சென்னை சூப்பர் கிங்ஸின் இத்தனை ஆண்டு கால ஆதிக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ள வீரர்களுள் ஒருவர் டுவைன் பிராவோ. எதிர்வரும் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தலா நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணியில் இடம்பெறவில்லை பிராவோ. இது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார் அவர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுவேனா என்பது குறித்து எந்த உத்திரவாதமும் இல்லை. நான் மெகா ஏலத்திற்கு செல்வது உறுதி. அதனால் அடுத்த ஐ.பி.எல் தொடரில் நான் எந்த அணிக்காக வேண்டுமானாலும் விளையாட வாய்ப்பிருக்கிறது.
தோனியும் நானும் ஒரு தாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள் என்று பலமுறை தெரிவித்துள்ளோம். ஏனென்றால் எங்கள் இருவரிடையே அசைக்கமுடியாத பிணைப்பு என்றைக்கும் உண்டு. கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த வீரர்களுள் தோனியும் ஒருவர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. என் தனிப்பட்ட கரியருக்கும் அவர் உதவினார்.

இத்தனை ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணியின் ஆதிக்கத்திற்கு முதல் காரணம் தோனி. ஒற்றை மனிதனாய் மஞ்சள் ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பியுள்ளார் அவர். தோனியின் தலைமையில் இத்தனை ஆண்டு காலம் அந்த அணியில் விளையாடியதற்கு மிகவும் பெருமை கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் டுவைன் பிராவோ.