Published:Updated:

பேட் கம்மின்ஸ் - தன் தேர்வை நிரூபிப்பாரா ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன்!

Pat Cummins

டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்குத் தலைமை தாங்கியுள்ள கடைசி 18 கேப்டன்களில், பேட்ஸ்மேன்கள் , விக்கெட் கீப்பர்கள் கூட உண்டெனினும், பௌலர்கள் இல்லை.

பேட் கம்மின்ஸ் - தன் தேர்வை நிரூபிப்பாரா ஆஸ்திரேலியாவின் புதிய கேப்டன்!

டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்குத் தலைமை தாங்கியுள்ள கடைசி 18 கேப்டன்களில், பேட்ஸ்மேன்கள் , விக்கெட் கீப்பர்கள் கூட உண்டெனினும், பௌலர்கள் இல்லை.

Published:Updated:
Pat Cummins

ஆஸ்திரேலிய பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக அந்நாட்டு மக்களுக்கு மிக முக்கியமானது என்றால், அது ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிதான். அத்தகைய டெஸ்ட் ஃபார்மட்டுக்கு, அதுவும் உலகக் கோப்பையைவிட பெரிய கௌரவமாக அவர்கள் நினைக்கும் ஆஷஸ் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், சில நாள்களாக சர்ச்சைகளோடே சென்று கொண்டிருந்த அந்தப் பதவி, இப்போது பேட் கம்மின்ஸிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 1956-ம் ஆண்டு, வேகப்பந்து வீச்சாளரான ரே லிண்ட்வால் டெஸ்ட் கேப்டன் பதவியை அலங்கரித்திருந்தார். அதுவும்கூட, கேப்டன் இயான் ஜான்சனும், துணைக் கேப்டன் மில்லரும் ஒருசேர காயமடைந்திருந்ததால்! ரிச்சி பெனாட் கேப்டன் பதவி வகித்திருந்தாலும் அவர் சுழற்பந்து வீச்சாளர்தான். 65 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுநேரக் கேப்டனாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கம்மின்ஸின் பெயர் பரிசீலனையில் உள்ளது என்ற செய்திக்கு ஆதரவுக் குரல்களும் எழும்பின, விமர்சனங்களும் வந்தன. ஓரிரு நாட்களுக்கு முன்னதாக, "பிரட் லீயோ, மெக்ரத்தோ, அடுத்த ஓவரைத் தீர்மானிப்பதை, உங்களால், கற்பனை செய்து பார்க்க முடியுமா?!" என கேலியாகக் குறிப்பட்டிருந்தார் ரிக்கி பான்டிங்.

இந்த எதிர்ப்புக் குரல்களுக்கு இன்னொரு காரணமும் உண்டு. மூன்று ஃபார்மட்டிலும், முரட்டுக் குதிரையாய் ஓடிக் கொண்டிருக்கும் அவருக்கு அடிக்கடி காயம் ஏறப்படக்கூடிய வாய்ப்பு உண்டு. அப்படி அவர் காயமடையும் பட்சத்தில் சிலபல மாதங்கள் கூட விளையாட இயலாமல் போகலாம். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கியத் தொடர்கள் வர வரும்போது அப்படியொரு காயம் நேர்ந்தார்ல், யார் அணியை வழிநடத்துவார்கள் என்ற கேள்வியும் எழும். அதனாலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளாரை கேப்டனாக்க வேண்டாம் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஏனெனில், கம்மின்ஸின் டிராக் ரெக்கார்ட் அப்படி!

From Smith to Paine to Cummins
From Smith to Paine to Cummins

கேப்டன்சி அவருக்கு மேலும் பளுவை அதிகரிக்கும் என்பதுவும் மற்றொரு காரணம். டெஸ்ட் கேப்டன்ஷிப் என்பது மிகவும் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியது. 5 நாட்களும் செஷசனுக்கு செஷன் கூட போட்டி மாறிக் கொண்டே இருக்கும். அந்த நிலையில் அவர் ஓவர்களையும் வீச வேண்டும், மற்ற பௌலர்களையும் ரொடேட் செய்ய வேண்டும். எதிரணியின் 20 விக்கெட்டை வீழ்த்தவும் தொடர்ந்து திட்டம் வகுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது அனைத்தையும் கம்மின்ஸ் சமாளிப்பாரா என்பதுதான் முன்னிருக்கும் கேள்வி.

கம்மின்ஸின் வழித்தடத்தைக் கவனிப்பவர்களுக்கு, அவரால், இ(எ)துவும் முடியும் என்பது விளங்கும். வெறும் 18 வயதில், (2011 நவம்பரில்) தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை எடுத்ததிலிருந்து, 2021 நவம்பரில், டெஸ்ட் கேப்டனாக, மகுடம் சூட்டிக் கொண்டிருப்பது வரை, இந்த பத்தாண்டுகளுக்கான அவருடைய கரியர் கிராஃப், ஒரே நேர்க்கோடாக உச்சத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்கவே இல்லை. அதள பாதாளங்களைத் தொட்டுப் பார்த்திருந்தது. காயங்கள் அவரை தொடர்ந்து முடக்கிப் போட்டு, ஐந்து ஆண்டுகள் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டே விலக்கி வைத்திருந்தது. கிரிக்கெட் உலகம் ஏறக்குறைய அவரை ஏறங்கட்டிய பின்தான் அவரது சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்தது.

The Captain & his deputy
The Captain & his deputy

டொமெஸ்டிக் கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, 2017-ல், உள்ளே வந்தவருக்கு, அங்கிருந்து, வீழ்ச்சியே இல்லை; எழுச்சியை மட்டுமே அவருடைய பௌலிங் கொண்டுள்ளது. அவருடைய முதல் டெஸ்ட்டுக்குப் பின், அவரின்றி 64 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா ஆடியிருந்தது. ஆனால், அவர் திரும்பிவந்த பிறகு ஆடியுள்ள, 35 டெஸ்ட்களில், 33 போட்டிகளில் பிரதான பௌலர் அவர்தான்.

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், 70 விக்கெட்டுகளோடு, அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில், ஸ்டூவர்ட் பிராடுடன், முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கம்மின்ஸ்.

இதெல்லாம், விக்கெட்டுளுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்கலாமே ஒழிய, கேப்டனாக வெற்றிக்கு வழிவிடுமா என்பதுதான் ஒருசிலரது கேள்வி. காரணம், டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்குத் தலைமை தாங்கியுள்ள கடைசி 18 கேப்டன்களில், பேட்ஸ்மேன்கள் , விக்கெட் கீப்பர்கள் கூட உண்டெனினும், பௌலர்கள் இல்லை. வால்ஷ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மோர்டசா, ஹோல்டர் என சில முன்னுதாரணங்கள், மற்றைய நாடுகளிலிருந்து, கம்மின்ஸுக்கு இல்லாமல் இல்லை.

கூடவே, துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் இரண்டாண்டுகள் தலைமை பொறுப்பேற்க தடை விதிக்கப்பட்டிருந்ததிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது அனுபவமும், கம்மின்ஸுக்கு உதவும். ஆஷஸ் தொடர்தான் முன்னிருக்கும் முதல் யுத்தகளம். எனினும், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான பயணமும் தொடங்கிவிட்ட நிலையில், அக்கோப்பையின் மீதும் கண்வைத்தே ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. டிம் பெயினும் தற்காலிகமாக அணியிலிருந்து விலகியுள்ளதால், தகுந்த விக்கெட் கீப்பரை அங்கே நிரப்புவதில் தொடங்கி, பல பணிகளும் கம்மின்ஸ் முன் விரிந்துள்ளது.

அக்னி ஜுவாலையாக, பந்துகளை முன்னோக்கிப் பாயச் செய்யும் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவின் அடையாளமான அதே அக்ரஸிவ் கிரிக்கெட்டை டெஸ்ட் களத்திலும், அரங்கேற்றுவாரா? இரண்டு ஆண்டுகள், துணைக் கேப்டனாக இருந்த அனுபவம், அவருக்குக் கை கொடுக்குமா? பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்