Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸின் சிக்கல்கள்... கேப்டன் தோனியின் #IPLAuctions2021 பிளான் என்ன?!

சென்னை சூப்பர் கிங்ஸ் ( File Photo )

தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள், 12 உள்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2021 ஏலத்தில் ஒரேயொரு வெளிநாட்டு வீரர், 5 உள்நாட்டு வீரர்களை மட்டுமே எடுக்கமுடியும்.

Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸின் சிக்கல்கள்... கேப்டன் தோனியின் #IPLAuctions2021 பிளான் என்ன?!

தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள், 12 உள்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2021 ஏலத்தில் ஒரேயொரு வெளிநாட்டு வீரர், 5 உள்நாட்டு வீரர்களை மட்டுமே எடுக்கமுடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ( File Photo )

2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் நாளை மதியம் சென்னையில் நடைபெற இருக்கிறது. ஏலப்பட்டியலில் இருக்கும் 292 வீரர்களில் 61 வீரர்களை 8 ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க இருக்கின்றன. இந்தமுறை ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஏலப்பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள்தவிர இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டேவிட் மாலன், அலெக்ஸ் ஹேல்ஸ், சாம் பில்லிங்ஸ், மொயின் அலி எனப் பல முக்கிய வீரர்கள் ஏலத்தில் இருக்கிறார்கள். அதனால் ஏலப்போட்டி இந்த முறை கடுமையாகவே இருக்கும் எனத்தெரிகிறது.

2020 ஐபிஎல்... சொதப்பிய சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்தொடரில்தான் ப்ளேஆஃபுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிபெறவில்லை. மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதன்பிறகு தொடர் தோல்விகளை சந்திக்க ஆரம்பித்தது. தோனி, ஷேன் வாட்சன், பிராவோ, ராயுடு என முக்கிய வீரர்கள் யாருமே ஃபார்மில் இல்லாததது சென்னை சூப்பர் கிங்ஸின் தொடர் தோல்விகளுக்கு காரணம். மேலும் கேப்டன் தோனி தொடர்ந்து கேதர் ஜாதவ், வாட்சன் என பேட்டிங்கில் சொதப்பிய வீரர்களுக்கே வாய்ப்புகள் அளித்ததும், இளம் வீரர்களை பென்ச்சில் உட்காரவைத்ததும் கடும் விமர்சனங்களை உருவாக்கியது. கடந்த சீசனில் ரசிகர்களிடம் இருந்தும் கடுமையாக எதிர்ப்பை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த சீசனில் மீண்டு வருமா என்பது அதன் வீரர்களின் காம்பினேஷனிலேயே இருக்கிறது. அதனால் இந்தமுறை ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் யாரையெல்லாம் வாங்கப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகம் எழுந்திருக்கிறது.

2021 சூப்பர் கிங்ஸ் சிக்கல்கள்!

நினைத்தவர்களையெல்லாம் ஏலத்தில் எடுத்துவிடமுடியாது என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய சிக்கல். ஏலத்துக்கு முன்பாக டிரேட் விண்டோ வழியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியிருக்கிறது. இதன்மூலம் ஏலத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸிடம் மீதம் இருக்கும் தொகை வெறும் 19 கோடியே 90 லட்சம் மட்டுமே. ஒரு ஐபிஎல் அணியில் 8 வெளிநாட்டு வீரர்கள், 17 உள்நாட்டு வீரர்கள் மட்டுமே இருக்கமுடியும். அதன்படி தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 7 வெளிநாட்டு வீரர்கள், 12 உள்நாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 2021 ஏலத்தில் ஒரேயொரு வெளிநாட்டு வீரர், 5 உள்நாட்டு வீரர்களை மட்டுமே எடுக்கமுடியும்.

மொயின் அலி
மொயின் அலி
தற்போதைய அணி என்ன?! வெளிநாட்டு வீரர்கள் : ஃபேப் டுப்ளெஸ்ஸி(பேட்ஸ்மேன்) சாம் கரண் (ஆல்ரவுண்டர்), டுவெய்ன் பிராவோ (ஆல்ரவுண்டர்), மிட்சல் சான்ட்னர் ( சுழற்பந்து வீச்சாளர், பெளலிங் ஆல்ரவுண்டர்) லுங்கி எங்கிடி(வேகப்பந்து வீச்சாளர்), ஜாஷ் ஹேஸில்வுட் ( வேகப்பந்து வீச்சாளர்), இம்ரான் தாஹீர் (சுழற்பந்து வீச்சாளர்)
உள்நாட்டு வீரர்கள் : மகேந்திர சிங் தோனி ( கேப்டன் - விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்), சுரேஷ் ரெய்னா (பேட்ஸ்மேன்), ரவீந்திர ஜடேஜா (ஆல்ரவுண்டர்), அம்பதி ராயுடு (பேட்ஸ்மேன்), ராபின் உத்தப்பா (பேட்ஸ்மேன்), நாராயணன் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்), ருத்துராஜ் கெயிக்வாட் (பேட்ஸ்மேன்), கார்ன் ஷர்மா (சுழற்பந்து வீச்சாளர்), சாய் கிஷோர் (சுழற்பந்து வீச்சாளர்), தீபக் சஹார் (வேகப்பந்து வீச்சாளர்), ஷர்துல் தாக்கூர் (வேகப்பந்து வீச்சாளர்), கேஎம் ஆசிஃப் (வேகப்பந்து வீச்சாளர்)

2021 ஆக்‌ஷன் பிளான் என்ன?!

சென்னை சூப்பர் கிங்ஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கான இடம் இன்னும் சரிவர நிரப்பப்படாமலேயே இருக்கிறது. கடந்த சீசனில் ஓப்பனிங் விளையாடிய ஷேன் வாட்சன், முரளி விஜய் என இருவருமே இதில் சொதப்பினார்கள். அதனால் கடந்த ஆண்டு கடைசியாக நடந்த லீக் போட்டிகளில் ருத்துராஜ் கெய்க்வாடை டுப்ளெஸ்ஸியுடன் களமிறக்கினார் தோனி. அதன்பிறகுதான் ஓப்பனிங் பிரச்னை ஓரளவுக்குத் தீர்ந்தது. அதனால் இந்த சீசனுக்கு ஷேன் வாட்சன் போன்று ஓப்பனிங் ஸ்லாட்டுக்கு ஒரு பவர் ஹிட்டரை சூப்பர் கிங்ஸ் வாங்குமா என்பது சந்தேகம். மேலும் ராபின் உத்தப்பாவும் அணிக்குள் வந்திருப்பதால் அவரை ஓப்பனிங்கில் இறக்கவே தோனி விரும்புவார் எனத்தெரிகிறது.

டுவெய்ன் பிராவோ போன்று ஒரு பவர்ஃபுல் ஆல்ரவுண்டரை சூப்பர் கிங்ஸ் வாங்கவே விரும்பும். சமீபத்தில் நடந்துமுடிந்த இங்கிலாந்து - இந்திய தொடரில் சிறப்பாகப் பந்து வீசியும், அதிரடியாக பேட்டிங் ஆடியும் சேப்பாக்கம் மைதானத்தில் அசத்தினார் மொயின் அலி. இந்தமுறை ஐபிஎல் போட்டிகள் சென்னையிலும் நடைபெற இருப்பதால் சென்னை பிட்சுக்குப் பழகியிருக்கும் மொயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கலாம். அதேப்போல் சென்னை அணியில் ஆஃப் ஸ்பின்னர்களே இல்லை. அதனால் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்ப கெளதமை சென்னை வாங்க விரும்பும் எனத் தெரிகிறது.

சென்னை அணியிடம் 20 கோடி ரூபாயே இருப்பதால் வெளிநாட்டு வீரரை வாங்க பல கோடி ரூபாய் பேரத்தில் இறங்க விரும்பாது. அதனால் மேக்ஸ்வேல், ஹேல்ஸ், ஃபின்ச் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் வருவது என்பது சந்தேகம்தான். அதனால் ஒரேயொரு வெளிநாட்டு வீரர் அதுவும் ஸ்பின் ஆல்ரவுண்டராகவே சென்னை வாங்கும் எனத் தெரிகிறது.

மணிமாறன், ஜெகதீசன், அபராஜித் அடங்கிய தமிழ்நாடு அணி
மணிமாறன், ஜெகதீசன், அபராஜித் அடங்கிய தமிழ்நாடு அணி

தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்குமா?!

சென்னை அணியில் ஜெகதீசன், சாய்கிஷோர் என இரண்டே இரண்டு தமிழக வீரர்கள்தான் இருக்கிறார்கள். அதிலும் இந்த இருவருக்கும் ப்ளேயிங் லெவனில் இடம்கிடைக்குமா என்பது சந்தேகமே. இந்தமுறை சையது முஸ்தாக் அலி தொடரில் சாம்பியன்ஷிப் வென்ற தமிழக அணியில் இருந்து 8 வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் இருக்கிறார்கள். ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஹரி நிஷாந்த், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஷாருக்கான், ஸ்பின் ஆல்ரவுண்டர் பாபா அபராஜித் , இடது கை சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் மணிமாறன், வேகப்பந்து வீச்சாளர் என்.முகமது, வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அருண் கார்த்திக், வேகப்பந்து வீச்சாளர் ஜி பெரியசாமி என இந்த 8 பேரில் சென்னை அணி நிச்சயம் யாராவது ஒருவரை ஏலத்தில் எடுக்கும் என்றே தெரிகிறது. ஸ்பின் ஆல்ரவுண்டருக்கான தேவையிருப்பதால் பாபா அபராஜித்தையும், உள்ளூர் வேகப்பந்துவீச்சாளர் என்கிற முறையில் பெரியசாமியையும் சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் வாய்ப்புகள் அதிகம்.

சென்னை சூப்பர் கிங்ஸின் ப்ளேயிங் லெவன் எப்படியிருக்கும்?!

தோனி, ரெய்னா, ஜடேஜா, டுப்ளெஸ்ஸி, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா என இந்த 8 பேருக்கான இடம் கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டுவிட்டது. மீதி மூன்று பேருக்குத்தான் போட்டாபோட்டி இருக்கும். இதில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் நிச்சயம் வேண்டும். ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வேண்டும். இந்த மூவரை தோனி எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பதைப் பொறுத்தே சென்னையின் வெற்றி இந்த சீசனில் அமையும்!