Published:Updated:

`டியூக் பந்துகளும் இங்கிலாந்து ஆடுகளங்களும்...!' - பும்ரா பகிர்ந்த சீக்ரெட் #WIvIND

தினேஷ் ராமையா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அந்த அணி வெற்றிபெற 468 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி.

Bumrah
Bumrah ( ANI )

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 416 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது. ஃபாலோ ஆனைத் தவிர்க்க கூடுதலாக 130 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இருந்தது. ஹேமில்டன் 2 ரன்களுடனும் கார்ன்வெல் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Ishant sharma
Ishant sharma
ICC

மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 299 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச்சின் பந்துவீச்சில் மயங்க் அகர்வால், 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய கேமர் ரோச், போட்டியின் 21வது ஓவரில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார். மறுமுனையில் சிறிதுநேரம் தாக்குப்பிடித்த புஜாரா, 27 ரன்களில் வெளியேற, இந்திய அணி 57 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Vihari, Rahane
Vihari, Rahane
ICC

இதையடுத்து 5வது விக்கெட்டுக்குக் கைகோத்த ரஹானே - விஹாரி ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்க்கொண்டது. விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்ட இந்த ஜோடி, ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் குவிக்கத் தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், இந்திய அணி தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி, 54.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே, 64 ரன்களுடனும் விஹாரி, 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேமர் ரோச், 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பும்ரா `பூம் பூம்' ஹாட்ரிக்; விஹாரி, இஷாந்த் அசத்தல் பேட்டிங்! - திணறும் வெஸ்ட் இண்டீஸ் #WIvIND

இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 8 ஓவர்களுக்குள்ளாகவே தொடக்க வீரர்களை இழந்தது. பிராத்வொய்ட் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்துவீச்சிலும் கேம்பல் 16 ரன்களுடன் ஷமி பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது.

Kemar Roach
Kemar Roach
ICC

போட்டிக்குப் பின்னர் பேசிய பும்ரா, இங்கிலாந்து ஆடுகளங்களில் பந்துவீசியது, வெஸ்ட் இண்டீஸில் சிறப்பாகச் செயல்பட உதவியதாகத் தெரிவித்தார். அவர் கூறுகையில், ``இங்கிலாந்தில் நிறையப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அங்குள்ள ஆடுகளங்களில் டியூக் பந்துகளில் விளையாடியது எல்லாவகையிலும் உதவியது. அதனால், அவுட் ஸ்விங், இன் ஸ்விங் உள்பட எதையும் முழு நம்பிக்கையுடன் நீங்கள் முயற்சிக்கலாம். அந்த அனுபவம் எனக்குக் கைகொடுத்தது'' என்றார்.