Published:Updated:

500 விக்கெட் எடுத்த பிராவோ... தொடும் தூரத்தில் நரேன்... விரட்டி வரும் ரஷித்கான்! #T20SuperStars

பிராவோ
பிராவோ

ஒட்டுமொத்தமாக 500 விக்கெட் மட்டுமன்றி, CPL கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் பௌலர் என்ற சாதனையையும் இந்த ஆட்டத்திலேயே நிகழ்த்தினார் பிராவோ.

கொரோனா காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் 'புதிய இயல்பு' கிரிக்கெட்டில் பெளலர்களின் கொடிதான் வெற்றிகரமாகப் பறந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரிலும் பௌலர்களே ஆதிக்கம் செலுத்தி பல சாதனைகளைப் படைத்தனர். இந்த சீசனில்தான் பிராட் தனது 500வது விக்கெட்டையும், ஆண்டர்சன் 600வது விக்கெட்டையும் வீழ்த்தினர். விண்டீஸில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கரீபியன் ப்ரீமியர் லீகிலும் பந்துவீச்சில் இதே போன்றதொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ட்ரிபாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும், சிஎஸ்கே சிங்கம் ட்வெய்ன் பிராவோ ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பௌலர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். லூசியா அணியின் ரகீம் கான்வெல்லை வீழ்த்தியதன் மூலம் பிராவோ இந்த மைல்கல்லை எட்டினார். ஒட்டுமொத்தமாக 500 விக்கெட் மட்டுமன்றி, CPL கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் பௌலர் என்ற சாதனையையும் இந்த ஆட்டத்திலேயே நிகழ்த்தினார் பிராவோ.

பிராவோ
பிராவோ

விண்டீஸ் ப்ளேயர்கள் மொத்தமாக டி20 ஸ்பெஷலிஸ்ட்களாக மாறியதில் அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய பங்குண்டு. வீரர்களுக்கு சரியான ஊதியம் மற்றும் ஒத்துழைப்பு வழங்காமல் வீரர்களுடன் மோதல் போக்கைக் கையாண்டது கிரிக்கெட் போர்டு. அந்த நேரத்தில் உலகம் முழுவதும் நடைபெறத் தொடங்கிய டி20 ப்ரீமியர் லீக்களில் சூழ்நிலை காரணமாக முக்கிய கரீபிய வீரர்கள் அனைவரும் முழுவீச்சில் பங்கேற்கத் தொடங்கினர். அந்தச் சமயத்தில் முழுவதுமாக டி20-களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் பிராவோ.

எந்த நாட்டில் டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் முதல் அழைப்பிதழ் பிராவோவுக்குத்தான் செல்லும். ஐ.பி.எல், சி.பி.எல், பி.பி.எல், பி.எஸ்.எல் என எல்லா நாட்டு ப்ரீமியர் லீக் போட்டிகளிலும் ஆடிவிட்டார். 21 வெவ்வேறு அணிகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார் பிராவோ. இத்தனை அணிகளுக்காக விளையாடியிருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் அளித்துள்ள பங்களிப்புதான் டாப் லிஸ்டில் இருக்கிறது. சென்னை அணிக்காக மட்டும் 118 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இரண்டாவதாக ட்ரிபாகோ நைட் ரைடர்ஸுக்காக 100 விக்கெட்டுகள்.

ஒரு பௌலராக மட்டுமன்றி ஆல்ரவுண்டராக பேட் பிடித்து மேட்ச் வின்னிங் இன்னிங்ஸும் ஆட முடியும், அதே வேளையில் ஃபீல்டிங்கிலும் வீரியமாகச் செயல்பட முடியும் என்பதால்தான் பிராவோவுக்கு உலகம் முழுவதும் டிமாண்ட் அதிகம். பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்துவதற்கு டி20-யில் ஸ்லோ பந்துகளை ட்ரெண்ட்டாக்கிவிட்டது பிராவோதான். மற்ற பௌலர்கள் சர்ப்ரைஸ் டெலிவரியாக வைத்திருந்த ஸ்லோயர் ஒன்களை தனது மெயின் ஸ்டாக் டெலிவரியாக எடுத்து புதுதாக யோசித்ததில்தான் பிராவோவின் வெற்றி அடங்கியிருக்கிறது. இதுதான் அவரை ஒரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் மாற்றியது.

தோனி - பிராவோ
தோனி - பிராவோ

இந்த 500 விக்கெட்டுகளில் 283 விக்கெட்டுகளை டெத் ஓவர்களில் மட்டுமே எடுத்துள்ளார் பிராவோ. 2013-16 இந்தக் காலகட்டங்களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தார். 2013 ஐபிஎல் சீசனில் 32 விக்கெட் எடுத்து பர்ப்பிள் கேப், 2015-ல் 26 விக்கெட் எடுத்து பர்ப்பிள் கேப் என விக்கெட் வேட்டை நடத்தியிருக்கிறார். இடையில் 2014-ல் மட்டும் டைவ் அடித்து கேட்ச் பிடிக்கப்போய் தோளில் அடிபட்டு அந்த சீசன் முழுவதும் விளையாடாமல் இருந்திருப்பார். அதேமாதிரி கடந்த CPL சீசனிலும் விரலில் அடிபட்டு முழு சீசனையும் தவறவிட்டார். இந்தக் காயங்கள் இல்லையெனில் இன்னும்கூட விரைவாக இந்த 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டியிருப்பார்.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக பிராவோவின் டெத் ஓவர்கள் அவ்வளவு வீரியமாக இல்லாமல் இருப்பதையும் அதிக ரன்கள் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. இந்த கரீபியன் லீகிலும் அப்படித்தான் இருந்தார், ஆனால் இந்த 500 விக்கெட் எடுத்த மேட்ச்சில் வெறித்தனம் காட்டியிருப்பார். பவர்ப்ளேயில் 2 ஓவர்களை வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் 3 ஓவர்கள் வீசி 7 ரன் மட்டுமே கொடுத்தார். இந்த ஐபிஎல் சீசன் அரபு நாட்டில் நடப்பதால் பிராவோவின் இந்த கம்பேக் சென்னை அணிக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

சுனில் நரேன்
சுனில் நரேன்

பிராவோவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் லிஸ்ட்டில் மலிங்கா, நரேன் இருவரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மலிங்கா மொத்தமாக டி20-க்களில் 389 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நரைன் 383 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மலிங்காவுடன் விளையாடிய அத்தனை ஜாம்பவான்களும் விடைபெற்றுவிட்ட நிலையில் மலிங்கா மட்டும் இன்னும் களத்தில் நின்று அதே அக்யூரசியோடு ஷார்ட்டர் ஃபார்மேட்களில் பந்துவீசிக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். இரண்டு எல்பிடபிள்யு, இரண்டு போல்டு. இதைப் பார்ப்பதற்கு அப்படியே 2007-ல் இருந்த மலிங்காவைப் பார்ப்பதைப்போலவே இருந்தது. இப்போது கொஞ்சம் எக்கனாமிக்கலாக பந்து வீசத் தடுமாறி வந்தாலும் மலிங்காவின் அந்த அக்யூரசி இன்னும் அப்படியே இருக்கிறது. இது வருகிற ஐபிஎல் சீசனில் மும்பைக்கு வெகுவாகப் பயன்படும் (அவர் விளையாடும்பட்சத்தில்).

வால்ஷ், மெக்ராத், அக்ரம்... ஜாம்பவான்களால் முடியாததை ஆண்டர்சன் எப்படி சாதித்தார்? #JamesAnderson600

பிராவோவின் சாதனையை முறியடிக்கவல்ல ஒரு ப்ளேயர் என்றால் அது சுனில் நரேன்தான். ஆராவாரமே இல்லாமல் மொத்த ஆட்டத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொள்ளும் திறன் படைத்தவர் நரேன். இவர் அறிமுகமான புதிதில் மிஸ்ட்ரி பௌலர் என்றுதான் அழைப்பார்கள். இன்னும் அந்த மிஸ்ட்ரியை பேட்ஸ்மேன்களுக்குப் புரிபடாமல் வைத்திருப்பதுதான் நரேனின் வெற்றி. மிஸ்ட்ரியைத் தக்க வைத்துக்கொள்ள களத்திற்கு வெளியே அவர் எவ்வளவு பயிற்சி செய்கிறார் என்பது அவரது ஒவ்வொரு ஆட்டத்திலும் தெரிகிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவதொரு அப்டேஷனோடு வருகிறார். இந்த சீசன் கரீபியன் லீகில் எல்லாம் ஒரே ஆட்டத்தில் இரண்டு மூன்று ஆக்ஷன்களில் பந்துவீசி பேட்ஸ்மேன்களைக் குழப்பியிருப்பார். இப்போது 383 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். நரேன் சீக்கிரமே 500 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும், பிராவோவை வருங்காலத்தில் முந்துவதற்கும் அதிக வாய்ப்பிருக்கிறது.

ரஷீத் கான்
ரஷீத் கான்

இவர்களுக்குப் பின்னாடியே வேகவேகமாக ரஷித்கானும் முன்னேறி வருகிறார். அவரும் இந்த கரீபியன் லீக் சீசனில்தான் 300 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். ரஷித் கானுக்கு 21 வயதுதான் ஆகிறது என்பதால் இவர்களின் எல்லா சாதனைகளையும் ரஷித்கான் முறியடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு