Published:Updated:

Border - Gavaskar Trophy: 2003, 2013, 2023 - கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொடர் சந்தித்த மாற்றங்கள்!

Ajinkya Rahane, Rohit Sharma and Virat Kohli

போட்டிகளை வெல்ல கங்குலி கற்றுத்தந்தார் என்றால் தொடர்களைக் கைப்பற்ற கோலிதான் வழிகளை வகுத்தார். எப்போதும் இல்லாத அளவு வேகப்பந்துவீச்சு உத்வேகம் பெற்றிருப்பதும் கோலியால்தான். டெஸ்டைப் பொறுத்தவரை கேப்டனாக கோலி செட்செய்து வைத்துள்ள பெஞ்ச் மார்க் எட்டுவதற்கு எளிதானதல்ல.

Published:Updated:

Border - Gavaskar Trophy: 2003, 2013, 2023 - கடந்த 20 ஆண்டுகளில் இந்தத் தொடர் சந்தித்த மாற்றங்கள்!

போட்டிகளை வெல்ல கங்குலி கற்றுத்தந்தார் என்றால் தொடர்களைக் கைப்பற்ற கோலிதான் வழிகளை வகுத்தார். எப்போதும் இல்லாத அளவு வேகப்பந்துவீச்சு உத்வேகம் பெற்றிருப்பதும் கோலியால்தான். டெஸ்டைப் பொறுத்தவரை கேப்டனாக கோலி செட்செய்து வைத்துள்ள பெஞ்ச் மார்க் எட்டுவதற்கு எளிதானதல்ல.

Ajinkya Rahane, Rohit Sharma and Virat Kohli
ஓவர்சீஸில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல கங்குலி கற்றுத்தந்தார் என்றால் தொடர்களையே கைப்பற்ற கோலிதான் காரணகர்த்தாவாகினார்.

பார்டர் - கவாஸ்கர் தொடர் தொடங்கியபின் இந்த 28 ஆண்டுகளில் இந்தியா - ஆஸ்திரேலியா இருவேறு அணிகளாகப் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் சந்தித்திருக்கின்றன என்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலுமேகூட பல மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. இதில் 2003, 2013, 2023-ல் என மூன்று தசாப்தங்களைச் சேர்ந்த ஆண்டுகளில் அரங்கேறியுள்ள மாற்றங்களின் தொகுப்புதான் இது.

2003/04 தொடர்:

பந்தும் பேட்டும் சிநேகத்தோடு கரம்குலுக்கிக் கொண்டதா என்பதை அறிவிக்கும் Snickometer, பந்து நகர்ந்தத் திசையை வரைந்து காட்டும் Hawk Eye Ball Tracking System, அதன் வேகத்தை அளக்கும் Speed Gun, களத்தில் அம்பயர்களுக்கான ஒற்றனாகப் பணிசெய்யும் ஸ்டம்ப் கேமரா என ஒன்றன்பின் ஒன்றாக கிரிக்கெட் கிரவுண்டுக்குள் கால் பதித்திருந்த 2000-ன் தொடக்கம்.
2003-04 series | Border - Gavaskar Trophy
2003-04 series | Border - Gavaskar Trophy

அந்தத் தொழில்நுட்பங்களைப் போலவே முன் எப்போதுமே அறிந்திராத அக்ரஷனின் அரிச்சுவடியை கங்குலி இந்திய அணிக்குள் புகுத்தத் தொடங்கினார். அதுவும் இக்குறிப்பிட்ட தொடருக்கு சில மாதங்களுக்கு முன்பாகத்தான் 50 ஓவர் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இந்தியா பறிகொடுத்திருந்தது. எனவே பழிதீர்க்கும் படலமாக இத்தொடர் பார்க்கப்பட, வீரர்களின் வழக்கமான தீரம் இன்னமும் தீவிரமடைந்திருந்தது.

பேட்டிங்கில் ஐந்து நட்சத்திர டாப்ஆர்டரோடு களமிறங்கியது இந்தியா. அவர்கள் அத்தனை பேருமே சதமடித்த ஒரே ஓவர்சீஸ் தொடர் இதுவாகத்தான் இருக்கும். உலகக்கோப்பைக்காக மட்டுமல்ல 1999 சுற்றுப்பயணத்தின்போது சந்தித்த 3-0 என தோல்விக்காகவும் வட்டியோடு திருப்பிக்கொடுத்தது இந்தியா.

