Published:Updated:

அன்று மெக்ராத், இன்று ஹேசில்வுட்! 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு திரும்புமா? இங்கிலாந்து எழுமா?

Josh Hazlewood ( AP )

16 ஆண்டுகளுக்கு முன், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து தோற்றிருந்தது. இரண்டாவது போட்டிக்கு முன் காயம் காரணமாக விலகினார் மெக்ராத். அதன்பின் 2-1 என தொடரை வென்றது இங்கிலாந்து. இப்போது மெக்ராத் இடத்தில் ஹேசில்வுட். அதேபோல், இங்கிலாந்து மீண்டு வருமா?

அன்று மெக்ராத், இன்று ஹேசில்வுட்! 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாறு திரும்புமா? இங்கிலாந்து எழுமா?

16 ஆண்டுகளுக்கு முன், ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து தோற்றிருந்தது. இரண்டாவது போட்டிக்கு முன் காயம் காரணமாக விலகினார் மெக்ராத். அதன்பின் 2-1 என தொடரை வென்றது இங்கிலாந்து. இப்போது மெக்ராத் இடத்தில் ஹேசில்வுட். அதேபோல், இங்கிலாந்து மீண்டு வருமா?

Published:Updated:
Josh Hazlewood ( AP )
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிரிக்கெட் வீரர் ரக்பி ஆடினார். அந்த ரக்பி ஆட்டம் தான் கிரிக்கெட் உலகிற்கு ஒரு உலகத்தரம் வாய்ந்த தொடரைக் கொடுத்தது. ஆஷஸ் வரலாற்றையே தங்களது பெயரில் எழுதி வைத்திருந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த, இங்கிலாந்துக்கு அந்த ரக்பி ஆட்டம் மிகவும் உதவியது. ரக்பி ஆட்டத்திற்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு? பட்டாம்பூச்சி சிறகுகளின் படபடப்பிற்கும் பூகம்பத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று சொல்லப்படும் 'butterfly effect theory' போல இருக்கிறதா? வாருங்கள் 16 ஆண்டுகள் பின்னோக்கி பயணிப்போம்.

அப்போது உலகம் முழுவதும் அஞ்சி நடுங்கும் அணியாக இருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியை எதிர்த்து விளையாடி ஒரு தொடரை வெல்வது உலக அதிசயமாக பார்க்கப்பட்ட காலம் அது. ஹெய்டன், லாங்கர், பான்டிங், வார்னே மெக்ராத் பிரட்லீ என அத்தனை ஜாம்பவான்களும் ஒருசேர ஆடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆஷஸ் தொடர் நெருங்கியது. 1987க்கு பிறகு சுமார் 18 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணிதான் வென்றிருந்தது.

முதல் டெஸ்ட் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க, அதில் ஆஸ்திரேலியா மிகவும் எளிமையாக வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கிளென் மெக்ராத் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து வீரர்கள் அத்தனை பேரையும் நிலைகுலையச் செய்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 190 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக்கியும் அந்த டெஸ்ட்டை இங்கிலாந்து அணியால் வெல்ல முடியவில்லை.

2-வது டெஸ்ட் போட்டி ஆரம்பமாக இருந்த நேரம். டாஸ் போடுவதற்கு மிகக் குறைவான நேரமே இருக்கும்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கிடைத்தது. "மெக்ராத் இந்த ஆட்டத்தில் ஆட மாட்டார்". ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 'ஏன் ஆடமாட்டார், எதற்காக மாட்டார், அவருக்கு என்ன ஆயிற்று' என்று அனைவரின் மனதிற்குள்ளும் பல கேள்விகள். பதில் ஒரு வழியாக வந்தது. ஆனால், அந்தப் பதிலைத்தான் எந்த ஒரு ரசிகரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.

Glenn McGrath
Glenn McGrath

ஆட்டத்திற்கு முன்பு ரக்பி விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரது காலில் காயம் ஏற்பட்டு இந்த ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. மெக்ராத் ஒரு மெஷின் போல. ஒரே லென்த்தை ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் வீசச் சொன்னாலும் அசராமல் வீசும் வீரர். எந்தப் பந்து ஆஃப் ஸ்டம்ப்பைத் தாக்கும் எந்தப் பந்து lbw ஆகும் என்பதை தீர்மானிப்பதற்கு முன்னரே பேட்ஸ்மேனை பெவிலியன் நோக்கி நடக்க வைத்து விடுவார். அப்பேர்ப்பட்ட வீரர் அணியில் இப்போது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை ஆஸ்திரேலிய அணி ரசிகர்களுக்கு வெளியிட்டது.

இந்த அதிர்ச்சி முடிவதற்குள் அடுத்த ஓர் அதிர்ச்சியான சம்பவத்தைச் செய்தார் ரிக்கி பான்டிங். பிர்மிங்ஹம் மைதானத்தில் அதற்கு முன்பு நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் வென்ற அணிகள் 12 முறை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. அதையே ரிக்கி பான்டிங்கும் செய்தார். ஆனால், ஒரு மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லை என்பதை மறந்துவிட்டு, சூழ்நிலைகளை சரியாகக் கணக்கிடாமல் பான்டிங் எடுத்த இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டது. மிகச்சிறந்த வர்ணனையாளரான ஜெஃப்ரி பாய்காட், பாண்டிங்கின் இந்த முடிவைப் பார்த்து "பாண்டிங்கிற்கு இங்கிலாந்தை மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்... அதுதான் இங்கிலாந்துக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளார்" எனக் கூறினார்.

Ashes 2005
Ashes 2005

ஒரு கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து எதிரணி 400 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டாலே அந்த ஆட்டம் கை மீறுகிறது என்று அர்த்தம். இங்கிலாந்து அதேபோல் 407 ரன்களை குவித்தது. ஆச்சர்யம் என்னவென்றால் அவ்வளவு பெரிய ஆஸ்திரேலிய பந்து வீச்சை எதிர்த்து வெறும் 80 ஓவர்களுக்குள் இத்தனை ரன்களை குவித்தது. ஓவருக்கு சராசரியாக 5 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. பீட்டர்சன் 76 பந்துகளில் 71 ரன்களும்,ஃபிளின்டாஃப் 62 பந்துகளில் 68 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மிடில் ஆர்டர் சொதப்ப 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. 99 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து மறுபடியும் ஆட வந்தது. தனது இரண்டாவது இன்னிங்சில் 6 ஓவர்களுக்கு 25 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து இருந்தபோது தனது பிரம்மாஸ்திரமான வார்னேவை பந்துவீச அழைத்தார் பான்டிங். இன்றுவரை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை அவுட்டாக்கிய அந்தப் பந்தை ஷேன் வார்னே இந்த ஆட்டத்தில்தான் வீசினார். மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வந்து கொண்டே இருந்தன. இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் மற்றும் சைமன் ஜோன்ஸ் ஜோடி அதிரடியாக ஆடி 51 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து 182 ரன்களுக்கு ஆல்-அவுட்.

282 ரன்கள் எடுத்தால் வெற்றி. ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியும் அதிரடியாக ஆடி முதல் 12 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. ஆனால் 13-வது ஓவர் முதல் ஆட்டம் மாறத்தொடங்கியது. 2-வது பந்தில் லாங்கரை போல்டாக்கினார் ஃபிளின்டாப். அதே ஓவரில் கடைசி பந்தில் பான்டிங்கையும் அவுட்டாக்கி அதிர்ச்சி கொடுத்தார். ஃபிளின்டாப் அன்று லாட்டரி டிக்கெட் எதாவது வாங்கி இருந்தால் நிச்சயமாக வென்றிருப்பார். அன்று அவர் தொட்டதெல்லாம் தங்கம்தான். 175 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகள் என்ற பரிதாப நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. அந்த மூன்றாம் நாள் ஆட்டத்தில் மட்டும் சுமார் 332 ரன்கள் எடுக்கப்பட்டு, 17 விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தன.

ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற 107 ரன்கள் தேவை. ஆனால் இங்கிலாந்துக்கு 2 விக்கெட்டுகள் போதும். நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பித்தது. ஆஸ்திரேலிய அணி விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது. வார்னேவும் பிரட்லீயும் இணைந்து 9 ஆவது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணிக்கு சற்று பயம் அதிகரித்தது. ஒருவேளை இந்த இலக்கை ஆஸ்திரேலியா எட்டிப்பிடித்தால் அதைவிட மோசமான தோல்வி எதுவும் அவர்களுக்கு இருக்காது. வெற்றிக்கு 62 ரன்கள் தேவை என்று இருந்தபோது பரிதாபமாய் ஹிட்விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார் ஷேன் வார்னே. இருந்தாலும் ஆஸ்திரேலியா விடுவதாக இல்லை பிரெட் லீ மற்றும் காஸ்பரோவிச் இணைந்து போராடினர். வெற்றிக்கு 15 ரன்கள் வேண்டும் என்ற போது மொத்த உலகமும் இந்த ஆட்டத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது. எப்படியாவது வென்றுவிட மாட்டோமா என்று இரண்டு அணிகளும் ஒரேயடியாக வெற்றியை குறிக்கோளாக வைத்திருந்தார்கள்.

Andrew Flintoff consoling Brett Lee
Andrew Flintoff consoling Brett Lee

கடைசியாக அதிர்ஷ்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. ஹார்மிசன் வீசிய பந்தை லெக் சைடில் அடிக்க முயன்ற காஸ்ப்ரோவிச் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மொத்த இங்கிலாந்தும் மைதானத்தை சுற்றி வந்து கொண்டாடியது உடைந்துபோய் பிரட் லீ களத்திலேயே உட்கார்ந்துவிட்டார். அவ்வாறு உட்கார்ந்திருப்பதைப் பார்த்து முதலில் ஹார்மிசன் வந்து அவரை தேற்றினார். பின்பு ஃபிளின்டாப் இணைந்து கொண்டு அவரைத் தேற்ற அந்த செய்கை உலக அரங்கில் அப்போது பெரிதும் போற்றப்பட்டது.

இந்த ஒரு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணியை நம்மாலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் இங்கிலாந்து அணிக்கு அளித்தது. அதை பயன்படுத்தி வெற்றிகரமாக இந்தத் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. தற்போதும் இதேபோல இங்கிலாந்து அணி ஆஷஸ் விளையாடுகிறது. முதல் போட்டியில் மோசமாகத் தோற்றுள்ளது. மெக்ராத்தின் வாரிசாக வர்ணிக்கப்படும் ஹேசல்வுட் காயம் அடைந்துள்ளார். வரலாறு திரும்புமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.