Published:Updated:

வெளுத்துக்கட்டிய கங்காஸ்ரீதர் ராஜூ... ஃபைனலில் சேப்பாக் ... திண்டுக்கல்லுக்கு இன்னொரு சான்ஸ்!

கார்த்திகா ராஜேந்திரன்

'சேப்பாக் என்று ஓர் அணியுண்டு, அந்த அணிக்கென்று ஒரு வரலாறு உண்டு' என சரியான நேரத்தில் அதிரடி காட்டியது, சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

Chepauk Super Gillies
Chepauk Super Gillies ( TNPL )

டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட்டின் ப்ளே ஆஃப் சுற்று, திருநெல்வேலியில் நேற்று தொடங்கியது. குவாலிஃபையர், எலிமினேட்டர் என இரண்டு போட்டிகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விறுவிறுபுடன் சென்றன. ப்ளே ஆஃப் போட்டிகளுக்கு, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் வாட்ஸன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன.

சேப்பாக் vs திண்டுக்கல்

லீக் சுற்றில், அசைத்துப்பார்க்க முடியாத அணியாக வெற்றிகளைக் குவித்துவந்தது, அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ். ஏழு லீக் போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்று, ஃபார்மில் இருந்த திண்டுக்கலுக்கு, குவாலிஃபையர் எல்லாம் சாதாரணம். நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும் என கணிக்கப்பட்டது. இங்கேதான் ட்விஸ்ட்டு! 'சேப்பாக் என்று ஓர் அணியுண்டு, அந்த அணிக்கென்று ஒரு வரலாறு உண்டு' என சரியான நேரத்தில் அதிரடி காட்டியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். ஒரு முறை சாம்பியன், இரண்டு முறை ஃபைனலிஸ்ட்ஸ் என டிஎன்பிஎல் தொடரின் சி.எஸ்.கேவான சேப்பாக், திண்டுக்கல்லை தோற்கடித்தது!

திருநெல்வேலி ஐ.சி.எஃப் சங்கர் மைதானத்தில் தொடங்கிய முதல் ப்ளே ஆஃப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் கங்கா ஶ்ரீதர், கோபிநாத், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். முதல் விக்கெட் சரிந்தபிறகு, அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். நட்சத்திர வீரர் விஜய் சங்கர், 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

Ganga Sridhar Raju
Ganga Sridhar Raju
TNPL
கங்கா ஶ்ரீதர் ராஜூ - 81(54) - 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்

தனி ஆளாக களத்தில் சமாளித்த கங்கா ஶ்ரீதர் ராஜூ பவுண்டரிகளை விளாசினார். 81 ரன்கள் எடுத்திருந்தபோது, திண்டுக்கல் டிராகன்ஸின் சிலம்பரசன் பந்துவீச்சில் போல்டானார். ஹரி நிஷாந்த், பிரணேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் அணி 169 ரன்கள் எடுத்தது.

இலக்கை சேஸ் செய்த திண்டுக்கல் அணிக்கு, ஹரி நிஷாந்த், ஜெகதீசன் இணை, சிறப்பான ஓப்பனிங் கொடுத்தது. 64/1 என்றிருந்த திண்டுக்கல் அணி, அடுத்த 100 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. ரன் எடுக்க முடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்த திண்டுக்கல்லுக்கு, டெத் ஓவர்களில் சேஸிங் கடினமானது. கடைசி ஓவர் வரை போராடிய திண்டுக்கல் டிராகன்ஸ், 5 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.

Periyasamy
Periyasamy
TNPL
பெரியசாமி - 4-27-3

குவாலிஃபையர் 1 போட்டியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக ஃபைனலுக்கு செல்லும் ஒரே அணி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ். போட்டியை இழந்த அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக குவாலிஃபையர் 2 உள்ளது!

மதுரை vs காஞ்சி

நடப்பு சாம்பியன்ஸ் மதுரை பாந்தர்ஸ், ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டரில் காஞ்சி வீரன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ், பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. மதுரை அணியின் பெளலிங்கை சமாளிக்க முடியாத காஞ்சி பேட்ஸ்மேன்கள், வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். ஒன் டவுன் களமிறங்கிய சஞ்சய் யாதவ் மட்டும், அசத்தலான இன்னிங்ஸ் ஆடினார். 20 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது, காஞ்சி வீரன்ஸ் அணி.

Sanjaya Yadav
Sanjaya Yadav
TNPL
காஞ்சி வீரன்ஸ் - சஞ்சய் யாதவ் - 77 (52) - 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்

சேஸிங் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்தது. இரண்டாவது ஓவரிலேயே, ஓப்பனர் சரத்ராஜ் வெளியேற, இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர், அருண் கார்த்திக்கும் கேப்டன் ஶ்ரீஜித் சந்திரனும். காஞ்சி வீரன்ஸ் பெளலர்களால் விக்கெட் எடுக்கவும் முடியவில்லை, ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் பந்திலேயே வைடு வீசினார் பெளலர் சஞ்சய் யாதவ். அடுத்து சிக்ஸ், பவுண்டரி என அபிஷேக் தன்வார் விளாச, 20 ஓவர் முடிவில் இலக்கை எட்டியது மதுரை பாந்தர்ஸ்! கடைசி ஓவரில் அந்த வைடு தவிர்க்கப்பட்டிருந்தால், போட்டியின் முடிவு மாறியிருக்கக்கூடும்!

குவாலிஃபையர் 2 - ஆகஸ்டு 13-ம் தேதி

மதுரை பாந்தர்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்

இறுதிப்போட்டிக்கு தகுதிபெற மதுரை, திண்டுக்கல் அணிகள் மேலும் ஒரு போட்டியில் விளையாட வேண்டும். குவாலிஃபையர் 2-ல் வெற்றிபெறும் அணி, ஃபைனலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை எதிர்கொள்ளும்.