Published:Updated:

சிராஜ், பன்ட், கில், ஜட்டு உள்ளே... கோலி இல்லாத இந்தியாவைக் கரை சேர்ப்பாரா ரஹானே?! #AUSvIND

கோலியில்லா இந்திய அணி, சூரியனில்லா சூரியக் குடும்பமாய், கொஞ்சம் ஒளி இழந்துதான் காணப்படுகிறது. ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இவரிடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாதெனினும், அதற்கான முயற்சியிலேனும் மாற்று வீரர்கள் ஈடுபட வேண்டிய கட்டாயமுள்ளது.

அடிலெய்டில் ஏற்பட்ட காயம் சிறிது சிறிதாய், இந்திய ரசிகர்களுக்கு ஆறத் தொடங்கி இருக்கும் நிலையில், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து இழந்த பெருமையை திரும்பவும் மீட்டெடுக்கும் மனஉறுதியுடன் களமிறங்குகிறது இந்தியா. ஆஸ்திரேலியாவோ வெற்றிக் களிப்பையும் கம்பீரத்தையும் கலந்து தரித்து களமிறங்குகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட்:

கிறிஸ்துமஸ் திருநாளுக்கு அடுத்த ஐந்து நாட்கள், மெல்போர்னில் நடைபெறும், பாரம்பர்யம் மிக்க டெஸ்ட் போட்டி, பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது! ஒவ்வொரு போட்டியையும் வென்றே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன்தான் ஆஸ்திரேலியா களத்திலிறங்கும் என்றாலும், தனிச்சிறப்பு மிக்க இந்தப் போட்டி, அவர்களுடைய உத்வேகத்தை இன்னும் இரட்டிப்பாக்குகிறது. இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் எட்டு முறை, பாக்ஸிங் டே போட்டிகளில் ஆடி, அதில் ஆஸ்திரேலியா ஐந்து முறையும், இந்தியா ஒரு முறையும் வென்றுள்ளன. இருமுறை போட்டி டிராவாகி உள்ளது.

#AUSvIND
#AUSvIND
David Mariuz

கோலியில்லா வெற்றிடம்:

கோலியில்லா இந்திய அணி, சூரியனில்லா சூரியக் குடும்பமாய், கொஞ்சம் ஒளி இழந்துதான் காணப்படுகிறது. ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் இவரிடத்தை யாரும் பூர்த்தி செய்ய முடியாதெனினும், அதற்கான முயற்சியிலேனும் மாற்று வீரர்கள் ஈடுபட வேண்டிய கட்டாயமுள்ளது. கேப்டனை முதலில் தாக்குவதுதானே ஆஸ்திரேலியாவின் தந்திரம்?! அதற்கெல்லாம் ரஹானே ஈடு கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் இந்த மூன்று போட்டிகளும் ரஹானேயின் கேரியரில் மிக முக்கியமான போட்டிகளாக அமையப் போகிறது என்பதால், அவரும் சுலபமாய் எதனையும் விட்டுக் கொடுத்து விட மாட்டார் என்பதே உறுதி.

பிளேயிங் லெவன் சஞ்சலங்கள்:

கடந்த போட்டியில், பிளேயிங் லெவனை முடிவு செய்வதில் பல குழப்பங்கள் நிலவியது ஆஸ்திரேலியாவின் பக்கம்! ஆனால் இம்முறையோ, எந்த விதத் தயக்கமுமின்றி அதே வீரர்களுடன் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. வார்னரும், அப்பாட்டும் அணிக்குத் திரும்பும் சூழலில்லாத நிலையில், ஒரு வரலாற்று வெற்றியை நிகழ்த்திய அணியில் மாற்றம் கொண்டு வர என்ன தேவை இருந்து விடப் போகிறது?! இதையேதான் பயிற்சியாளர் லாங்கரும் கூறி இருந்தார். இந்தியாவின் பக்கமோ, தோல்வியின் காரணமாக, பல கருத்துக்கள், பரிந்துரைகள் என ஆஸ்திரேலியாவின் பக்கமிருந்த குழப்பத்தீ இந்திய முகாமில் பற்றிக் கொண்ட வேளையில், அதை அணைக்கும் விதமாய் இந்த முறையும் தைரியமாக பிளேயிங் லெவனை அறிவித்து உள்ளது இந்தியா.

பன்ட், கில் உள்ளே, சாஹா ப்ரித்வி ஷா வெளியே!

