Published:Updated:

அஞ்சும் சோப்ரா - இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னத்தி ஏர்!

அஞ்சும் சோப்ரா
அஞ்சும் சோப்ரா

லாக்டௌனில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்திய பிசிசிஐ பெண்களுக்கான போட்டியை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு எதிராக முதன்முதலாக ஓங்கி ஒலித்தது அஞ்சும் சோப்ராவின் குரல்தான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தடைகளை தகர்த்தெறிந்து கரடு முரடான பாதைகளில் புதிய வழி அமைத்து பயணிப்பதென்பது எப்போதுமே கடினமான காரியம்தான். முன்னத்தி ஏராக ஒருவர் அப்படி புதிய பாதையை உண்டாக்கி பயணப்பட்டுவிட்டால், அது அடுத்து வரும் சந்ததியினருக்கு ஒரு கலங்கரை விளக்காக நின்று பெரும் சாதனைகளை செய்ய உதவிகரமாக இருக்கும்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அடைந்திருக்கும் பரிணாமத்திற்கும் மகளிரணிக்கு கிடைக்கும் கவனக்குவிப்புகளுக்குமான ஆரம்பப்புள்ளி அஞ்சும் சோப்ராவிலிருந்தே தொடங்குகிறது. ஒரு முன்னத்தி ஏராக இருந்து இந்திய மகளிரணிக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுக்க போராடியவர் அஞ்சும் சோப்ரா. இன்று அவருக்கு 44 வது பிறந்தநாள்!

அஞ்சும் சோப்ரா டெல்லியை பூர்விகமாக கொண்டவர். இவரது குடும்பமே விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் கொண்டதாக இருந்தது. அஞ்சும் சோப்ராவின் அப்பா ஒரு கோல்ஃப் பிரியர். சகோதரர் ஒரு கிரிக்கெட் வீரர். இதனால் அஞ்சும் சோப்ராவுக்கும் கிரிக்கெட் மீது இயல்பிலேயே ஆர்வம் உண்டானது.

அஞ்சும் சோப்ரா, கங்குலி, சச்சின் டெண்டுல்கர்
அஞ்சும் சோப்ரா, கங்குலி, சச்சின் டெண்டுல்கர்

அஞ்சும் சோப்ரா கிரிக்கெட்டுக்கு அறிமுகமான காலம் என்பது இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டெல்லாம் உண்டா எனப் புருவம் உயர்த்தி கேட்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்திய ஆண்கள் அணி 1983 இல் உலகக்கோப்பையை வென்ற போது சச்சினுக்கு 10 வயது. கபில்தேவ் ஏற்படுத்திய தாக்கத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கிடைக்க தொடங்கிய ஏகோபித்த வரவேற்பில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை தனது கரியராக முடிவெடுத்ததில் பெரிய ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், அஞ்சும் சோப்ரா 1977 இல் பிறந்தார். அவர் பிறப்பதற்கு ஒரு வருடம் முன்பாக அதாவது 1976-ல்தான் இந்தியாவில் பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே அறிமுகமானது. இந்திய மகளிரணியும் அஞ்சும் சோப்ராவும் சேர்ந்தே வளர்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

டெல்லியில் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் மூலம் கவனம் ஈர்த்த அஞ்சும் சோப்ரா டெல்லி அணிக்காக ஆட தொடங்கினார். அங்கிருந்து 1995 இல் ஒரு நியுசிலாந்து சீரிஸில் இந்திய அணிக்காக அறிமுகமானார் அஞ்சும் சோப்ரா. இந்த சீரிஸில் அவர் பெரிதாக சோபிக்காவிட்டாலும், இந்திய அணி வெற்றிபெற்ற முதல் ஒருநாள் சீரிஸ் இதுவாகவே அமைந்தது. இதன்பிறகு, டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கான வாய்ப்பும் அஞ்சும் சோப்ராவிற்கு கிடைத்தது.

1999 இங்கிலாந்து சீரிஸ் அஞ்சும் சோப்ரா மீது மிகப்பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்தே இந்திய அணி வெளுத்து வாங்கியிருக்கும். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை வென்று டெஸ்ட் தொடரை ட்ரா ஆக்கிவிட்டு வந்தது இந்திய அணி. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் அஞ்சும் சோப்ராதான். மைக்கேல் பெவனின் ரசிகரான அஞ்சும் சோப்ரா அவரை போன்றே ரன்களை ஓடி ஓடி எடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவார். மேலும், அவசரப்படாமல் நின்று பொறுமையாக ஆடும் நிதான குணமும் அஞ்சும் சோப்ராவிடமிருந்தது. இதுதான் பெண்கள் கிரிக்கெட்டுக்கு அப்போது தேவைப்பட்ட குணாதிசயமாக இருந்தது.

அஞ்சும் சோப்ரா
அஞ்சும் சோப்ரா
NAPARAZZI, CC BY-SA 2.0 via Wikimedia Commons

50 ஓவர்களை முழுவதுமாக ஆடுவதற்கே தடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணி அஞ்சும் சோப்ராவின் பொறுப்பான ஆட்டத்தால் பெரும்பாலான போட்டிகளில் முழுமையாக 50 ஓவரும் பேட்டிங் ஆடியது. இந்த இங்கிலாந்து சீரிஸிலும் இதே தன்மையோடு சிறப்பாக ஆடியிருப்பார் அஞ்சும் சோப்ரா.

முதல் ஒருநாள் போட்டியில் மற்ற அனைத்து பேட்டர்களும் சொதப்ப அஞ்சும் சோப்ரா மட்டும் 100 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்திருப்பார். அடுத்த போட்டியில் இன்னும் அட்டகாசமாக ஒரு சதம் அடித்து இந்திய அணி தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்திருப்பார். ஒருநாள் போட்டிகளில் இந்திய சார்பாக சதமடித்த முதல் பெண் என்ற சாதனையும் இந்த சதம் மூலம் அவருக்குக் கிடைத்தது. இதன்பிறகு, அஞ்சும் சோப்ரா தொட்டதெல்லாம் சாதனைகள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்திரகாந்த கவுலுக்கு பிறகு கேப்டன்சி அஞ்சும் சோப்ராவை தேடி வந்தது. கேப்டனாகவும் இந்திய அணிக்கு சிறப்பாக செயல்பட தொடங்கினார். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வெல்ல வைத்தார். இந்திய மகளிரணியின் முதல் சீரிஸ் வெற்றி அதுதான். சமீபத்தில் இந்திய அணி இளம் வீரர்களை வைத்தே ஆஸ்திரேலியாவை காலி செய்ததை போன்றே இந்த தொடரிலும் தென் ஆப்பிரிக்காவை காலி செய்தது இந்திய மகளிரணி. இந்தத் தொடருக்கு முன்பாகத்தான் 7 வீரர்கள் புதிதாக அணிக்கு அறிமுகமாகியிருக்கின்றனர். அந்த இளம் வீரர்களை வைத்துக்கொண்டு சிறப்பாக தலைமை தாங்கி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்திருந்தார் அஞ்சும் சோப்ரா.

