வீசிய ஒவ்வொரு பந்தும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வர பேட்டிங் ஆடியவர்களுடன் இணைந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களும் ஆச்சரியப்பட்டனர். காரணம், அப்படி ஒரு வேகத்தை பார்த்து பல நாள்கள் ஆகியிருந்தன. கடைசியாக லில்லி மற்றும் தாம்சன் கூட்டணியிடம் கண்ட அதே வேகம். யார் இந்தப் பொடியன் என மொத்த கிரிக்கெட் உலகமும் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்க, ஒரு அட்டகாசமான பாஸ்ட் பவுலிங் கரியர் தொடங்க ஆரம்பித்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஉள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிக் கொண்டிருந்த பிரெட் லீயின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஒரு முறை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாகுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் வேகத்தைப் பார்த்து மிரண்டு போன ஸ்டீவ் வாஹ் அவரை அப்படியே ஆஸ்திரேலிய அணிக்கு பார்சல் கட்டி விட்டார். அதிவேகமான துல்லிய யார்க்கர்கள், போர்க்களத்தில் தலைக்கு நேராக வரும் அம்பு போன்ற பவுன்சர்கள் என அதன் பின்பு கலக்கத் தொடங்கினார் லீ. அவரது வேகத்திற்கு அப்போது இருந்த ஒரே போட்டியாளர் சோயப் அக்தர் தான்.

டெனிஸ் லில்லியிடம் பயிற்சி எடுத்த வீரருக்கு வேகம் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். தற்போது யாராவது 150 கிமீ வேகத்தில் ஒரு பந்து வீசினாலே ஆச்சரியமாக நாம் பார்க்கிறோம். ஆனால் அப்போது பிரெட் லீ வீசும் ஒவ்வொரு பந்தும் 150 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். டெனிஸ் லில்லியிடம் இருந்து வேகத்துடன் அர்ப்பணிப்பையும் கற்றுக் கொண்டு களத்திற்கு வந்தவர் இவர். தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய காலத்தில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விரல் உடைந்ததை யாருக்கும் கூறாமல் பந்து வீசியவர் லீ. ஆட்டத்தின் மீதான அதே அர்ப்பணிப்பு ஓய்வு பெறும் சமயத்தில் கூட இந்தியாவுக்கு எதிராக 2011 உலகக்கோப்பை தொடரில் வெளிப்பட்டதை நாம் யாரும் மறந்திருக்க முடியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேற்கிந்தியத் தீவுகளின் ராக்கெட் வேகப்பந்து வீச்சாளர்களின் காலங்கள் எல்லாம் முடிவுக்கு வந்த பிறகு, வேகப்பந்து வீச்சில் சிறு தொய்வு ஏற்பட்டது. அதுவும் மெக்ராத், வாசிம் போன்ற மிதவேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாம் ஜொலிக்க ஆரம்பித்தவுடன் பலர் மிதவேகப்பந்து வீச்சின் பக்கமே செல்லத் தொடங்கினர். அப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார் என்றால் சும்மாவா? ஒவ்வொரு அணியும் தங்களுக்கும் இது போன்ற ஆட்கள் தேவை என தேடத் தொடங்கியது. எதிரணி கண்டு நடுங்கும் வீரராக இருக்க முடிந்தாலும் இந்த பந்துவீச்சு முறையில் ஒரு சிக்கலும் இருக்கிறது. காயங்கள் - ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் அது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடும். மீண்டு வந்தாலும் அதே பழைய வேகத்தில் பந்து வீச முடியாமல் தடுமாற்றங்கள் வரத் துவங்கும். ஆனால் பிரெட் லீ எத்தனை முறை காயத்தால் அவதிப்பட்டாலும், திரும்ப வந்து அதே 150 கிமீ வேகத்தில் வீசுவார். 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்று கபாலியாக களத்தில் நிற்பார்.

காயங்களின் தொல்லை அதிகமானதால் 2010-ம் ஆண்டுடன் டெஸ்ட் போட்டிக்கு டாடா காட்டினார் லீ. ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஓய்வு பெற அந்த அணியின் வேகப்பந்து வீச்சு முழுக்க பிரெட் லீயிடம் வந்தது. ஒரு கட்டத்தில் பிரெட் லீ விக்கெட் வீழ்த்தினால் ஆஸ்திரேலியா வெற்றி... இல்லையேல் தோல்வி என்று ஆகிப்போனது. ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த 78% விக்கெட்டுகள் வெற்றி பெற்ற ஆட்டங்களில் மட்டுமே வந்தது. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி காலத்தில் அவர் ஆடிய 2011 உலகக் கோப்பை தொடரில் கூட, அவர் தான் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்.
ஆக்ரோஷத்திற்கு பெயர் போன ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து வந்தாலும், இவரின் ஆக்ரோஷம் அத்தனையும் பந்து வீசி முடித்த அடுத்த கணமே காணாமல் போய் விடும். நொடிப் பொழுதில் ஆளை வீழ்த்தும் பவுன்சர் வீசிய அதே கை தான் கீழே விழுந்த வீரரை முதலாக சென்று தூக்கி விடும். கையை நீட்டுவது என்றால் கேட்ச் பிடிப்பதற்கு மட்டும் தான். வாயை திறந்து கத்துவது என்றால் அம்பயரிடம் அவுட் கேட்பதற்கு மட்டும் தான் என பந்துவீசும் வில்லியம்சனாக வாழ்ந்தவர் பிரெட் லீ.
டிவில்லியர்ஸ், பிராவோ போன்றோருக்கெல்லாம் முன்னரே இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த வெளிநாட்டு வீரர் இவர். இந்தியாவிற்கு வருவதற்கு ஏதாவது காரணம் இருந்தால் போதும்... முதல் ஆளாக வந்து இறங்கி விடுவார். இங்கு கிடைக்கும் பட்டர் சிக்கன் தான் அவருக்கு பிடித்த உணவு. கிட்டார் வாசிப்பதில் மிகவும் கைதேர்ந்த பிரெட் லீ, ஆஷா போஸ்லேயுடன் இணைந்து ஒரு பாடல் கூட பாடியுள்ளார். 'விக்டரி' என்னும் பாலிவுட் படத்தில் நடித்தும் உள்ளார். இது மட்டும்? தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் காஞ்சி வாரியர்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் உள்ளார் பிரெட் லீ.

பள்ளி குழந்தைகளுடன் உரையாடுவது, ஒரு ஓரமாக அமர்ந்து கிட்டார் வாசிப்பது போன்ற சாந்தமான பிரெட் லீ ஒரு பக்கம். மறுபக்கமோ 150 கிலோ மீட்டர் வேகத்தில் எறிந்து ஆட்களை வீழ்த்துவது. ஆனால் இந்த இரண்டு பக்கங்களும் ஒன்றோடொன்று சமரசம் செய்யாமல் கடைசி வரை பார்த்துக் கொண்டார் பிரெட் லீ.
ஆக்ரோஷ ஆஸ்திரேலியாவில் பிறந்து சாந்தமாக சாதித்த பிரெட் லீக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.