சினிமா
தொடர்கள்
Published:Updated:

தோனியின் பெயரால் நிகழும் ஏமாற்றம்!

சென்னை அணி
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை அணி

சென்னை, மும்பை போன்ற அணிகளைப் பொறுத்தவரை அணியில் ஒவ்வொருவரின் ரோலும் ஏலம் முடிந்த மறுநாளே முடிவாகிவிடும்

பிப்ரவரியில் ஐ.பி.எல் ஏலம் முடிந்தபின் சென்னை அணிப் பட்டியலைப் பார்த்தவர்களுக்கு பெரிதாய் ஆச்சரியம் இருந்திருக்காது. கடந்த ஆண்டு கோப்பை வென்ற அணியில் இருந்த 12 பேர், இப்போது ஏலத்திற்குப் பின்னான அணியிலும் இருந்தார்கள். ஆனால் ரிசல்ட் மட்டும் இந்த சீசனில் அப்படியே தலைகீழாகிவிட்டது. முந்தைய 12 சீசன்களில் 11 முறை ப்ளே ஆப் சுற்றில் நுழைந்த சென்னை அணி இம்முறை ப்ளே ஆப் சுற்றுக்குப் பல வாரங்களுக்கு முன்பே அதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது. எங்கே நிகழ்ந்தது தவறு?

கேப்டன்ஷிப் குளறுபடிகள்

2020-ல் தோனி சர்வதேசப் போட்டிகளிலிருந்து விலகியபின் நடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி அதுவரை பார்த்திடாத அளவிற்கு சொதப்பியது. அதன்பின் தோனி கேப்டன்ஷிப்பை விட்டுக்கொடுத்த இந்த சீசனிலும். 2008-ல் டி20 பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாத சமயத்தில்தான் தோனி சென்னை அணியின் கேப்டனானார். அதன்பின் அவர் தமிழகத்திற்கே தத்துப்பிள்ளையாகுமளவிற்கு வளர, சி.எஸ்.கே எனும் பிராண்டும் வளர்ந்தது. தோனி - சி.எஸ்.கே இரண்டும் தனித்தனி பிராண்டுகளில்லை எனும்படியான இந்தப் பிணைப்புதான் சென்னை அணியின் இத்தனை ஆண்டுக்கால பலமும் வருங்காலத்தின் பலவீனமும்.

தோனியின் பெயரால் நிகழும் ஏமாற்றம்!

இந்த சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் ஜடேஜா கேப்டனாகும் அறிவிப்பு பொதுவெளிக்கு வந்தது. ஆனால் அதுகுறித்து தோனியும் ஜடேஜாவும் ஓராண்டுக்கு முன்பாகவே பேசி முடிவெடுத்துவிட்டதாக அணி நிர்வாகம் பின்னர் தெரிவித்தது. அப்படியெனில் ஏலத்தின்போது ஜடேஜாதானே வீரர்களின் தேர்வில் முக்கியப் பங்களிப்பைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தொலைபேசி வழியே லைவ்வாக வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆலோசனைகள் வழங்கிக்கொண்டே இருந்தது தோனிதான். ஏலம் முடிந்தபின் வீடியோவில் பேசிய சி.எஸ்.கே-வின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன், ‘தலைவனுக்கு என்ன வேணும்னு தெரியும். அவன் பார்த்துக்குவான்' என்றார். ஓரிடத்தில்கூட ஜடேஜாவின் பங்களிப்பு இருந்ததாக அணி நிர்வாகம் சொல்லவில்லை.

சி.எஸ்.கே அப்படித்தான். அங்கே சகலமும் தோனி கண்ணசைவில்தான் நடக்கும். ஏல டேபிளில் மட்டுமல்ல, களத்தில், பவர்ப்ளேயில், யார் பௌலிங் போடுவது என்பது தொடங்கி பொல்லார்டுக்கு பீல்டு செட் செய்வதுவரை எல்லாமே தோனியின் வழியில்தான் நடந்தது. பொறுப்பை பெயருக்கு மாற்றிக்கொடுத்தது போலத்தான் இருந்தது பார்ப்பவர்களுக்கு. இங்கே பிரச்னை தோனி மட்டுமல்ல, ஜடேஜாவும்தான். ‘அதான் தோனிபாய் இருக்கார்ல. அவர் பார்த்துக்குவாரு' என்றுதான் அவருமே முதல் போட்டிக்கு முன்பாய் சொன்னார். ஒரு பிளேயராய் அவர் தோனியைச் சார்ந்திருப்பது அணிக்கு நல்லது, ஆனால் கேப்டனாய் அல்ல! இப்போது மீண்டும் தோனியே கேப்டன் என, பருத்திமூட்டையை குடோனுக்கே திருப்பி ஜடேஜாவின் தன்னம்பிக்கையை உடைத்து, சுலபமாக வெளிவரமுடியாத சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது அணி.

