Published:Updated:

`எந்த சமரசத்துக்கும் இடமில்லை.. என் வழியிலேயே அனைத்தும்'- முதல் நாளிலேயே சாட்டையை சுழற்றும் கங்குலி!

பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றதை பெருமையாகக் கருதுகிறேன் என கங்குலி பேசியுள்ளார்.

கங்குலி
கங்குலி ( BCCI )

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக சவுரவ் கங்குலி இன்று பதவியேற்றுக்கொண்டார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் வீரர் ஒருவர் பிசிசிஐ தலைவர் பதவியை அலங்கரித்துள்ளார். இதற்கு முன்பாக விஜயநகர மகாராஜா இந்தப் பொறுப்பில் அமர்ந்தார். அவர் ஒரு கிரிக்கெட் வீரர். விஜயநகர மகாராஜாவுக்குப் பின்னர் கொல்கத்தாவின் இளவரசர் என அழைக்கப்படும் கங்குலி இந்தப் பதவிக்கு வந்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் ஷிவ்வால் யாதவ் ஆகியோர் இடைக்காலத் தலைவர்களாக இந்தப் பதவியில் இருந்தனர். ஆனால், அவர்கள் வசம் பெரிய அளவில் அதிகாரம் இல்லை. தேர்தல் மூலம் அதிகாரமிக்க தலைவராக கங்குலி பிசிசிஐ-க்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

Ganguly
Ganguly
bcci

பிசிசிஐ தலைவராகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் கங்குலி செய்தியாளர்களைச் சந்தித்தார். ``விராட் கோலி இந்திய அணியை வேறொரு தளத்துக்கு எடுத்துச்சென்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கோலி முக்கியமான நபராக இருக்கிறார். அவருடைய கருத்துகள் கேட்கப்படும். கோலியுடன் நாளை பேசவுள்ளேன். அவருக்கு என்ன தேவையோ அதற்கான உதவிகள் வழங்கப்படும். டால்மியா பிசிசிஐ தலைவராக இருந்தபோது நாங்கள் கேட்ட உதவிகள் எதுவும் மறுக்கப்பட்டதாக நினைவில் இல்லை.

தோனியின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. தோனியை நினைத்து நாம் பெருமைப்படவேண்டும். இந்தியாவுக்காக பல சாதனைகளைச் செய்துள்ளார். சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற மாட்டார்கள். இந்தப் பதவியில் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். பிசிசிஐ-யில் இது ஒரு புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். இந்தப் பயணம் சவாலானதாக இருக்கும். என் வழியில் அனைத்தையும் செய்வேன்.

Indian Cricket Team
Indian Cricket Team

நான் அணிக்குள் மீண்டும் நுழையமாட்டேன் என உலகமே கூறியது. ஆனால், மீண்டும் திரும்ப வந்து நான்கு ஆண்டுகள் விளையாடினேன். கிரிக்கெட் வாரியம் மீதான நம்பகத்தன்மையில் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டேன், நான் இந்திய அணியை வழிநடத்தியது போல் ஊழலற்ற, அனைவருக்கும் ஒரே மாதிரியான நிர்வாகமாக பிசிசிஐ இருக்கும். இப்போது இருக்கும் இந்திய அணி மிகச்சிறப்பாக உள்ளது. கடந்த 4 வருடங்களாக அவர்களது செயல்பாடுகள் அபாரமாக உள்ளன” என்றார். பதவியேற்ற முதல்நாளில் ஊழல், வீரர்களின் தேவை என அனைத்தையும் குறித்து பேசத் தொடங்கியுள்ளார் கங்குலி. இதனால் அவரின் அடுத்தடுத்த அதிரடிகள் வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.