Anjum Chopra
Anjum Chopra
AP

ரொட்டேஷன் பாலிசிகள் காரணமாக மிதாலி ராஜும் அஞ்சும் சோப்ராவும் மாறிமாறியே கேப்டன்சி செய்து வந்தனர். 2005 உலகக்கோப்பைக்கு மிதாலி ராஜே கேப்டன். ஆனாலும், பல போட்டிகளில் அஞ்சும் சோப்ராதான் அட்டகாசமாக ஆடியிருப்பார். நியுசிலாந்து, இங்கிலாந்து போன்ற முக்கியமான அணிகளுக்கு எதிராக 100 பந்துகளுக்கும் மேல் எதிர்கொண்டு இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்திருப்பார். இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இந்திய மகளிரணிக்கு இப்போது வழங்கப்படும் வசதிகள் எதுவுமே அப்போது கிடையாது. அப்போது இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் என்பது பிசிசிஐ யின் கட்டுப்பாட்டில் இல்லை. மகளிர் கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கு தனி அமைப்பு இருந்து. அது பொருளாதாரரீதியாக ஸ்திரமற்று இருந்ததால் வீரர்களுக்கு பெரிதாக எந்தவித சலுகைகளும் கிடைக்காது. சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளமாக கிடைக்கப் பெற்றிருக்கிறது.

அஞ்சும் சோப்ரா, கில்கிறிஸ்ட்
அஞ்சும் சோப்ரா, கில்கிறிஸ்ட்

அஞ்சும் சோப்ராவே தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டே கிரிக்கெட்டும் ஆட வேண்டிய நிலையிலேயே இருந்தார். இத்தனை சிரமங்களுக்கிடையேதான் இந்திய அணியை பல வரலாற்று வெற்றிகளை பெற வைத்து மகளிருக்கென்று தனி கிரிக்கெட் அணி ஒன்று இருக்கிறது, 'நாங்களும் கிரிக்கெட் ஆடுகிறோம். நாங்களும் சாதனைகள் செய்கிறோம். எங்களையும் கவனியுங்கள்' என்ற குரலை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

இதன்பிறகு, பிசிசிஐயின் கட்டுப்பாட்டுக்குள் மகளிர் கிரிக்கெட்டும் வருகிறது. மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத், ஸ்மிர்த்தி மந்தனா என அடுத்தடுத்த ஸ்டார்கள் உருவாகி, இன்றைக்கு மகளிர் கிரிக்கெட்டை அனைவரையும் கவனிக்கும்படி செய்துவிட்டனர். ஆனால், இதற்கான விதை அஞ்சும் சோப்ரா விதைத்தது.

அஞ்சு ஜெயின் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது அவருடன் ஏற்பட்ட மோதலில் 2012 ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்தே ஓய்வு பெற்றார் அஞ்சும் சோப்ரா. அதன்பிறகு, கிரிக்கெட் கமென்ட்ரியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். கமெண்ட்ரி பாக்ஸில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களுக்கிடையேவே பல ஈகோ யுத்தங்கள் இருப்பது பல நேரங்களில் நேரடியாக வெளிப்பட்டிருக்கும் நிலையில், ஒரு பெண்ணாக கமென்ட்ரி பாக்ஸில் அந்த ஆண்கள் அத்தனை பேருக்கும் சவாலளிக்கும் வகையில் தெளிவான தனது கிரிக்கெட் அறிவை கமென்ட்ரியில் வெளிப்படுத்தி வருகிறார்.

அஞ்சும் சோப்ரா கமென்ட்ரி
அஞ்சும் சோப்ரா கமென்ட்ரி

ஆண்-பெண் பாரபட்சம் பார்க்கப்படுவது பற்றி அஞ்சும் சோப்ரா எப்போதும் பேசத் தயங்கியதே இல்லை. கமென்ட்ரி பேசுவதற்கு ஆண்களுக்கு ஒருவிதமான சம்பள ஒப்பந்தமும் பெண்களுக்கு ஒருவிதமான சம்பள ஒப்பந்தமும் இருப்பதை பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். லாக்டௌனில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்திய பிசிசிஐ பெண்களுக்கான போட்டியை கண்டுகொள்ளாமல் இருந்ததற்கு எதிராக முதன்முதலாக ஓங்கி ஒலித்தது அஞ்சும் சோப்ராவின் குரல்தான்.

முன்னத்தி ஏராக மகளிரணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் இன்றைக்கும் மகளிரணிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். அந்தக் குரல் இன்னும் வலுவடைய அஞ்சும் சோப்ராவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொள்வோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு