லார்ட்ஸில் ஆக்லாந்து ஆதிக்கத்தைத் தொடர நினைத்த நியூஸிலாந்துக்கு, மெல்போர்ன் ரிசல்ட்டை பரிசளித்தது ஆஸ்திரேலியா. கடந்த உலகக் கோப்பையில் ஆக்லாந்தில் நடந்த லீக் போட்டியில் நியூஸிலாந்து வென்றது. ஆனால், மெல்போர்னில் நடந்த ஃபைனலில், முதல் ஓவரிலேயே பிரண்டன் மெக்கல்லமுக்கு செக் வைத்து, நியூஸிலாந்தின் கோப்பை கனவைத் தகர்த்தார் மிட்செல் ஸ்டார்க். அதே ஸ்டார்க் இந்த உலகக் கோப்பையிலும் பிளாக் கேப்ஸை கதிகலங்க வைத்தார். அவருக்குப் பக்கபலமாக இருந்தனர் கவாஜா மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி.

இந்த உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா மோதல், `கிரிக்கெட்டின் மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸில் நடந்தது. ஆஸ்திரேலியா ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது; நியூஸிலாந்துக்கு இன்னமும் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இரு அணிகளும் இந்த வெற்றியைப் பெரிய விஷயமாகப் பார்த்தது. ரைவல்ரி காரணம் இல்லை என்பது கிரிக்கெட்டின் பியூட்டி!
முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா. இந்தத் தொடர் முழுவதும் ஆரோன் ஃபின்ச், டேவிட் வார்னர் இருவருமே நல்ல ஃபார்மில் இருந்தனர். ஆனால், கிரந்தோம் வீசிய இரண்டாவது ஓவரில் ஃபின்ச் கண்டம் தப்பினார். ஃபுல் லென்த்தில் வந்த பந்தை ஃபின்ச் டிரைவ் செய்தார், அதை ஷார்ட் கவரில் இருந்த மார்ட்டின் கப்டில் நழுவவிட்டார். அதே கப்டில், கவாஜாவுக்கு முதல் பந்திலேயே ஒரு சான்ஸ் கொடுத்தார்.

டிரென்ட் போல்ட் பந்தில் எல்பிடபுள்யு முறையில் ஃபின்ச் 8 ரன்களில் அவுட்டானதும் களமிறங்கிய கவாஜாவுக்கு, அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் ஒரு பந்து போட்டார் போல்ட். பந்து பேட்டில் பட்டு எட்ஜானது. முதல் ஸ்லிப்பில் ராஸ் டெய்லர் நின்றிருந்தார். இரண்டாவது ஸ்லிப்பில் இருந்த கப்டில் தனக்கு வலதுபுறம் பாய்ந்து பந்தைப் பிடித்தார். பந்து அவரது கைகளில் சிக்கவில்லை.
நியூஸிலாந்து அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், கவாஜா அப்போது ரன்னே எடுக்கவில்லை. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி 88 ரன்கள் எடுத்தார். ஆனால், அதே கப்டில் இந்த உலகக் கோப்பையின் பெஸ்ட் கேட்ச் ஒன்றையும் பிடித்தார்.
டேவிட் வார்னர் அவுட்டானதும் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்துக்கு, ஒரு ஷார்ட் பால் வீசினார் லாக்கி பெர்குசன். அதை அவர் புல் ஷாட் அடித்தார். முதன்முறை பார்க்கும்போது பந்து பேட்டில் நன்றாக பட்டது போலவும், ஏதோ ஒரு ஃபீல்டர் பாய்வது போலவும், ஆனாலும், பந்து பவுண்டரிக்கு சென்றது போலவும் தெரிந்தது. இருந்தாலும், ஒரு சந்தேகம் இருந்தது. டைவ் அடித்த ஃபீல்டரைக் கடக்காமல் ஃபோகஸ் அந்த ஃபீல்டரிடமே நின்றபோதுதான் அவர் பந்தைத் தடுத்துவிட்டாரோ என்ற டவுட் வந்தது.

நம் சந்தேகம் உண்மைதான். ஆனால், ஃபீல்டர் பந்தைத் தடுக்கவில்லை. கேட்ச் பிடித்துவிட்டார்.
பேட்ஸ்மேனிடமிருந்து 17 மீட்டர் தொலைவில் லெக் கல்லியில் இருந்த கப்டில், பந்து வருவதை முன்கூட்டியே கணித்து, தனக்கு இடதுபுறம் டைவ் அடித்து, ஒற்றைக் கையால் கேட்ச் பிடித்து கீழே விழுந்தார். அட்டகாசமான கேட்ச். ரியாக்ஷன் டைம் 0.6 செகண்ட். என்ன நடந்தது என்பதை ரசிகர்களால் நம்பமுடியவில்லை. பெர்குசனால் நம்பமுடியவில்லை. ஸ்மித்தால் நம்பமுடியவில்லை; ஏன், கப்டிலே நம்பியிருக்க மாட்டார். ஏனெனில், அதற்கு முன் அவர் இரண்டு கேட்சகள் கோட்டை விட்டிருக்கிறார். ஆனால், அவர் நல்ல ஃபீல்டர் என்பதற்கு இந்த கேட்ச் சான்று. அதுமட்டுமல்ல, இந்தப் போட்டிக்கு முன்பு வரை 6 போட்டிகளில் 32 ரன்களைத் தடுத்திருக்கிறார் என்பது மற்றொரு சான்று.

நடந்ததை நம்பமுடியாமல் பெவிலியன் நோக்கி தளர்ந்து நடந்தார் ஸ்டீவ் ஸ்மித்.
ஓபனர்கள் அவுட், ஸ்மித் அவுட், மேக்ஸ்வெல் அவுட், ஸ்டாய்னிஸ் அவுட். `ஆஸ்திரேலியா அவுட்’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனால், கேரி, கவாஜா ஸ்கிரிப்டை மாற்றி எழுதினார்கள். நாங்கள் சாம்பியன்கள், எங்களுக்கு மீண்டு வரத் தெரியும்; இறுதிவரை போராடத் தெரியும் என்பதை உரக்கச் சொன்னார்கள். இதுவரை ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் மீது அதிருப்தி இருந்தது. அப்படியில்லை; ஆஸியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்கிறது என நிரூபித்தார்கள் இருவரும். அதிலும், கேரியின் இன்னிங்ஸ் செம. நெருக்கடியான நேரத்தில் நிதானமாகவும், அதேநேரம் வீரியம் குறையாமலும் ஆடும் அவரது ஆட்டத்தை, ஆஸி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழ்ந்து தள்ளியதோடு, இனி வரும் போட்டிகளில் கேரி மேட்ச் வின்னராக இருப்பார் என கணித்திருக்கிறார்.
கேரியின் இன்னிஸ்ங்ஸ் அருமை. அதேசமயம், 5-வது ஓவரில் இறங்கி கடைசி ஓவர் வரை களத்தில் நின்று, நியூஸிலாந்து பெளலிங் அட்டாக்கை சமாளித்த கவாஜாவின் இன்னிங்ஸ் பாராட்டுக்குரியது. ஓரிருமுறை கண்டம் தப்பினார்தான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அணியை மீட்டார். ஆனால், தன் சதத்தைத் தவறவிட்டுவிட்டார். கடைசி நேரத்தில் கொஞ்சம் வேகமெடுத்திருந்தால், தன் கரியரில், `பெஸ்ட் சதம்’ அடித்திருக்கலாம். அவர் 111 பந்துகளைச் சந்தித்திருந்தபோதும், 44-வது ஓவரின்போது அவருக்கு வில்லியம்சன் 30 யார்டு வட்டத்துக்குள் 5 ஃபீல்டர்களை நிறுத்தியிருந்தார் என்பதே, அவர் ஒரு பின்ச் ஹிட்டர் இல்லை என்பதற்கு சான்று.
போல்ட்டின் வேகத்தை சரியாக கணிக்கத் தவறி, கவாஜா 88 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அந்த இடத்தில் சுதாரித்த போல்ட், ஸ்டார்க்கை அவரது பாணியிலேயே ஒரு யார்க்கரை போட்டு அனுப்பிவைத்தார். ஹாட்ரிக் இஸ் ஆன்… என்று சொல்லி முடிப்பதற்குள் கம்மின்ஸ் காலி. ஆம், உலகக் கோப்பையில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் நியூஸிலாந்து பெளலர் போல்ட்டேதான்!

முதல் இன்னிங்ஸ் முடிந்தபோதே, எதனால் தாங்கள் ஐந்துமுறை உலக சாம்பியன் என்பதை ஆஸ்திரேலியா நிரூபித்துவிட்டது. அதேபோல, எதனால் தங்களால் உலக சாம்பியனாக முடியவில்லை என்பதையும் நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் நிரூபித்துவிட்டது. ஆஸ்திரேலியா இன்னமும் ஐந்தாவது பெளலரை வைத்து முழு கோட்டாவையும் முடிக்க முடியாமல் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. அது அவர்களுக்குப் பிரச்னையில்லை. நியூஸிலாந்து இன்னமும் கேன் வில்லியம்சனை மலையாக நம்பிக்கொண்டிருப்பது பிரச்னை. குறிப்பாக, சேஸிங்கில்.

முதல் போட்டியைத் தவிர்த்து இந்தத் தொடர் முழுவதும் நியூஸிலாந்து ஓப்பனர்கள் 50+ பார்ட்னர்ஷிப் அமைக்க பாடாதபாடுபடுகின்றனர். அதனால்தான், காலின் மன்றோவுக்குப் பதிலாக நிகோல்ஸ் இடம்பிடித்தார். இரண்டு பவுண்டரிகள் அடித்து ஒரு நூல் பிடித்து போய்க்கொண்டிருந்தபோது, தேவையில்லாத ஒரு ஷாட்டால், அதுவும் மோசமான பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நிகோல்ஸ் ஆட்டமிழந்தார். எல்பிடபுள்யு என ஆஸ்திரேலிய வீரர்கள் கத்தியபோது ரிவ்யூ கேட்காமலேயே நடையைக் கட்டினார் கப்டில். இரு ஓப்பனர்களை வீழ்த்தி தனக்குக் கொடுத்த அசைன்மென்ட்டை பக்காவாக நிறைவேற்றினார் பெஹண்டார்ஃப். வழக்கம்போல அணியைத் தூக்கிச் சுமக்கும் பொறுப்பு கேன் வில்லியம்சனுக்கு. இந்தமுறை கூட, சீனியர் ராஸ் டெய்லர் சேர்ந்து கொண்டார்.
இந்த பார்ட்னர்ஷிப் 100+ ரன்கள் சேர்த்துவிட்டால், வெற்றி எளிது என நினைத்தபோது, இந்த ஜோடியைப் பிரிக்க எல்லா அஸ்திரத்தையும் கையில் எடுத்தார் ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச். நேதன் லயன், பெஹண்டாஃர்ப் இருவரும் ஒவ்வொரு எண்டில் இருந்து பந்துவீச, அந்த ஜோடி செட்டாவதற்குள் தானே களமிறங்கினார். அப்போதும் விக்கெட் விழவில்லை என, ஸ்மித்திடம் ஒரு ஓவர் கொடுத்தார். ஸ்மித் மூன்று புல் டாஸ்களுடன் ஓவரை நிறைவுசெய்ய, `இது வேலைக்காகாது’ என மீண்டும் பெஹண்டாஃர்பை கொண்டுவந்தார். மேக்ஸ்வெல்லை இறக்கினார். ஸ்டாய்னிஸிடம் பந்தைக் கொடுத்தார். யாரும் ஆஸிக்கு ஒரு பிரேக்த்ரூ கொடுக்கவில்லை. இதற்கிடையே, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்தார் வில்லியம்சன்.

`வில்லியம்சன் களத்தில் இருக்கும்வரை வெற்றி நமக்கல்ல’ என்பதை உணர்ந்து மீண்டும், ஸ்டார்க்கை கொண்டுவந்தார் ஃபின்ச். அதற்கு பலன்கிடைத்தது. அடிக்கலாமா, வேண்டாமா என தயங்கியபடி வில்லியம்சன் பேட்டை நீட்ட, பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சிக்கியது. வில்லியம்சன் 40 ரன்களில் அவுட். டெய்லர் இருக்கிறார், கிரந்தோம், இருக்கிறார், சான்ட்னர் இருக்கிறார், ஜிம்மி நீஷம் இருக்கிறார். ஆனாலும், வில்லியம்சன் அவுட்டானபோதே கிவிஸ் வெற்றிக்கு முடிவுரை எழுதப்பட்டது. இத்தனைக்கும், நீஷம் – கிரந்தோம் ஜோடி பாகிஸ்தானுக்கு எதிராக அட்டகாசமான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது.
அப்படியொரு பார்ட்னர்ஷிப்பை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அமையாமல் போனது நியூஸிலாந்தின் துரதிர்ஷ்டம். இன்னிங்ஸை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெய்லர், கம்மின்ஸ் பந்தில் அவுட். கிரந்தோம், ஸ்மித் பந்தில் அவுட். லாதமை அட்டகாசமாக கேட்ச் பிடித்து அனுப்பிவைத்தார் ஸ்மித். லயன் பந்தை சரியாக கணிக்கத் தவறினார் நீஷம். டெய்லெண்டர்களை ஒரு கை பார்த்தார் ஸ்டார்க். 43.4 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸி, 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆஸ்திரேலியா 92/5 என இக்கட்டான சூழலில் இருந்தபோது கூட, அதிக டாட் பால்கள் வைக்கவில்லை. கவாஜா, கேரி ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து கொண்டே இருந்தனர். ஆனால், நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்த ரன்களை விட டாட் பால்களின் எண்ணிக்கை அதிகம். ஆம், நியூஸி அடித்தது 157 ரன்கள். சந்தித்த டாட் பால்கள் 172. பின், எப்படி நியிஸிலாந்து ஜெயிக்க முடியும்?!