பௌலிங்கிலும் முன்பு எப்போதும் பார்த்திராத அட்டாக்கிங் அணுகுமுறை குடிகொண்டிருந்தது. ஜாகீர், பதான், அகர்கர், நெஹ்ரா என இள ரத்தம் பயமின்மையை தங்களது ஆட்டத்தின் ஓட்டத்தில் பயணிக்க வைத்தது. பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய வைத்தனர்; தேய்ந்த பழைய பந்தோ ரிவர்ஸ் ஸ்விங்கால் கூர்மையானது. யார்க்கர்கள், பவுன்சர்கள், Wobble Seam என வேகப்பந்து வீச்சின் எல்லா எல்லைகளையும் இந்திய பௌலிங் தொட்டது. ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்த இந்தியபேட்டிங் லைன்அப்பை பார்த்தே பழகிய கண்களுக்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனை அலறவைத்த இந்த பௌலிங்படை மிகப் புதிதாகத் தெரிந்தது. தொடரின் லீடிங் விக்கெட் டேக்கரான கும்ப்ளேயோ துணைக்கண்ட பிட்ச் போல ஆஸ்திரேலியக் களத்தைக் கையகப்படுத்தினார்.

முதல்போட்டி டிரா ஆக, இரண்டாவது போட்டியில் மூழ்க இருந்த இந்தியக்கப்பல் தோல்வியின் அடிமட்டத்தைத் தொட்டு பின் மீண்டெழுந்து முகடைத் தொட்டது. மெல்போர்னிலோ மீண்டுவந்து ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த 1-1 எனத் தொடர் சமநிலையை எட்டியது. இதுவரை எல்லாவற்றையும் சரியாகவே செய்த இந்தியாவுக்குள் நான்காவது போட்டியில்தான் சற்றே டிஃபென்சிவ் மனப்பான்மை குடியேறியது. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 700 ரன்களைக் கடந்த பிறகுதான் டிக்ளேர் செய்தது. ஓட்டுக்குள் ஆமையாக ஒளிந்து கொள்ளாது துணிவைத் துணைக்கழைத்து சற்றே முன்னதாக அதனைச் செய்திருந்தால் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டிருக்கும். வாழ்வோ சாவோ மோதிப் பார்க்கலாம் என்ற எண்ணம்தான் இப்போதுள்ள அணிக்கும் அப்போதிருந்த அணிக்குமான ஒரே வித்தியாசம்.

2012/13 தொடர்:

2003-13 காலகட்டங்களில் அம்பயர்களின் முடிவினை பகுப்பாய்வு செய்ய வாய்ப்பளிக்கும் டெக்னாலஜியான DRS கிரிக்கெட்டுக்குள் புகுந்தது. 2008 சிட்னி டெஸ்டின் போதே இந்த முறை அமலில் இருந்திருந்தால் எத்தனையோ தவறான முடிவுகள் திருத்தி எழுதப்பட்டிருக்கும். வீடியோ அனாலிஸ்டுகளும் இந்தப் பத்தாண்டுகளில்தான் பல்கிப் பெருகினர்.
DRS டெக்னாலஜி
DRS டெக்னாலஜி

தனது ஸ்பின் பலவீனத்தைக் களைய அந்த அனாலிஸ்டுகள் அத்தனை பேரின் உதவியையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கேட்கும்படியான நிலையை 2012/13 தொடர் உருவாக்கியது. 2011/12-ல் இந்தியாவை 4-0 என ஆஸ்திரேலியா வீழ்த்த, இத்தொடரில் சிலிர்த்தெழுந்து சீறி அதேபோல் 4-0 என அவர்களை வீழ்த்தி கொடுக்கல் வாங்கல் கணக்கை நேர்செய்தது இந்தியா. இத்தொடர் முழுவதுமே சக்கர வியூகத்துக்குள் சிக்கித் தவித்தது போல சுழலிலிருந்து மீள வழி தெரியாது தவித்தது ஆஸ்திரேலியா.

