இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி டப்ளினில் நடந்து முடிந்திருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக 11:20 க்குதான் தொடங்கியது. போட்டி 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பாராத ட்விஸ்ட் இதுதான். மற்றபடி ஆட்டத்தில் எந்த ட்விஸ்ட்டுமே இல்லை. தொடக்கத்திலிருந்து இந்திய அணியே ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் போட்டியையும் வென்றது.

ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டிருந்தார். அவருக்குத் தொடக்கமே வெற்றிகரமாக அமைந்தது. டாஸை வென்றார். மழையைக் காரணம் காட்டி முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். கூடுதலாக இளம் வேகப்புயல் உம்ரான் மாலிக் இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகிறார் என்னும் நற்செய்தியையும் கூறிவிட்டுச் சென்றார்.
அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது. 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை எடுத்திருந்தது. தொடக்கத்தில் 12 ஓவர்கள்தான் என்பதை மறந்துபோய் 20 ஓவர்கள் இருக்கின்றன என்ற நினைப்பிலேயே அயர்லாந்து ஆடியதை போன்று இருந்தது. ஓவர்கள் குறைக்கப்பட்டிருந்ததால் முதல் 4 ஓவர்கள் மட்டும்தான் பவர்ப்ளே. இந்த 4 ஓவர்களில் அயர்லாந்து அணி 22 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்த 4 ஓவர்களில் புவனேஷ்வர் குமார் 2 ஓவர்களையும் ஹர்திக் பாண்டியா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு ஓவரையும் வீசியிருந்தனர். மூவருமே தங்களின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

இன்னிங்ஸின் முதல் ஓவரையே புவனேஷ்வர் குமார் வீசியிருந்தார். மழை பெய்து மந்தமாக இருந்த அந்த சீதோஷண நிலையையும் சூழலையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட புவனேஷ்வர் குமார் இரண்டு ஸ்லிப்களை வைத்து சகட்டுமேனிக்கு ஸ்விங் செய்தார். குட் லெந்த்தில் ஒரு 4 பந்துகளை அவுட் ஸ்விங் செய்துவிட்டு ஒரு பந்தை டாப் ஆஃப் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீச ஸ்டம்பைப் பறிகொடுத்து கேப்டன் பால்ப்ரினி டக் அவுட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரிலேயே பால் ஸ்டெர்லிங் தீபக் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஆவேஷ் கான் டைட்டாக வீசிவிட்டு கொஞ்சம் இடம் கொடுத்து வீசிய ஒரு டெலிவரியை சரியாக கனெக்ட் செய்யாமல் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் டெலனி கேட்ச் ஆனார். 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள். அயர்லாந்து சரிவை நோக்கி செல்வதை போல இருந்தது. இந்தச் சமயத்தில் க்ரீஸூக்குள் வந்த ஹாரி டெக்டர் அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். நிலைமையை மாற்றத் தொடங்கினார். அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக்கின் ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார்.

சர்வதேச போட்டியில் உம்ரான் மாலிக்கின் முதல் ஓவர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 18 ரன்களை அள்ளிக் கொடுத்திருந்தார். உம்ரான் மாலிக்கின் பலமே அவரின் யார்க்கர்களும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகளும்தான். அந்த இரண்டிலுமே நேற்று அடிவாங்கியிருந்தார். யார்க்கரை துல்லியமாக வீச முடியாமல் திணறினார். திட்டத்தை மாற்றி ஷார்ட் பிட்ச் டெலிவரிகளாக வீச முயன்றார். ஆனால், யார் ஷார்ச் பிட்ச்சாக வீசினாலுமே டெக்டரும் டக்கரும் வெளுத்து வாங்கினர்கள் என்பதால் உம்ரான் மாலிக்கும் விதிவிலக்காக அமையவில்லை.
டக்கர் ஒத்துழைக்க டெக்டர் நின்று ஆடி அரைசதத்தைக் கடந்தார். இதனால் அயர்லாந்தும் சவாலான ஸ்கோரை எட்டியது. 12 ஓவர்களில் 108 ரன்களை எடுத்தனர்.
இடையில் சஹால் வீசிய மூன்று ஓவர்களை மேட்ச் வின்னிங் ஸ்பெல் என்றே சொல்லலாம். 3 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து டக்கரின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். அயர்லாந்தின் ரன்ரேட் வேகமாக உயர்ந்த சமயத்தில் இடையில் புகுந்து வேகத்தடையை ஏற்படுத்திவிட்டார்.

இந்தியா அணிக்கு 109 ரன்கள் டார்கெட். இந்த டார்கெட்டை எட்ட இந்திய அணி பெரிதாக சிரமப்படவே இல்லை. 9.2 ஓவர்களிலேயே டார்கெட்டை எட்டி போட்டியை வெற்றிகரமாக முடித்துவிட்டனர். அயர்லாந்தை போல் அல்லாமல் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடியிருந்தனர். இஷன் கிஷனும் தீபக் ஹூடாவும் ஓப்பனர்களாக வந்திருந்தனர். முதல் ஓவரையே இடது கை வேகப்பந்து வீச்சாளரான லிட்டில் வீசியிருந்தார்.

இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் வந்திருந்தன. இஷன் கிஷன் இரண்டு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்து வெளுத்திருந்ததார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய இஷன் கிஷன் 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்து யங்கின் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்த பந்திலேயே சூர்யகுமார் யாதவும் lbw முறையில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள். இந்தச் சமயத்தில் அயர்லாந்து சுதாரித்து இன்னும் இறுக்கிப் பிடித்திருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவும் தீபக் ஹூடாவும் அதற்கு இடம் கொடுக்காமல் தொடர்ந்து அதிரடியாக ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தனர்.
மெக்ப்ரின் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருந்தன. ஹர்திக் 2 சிக்ஸர்களையும் ஹூடா 1 சிக்ஸரையும் அடித்திருந்தார். இந்த ஓவர் இந்தியாவிற்கான சேஸிங்கை எளிமைப்படுத்திக் கொடுத்தது.

கடைசியில் ஹர்திக் அவுட் ஆகியிருந்தாலும் தீபக் ஹூடா நின்று வென்று கொடுத்தார். ஹூடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். இந்திய அணி பந்துவீசும்போதும் ஷார்ட் பிட்ச் டெலிவரிகள் அவ்வளவாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக அடித்து ஆடினர். இதை பார்த்த பிறகும் அயர்லாந்து பௌலர்கள் அதிகமாக ஷார்ட் பிட்ச் டெலிவரிகளையே வீசிக்கொண்டிருந்தது சரியான திட்டமாக அமைந்திருக்கவில்லை.
ஆட்டநாயகன் விருது சஹாலுக்குக் கொடுக்கப்பட்டது. சரியான தேர்வுதான். சஹால் வீசிய அந்த 3 ஓவரில் 7-8 என்ற விகிதத்தில் அவரின் எக்கானமி சென்றிருந்தால் இந்தியாவின் சேஸிங் இன்னும் சவாலாகியிருக்கும். சேஸிங்கில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தேவை என்னும் சூழல் உருவாகியிருக்கும். அதை நடக்கவிடாமல் சேஸிங்கை எளிமைப்படுத்தி கொடுத்ததற்காகத்தான் அந்த ஆட்டநாயகன் விருது!

அடுத்த போட்டியையும் வென்று ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்தியா முதல் தொடரை வெல்லுமா? கமென்ட்ஸ் ப்ளீஸ்!