Published:Updated:

Border - Gavaskar Trophy: இந்தியாவில் ஆஸியும் ஆஸியில் இந்தியாவும் வெற்றிக்கொடி நாட்டிய தருணங்கள்!

BGT ( Twitter )

இந்த 19 ஆண்டுகளில் தொடரை மட்டுமல்ல இங்கே போட்டிகளை வெல்வதுகூட ஆஸ்திரேலியாவிற்குக் கடினமாகியுள்ளது. இதன்பின் இந்தியாவில் நடைபெற்ற 14 டெஸ்ட்களில் ஒன்றை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

Published:Updated:

Border - Gavaskar Trophy: இந்தியாவில் ஆஸியும் ஆஸியில் இந்தியாவும் வெற்றிக்கொடி நாட்டிய தருணங்கள்!

இந்த 19 ஆண்டுகளில் தொடரை மட்டுமல்ல இங்கே போட்டிகளை வெல்வதுகூட ஆஸ்திரேலியாவிற்குக் கடினமாகியுள்ளது. இதன்பின் இந்தியாவில் நடைபெற்ற 14 டெஸ்ட்களில் ஒன்றை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

BGT ( Twitter )
"ரத்தம் தெறிக்காது, பலிகள் கேட்காது" - இருப்பினும் யுத்தத்திற்கு இணையான செறிவோடும், வென்றாக வேண்டுமென்ற வெறியோடும் சிலதொடர்கள் ஆடப்படும். ஆஷஸ் போல பார்டர் - கவாஸ்கர் கோப்பையும் அத்தகையதுதான். கடந்தாண்டுகளில் இத்தொடரில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக நினைவுகூர உள்ளோம். சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவேற்றுவது மனதிற்கு நெருக்கமான விஷயமெனினும், அந்நிய மண்ணை ஆக்ரமிப்பதுதான் உண்மையான, உணர்வுப்பூர்வமான வெற்றி. அவ்வகையில் ஆஸ்திரேலியா, இந்தியா பரஸ்பரம் பதித்த மாபெரும் தடங்களின் மீள்பார்வை இது.

இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்திய தருணம்:

90-களின் பிற்பகுதியிலும் புத்தாயிரத்தின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியா உலக சாம்பியனாக எங்கேயும் எப்போதும் யாரையும் அச்சுறுத்தும் அணியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவின் தொண்டையைத் தைத்த முள்ளாய் ஒன்று மட்டும் உறுத்தி வந்தது. இந்தியாவில் வைத்து பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியது இல்லையென்னும் பெருங்குறையே அது.

35 ஆண்டுகளாக அதனைச் செய்ய முடியவில்லை என்பது இந்தியாவின் அதீத பலத்தை மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் பலவீனத்தையும் படம்போட்டுக் காட்டியது. எனவே எப்படியும் வெல்லவேண்டுமென்ற துடிப்போடு 2004 அக்டோபரில் ஆஸ்திரேலியா இந்தியாவில் கால்பதித்தது. அது அத்தனை சுலபமல்ல என்பதையும் அவர்கள் அறியாமல் இல்லை.

ஒருபுறம் சச்சின், டிராவிட், கங்குலி, லட்சுமணன் என இந்திய பேட்டிங் ஆளுமை மிரள வைத்ததெனில், ஜாகீர், பதானை உள்ளடக்கிய பௌலிங் படையும் எதிர்கொள்ள எளியதல்ல. குறிப்பாக கும்ப்ளே - ஹர்பஜனின் மாயச்சுழல் வலையில் சிக்காமல் தப்பிப்பதே சவாலான ஒன்றுதான். இவற்றுக்கும் மேலாக இந்திய களசூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப ஆடுவதும் மலையேற்றமே. ஆனால் ஆஸ்திரேலியா அத்தொடரில் இத்தனை சவால்களைச் சமாளித்து சாதித்தது.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கான செக்கை கில்லிஸ்பி, மெக்ராத், வார்னே வைக்க, இந்திய பௌலிங்கிற்கு செக்மேட் வைத்தது ஆஸ்திரேலிய பேட்டிங்படை.

ஜஸ்டின் லாங்கர், சைமன் கேடிச் உள்ளிட்டோர் அவ்வப்போது கோலோச்ச டேமியன் மார்ட்டின், டெஸ்டில் அறிமுக வீரராகக் களமிறங்கிய மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரும் தொடர் முழுவதும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தனர். டேமியன் 444 ரன்களையும், கிளார்க் 400 ரன்களையும் இத்தொடரில் அடித்திருந்தனர். இந்தியத் தரப்பிலோ அதிகபட்ச ரன்களை (299) சேவாக்தான் அடித்திருந்தார். வேறு யாருமே சொல்லிக் கொள்ளும்படியாக ஆடவில்லை.
ஆஸ்திரேலியாவின் வேகம் மட்டுமல்ல இரண்டாவது போட்டியில் வார்னேவின் சுழலும் சுருட்டியது. இந்திய பௌலிங்கை ஆஸ்திரேலியா சமாளித்தவிதமும் சபாஷ் போட வைத்தது. கும்ப்ளே - ஹர்பஜன் கூட்டணி 48 விக்கெட்டுகளை சாய்த்ததுதான், இருப்பினும் வேகப்பந்து வீச்சாளர்களால் அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தவே முடியவில்லை.

பெங்களூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 217 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியாவிடம் உளவியல் ரீதியில் நம்பிக்கையை விளைவித்தது. மூன்றாவது போட்டி க்ரீன் டாப் பிச்சில் நடைபெற தனக்கான குழியை அதன்மூலம் ஆழமாக்கியது இந்தியா. 342 ரன்கள் என்னும் பெரிய வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. இந்த இருபோட்டிகளிலுமே குறிப்பாக நாக்பூர் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சராசரிக்கும் கீழாகவே இருந்தது. கில்லிஸ்பி, மெக்ராத் கொத்துக்கொத்தாக விக்கெட் வேட்டையாடினர். பெரிதாக எந்தப்போராட்டமும் இந்தியாவிடமிருந்து வெளிப்படவில்லை. ஏற்கெனவே இரண்டாவது டெஸ்டை இந்தியா வெற்றிக்கு அருகில் சென்று கோட்டை விட்டிருந்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டத்தைக் குலைத்துப்போட்டது மழை. எனவே 1-0 என முன்னிலையில்தான் ஆஸ்திரேலியா இருந்தது. இதனால் மூன்றாவது போட்டியை வென்ற கையோடு தொடரையும் கைப்பற்றியது. நான்காவது போட்டி இந்தியாவிற்கு ஆறுதல் வெற்றி தந்ததெனினும் 2-1 எனத் தொடரை வென்றது ஆஸ்திரேலியா.

இதன்பின் இந்த 19 ஆண்டுகளில் தொடரை மட்டுமல்ல இங்கே போட்டிகளை வெல்வதுகூட ஆஸ்திரேலியாவிற்குக் கடினமாகியுள்ளது. இதன்பின் இந்தியாவில் நடைபெற்ற 14 டெஸ்ட்களில் ஒன்றை மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இதுவே 2004 வெற்றி எத்தனை பெரியதென உணர்த்தும்.
ஷேன் வார்னே
ஷேன் வார்னே
35 ஆண்டுகளாக நிறைவேறாத பெருங்கனவாக இருந்த இந்த வெற்றியைத்தான், ஸ்டீவ் வாக், தங்களது Final Frontier என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலியாவின் வரிசையான பெருமைகளை பூரணத்துவம் பெறவைத்தது இந்தச் சுற்றுப்பயணம்தான்.

ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய தருணம்:

இந்தியாவில் நடக்கும் தொடரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரை ஆஸ்திரேலியாவும் வெல்வதுதான் பார்டர் கவாஸ்கர் தொடரில் பெரும்பாலும் நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. அதனை ஆஸ்திரேலியா ஒருமுறை மாற்றியதென்றால் இந்தியாவோ மூன்றுமுறை மாற்றி எழுதியிருக்கிறது. 2003/04 தொடரை இந்தியா டிரா செய்து திரும்பியதே பெரிதாகப்பேசப்பட, கோலி யுகம் முன்காணாத வெற்றியை 2018/19-ல் சுவைக்க வைத்தது. முதல் போட்டியையே அடிலெய்டில் வைத்து வெற்றிகரமாக இந்தியா தொடங்கியது. கோலியின் சதம்கூட கைகொடுக்காமல் போகுமளவு பெர்த்தில் பதிலடி கொடுத்தது ஆஸ்திரேலியா. 1-1 எனத் தொடர் சமனாக, மெல்போர்னில் மறுபடியும் திருப்பித் தந்தது இந்தியா. டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் 150-வது வெற்றியான இது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்து இன்னமும் பெருமை தாங்கியது.

ஆஸ்திரேலியா நான்காவது போட்டியில் போராடினாலும் அது டிராவிலேதான் முடிவடைந்தது. புஜாரா இத்தொடரில் 521 ரன்களை விளாசியதோடு, 3 சதங்களையும் அடித்திருந்தார். ஆக 2-1 எனத் தொடரை வென்றது இந்தியா. இருப்பினும் ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது 2020/21 தொடர்தான்.
BGT
BGT
Twitter

மறக்க நினைக்கும் வலியையும் உச்சகட்ட ஆனந்தத்தையும் ஒருங்கே தந்த தொடரது. பார்டர் கவாஸ்கர் தொடர் வரலாற்றில் மட்டுமல்ல டெஸ்ட் வரலாற்றிலேயே நம்பமுடியாத பேரதிசயங்கள் நிகழ்ந்தேறியதும் இத்தொடரில்தான். பகலிரவு ஆட்டமாக நடந்தேறிய முதல் டெஸ்டை கோலி தலைமையிலான இந்தியத் தரப்பு இழந்திருந்தது. அதிலும் புயலுக்கான அறிகுறியே இல்லாத போது சூறாவளி வந்து இருப்பதை எல்லாம் வாரிசுருட்டிச் சென்றால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அத்தோல்வி. போட்டியின் பெரும்பாலான தருணங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தியா, எதிர்பாராத சமயத்தில் தடுமாறி சரிந்தது, அதுவும் 36 என்னும் அவமானகரமான ஸ்கோருடன். இப்போட்டியோடு கோலியும் இந்தியாவிற்குத் திரும்பியதால் அணி பன்மடங்கு பலவீனமானது. ஆனாலும் இக்கட்டான தருணம் அணிக்குள்ளான ஒருங்கிணைப்பை வலிமைப்படுத்தியது.

இரண்டாவது போட்டியிலேயே அடிலெய்டு சாம்பலை உதிர்த்துவிட்டு கிளர்ந்து எழுந்தது ரகானே தலைமையிலான அணி. வீசப்பட்ட முதல் பந்திலிருந்தே வெற்றி வேட்கை சுடர்விட்டது. ரகானேவின் சதம் ஒருபுறம் தாங்கிப் பிடித்ததென்றால் பௌலிங்கில் பும்ரா, சிராஜ், அஷ்வினின் உத்வேகம்தான் அணிக்கான எழுச்சியாக உருமாற்றம் பெற்றது. 1-1 என தொடரை சமன் செய்ய வைத்தது. மூன்றாவது போட்டியோ இந்தியா வீரர்களின் மன உறுதியை வெளிக்கொணர்ந்தது, கட்டை விரல் காயத்தோடு ஆடிய ஜடேஜா, முழங்கையில் காயம் கண்ட பண்ட், வலியோடு நின்று ஆடிய அஷ்வின் - ஹனுமாவின் வைராக்கியம் என அத்தனை பேரது களப்போராட்டமும் உள்ளீடாக முடிவு டிராவானது.

இப்புள்ளியிலிருந்து நடந்த சம்பவங்கள்தான் இத்தொடரை காலத்திற்கும் பேசப்படுவதாக்கியது.

காயத்தின் காரணமாக சீனியர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக விலக வேண்டிய நிலை. பும்ரா, உமேஷ் இல்லாத நிலையில் இத்தொடரில் டெஸ்டில் அறிமுகமாகியிருந்த சிராஜ்தான் பௌலிங் படையின் சேனாதிபதி. நடராஜன், சைனி, சுந்தர் என பெஞ்சில் அமர்ந்திருந்த வீரர்கள்தான் அவருடன் துணை நிற்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் இந்தியா தோல்வியையே சந்தித்திருந்தாலும் அது பெரிய தவறாக பார்க்கப்பட்டிருக்காது. இருப்பினும் இந்திய இளம்படை அப்படி அணியை விட்டு விடவில்லை. பழுதான வேர்களுக்குப் பதிலாக இந்த இளம் விழுதுகள் அணியைத் தாங்கிப் பிடித்தன.
#AUSvIND - Pant
#AUSvIND - Pant
twitter.com/BCCI

ஆட்டநாயகனாக பண்ட் தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றாலும் இப்போட்டியைப் பொறுத்தவரை ஒவ்வொருவருமே கதாநாயகர்கள்தான். சுமோ வீரர்களுக்கு இணையாக நின்று சின்னஞ்சிறார்கள் சண்டை செய்து வெற்றி வாகையும் சூடிய தருணமது. உலகக்கோப்பைக்கு இணையாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு வெற்றி அது.

ஆஸ்திரேலிய, இந்தியத் தரப்பைப் பொறுத்தவரை இந்தத் தொடர்கள் எல்லாமே இரு பக்கத்திற்குமே மிக முக்கியமானதுதான்.

2016-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா கோப்பை கைமாறவே அனுமதிக்கவில்லை. கடந்த இரண்டு சீசன்களிலும் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதற்கு சரிசமமாக சிம்மாசனமிட்டு அமர்ந்ததோடு அதனைச் சீண்டியும் விளையாடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவோ 2004-க்குப்பின் அப்படியொரு பெருமையை அடைய முடியாமல் தள்ளாடி வருகிறது‌.

வரவிருக்கும் தொடரில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா, கடந்த சீசன்களுக்கு பழிதீர்த்து 2004-ல் இருந்த மாண்பை மீட்டெடுக்குமா அல்லது இந்தியாவுக்கு எதிரான அதன் சமீபகால நடவடிக்கையாக பணிந்து போகுமா? கமென்ட்டில் சொல்லுங்கள்.