ப்ரித்வி ஷாவைப் பொறுத்த வரை, 'செட்டில் ஆகி விட்டால் நன்றாக ஆடுவார்!', என்ற சமாதானங்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. எனினும் அவரது தவற்றைத் திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் தேவைப்படுவதால், ப்ரித்வி ஷாவுக்குப் பிரியாவிடை கொடுத்து, கில் அணியில் இணைந்துள்ளார். அடுத்ததாய் பன்ட் மற்றும் சாஹா இருவரில் யார் உள்ளே வர வேண்டும் என்ற குழப்பம் நீடித்த போதும், கீப்பிங் திறனை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், பேட்டிங் திறனையும் சேர்த்துப் பார்த்ததால், 'பெய்னின் பேபியின் பேபி சிட்டர்' பண்டுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது! சமிக்குப் பதில் யார் என்ற போட்டியிலும், சைனியைப் பின்னுக்குத் தள்ளி, சிராஜ் தன்னுடைய டெபுட் போட்டிக்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜடேஜாவின் ஆட்டம் ஆரம்பம்:

கோலியும் இல்லாத நிலையில், காயத்திலிருந்து மீண்டு ஜடேஜா இரண்டாவது டெஸ்டில் ஆட இருப்பது, அணிக்கு அசுர பலம் வந்தது போலத்தான் பார்க்கப்படுகிறது! சமியும் இல்லாத நிலையில் இவரது பௌலிங் ஸ்பெல்கள் மற்ற பௌலர்களின் மீது இறக்கி வைக்கப்படும் பாரத்தைக் கொஞ்சம் குறைக்கும். மேலும் போன போட்டியில், கேட்ச்களால் வீழ்ந்தோம் எனச் சொல்லுமளவிற்கு வலுவிழந்து காணப்பட்ட இந்தியன் ஃபீல்டிங்கிற்கு, ஜடேஜாவின் பங்காற்றல் மிகவும் அவசியம்‌. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா வென்ற ஒரே பாக்ஸிங் டே டெஸ்டான 2018-ல் நடைபெற்ற போட்டியில், இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து பும்ரா 7 விக்கெட்டுகளை எடுத்திருக்க, அவருக்கு அடுத்தபடியாக, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார், ஜடேஜா! இவை எல்லாம் சேர்ந்து, அணியில் அவரது அத்தியாவசியத்தை உணர்த்தி உள்ளன.

#AUSvIND
#AUSvIND
twitter.com/BCCI

கே.எல்.ராகுலுக்கு மறுபடியும் ஏமாற்றம்:

பலதரப்பிலும், கே.எல்.ராகுலுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள் என்று வலியுறுத்தப்பட்டது. கே.எல்.ராகுலும் கில்லும்தான் இப்பொழுது அணியின் வெற்றிக்கான சீக்ரெட் சூத்திரங்கள் என முன்னாள் வீரர், ஜாஃபர் கூடக் கூறி இருந்தார். தன்னுடைய திறமையை பலமுறை நிருபித்தும், கில்லுக்கு கிடைத்த வாய்ப்பு, இந்த முறையும் ராகுலுக்குக் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலியாவின் பலவீனம்:

பௌலிங்கில் மிரட்டும் ஆஸ்திரேலியாவுக்கு கூடுதல் பலமாய், டெயில் எண்டர்கள், அணிக்கு அணை கட்டிப் பாதுகாத்தாலும், வார்னர் இல்லாத நிலையில், ஓப்பனிங் உடைசல்கள் அணியின் மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில், பர்ன்ஸ் மற்றும் வேட் இன்னும் தங்கள் முழு திறமையைக் காட்டி விளையாடவில்லை. இவர்கள் இருவரையும் கட்டம் கட்டித் தூக்குவதன் மூலமாய், இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.

பிளேயிங் லெவன்:

#AUSvIND
#AUSvIND
twitter.com/BCCI

கடந்த காலங்களில், பிளேயிங் லெவனை முடிவு செய்வதிலிருந்து சொதப்ப ஆரம்பிக்கும் இந்தியா, இந்த முறை விழித்துக் கொண்டு, வெல்லும் முனைப்போடு வியூகங்களை வகுத்து, அதற்கேற்றாற் போன்ற வீரர்களைக் களமிறக்கியுள்ளது. மயாங்க் அகர்வால், கில், புஜாரா, ரகானே, விகாரி, பன்ட், ஜடேஜா, அஷ்வின், பும்ரா, சிராஜ், உமேஷ் என்பது பிளேயிங் லெவனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோசத்தின் அகராதியில் முதல் பெயராக இருக்க வேண்டிய கோலியின் இடத்திற்கு, அமைதியான அணுகுமுறையில் எதிரிகளின் கோட்டைகளைத் தகர்க்கும் ரஹானே வந்திருப்பது, வித்தியாசமான அனுபவமாக இருக்கப்போகிறது. மைண்ட் கேம் மாயாவிகளான ஆஸ்திரேலியாவை ரஹானே தலைமையிலான இந்தியப் படை தகர்க்குமா இல்லை தவிடுப்பொடியாகி விடுமா என்பது அடுத்தடுத்து வரும் நாள்களில் தெரிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு