கட்டுரைகள்
Published:Updated:

ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்!

சென்னை சூப்பர் கிங்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
சென்னை சூப்பர் கிங்ஸ்

நெஞ்சம் மறப்பதில்லை-8

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி சம்மர் சீசன் களைகட்டத் தொடங்கிவிட்டது. அறிமுகத்திலேயே அதிரடி காண்பித்து நடப்பு சாம்பியனாக வலம்வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி, மீண்டும் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்போடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ஜாம்பவான்களாகச் சுற்றித் திரிந்து, கடைசி சீசனில் பலத்த அடி வாங்கிய சென்னையும் மும்பையும் இழந்த பெருமையை மீட்பதற்காக வெறிகொண்டு போராடுகின்றனர். இந்த முறையாவது ‘ஈ சாலா கப் நமதே' சாத்தியப்படுத்திவிட வேண்டுமென பெங்களூர் அணி எதை எதையோ செய்து கொண்டிருக்கிறது. இப்படியொரு அதி பரபரப்பான சூழலில் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை' பகுதியில் ஐ.பி.எல் தவிர வேறு எதைப் பற்றியாவது பேசினால் தெய்வக் குற்றமாகிவிடும். எனவே, ஐ.பி.எல்-லில் நிகழ்ந்த ஓர் அசகாய சம்பவத்தைப் பற்றியே இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்றால், அது மும்பை இந்தியன்ஸ்தான். 5 முறை சாம்பியனான். அதேசமயம், ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய அணி... சென்னை சூப்பர் கிங்ஸ்! 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், இரண்டே இரண்டு தடவை தவிர, மற்ற அனைத்துத் தடவையும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிப்பெற்றிருக்கிறது. சென்னை அளவுக்கு சீரான செயல்பாட்டை வெளிக்காட்டி திருப்தியான முடிவுகளைப் பெற்ற ஓர் அணி என்று ஐ.பி.எல்-லில் வேறெந்த அணியையும் குறிப்பிட முடியாது.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்
ஐ.பி.எல்
ஐ.பி.எல்

ஐ.பி.எல்-லின் தொடக்க சீசனிலேயே இந்திய கிரிக்கெட்டின் வருங்கால நாயகன் எனக் கணிக்கப்பட்ட தோனியை ஏலத்தில் பெரும் தொகை கொடுத்து சென்னை அணி வாங்கியது. அங்கிருந்துதான் சென்னை அணியின் வெற்றிப்பயணமும் தொடங்கியது. முதல் சீசனிலேயே இறுதிப்போட்டி வரை சென்னை அணி தகுதி பெற்றிருந்தது. நூலிழையில்தான் ராஜஸ்தான் அணியிடம் கோப்பையைத் தவறவிட்டது. அதற்கடுத்த சீசனில் அரையிறுதி வரை சென்னை முன்னேறியது. மூன்றாவது சீசன், சென்னை அணிக்கு ரொம்பவே முக்கியமான சீசன். லீக் சுற்றுகளில் சென்னை அணி அவ்வளவு சிறப்பாக ஆடவில்லை. தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருந்தது. தோனியுமே காயம் காரணமாக இரண்டு மூன்று போட்டிகளில் ஆட முடியாமல்போனது. அணியே ஒரு சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இதைப்பற்றி அஸ்வின்கூட தனது யூடியூப் சேனலில் நகைச்சுவையாகப் பேசியிருப்பார். ‘‘ரொம்பவே மோசமான அந்தச் சூழலில், எனக்கென்னவோ நாம ஃபைனல்ஸுக்குப் போயி கப் அடிச்சுருவோமோன்னு தோணுது' என சக வீரர்களிடம் கூறினேன். அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்'' எனப் பேசியிருந்தார். ஆம், அப்படியொரு சூழல்தான் அப்போது இருந்தது. அணியின் மீது நம்பிக்கையே இல்லாத நிலை. ஆனால், கடைசியில் மேஜிக் நடந்தது. அஸ்வின் சொன்னதுதான் நிகழ்ந்தது. வெறும் 7 போட்டிகளை மட்டுமே வென்று சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதன்பிறகு எல்லாமே சரவெடிதான். இறுதிப்போட்டியில் முரட்டு ஃபார்மிலிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது. அடுத்த சீசனில் ரொம்பவே சௌகர்யமாக ஆடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி, பெங்களூரை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது. சென்னை அணியின் வரலாற்றில் இதுவரையிலான காலம்... ஒரு பொற்காலம் எனலாம். ஏனெனில், இதன்பிறகுதான் இந்தக் கதையில் முக்கியத் திருப்பங்கள் எல்லாம் அரங்கேறத் தொடங்கின.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

அடுத்தடுத்த சீசன்களிலும் சீரான பெர்ஃபாமென்ஸைக் கொடுத்து ப்ளே ஆஃப் வரை முன்னேறியது சென்னை. சமயங்களில் இறுதிப்போட்டி வரை வந்து ரன்னர் அப்பும் ஆனது. இந்நிலையில்தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம். சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் இரண்டு அணிகளுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்பட்டது. ஒரே தீர்ப்பில் சென்னை அணியின் சாம்ராஜ்யம் மொத்தமாகச் சரிந்துபோனது. அதுவரை ஐ.பி.எல்-இன் அதிசிறந்த அணி என்கிற அடையாளத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த அணியின் மீது, `சூதாட்டக்காரர்கள்... மோசடிக்காரர்கள்' எனும் அடையாளம் கறையாக ஒட்டிக்கொண்டது. தோனி அந்த இரண்டாண்டுகளும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆடினார். சென்னையில் தோனிக்குக் கிடைத்த மாரியாதை, புனேவில் கிடைக்கவில்லை. அணியின் உரிமையாளரே தோனியை வசைபாடினார். கேப்டன் பதவியிலிருந்து தானே விலகினார் அல்லது விலக்கப்பட்டார். எப்படி வேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம்.

வீழ்ச்சிகளும் சறுக்கல்களும் தொடர்கதையாக நீண்டுகொண்டே இருப்பதில்லை. ஏதோ ஒரு கட்டத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பத்தான் செய்யும். அதுதான் இயற்கை. இரண்டாண்டு தடைக் காலம் முடிந்து சென்னை அணி மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்றது. இப்போது, சென்னை அணியின் முன்பும், கேப்டன் தோனியின் முன்பும் மிகப்பெரிய சவால் காத்திருந்தது. அதாவது, சென்னையின் சூதாட்டக் கறையைப் போக்கி, இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மீண்டும் ஜீரோவிலிருந்து தொடங்க வேண்டும். புதிய அணியைக் கட்டமைக்க வேண்டும். அந்த அணி செட்டிலாக குறிப்பிட்ட நேரம் பிடிக்கும். அதற்கெல்லாம் காத்திருக்க வேண்டும். மலைப்பை ஏற்படுத்தும் சவால்களாக இத்தனை விஷயங்களும் சென்னை அணி முன்பாக வரிசைகட்டி நின்றன. சவாலைச் சமாளிக்க தோனி தலைமையில் தயாரானார்கள். வாட்சன், அம்பத்தி ராயுடு, இம்ரான் தாஹீர், ப்ராவோ என மூத்த வீரர்கள் அத்தனை பேரையும் அணிக்குள் அள்ளிப்போட்டார் தோனி. ஏலத்தின் முடிவில் ‘அங்கிள்ஸ் அணி', ‘டாடீஸ் ஆர்மி' என சென்னையைப் பலவிதத்திலும் கிண்டலடித்தார்கள். எட்டாவது இடத்தைப் பிடிப்பதற்காகவே ஓர் அணியை வம்படியாக உருவாக்கியிருக்கிறார்கள் எனக் கடுமையாக சென்னை அணி ட்ரோல் செய்யப்பட்டது.

தோனி
தோனி

சென்னை கம்பேக் கொடுக்கும் அந்த 2018 சீசனின் முதல் போட்டியே வான்கடேவில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக. சென்னையும் மும்பை இந்தியன்ஸும் பரம வைரிகள். இரண்டாண்டுகள் கழித்து சென்னை ஆடும் போட்டி என்பதால் சென்னை அணி வென்றே ஆக வேண்டிய சூழல். ஆனால், சென்னை அணி அந்தப் போட்டியை ஆடிய விதத்தைப் பார்க்கையில் வெல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை. ரசிகர்கள் அத்தனை பேரும் சோர்ந்துபோயிருந்தனர். அப்போதுதான் இன்னொரு மேஜிக் நடந்தது. சேஸிங்கில் அந்தக் கடைசி 3-4 ஓவர்களில் ப்ராவோ ஒற்றை ஆளாக நின்று மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெல்லவே முடியாது எனும் சூழலிலிருந்து அசகாய வெற்றியைப் பதிவு செய்தது, சென்னை அணி. `ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்' என்பது போன்ற வெற்றி அது. அங்கிருந்து சென்னை அணிக்கு எல்லாமே புலிப்பாய்ச்சல்தான். இறுதிப்போட்டி வரை முன்னேறி சன்ரைசர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

‘Comeback That's What We've Known for' (நாங்கள் மீண்டுவருவோம், அதுதான் எங்கள் அடையாளம்) என தோனி இப்போதெல்லாம் மாஸாக வசனம் பேசுகிறாரே அதற்கான தொடக்கப்புள்ளி இந்த சீசன்தான். இந்த 2023 சீசனிலும் ரசிகர்கள் இப்படி ஒரு கம்பேக்கைத்தான் சென்னையிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். நடக்குமா?