Published:Updated:

`அந்த இருக்கையில் இப்போ யாரும் உட்காருவதில்லை!'- தோனி சென்டிமென்ட்டால் கலங்கிய சஹால்

சஹால்
சஹால்

`தற்போது பிட்டாக இருக்கும் அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறார். கோலியின் கையில்தான் முடிவு இருக்கிறது'

கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர் தோனி, இந்திய அணியில் இடம்பெறவில்லை. அதன்பின்னர், பல்வேறு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்றும், வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இல்லை. இதனால், தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பிலோ தோனி தரப்பிலோ எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை.

தோனி
தோனி
Twitter

இந்த நிலையில், பிசிசிஐ - வீரர்கள் வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பே ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. எனினும் இதைப்பற்றி சட்டைசெய்யாமல் தோனி ராஞ்சியில் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார். ஐ.பி.எல் தொடர் தொடங்கவுள்ளதை அடுத்து அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ``ஐபிஎல் தொடரில் தோனி விளையாட்டைப் பொறுத்து அவர் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யப்படுவார். அவர் தன்னுடைய ஆட்டத்திறனை வெளிக்காட்ட வேண்டும்" எனக் கூறினார். ஆனால், தோனி நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் பேசியுள்ள அவர், ``ஐபிஎல் போட்டிக்காக தோனி மார்ச் முதல்வாரம் சென்னை வருவார். தோனியைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றால் சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்காமல் சென்றுவிடுவார். தற்போது பிட்டாக இருக்கும் அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்திய அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறார். கோலியின் கையில்தான் முடிவு இருக்கிறது" எனக் கூறினார்.

`அந்த இருக்கையில் இப்போ யாரும் உட்காருவதில்லை!'- தோனி சென்டிமென்ட்டால் கலங்கிய சஹால்

இந்த நிலையில், தோனியை அணி வீரர்கள் மிஸ் செய்வதாக பந்துவீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பங்கேற்பதற்காக ஹேமில்டன் செல்லும்போது பேருந்தில் உள்ள சக வீரர்களிடம் சஹால் பேட்டி எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது, காலியாக இருந்த பேருந்தின் கடைசி வரிசை இருக்கைக்குச் சென்றவர் ஜன்னல் ஓரம் இருக்கையைப் பார்த்துக்கொண்டே பேச ஆரம்பித்தார். ``இந்த ஜன்னல் ஓர இருக்கை எப்போதும் அணியில் உள்ள மிகப்பெரிய லெஜெண்ட்டுக்காக ஒதுக்கப்படும்.

அந்த லெஜெண்ட் வேறுயாருமில்லை தோனிதான். அணி வீரர்கள் செல்லும் எல்லா பேருந்துகளிலும் கடைசி வரிசையில் உள்ள ஜன்னல் ஓர இருக்கை தோனிக்காக ஒதுக்கப்படும். தோனி இல்லாததால் இப்போது அந்த இருக்கையில் எந்த வீரர்களும் உட்காருவதில்லை. அணியில் உள்ள நாங்கள் ஒவ்வொருவரும் தோனியை அதிகமாக மிஸ் செய்கிறோம்" என்று கூறியுள்ளார். பிசிசிஐ தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல கவனம் பெற்றுவருகிறது.

இந்திய அணியில் தோனியின் இடத்தை நீங்கள் எந்த அளவுக்கு மிஸ் பண்றீங்க? கமென்ட் பண்ணுங்க மக்களே.....!

அடுத்த கட்டுரைக்கு