Published:Updated:

வீரம், வேகம், விவேகம்… ட்ரென்ட் போல்ட் எனும் பெளலிங் சூப்பர் ஸ்டார்!

வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே முறைத்துக் கொண்டும் எதிரணி வீரர்களிடம் முட்டிக் கொண்டும் தான் இருப்பர் என்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் போல்ட். அவரின் பிறந்தநாள் இன்று!

2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி... இங்கிலாந்து பிட்ச்சில் விராட் கோலியின் முன்னங்கால் ஆஃப் ஸடம்ப்புக்கு வெளியே இருந்தது. எத்தனை அவுட் ஸ்விங்கர்கள் வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற மனநிலையில் அன்று இருந்தார் கோலி. அதற்கு முந்தைய ஆண்டுதான் இதே இங்கிலாந்து மைதானங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கர்களை சிறப்பாக சமாளித்து தன் பேட்டிங்கில் வலு ஏற்றியிருந்தார்.

கோலியின் கான்ஃபிடன்ஸை உணர்ந்தாலும் விராட்டின் வீக்னெஸாக கருதப்பட்ட ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்து வீச ஆரம்பித்தார் நியூசிலாந்து வீரர் ஒருவர். முதல் பந்து எட்ஜ் ஆகாமல் தப்பித்தது. அடுத்த பந்தும் அவுட்சைட் ஆஃப். அதற்கு அடுத்த பந்து எந்த ஸ்விங்கும் ஆகாமல் நேராக மிடில் ஸ்டம்புக்கு. அதை கச்சிதமாக ஃப்ளிக் ஷாட் அடிக்க எப்படியோ கப்ஷில் பந்தை தடுத்து விட்டார். அடுத்த பந்தை வீசத் தயாராகிறார் பந்து வீச்சாளர். வீசிய மூன்று பந்துகளில் இரண்டு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. அந்த இரண்டில் தான் விராட் தடுமாறினார். ஸ்டம்புக்கு நேராக வந்த பந்தில் அற்புதமான ஷாட் ஆடப் பார்த்தார்.

போல்ட் - கோலி
போல்ட் - கோலி

அடுத்த பந்து மீண்டும் வெளியேதான் போடுவார் என்று நினைத்து காத்திருந்தார் கோலி. ஆனால் வந்த பந்து லெக் ஸ்டம்ப் திசையில் இருந்து நேராக மிடில் ஸ்டம்புக்கு வந்தது. காலை சற்று அகலமாக ஸ்டம்புக்கு வெளியே வைத்திருந்த விராட் கோலியால் சரியான நேரத்தில் பேட்டை உள்ளே கொண்டு வர முடியாததால் பரிதாபமாக தனது விக்கெட்டை இழந்தார். மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பது போல மொத்த டாப் ஆர்டரும் சரிய இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு சென்றது. மொத்த இந்தியாவின் கனவுகளையும் தகர்க்க அந்த பந்து வீச்சாளருக்கு தேவைப்பட்டது ஒரே ஒரு change of plan மட்டும்தான்.

பலருக்கு தெரியும் அந்தப் பந்தை வீசிய வீரர் ட்ரென்ட் போல்ட் என்று. ட்ரென்ட் அலெக்சாண்டர் போல்ட்... டெஸ்ட் போட்டியோ ஒரு நாள் போட்டியோ… நியூசிலாந்து அணி பந்து வீசப்போகிறது என்றாலே எந்த கேப்டன் ஆக இருந்தாலும் பந்தை இவர் கைகளில் தான் கொடுப்பார்கள். காரணம் போல்ட்டிடம் இருப்பது வேகம் மட்டுமல்ல விவேகமும் கூட. எந்தப் பந்து எந்த திசையில் இருந்து வந்து எந்த திசைக்குச் செல்லும் என்பதை கணிப்பதே பேட்ஸ்மேன்களின் முதல் வேலையாக இருக்கும். அதன் பின்புதான் எந்த ஷாட் அடிப்பது என்ற கேள்வியே பிறக்கும். போல்ட் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சிறிதும் நேரம் கொடுக்க மாட்டார் யோசிக்க. வில்லில் இருந்து பிரியும் அம்பு போல அவரது கரங்களில் இருந்து பந்து பிரியும். அது அவுட் ஸ்விங்கரா இல்லை இன் ஸ்விங்கரா என்று ஒரு பேட்ஸ்மேன் நொடிப்பொழுதில் முடிவு எடுக்க வேண்டும்.

