தின் முக்கிய வீரர்!

இங்கிலாந்தின் மிக முக்கிய வீரராக ஜோ ரூட்டே இருக்கப் போகிறார் என்பதில் சந்தேகமேயில்லை. கோலியும், ரூட்டும் தத்தம் எதிரணி பெளலர்களை அச்சுறுத்தும் வகையில் விளங்குவார்கள். எனினும், சிம்ம சொப்பனமாய் இருக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித்துக்கே ஸ்கெட்ச் போட்டு காலி செய்ததைப் போல், ரூட்டுக்குமான பிளானை இந்தியா வகுக்கும் என நம்பலாம்.

இந்தியா இத்தொடரை, 3/0 என்றோ 4/0 என்றோ வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக டேவிட் லாய்ட் கூறி இருக்கும் கட்டத்தில், 1985க்குப் பின்பு சென்னையில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியதில்லை என்னும் மேலும் ஒரு நேர்மறைக் குறிப்போடே, தொடரைத் தொடங்குகிறது இந்தியா. ஆஸ்திரேலியாவை அடித்து வீழ்த்திய இந்தியா, இங்கிலாந்தை நையப் புடைக்குமா?!

இறுதிப் போட்டித் தேர்வுக்கான இறுதிச்சுற்று களைகட்டி விட்டது! இரு அணிகளின் உச்சகட்ட மோதலைக் காணக் காத்திருப்போம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு