Published:Updated:

மிஸ்பா உல் ஹக்: பாகிஸ்தானின் மீட்பர்... சவால்களை எதிர்கொண்டு சரித்திரம் படைத்தவர்!

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக் ( icc-cricket.com )

சாதிக்க வேண்டுமென்ற துடிப்பிருப்பவனுக்கு, வெற்றிக்கு வயதில்லை, வரம்புமில்லை என்பதை, ஓய்வறிக்க வேண்டிய நேரத்தில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, வாழாத வாழ்வின் இன்னொரு அத்தியாயத்தை வரைந்தவர்தான் மிஸ்பா உல் ஹக்.

இந்திய கிரிக்கெட் பக்கங்களில், சூதாட்டப் புகார் என்னும் கலங்கத்தை ஏற்படுத்திய கறையை கங்குலி மாற்றி, அணியை மீட்டெடுத்தது, இங்கே பிரசித்தமான கதைதான். அதைப்போலவே, பாகிஸ்தான் அணியையும் சூதாட்டப் புகாரில் இருந்து மீட்டெடுத்து, வெற்றிப்பாதைக்குத் திருப்பி, உலகின் 'நம்பர் 1' டெஸ்ட் அணியாக ஆக்கிக்காட்டினார், ஒருவர். பேட்ஸ்மேன் கம் கேப்டனாக, அவமானத்தில் கருகிக்கிடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பலம்பொருந்திய பருந்தாக உயரே பறக்கவைத்தவர், மிஸ்பா உல் ஹக்.

பேட்ஸ்மேன்களையும், பௌலர்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாய் பாகிஸ்தான் உருவெடுத்தாலும், இம்ரான் கானுக்குப் பிறகு, ஒரு நிலையான கேப்டன்கூட அங்கே தலைமையேற்கவில்லை, அவர்களது கிரிக்கெட் போர்டு அதற்கு இடமளிக்கவுமில்லை. வருடத்திற்கு ஒரு கேப்டன் என பந்தாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில், விளையாடும் பதினோரு வீரர்களில், பாதி வீரர்கள், முன்னாள் கேப்டன்களாக இருக்குமளவுக்கு, கேப்டன் பதவிக்கு மியூசிக்கல் சேர் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு வீரரைக் கேப்டன் ஆக்குவது, கேப்டன் பதவியில் இருந்து அவரைக் கழட்டிவிடுவது, மீண்டும் சில ஆண்டுகள் அவரைக் கேப்டன் ஆக்குவது என குழப்பங்களின் பிறப்பிடமாக இருந்தார்கள். இப்படிப்பட்ட ஓர் அணியில், ஒருவர், ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கேப்டனாக இருந்தார் என்றாலே அது பெரிய சாதனைதானே?!

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்

இவ்வளவுக்கும் 'பார்ன் லீடர்' எனுமாறு, முதலிலிருந்தே கேப்டனாகத் தொடங்கவில்லை அவர்! ஒரு சராசரி வீரராகத்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. தொடக்கத்தில் அணிக்குள் வருவதும் போவதுமாக 'உள்ளே வெளியே' ஆடிக் கொண்டிருந்தார். களமிறங்கும் போதும், அஃப்ரிடி போல அதிரடி அர்னால்டாக இல்லாமல், மத்திய ஓவர்களில் சற்று அதிகநேரத்தையும் பந்துகளையும் மென்று உண்டு ரன்களைச் சேர்த்ததாகத்தான் இருந்தன, அவரது ஆரம்பகால இன்னிங்ஸ்கள். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், நிலைத்தன்மையற்ற அவர்களது பேட்டிங் லைன்அப்தான்‌. இதனாலேயே, கட்டையடி மன்னராக அவர் அடையாளம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தார். விளையாடிய முதல் ஐந்து டெஸ்டுகளில், அரைசதத்தைக்கூட அடிக்காமல், மிகச் சராசரி வீரராகவே அவர் இனங்காட்டப்பட்டார்.