ட்ரென்ட் போல்ட்
ட்ரென்ட் போல்ட்
Andrew Cornaga

ஒரு நொடி எக்ஸ்ட்ராவாக எடுத்தால் கூட அடுத்த நொடி பெவிலியன் நோக்கி நடக்க வேண்டியது தான். மனிதன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்று ஒரு கூற்று உண்டு. தனது பந்தில் தவறான ஷாட்டை செலக்ட் செய்பவர்களை போல்ட் அப்போதே கொன்று விடுவார். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2020-ம் ஆண்டு நடந்த IPL இறுதிப்போட்டி. தனது முதல் பந்திலேயே ஸ்டாய்னிசை அவுட் ஆக்கி ஆட்டத்தை அப்படியே மும்பை இந்தியன்ஸ் அணியின் கைகளில் கொடுத்து விட்டார் போல்ட்.

இத்தனை ஆண்டு கால நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த நியூசிலாந்து அணி என்று பதினொரு வீரர்களை எடுத்தால் அதில் டெஸ்ட், ஒருநாள் என்று இரண்டு அணிகளிலும் இடம் பிடித்து விடுவார். வேகமும் விவேகமும் இணைந்தால் எந்த பேட்ஸ்மேனும் தோற்றுப் போவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இந்திய அணிக்கு எதிராக 2020-ல் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு, விராட் போன்ற வீரர்களை அவுட் ஆக்குவதற்குதான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன் என்று சொன்னார். சொன்னது போலவே விராட் கோலியை அந்தத் தொடரில் அவுட் ஆக்கியும் காட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிமு, கிபி போல நியூசிலாந்து நாட்டின் கிரிக்கெட் வரலாற்றை போல்ட்டுக்கு முன் போல்ட்டுக்கு பின் என்று பிரிக்கும் அளவுக்கு போல்ட்டின் வருகை நியூசிலாந்து அணியை மாற்றியுள்ளது. டிம் சவுத்தி உடன் இணைந்து இவர் நடத்திய விக்கெட் வேட்டையில் நியூசிலாந்து அணிக்கு வெற்றிகள் குவிந்த வண்ணம் உள்ளது. போல்ட்டும் சவுத்தியும் இணைந்து ஆடிய டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் நியூசிலாந்து அணி 56% வெற்றி பெற்றுள்ளது. போல்ட்டின் முதல் டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்திக் காட்டியது.

போல்ட்டின் பந்து வீச்சு விதமே பல முறை அவருக்கு பிரச்னையானாலும் அதை எல்லாம் களைத்து தன்னை மெருகேற்றி ஒவ்வொரு முறையும் தன்னால் இன்னும் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பதை நிரூபித்து வருகிறார் போல்ட்.
New Zealand's Trent Boult, without cap, celebrates with teammates after dismissing India's Ravindra Jadeja during the Cricket World Cup semifinal match.
New Zealand's Trent Boult, without cap, celebrates with teammates after dismissing India's Ravindra Jadeja during the Cricket World Cup semifinal match.
AP

முதன் முதலில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு எதிராக 22 வயதில் டெஸ்ட் ஆட வரும் போது ஆஸ்திரேலிய கீப்பர் பிராட் ஹாடின் இவரை நோக்கி, "சிறு வயதில் இங்கு வந்து விளையாடுகிறாயே... இது உன் அம்மாவுக்கு தெரியுமா? நீ தொலைந்து விட்டாய் என்று நினைக்கப் போகிறார்கள்" என்று நக்கலாக கூறியுள்ளார். ஆனால் அதே போல்ட் தான் 2019 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

எப்போது கிரிக்கெட்டுக்கான நேரம் எப்போது குடும்பத்துக்கான நேரம் என்பதில் போல்ட் மிகவும் கவனம் செலுத்தி ‘வாழாய் என் வாழ்வை வாழவே’ என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருபவர். தனது நாட்டில் பயிற்சி மேற்கொள்ளும் போது கூட தனது வளர்ப்பு நாயை அருகில் கட்டி வைத்து அதன் பக்கத்திலேயே பந்து வீசி பழகுபவர் போல்ட். கிரிக்கெட் இப்போது முக்கியம்.. ஆனால் குடும்பம் எப்போதுமே முக்கியம் என்பது தான் போல்ட்டின் பாலிசி. குடும்பத்திற்காக கிரிக்கெட்டையோ கிரிக்கெட்டுக்காக குடும்பத்தையோ இழக்காமல் கோடு போட்டு வாழும் ஒரு உன்னத வாழ்க்கைக்கு சொந்தக்காரர் போல்ட்.

TNPL: `மதுர வீரன்' அமித்தின் அதிரடி... பௌலிங்கிலும் அசத்திய திருச்சியின் முதல் மிரட்டல் வெற்றி!

வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே முறைத்துக் கொண்டும் எதிரணி வீரர்களிடம் முட்டிக் கொண்டும் தான் இருப்பர் என்ற கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர் போல்ட். வேகமும் ஸ்விங்கும் வெறித்தனமாக இருக்கும் அவரிடம் எந்தக் காலத்திலும் எதிரணி வீரர் மீது வெறி இருந்தது கிடையாது. எவ்வளவு பெரிய விக்கெட் எடுத்தாலும் சிறிதளவு புன்னகை மட்டுமே அதிகபட்சமாக வெளிப்படும். "ஒரு பேட்ஸ்மேனை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதை செய்து முடித்தால் நான் சிரிக்கத்தான் செய்வேன். வேறு ஒன்றும் என்னிடம் இருந்து வராது. நடு கிரவுண்டில் அத்தனை ஆயிரம் மக்களுக்கு முன் நின்று கொண்டு சைக்கோ போல சத்தமிட வேண்டிய அவசியமில்லை" என்று புன்னகையுடன் சொன்னார் போல்ட்.

ஜேமிசன், சவுதி, போல்ட், வாக்னர்
ஜேமிசன், சவுதி, போல்ட், வாக்னர்

முரட்டுத்தனமான மீசைகளும் மூர்க்கத்தனமான முகங்களும் பயம் காட்டிக் கொண்டிருந்த வேகப்பந்து வீச்சில் புன்னகை பூத்த முகத்துடன் கிட்டார் மீட்டும் கலைஞன் ஒருவன் ICC ஒரு நாள் போட்டிகளின் பந்து வீச்சுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதே எட்டாவது அதிசயம் தான். எப்படி எப்போதும் பொறுமை என்ற கேள்விக்கு "நான் இன்னமும் இதை சாதாரண விளையாட்டாக தான் பார்க்கிறேன். 12 வயதில் ஒரு குப்பைத் தொட்டியை ஸ்டம்ப்பாக வைத்து எப்படி என் அண்ணனுக்கு பந்து வீசினேனோ அதே விளையாட்டாக தான் பார்க்கிறேன். பெரிய அளவு ஆட்டங்களில் பந்து வீசுவதால் இது ஒன்றும் மாறப் போவதில்லை. நன்கு பந்து போடுகிறேன் என்றால் சிரித்துக் கொண்டு தான் இருப்பேன். ஆக்ரோஷத்திற்கு எல்லாம் அவசியமில்லை" என்று முற்றும் துறந்த முனிவர் போல பதில் சொன்னார் போல்ட்.

சிரிச்சிக்கிட்டே இன்னும் பல சீரியஸான சம்பவங்களைச் செய்யப்போகும் போல்ட்டுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு