பும்ரா `பூம் பூம்' ஹாட்ரிக்; விஹாரி, இஷாந்த் அசத்தல் பேட்டிங்! - திணறும் வெஸ்ட் இண்டீஸ் #WIvIND

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனைத் தவிர்க்கப் போராடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. ஹனுமா விஹாரி 42 ரன்களுடனும், ரிஷப் பன்ட் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முந்தைய நாள் ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்தது. இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே பன்ட் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்துவந்த ஜடேஜா சிறிதுநேரம் தாக்குப்பிடித்து விளையாடினார். அவர் 69 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு விஹாரியுடன் கைகோத்த இஷாந்த் ஷர்மா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியைப் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹனுமா விஹாரி, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 200 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷாந்த் ஷர்மா, சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது அரைசதத்தை அடித்தார். 69 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அவர் அரைசதமடித்தார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் குவித்தது. இஷாந்த் ஷர்மா, 57 ரன்களுடனும் விஹாரி 111 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் கார்ன்வால் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் மற்றும் மிடில் ஆர்டரை பும்ரா தகர்த்தெறிந்தார். ஸ்கோர் 9ஆக இருக்கும்போது ஜான் கேம்பல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ், 22 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதில், 2 பேர் ரன் கணக்கைத் தொடங்காமலும் 2 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும் வெளியேறினர்.

பும்ரா வீசிய 8வது ஓவரில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதித்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் டேரன் பிராவோவை வெளியேற்றிய பும்ரா, அடுத்தடுத்த பந்துகளில் ப்ரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.
6வது விக்கெட்டுக்குக் கைகோத்த ஹெட்மெயர் - ஹோல்டர் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடி 44 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட்மெயர் முகமது ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவர் 57 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

சிறிதுநேரத்தில் ஹோல்டரும் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி, 78 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க இன்னும் 130 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.