டி20 மற்றும் ஒருநாள் தடத்திலெல்லாம் 'மிஸ்பா எக்ஸ்பிரஸ்' தடுமாற்றமின்றிதான் ஓடிக் கொண்டிருந்தது. ஒருநாள் போட்டிகளில், ஒரு சதத்தைக்கூடத் தொடாமலே, அவரது பேட் ஏமாற்றியிருந்தாலும், 5000 ரன்களை, 43 என்னும் நல்ல சராசரியோடுதான் அவர் கடந்திருந்தார் அதுவும் ஒரே வருடத்தில் அதிக அரைசதம் (15) அடித்தவர் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அதேபோல், டி20-ல் 'நம்பர் 1' என்னும் சிம்மாசனத்தில் ஏறிய முதல் பாகிஸ்தான் வீரராக எல்லாம் அவர் வலம் வந்தார். ஆனால், இது அவருடைய 'கப் ஆஃப் டீ' இல்லை எனச் சொல்லுமளவிற்கு டெஸ்ட் போட்டிகள் மட்டும் அவரைச் சோதித்துப் பார்த்தன. அந்த தண்டவாளத்தில் மட்டும் இந்த எக்ஸ்பிரஸ் சற்றே வேகமின்றி ஓடியது. ஆனால், தடம் புரளவில்லை.

லேட் பிக்அப் எனுமளவு, நிதானமாக வேகமெடுக்கத் தொடங்கியது அவரது பயணம். இடையில் நான்காண்டுகள் ரெட் பால் கிரிக்கெட்டை விட்டு விலகிக்கூட இருந்தார். பின்னர் மீண்டும் திரும்பிவந்தார்.

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்
icc-cricket.com

2007-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகக் கம்பேக் கொடுத்தபோதிலும், இந்தியாவுக்கு எதிரான அடுத்த தொடரிலேயே, அடுத்தடுத்து இரண்டு சதங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது மறுவரவை உரக்க அறிவித்தார். அந்தச் சமயத்தில், 30 வயதின் முற்பகுதியில் இருந்த மிஸ்பா உல் ஹக்கைப் பற்றி, பாகிஸ்தானின் ஸ்டார் பிளேயர்களை உருவாக்கிய இம்ரான் கான், "எங்களது நாட்டில் இன்னும் எத்தனை மிஸ்பா உல் ஹக்கள் இருக்கிறார்களோ, அவர்களை எப்போது கண்டறியப்போகிறோமோ?!" என்று வேதனையோடு, கூறி இருந்தார். ஆம்! ஆஸ்திரேலிய வீரர்களைப் போலவே, 30-களில்தான் மிஸ்பாவின் கிரிக்கெட் வாழ்க்கை உயிர்த்தெழுந்தது, புது உத்வேகத்துடன்.

2010ம் ஆண்டு சூதாட்டப் புகாரால், பல அவமானங்களைச் சந்தித்து கூனிக்குறுகிப் போன பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு, ஒரு புதிய சக்தி தேவைப்பட்டது, அது உலக அரங்கில், அவர்கள் இழந்த கௌரவத்தை மீட்டெடுக்க வேண்டியதாக இருந்தது. அஃப்ரிடி, முகமது யூசுஃப் உள்ளிட்ட வீரர்கள், ஏனைய தேர்வுகளாக இருந்தார்கள்தான். ஆனால், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, மிஸ்பாவை முயன்று பார்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்தது. அந்தச் சமய சமீபகாலங்களில், அவர்கள் எடுத்த அந்தப் புத்திசாலித்தனமான முடிவுதான், பாகிஸ்தானுக்கு வெற்றிக்கான பச்சைக்கொடியை மறுபடி காட்டியது.

மிஸ்பாவை முதலில் கேப்டன் பதவிக்காக அணுகிய போது, அவரிடம் நிறைய தயக்கம் இருந்ததாம். அணியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவே, தடுமாறிக் கொண்டிருந்தவருக்கு, கேப்டன் என்னும் கூடுதல் சுமையும் தலையில் ஏற, இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் கதாநாயகனின் நிலையில்தான் அவர் இருந்தார். எனினும், வாழ்க்கை நமக்கு முன் தூக்கி எறியும், நம் நிலையுயர்த்தும் சவால்கள் எல்லாம் வேகத்தடை என்னும் ரூபத்தில்தானே வந்து சேரும். இதனை அப்படித்தான் எடுத்துக் கொண்டார் மிஸ்பா, கேப்டன்ஷிப் என்னும் டன்கணக்கான பாரத்தைத் தலையில் வாங்கிக் கொண்டு, தைரியமாக கோதாவில் குதித்தார்.

தலைமை பதவி தந்த பொறுப்புணர்வு, மிஸ்பாவுக்குள் மறைந்திருந்த, இன்னொரு மிஸ்பாவை தட்டியெழுப்பி, தரமுயர்த்திபி வெளிக்கொணர, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டனாக விளையாடிய முதல் டெஸ்டிலேயே யூனிஸ் கானுடன் இணைந்து, தங்களது 186 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், போட்டியை டிரா செய்திருந்தார் மிஸ்பா. இந்தக் கூட்டணி, பாகிஸ்தானின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் வெற்றிகரமான ஒன்றாக வலம் வந்தது. 2861 ரன்களை, 77 என்னும் சராசரியோடு இணைந்து எடுத்துள்ளனர்,இவர்கள் இருவரும். இதில், 14 பார்னர்ஷிப்கள், 100+ ரன்களைக் கொண்டது.

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்
2011 உலகக்கோப்பைக்குப் பிறகு, ஷாகித் அஃப்ரிடி பதவி விலக, அனைத்து ஃபார்மட்டிலும், கேப்டன் ஆக்கப்பட்டார் மிஸ்பா. ஒருநாள் போட்டிகளில், 2012-ல் ஆசியக் கோப்பையை வென்றது, அதைத் தொடர்ந்து இந்தியாவில் வைத்து, இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது, 2013-ல், தென் ஆப்பிரிக்காவை அவர்கள் நாட்டிலேயே வைத்து, 2-1 எனத் தோற்கடித்து அங்கே தொடரை வென்ற முதல் ஆசிய டீம் எனப் புகழடைந்தது என, பல சாதனைகளைச் செய்தார் மிஸ்பா.

எல்லாக் கேப்டன்களுக்கும் கிடைக்கும் ஹோம் அட்வான்டேஜ், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு, அவர் அணிக்குத் தலைமை தாங்கிய காலத்தில், எப்போதுமே கிடைத்தது இல்லை. ஶ்ரீலங்கா அணிமேல் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, எந்த அணியும் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட முன்வரவில்லை. அவர்கள் தங்கள் ஹோம் மேட்ச்களை துபாயில்தான் வைத்துதான் ஆடவேண்டி இருந்தது. அதிலும் பாதி போட்டிகளுக்குக் கூட்டமே வராது. இருந்தாலும், மனம் தளராமல் போட்டிகளை எதிர்கொண்ட மிஸ்பா, வீரர்களையும் உற்சாகமூட்டி பங்கேற்கவைத்த நல்ல தலைவன்.

2012-ல், இங்கிலாந்தை 3-0 என வாஷ் அவுட் செய்தது, அதற்கடுத்த ஆண்டு, இலங்கை வைத்த 302 என்னும் இலக்கை சேஸ் செய்து, 1-0 ஆக இருந்த தொடரைச் சமன் செய்தது என, அவர் நிகழ்த்தியவை எல்லாமே, பாகிஸ்தான் வரலாற்றில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவைதான்.

மிஸ்பா மீது வைக்கப்பட்ட பொதுவான குற்றச்சாட்டு ஒன்று, மிகவும் மெதுவாக ஆடுகிறார், ரன்கள் எடுக்க அதிகப் பந்துகளை எடுத்துக் கொள்கிறார், அது அணியின் வெற்றியை பாதிக்கிறது என்பது. அதனால், அவரை ரசிகர்கள் கிண்டல் செய்யும்விதமாக, 'TUK TUK' என்ற பெயரை வைத்தனர். மெதுவாகச் செல்லும் ஆட்டோவைப் போல என்ற மறைமுக அர்த்தத்தோடு.

