Published:Updated:

3 ஈஸி வெற்றி, 1 போராட்டம்... அடுத்த கோப்பைக்கு பாய்ஸ் இன் ப்ளூ ரெடி!

Under 19 Indian team
Under 19 Indian team

ஒருவேளை இந்தியா தோற்றுவிடுமோ, அப்படி தோற்றுவிட்டால், டிராவிட் அரும்பாடு பட்டு உருவாக்கிச் சென்ற அண்டர் 19 பிராண்டு வேல்யூ உடைந்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. ரசிகர்களுக்கு நடுக்கடலில் படகு பழுதாகி நிற்பது போன்றதொரு மனநிலை.

அண்டர் 19 உலகக் கோப்பையின் கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, 9-வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது இந்தியா. டிராவிட் பயிற்சியின் கீழ், கடந்த முறை வெற்றிபெற்று அசத்திய இந்திய அணிமீது, மீண்டும் கோப்பையை வென்றுவிடுமா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் நோக்குடன் இந்திய அணி சவுத் ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றது. 16 அணிகள் பங்கேற்ற தொடரில் 3 லீக் போட்டிகள், கால் இறுதி, அரை இறுதி, இறுதிப் போட்டி என்ற அட்டவணை வகுக்கப்பட்டிருந்தது. இந்தியாவுடன் ஸ்ரீலங்கா , நியூஸிலாந்து , ஜப்பான் அணிகள் லீக் போட்டிகளில் மோதின.

லீக் போட்டிகள்

முதல் போட்டியில், இந்தியா ஸ்ரீலங்காவை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்க, அதை அப்படியே கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். இந்தியா 50 ஓவரின் முடிவில் 297 ரன்களைக் குவித்தது. ஜெய்ஸ்வால், கேப்டன் கார்க், கீப்பர் ஜூரல் அரை சதம் அடித்திருந்தனர். பதிலுக்கு ஆடத் தொடங்கிய ஸ்ரீலங்கா, 2-வது விக்கெட்டுக்கு 80 ரன் பார்ட்னர்ஷிப் எடுத்து மிரட்டியபோது, ஜெய்ஸ்வால் லெக் ஸ்பின் போட்டு ரசந்தாவை போல்டாக்க, அதற்கு அடுத்த விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுபோல் சரிந்தது. முடிவில் இலங்கை, 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

இரண்டாவது போட்டியில், புதுமுக அணியான ஜப்பானை எதிர்கொண்ட இந்தியா, அசால்ட்டாக ஊதித் தள்ளியது. முதலில் பேட்டிங் ஆடிய ஜப்பான், 22 ஓவர்கள் தாக்குப் பிடித்து 41 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிஷ்னோய் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது ஜப்பான். அவர், 8 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். 41 ரன்களை சேஸ் செய்த இந்தியா, விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தது .

3-வது போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா, முதலில் பேட்டிங் செய்தது. இலங்கையுடன் ஆடியதுபோல் நியூஸிலாந்துக்கு எதிராகவும் ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். நியூஸிலாந்து எவ்வளவு முயற்சிசெய்தும் விக்கெட் எடுக்க முடியவில்லை. 21ஓவர்கள் முடிந்திருந்தபோது மழை குறுக்கிட, ஆட்டம் தடைபட்டது. மழையின் காரணமாகப் பெரும்பாலான நேரம் வீணாக, இறுதியில் 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது . இந்தியா 23 ஓவர்களில் 115 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுக்க, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைகளின் படி நியூஸிலாந்துக்கு 192 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. நியூஸிலாந்து சேசிங் ஆடியபோது, இந்தியா சுழலில் சீக்கி விக்கெட்டுகளை இழந்துகொண்டே வந்தது பிஷ்னோய் 4 விக்கெட்டுகள், அங்கோல்கர் 3 விக்கெட்டுகள் எடுக்க, நியூஸிலாந்து 147 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

கால் இறுதி

இந்தியா, கால் இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோத இருந்தது. இந்தியா சீனியர்ஸ் அணி 2011 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததுபோல் இப்போதும் தோற்கடிக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆஸ்திரேலியாவோ, இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்தத் தயாரானது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா, பில்டிங்கைத் தேர்வு செய்தது. மற்ற அணிகளுடன் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியதுபோல் ஆஸ்திரேலியாவுடன் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டே வந்தனர். ஜெய்ஸ்வால் மட்டும் ஓரளவு நன்றாக ஆடினார். 62 ரன் எடுத்திருந்தபோது அவரும் அவுட்டாக, இந்தியா சிக்கலில் மாட்டிக்கொண்டதுபோல் தான் தெரிந்தது. அதைத் தொடர்ந்து, மேலும் 2 விக்கெட்டுகள் விழ, 38-வது ஓவரில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து பறிதவித்துக்கொண்டிருந்தது. மேட்ச், ஆஸ்திரேலியாவின் கைகளுக்கு சென்றுவிட்டதுபோன்ற பிம்பம்தான் ஏற்பட்டது.

களத்தில் இருப்பதோ பௌலர்கள். அனைத்து பேட்ஸ்மேன்களும் பெவிலியனுக்கே திரும்பியாகிவிட்டது. ஒருவேளை இந்தியா தோற்றுவிடுமோ, அப்படி தோற்றுவிட்டால், டிராவிட் அரும்பாடு பட்டு உருவாக்கிச் சென்ற அண்டர் 19 பிராண்டு வேல்யூ உடைந்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. ரசிகர்களுக்கு நடுக்கடலில் படகு பழுதாகி நிற்பது போன்றதொரு மனநிலை. யாராவது பழுதைச் சரிசெய்து படகைக் கரைசேர்த்து விடமாட்டார்களா என்ற படபடப்பு இருந்தது.

அதை நிறைவேற்ற, பௌலர்கள் அங்கோல்கர் மற்றும் பிஷ்னோய் களத்தில் இறங்கினார்கள் . இருவரும் run a ball என்று சொல்லப்படும் டெக்னிக்கை செயல்படுத்தினர். ரன்கள் சிறுகச் சிறுக வந்துகொண்டிருந்தது. 200 ரன்களுக்கு மேல் எடுத்து விட்டால், ஆஸ்திரேலியாவிற்கு எப்படியும் கடும் போட்டி தரலாம் என்று ரசிகர்கள் நினைக்க, அங்கோல்கர் அடித்த அரை சதம் காரணமாக 233 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தது.

`அசத்திய ராகுல், கோலி!'- மீண்டும் சூப்பர் ஓவர்; மீண்டும் வெற்றி #NZvIND #NowAtVikatan

கிரிக்கெட் ஒரு உளவியல் விளையாட்டு. 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தவித்த அணி, அதிலிருந்து மீண்டு 233 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எடுத்தபோது, `இன்று நாம் வெற்றி பெற்றுவிடலாம்' என ஏற்படும் தன்னம்பிக்கை மிகவும் உளவியல்பூர்வமானது. மனத்தளவில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடிப்பதற்குத் தயாராகிவிட்ட இந்திய அணி, அதை களத்தில் கனகச்சிதமாகச் செயல்படுத்தியது. `முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஆஸ்திரேலியா முதல் பந்தில் தேவை இல்லாத ரன் அவுட் ஆக, ஆட்டம் அவர்களிடமிருந்து திசைமாறிப் போனது.

ஓப்பனிங் பௌலர் கார்த்திக் தியாகி, இதற்கு முந்தைய போட்டிகளில் ஓரளவு பந்து வீசியிருந்தாலும் முக்கியமான கால் இறுதிப் போட்டியில், முதல் ஓவரில் மேட்சை ஒட்டுமொத்தமாக இந்தியா பக்கம் திருப்பிவிட்டார். 4-வது, 5-வது பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் எடுக்க, ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் உறைந்துபோனது. முதல் ஓவரில், ஆஸ்திரேலியாவின் 3 முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியனுக்குத் திரும்பிவிட்டனர். கார்த்திக் தியாகி, அதற்கு அடுத்த ஓவரில் மற்றுமொரு விக்கெட்டை எடுக்க, இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் பான்னிங் மட்டும் பொறுமையாக ரன்களைச் சேர்த்துக்கொண்டிருக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் கைகொடுத்து ஆடத் தயாராக இல்லை. முடிவில், 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது ஆஸ்திரேலியா.

இந்தியா சார்பில் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டுகள் எடுத்து, மேன் ஆஃப் தி மேட்சை தட்டிச்சென்றார். இந்தியா, அடுத்த 4-ம் தேதி அரை இறுதிப் போட்டி ஆட காத்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் நடக்கும் கால் இறுதியில் வெற்றிபெறும் அணி இந்தியாவை அரை இறுதியில் சந்திக்கும்.

அடுத்த கட்டுரைக்கு