Published:Updated:

காயமடைந்த பும்ரா; ரீப்ளேஸ்மெண்ட் ஷமியா? உலகக்கோப்பையில் டெத் ஓவர்களைக் கவனிக்கப்போகும் பௌலர் யார்?

Bumrah ( Bumrah )

பும்ரா இந்திய அணிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவைப்படுகிறார். ஆனால், பும்ரா அணியில் இல்லை. சரி, பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார்?

Published:Updated:

காயமடைந்த பும்ரா; ரீப்ளேஸ்மெண்ட் ஷமியா? உலகக்கோப்பையில் டெத் ஓவர்களைக் கவனிக்கப்போகும் பௌலர் யார்?

பும்ரா இந்திய அணிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது தேவைப்படுகிறார். ஆனால், பும்ரா அணியில் இல்லை. சரி, பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார்?

Bumrah ( Bumrah )
இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்திய வேகப்பந்து வீச்சு படைக்குப் பெரும்பலமாக இருந்த பும்ரா உலகக்கோப்பையில் இல்லை எனும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. பும்ரா இல்லையேல் அவருடைய இடத்தை நிரப்பப்போகும் ரீப்ளேஸ்மெண்ட் வீரர் எனும் கேள்வியும் குழப்பமும் எழுந்திருக்கின்றன. இதைப்பற்றி இங்கே பார்க்கலாம்...

முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அந்தக் காயத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாததால் பும்ராவை உலகக்கோப்பையில் ஆடவைக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களையும் காயங்களையும் பிரிக்கவே முடியாது. பும்ராவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதிலும் சமீபமாக பும்ரா அதிகமாகவே காயங்களில் சிக்கி வருகிறார். இந்த 2022-ல் இதுவரை இந்திய அணி 29 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறது. ஆனால், இந்திய அணியின் முக்கிய துருப்புச்சீட்டான பும்ரா இந்த 2022-ல் இந்திய அணிக்காக வெறும் 5 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். காயம், ஓய்வு என்றே நிறையக் காலம் கழிந்துவிட்டது. ஓய்வையெல்லாம் முடித்துவிட்டு ஆஸ்திரேலிய தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இனி பும்ராவின் பந்துவீச்சால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள்ளாகவே இந்த விலகல் செய்தி வெளியாகியிருக்கிறது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்குக் கடும் பின்னடைவே! குறிப்பாக, டெத் ஓவர்களில் பும்ரா இல்லாமல் இந்தியப் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதற்கு சமீபத்திய சில போட்டிகளே சாட்சிகளாக இருந்தன.

Bhuvneshwar Kumar
Bhuvneshwar Kumar
புவனேஷ்வர் குமார் மட்டும் டெத் ஓவர்களைச் சரியாக வீசியிருந்தால் ஆசியக்கோப்பையில் அவ்வளவு மோசமான தோல்வியை இந்திய அணி அடைந்திருக்காது. நடந்து வரும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக வீசி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், அது பவர்ப்ளேயில்! அதேபோட்டியில் 19வது ஓவரில் 17 ரன்களை வாரிக்கொடுத்திருந்தார். ஹர்சல் படேல் பேட்டர்களுக்கு நிகராக பந்துவீச்சில் அரைசதத்தையெல்லாம் கடந்து கொண்டிருக்கிறார்.

இப்படி ஓர் இக்கட்டான சூழலில் பும்ரா இந்திய அணிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேவைப்படுகிறார். ஆனால், பும்ரா அணியில் இல்லை. சரி, பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார்? உலகக்கோப்பைக்கான மெயின் ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போதே ரிசர்வ் வீரர்களும் சேர்த்தே அறிவிக்கப்பட்டனர். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், முகமது ஷமி மூவரும்தான் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்கள். பும்ராக்குப் பதில் அப்படியே ஒரு வேகப்பந்து வீச்சாளரை கொண்டு ரீப்ளேஸ் செய்ய இந்திய அணிக்கு ஷமி, தீபக் சஹார் என இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன.

தீபக் சஹார் இப்போது நடந்து கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் ஆடிக்கொண்டிருக்கிறார். முதல் போட்டியில் சிறப்பாகவும் ஆடியிருக்கிறார். ஆனாலும் அவரை பும்ராவுக்கு மாற்றாக அணிக்குள் கொண்டு வருவார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், தீபக் சஹார் ஒரு பவர்ப்ளே பந்துவீச்சாளர். நியூபாலில்தான் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் வீசுவார். டெத் ஓவர் அவருக்கான இடமே கிடையாது. ஏற்கெனவே அணியில் புவனேஷ்வர், அர்ஷ்தீப் போன்றோர் இருக்க மீண்டும் இன்னொரு நியூபால் ஸ்பெசலிஸ்ட்டை அழைத்து வருவார்களா என்பது சந்தேகமே. இந்த இடத்தில்தான் ஷமி முக்கியத்துவம் பெறுகிறார்.

ஷமியால் பவர்ப்ளே, டெத் என எங்கேயும் வீச முடியும். நீண்ட அனுபவமிக்கவர்.
முகமது ஷமி
முகமது ஷமி

ஷமியின் தேர்விலுமே ஒரு நெருடல் இருக்கத்தான் செய்யும். கடந்த 2021 உலகக்கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இந்திய அணியின் ரேடாரிலேயே ஷமி இல்லை. அந்த உலகக்கோப்பைக்குப் பிறகு இப்போது வரைக்கும் ஷமி இந்திய அணிக்காக ஒரு டி20 போட்டியில் கூட ஆடவில்லை. நடந்துகொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க தொடரிலுமே கொரோனா காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு குறையாக இருந்தாலும் இந்திய அணியின் தேவையை பொறுத்து பார்க்கையில் தீபக் சஹாரை விட ஷமியே சரியான வீரராக இருப்பதால் இந்திய அணி அவரை டிக் அடிக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. கடந்த ஐ.பி.எல் இல் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. ஷமி அந்தத் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். அதேபோன்றதொரு பெர்ஃபார்மென்ஸையே இந்திய அணியும் ஷமியிடமிருந்து எதிர்பார்க்கும்.

தீபக் சஹார், ஷமி இருவரையும் அணிக்குள் கொண்டு வராமல் வெளியிலிருந்து வேறு வீரர்களைத் தேர்வு செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் அவுட் ஆப் தி பாக்ஸாக சிராஜ், உமேஷ் யாதவ் போன்றோரையும் அணிக்குள் கொண்டுவரலாம். யாரைத் தேர்ந்தெடுத்தாலும் பும்ரா அளவுக்கு உறுதி இருக்காது. டெத் ஓவர்கள் குறித்த ஒரு மனக்கலக்கத்துடனேதான் இந்திய அணி உலகக்கோப்பைக்குள் நுழையும்.

கடந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்கு காயங்கள் பெரிய பிரச்னையாகவே இருந்தன. ஹர்திக் பாண்டியாவை அரைகுறை ஃபிட்னஸோடு அழைத்துச் சென்று அவர் அரைகுறையாக பந்து வீசி, பேட்டிங் செய்து அந்தத் தொடரே இந்திய அணிக்கு மறக்கக்கூடிய கனவாக மாறிப்போனது. இந்த முறை பும்ரா காயமடைந்திருக்கிறார். அதை இவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக அறிவித்ததே நல்ல விஷயம்தான்.

Jasprit Bumrah
Jasprit Bumrah
பும்ராவின் இல்லாமை இந்திய அணிக்கு எப்படியான பாதிப்புகளை உண்டாக்கும்? பந்துவீச்சை பலப்படுத்த அடுத்தடுத்து இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!