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்
icc-cricket.com

ஆனால் அது எவ்வளவு பெரிய தவறான விஷயம் என்பதை உணர்த்துவதைப்போல், 2014-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 பந்தில் அரைசதம் அடித்தார். அதே போட்டியில் 56 பந்துகளில் சதமும் அடித்து, ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன்செய்து, உலகச் சாதனை படைத்தார். அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் ஆடத் தெரியும் என்று அறைகூவல் விடுத்தார்.

மிஸ்பா, தான் ஆடிய போட்டிகளிலேயே, பெரிய மைல்கல்லாக நினைவுகூரும் போட்டியை இங்கிலாந்துடன் 2016-ல் ஆடச்சென்றார். லார்ட்ஸில் வைத்து, முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. அணியின் ஸ்கோர், 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என வந்துநிற்க, உள்ளே வந்தவர் இங்கிலாந்தின் ஸ்விங் அட்டாக்கை, சமாளித்து ஆடி, தன்னுடைய 42-வது வயதில் சதமடித்து, அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். அதுவும் சதம் அடித்தவுடன், அவர் ஆரம்பகாலத்தில் பயிற்சி செய்த ஆர்மி கேம்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக சல்யூட் அடித்து, 10 புஷ்அப் செய்தது, ரசிகர்களைப் பரவசப்படுத்திவிட்டது. அடுத்த இரண்டு நாள்களுக்கு, இதுதான் 'டாக் ஆஃப் தி டவுன்' ஆக இருந்தது.
ஜெயவர்த்தனே என்னும் ஜெயங்கொண்டான்: கிளாசிக்கல் கிரிக்கெட் பாஷை பேசிய பேட்ஸ்மேன், தன்னிகரற்ற தலைவன்!

இறுதியாக, 2017-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, தனது இறுதித்தொடராக எதிர்கொண்ட மிஸ்பா, 2-1 என தொடரை வென்று, மேற்கிந்தியத் தீவுகளில் தொடரை வென்ற முதல் பாகிஸ்தான் கேப்டன் என்ற பெரும் பெருமையுடன் ஓய்வுபெற்றார்.

56 டெஸ்ட் போட்டிகளில், கேப்டனாகப் பணியாற்றி, 26-ல் வெற்றி பெற்று, அதிக டெஸ்ட் வெற்றிகள் பெற்ற பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார். ஒருநாள் போட்டிகளில், 87-ல் 45 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தினார். கேப்டனானது, அவருடைய பேட்டிங்கை ஒருபோதும் பாதிக்கவில்லை. எட்டு சதங்களை உள்ளடக்கிய, 4200 டெஸ்ட் ரன்களை கேப்டனான பின்தான் குவித்தார்.

மிஸ்பா உல் ஹக்
மிஸ்பா உல் ஹக்

அவர் ஆடிய காலகட்டத்தில் பாகிஸ்தான் பெரும் வெற்றிகளைக் குவித்ததை என்பதையும்விட, அவர் அணியை எந்தவித சர்ச்சையுமின்றி வழி நடத்திய விதமும், அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து, அவர்களுடன் நட்புப் பாராட்டி அணியை நன்னடத்தை பாதையில் செல்ல வைத்ததும்தான் மிஸ்பா செய்த மிகப்பெரிய சாதனையாகும். ஏன் என்றால், சர்ச்சைகளும், சூதாட்டப் புக்கீஸ்களும் சூழ்ந்திருந்த பாகிஸ்தான் அணியை, ஒரு தாய் அடைகாப்பது போல், அடைகாத்தார் என்று சொன்னால் அது சற்று குறைவான பாராட்டே!

பயிற்சியாளராகவும், தலைமை தேர்வு அதிகாரியாகவும் தற்போது பாகிஸ்தானுக்காக மறுபடியும் இருவேடம் பூண்டிருக்கும் மிஸ்பா, பாகிஸ்தான் கிரிக்கெட்டை புத்துயிர் புகுத்தி, புதுப்பொலிவோடு புனர்ஜென்மம் எடுக்க வைப்பார் என்பதில் ஐயமேதுமில்லை.

பிறந்தநாள் வாழ்த்துகள் மிஸ்பா உல் ஹக்!

அடுத்த கட்டுரைக்கு