தோனியின் பெயரால் நிகழும் ஏமாற்றம்!

படுத்தியெடுத்த காயங்கள்

சென்னை, மும்பை போன்ற அணிகளைப் பொறுத்தவரை அணியில் ஒவ்வொருவரின் ரோலும் ஏலம் முடிந்த மறுநாளே முடிவாகிவிடும். ப்ளேயிங் லெவனில் பெரிதாய் மாற்றமே இருக்காது. இந்த ஸ்திரத்தன்மைதான் இவ்விரண்டு அணிகளும் மீண்டும் மீண்டும் கோப்பை ஜெயிக்கக் காரணம். ஆனால் இந்த முறை சென்னை அணியைத் தொடர்காயங்கள் பாடாய்ப் படுத்தின. தீபக் சஹார் தொடரில் ஆடவே இல்லை. மொயீன், ப்ராவோ, மில்னே சில ஆட்டங்கள் உடல்நலக்குறைவால் ஆடவில்லை. சரியாக கேப்டன்ஷிப் போனதும் ஜடேஜாவுக்கும் ‘காயம்.' கான்வே சொந்தக் காரணங்களுக்காக சில ஆட்டங்கள் ஆடவில்லை. இப்படி ப்ளேயிங் லெவனில் ஏகப்பட்ட குளறுபடிகள். மொத்தமாய் 14 ஆட்டங்களும் ஆடியிருப்பது தோனி, கெய்க்வாட் என இரண்டே பேர்தான்.

கன்ஸிஸ்டென்ட்டாய் பெர்பாம் செய்ய ஒரு வீரருக்கு தொடர் வாய்ப்புகள் தேவை. அது நிகழாமல்போனதால் பேட்டிங் ஆர்டர் சட் சட்டெனக் குலைந்து தோல்வியை முத்தமிட்டது சென்னை அணி. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு சென்னை பேட்ஸ்மேன்கூட 400 ரன்களைத் தொடாதது இதுவே முதல்முறை.

வீக்கான மிடில் ஆர்டர்

தோனி மூன்று சீசன்களாகச் சொல்லிக்கொள்ளும்படியான பார்மில் இல்லை. அவரின் பினிஷர் ரோலை ஏற்றுக்கொள்ள (அப்படித்தான் தூபே அணிக்குள் வந்தார். ஆனால் ஷாட் செலக்‌ஷன், புட்வொர்க் என இந்த சீசன் ரொம்பவே சொதப்பல்) அணியில் ஆளும் இல்லை. அதனால் பிரஷர் மொத்தமும் ஓப்பனர்கள் மேல்தான். அவர்கள் நின்று ஆடினால் ஸ்கோர் ஏறும். இல்லையெனில் ரன்ரேட் சரியும். ராஜஸ்தானுடனான கடைசி ஆட்டம்வரை இதுதான் நிதர்சனம். தேவை இளம் இந்திய மிடில் ஆர்டர்!

பவர்ப்ளே பௌலிங்

தீபக் சஹாரை மையமிட்டு போட்டுவைத்திருந்த பௌலிங் திட்டங்கள் அனைத்தும் காயம் காரணமாகத் தவிடுபொடியாக, அனுபவம் இல்லாத இளம் வீரர்களை சென்னை சார்ந்திருக்க வேண்டியதானது. பவர்ப்ளேயில் ஏகப்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த சென்னை பௌலர்கள் விக்கெட்களையும் முக்கியமான நேரத்தில் எடுக்கவில்லை. இந்தச் சமநிலை குலைந்ததால் டெத் ஓவர் பௌலிங் போடவும் ஆளில்லை. ஒரு மேட்ச் ஷிவம் தூபே வாரிக்கொடுத்தார். இன்னொரு மேட்ச் க்றிஸ் ஜோர்டனால். இப்படி ஜெயித்திருக்க வேண்டிய மேட்ச்கள் தொட்டுவிடும் தூரத்தில் கைநழுவிப்போயின.

இதோ, அடுத்த ஆண்டும் தோனியே கேப்டன். எல்லாரும் ஆசைப்பட்டதும் அதுதான். ஆனால் அணி நிர்வாகமும் ‘தோனி இருக்காருல பார்த்துக்கலாம்' என இன்னமும் நினைக்குமானால், தோல்வி தொடர்கதைதான். சென்னை மண்ணில் வெற்றியோடு முடிப்பதுதான் அவரின் பல ஆண்டுக் கனவு. ஆனால் அதற்கு தோனியை விடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்க நிர்வாகம் தயாராகவேண்டும். ஏனெனில் தன் பெயரால் ரசிகர்கள் எல்லா ஆண்டும் ஏமாந்துபோவதை தோனியுமே விரும்பமாட்டார்.