அஷ்வின் - ஜடேஜா கூட்டணி மூச்சுவிடும் அவகாசம்கூட தராது சுழன்று மாறிமாறித் தாக்கியது. அஷ்வின் 29 விக்கெட்டுகளையும் ஜடேஜா 24 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியாவின் பிரதான சுழல் பந்துவீச்சாளரான லயான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இருப்பினும் இந்தியக்கூட்டணி ஏற்படுத்திய அளவு தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் டாப்ஆர்டர்தான் பெரிதாகத் தள்ளாடியது. இத்தொடரில் எந்தளவு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள் என்றால் இந்திய மண்ணை தங்களது நாட்டிற்கு ஏற்றுமதி செய்து ஸ்பின்னுக்கு கைகொடுக்கும் பிட்சுகளை உருவாக்கி தனது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முடிவை எல்லாம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டை எடுக்க வைத்தது.

நான்கு போட்டியிலுமே இந்தியா டாஸை இழந்து கடினமான நான்காவது இன்னிங்ஸை ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும் டர்னர் பிட்சையும் சவால்விடும் சுழலையும் சுலபமாகவே எதிர்கொண்டனர். தோனியின் இரட்டைசதம், தவானின் அதிவேகசதம் என இந்திய சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பேட்ஸ்மேன்களும் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தினர். அத்தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் டாப் 5-ல் நான்குபேர் இந்தியர்களே.

தோனியின் இரட்டைசதம்
தோனியின் இரட்டைசதம்

"ஆஸ்திரேலிய பேட்டிங் உலகத்தில் சூரியன் அஸ்தமித்து விட்டது" என இயான் செப்பல் இத்தொடரைக் குறித்து அப்போது கருத்துத் தெரிவித்திருந்தார். பாண்டிங், ஹசி, க்ளார்க் போன்ற வீரர்கள் இனிமேல் அணிக்குள் உருவாகவே வாய்ப்பில்லை என்றுகூட சாடியிருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தது முழுமையாக நடக்கவில்லை. ஸ்மித், லபுசேன் என அடுத்த தலைமுறையிலும் புதிய வீரர்களின் உதயம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை பிரதான ஆயுதமான சுழலோடு ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்புக் கொடுப்பதும் அதனை ஜீரணிக்க முடியாது ஆஸ்திரேலியா அல்லாடுவதும் மட்டும் நிகழ்ச்சி நிரலில் நீங்காத நிகழ்வாகி விட்டது.

2023 தொடர்:

2013-23 காலகட்டத்தில் Concussion Substitute முறை வரவேற்பையும் விமர்சனங்களையும் நேர்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள அறிமுகப்படுத்தப்பட்ட பகலிரவு டெஸ்டும் இன்னொரு சுவாரஸ்யம். பிங்க் பால் என்றாலே 36 என்ற எண் ஞாபகத்திற்கு வந்து கலங்கடித்தாலும் அதிலிருந்து உயிர்த்தெழுந்த வைபவம் கசப்பை மறக்கடிக்கும்.

வரவிருக்கும் சீசனும் 2013 போன்ற ஆஸ்திரேலியா இங்கே வந்த பழைய தொடர்களின் பாணியை அடியொற்றியே தொடர வாய்ப்புகள் அதிகமுள்ளன. இருப்பினும் இம்முறை ஹோம் அட்வான்டேஜ் என்ற சௌகரியமான வார்த்தைக்குள் அதனை அடக்கிவிட முடியாது. ஏனெனில் கடந்த இருமுறையும் ஆஸ்திரேலியாவுக்கே சென்று அடக்கி ஆண்டுவிட்டு வந்திருக்கிறது இந்தியா. அதேபோல் ஸ்பின்னை மட்டுமே நம்பி இருக்க வேண்டுமென்னும் அவசியமும் இல்லாதவாறு எழுச்சிமிக்க வேகப்பந்து வீச்சாளர்களையும் இந்தியா தன்வசம் வைத்துள்ளது. வருங்காலத்தில் துணைக்கண்டமோ ஓவர்சீஸோ கள பாகுபாடின்றி சுழலுக்கும் வேகத்துக்கும் இடையே தேவைக்கேற்ப மோடினை மாற்றிப் பயணித்து வெற்றி இலக்கை எட்டுமளவு இந்திய அணி உருவெடுத்து வருகிறது. இது எல்லாம் கோலியின் கைங்கரியம்தான்.

கோலி - ஜான்சன்
கோலி - ஜான்சன்

போட்டிகளை வெல்ல கங்குலி கற்றுத்தந்தார் என்றால் தொடர்களைக் கைப்பற்ற கோலிதான் வழிகளை வகுத்தார். எப்போதும் இல்லாத அளவு வேகப்பந்துவீச்சு உத்வேகம் பெற்றிருப்பதும் கோலியால்தான். டெஸ்டைப் பொறுத்தவரை கேப்டனாக கோலி செட்செய்து வைத்துள்ள பெஞ்ச் மார்க் எட்டுவதற்கு எளிதானதல்ல. எனவே இத்தொடர் ரோஹித்துக்கான ஒரு அமிலக்குளியலே. கோலி உண்டாக்கி வைத்திருந்த ஆளுமையை ரோஹித்தினால் அப்படியே அடுத்தடுத்து எடுத்துச் செல்லமுடியுமா?

கோலிக்கும் சவால்கள் காத்திருக்கின்றன. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளுக்கு விக்கெட் பலி கொடுத்துக் கொண்டிருந்த கோலி சமீபகாலமாக ஸ்பின்னுக்கு திணறிவருகிறார். பொதுவாக ஒரு வீரரின் பலவீனம் எதிரணியின் பௌலர்களுக்குத் தெரியவருவது இரத்தவாடையை சுறாக்களுக்கு காட்டிவிட்டு விலகுவதற்கு ஒப்பானது. எனவே கோலிக்கும் இது மிகப்பெரிய வேள்விதான். அதுவும் தனது கம்பேக்கிற்கு பிறகு மற்ற இரு ஃபார்மட்டிலும் சதமடித்துவிட்ட கோலி இதிலும் அதனை அடிக்க வேண்டுமென்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது. இதற்கும் மேலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எந்தளவு சிறப்பாக ஆடி எவ்வளவு தாக்கத்தை அவரால் உண்டாக்க முடிகிறதோ அந்தளவு இந்திய வெற்றிப்பாதையும் எளிதாகும். அதேபோல் புஜாராவின் ஃபார்மும் அவர் கொண்டுவரப் போகும் ரன்களும் முக்கியமானது. மிக மெதுவாக ஸ்கோர் செய்வதற்காக விமர்சிக்கப்பட்ட புஜாரா கவுண்டி போட்டிகள் வரைசென்று தனது அணுகுமுறையில் கொண்டு வந்திருக்கும் மாற்றத்தை நிருபித்துவிட்டார். அது தொடர வேண்டியதுதான் அவசரத்தேவை.

கோலி - ஜான்சன்
கோலி - ஜான்சன்

டெஸ்ட் ஃபார்மட்டில் இந்திய பேட்டிங்கைப் பொறுத்தவரை பண்ட் இல்லாத இடம் வெறிச்சோடி வெளிச்சமின்றி காணப்படுகிறது. ஐசிசியின் 2022-ம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்தியர் அவர் மட்டுமே. அவரது Gabba இன்னிங்ஸில் இருந்தே ரசிகர்கள் பலராலும் இன்னமும் வெளியேவர முடியவில்லை. அப்படிப்பட்ட ஒருவர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்னொருவரால் ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இப்போதைய முக்கியக் கேள்வி.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை ஸ்மித் மற்றும் லபுசேனின் ஃபார்ம் அவர்களுக்கு பெரிதாகக் கைகொடுக்கும். இருப்பினும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களையும் SpinPhobia-வால் ஆக்ரமித்திருக்கிறார் அஷ்வின். அவர் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டுகளும்தான் வெற்றிக்கான விழுக்காட்டினையும் உயர்த்தப்போகின்றன.

WTC-ல் இந்தியாவுக்கான இருக்கைக்கான ரேஸாகவும் இது பார்க்கப்படுவதால் பூமிப்பந்துக்கு உள்ளிருக்கும் அதே வெப்பத்தை வெளியேயும் எதிர்பார்க்கலாம்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்
மொத்தத்தில் Wagon Wheel பேட்ஸ்மேன்களின் ஷாட் செலக்ஷன்களை சிறப்பிக்க Pitch Map பௌலர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க இனிதே தொடங்க உள்ளது இன்னொரு கிரிக்கெட் மகாயுத்தம்.