Published:Updated:

WTC இறுதிச்சுற்று – 8: ஆஸியை அவர்கள் பாணியிலேயே டீல் செய்த இந்தியா! Border Gavaskar Trophy 2018-19

Border Gavaskar Trophy 2018-19
Border Gavaskar Trophy 2018-19 ( Rick Rycroft | AP )

இந்த மொத்தத் தொடரில் பல்வேறு வீரர்களிடையே பல வார்த்தை சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அதில் மிக முக்கியமான குரலொன்று இந்திய விக்கெட் கீப்பிங் பொஷிஷனில் இருந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

இங்கிலாந்து தொடரின் தோல்விக்குப் பிறகு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேசம் ஆஸ்திரேலியா. இதற்கிடையே சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு தொடர் ஆடி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்பின்னர்களின் சொர்க்க பூமியான துணைக்கண்ட ஆடுகளங்களிலேயே இந்திய அணிக்கு சவால் விடுத்த அணி ஆஸ்திரேலியா. இப்போது சொந்த மண்ணில் அதன் வலிமையைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பந்தை விதிகளை மீறி சேதம் செய்த காரணத்திற்காக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தடைக்காலத்தில் இருந்தாலும் அவர்களிருவரும் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவின் பேட்டிங் லைன்-அப் வலுவாகவே இருந்தது.

Border Gavaskar Trophy 2018-19
Border Gavaskar Trophy 2018-19
AP

ஆசிய மண்ணிற்கு வெளியே சுமாரான அணி என வெகு ஆண்டுகளாகவே குறைத்து மதிப்பிடப்பட்டு வந்த இந்திய அணி தற்போது அந்தப் பழைய அணியாக நிச்சயம் இல்லை. ஆஸ்திரேலிய அணியுடன் மோதப்போவதற்கு முன்பு பவுன்சர்கள் நிறைந்த தென்னாப்பிரிக்க தொடர், பந்திற்கு பந்து ஸ்விங் ஆகும் இங்கிலாந்து தொடர் என வெவ்வேறு ஆடுகளங்களில் தொடர்து ஆடியிருந்ததால் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு இந்திய அணி ஓரளவு தயாராகவே இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய அணியை அதுவும் அவர்களின் மண்ணில் வீழ்த்த வீரர்களின் திறனை தாண்டிய ஒன்று தேவைப்பட்டது. அந்த ஒன்றை வெளியே எங்கும் தேடாமல் ஆஸ்திரேலியவிடம் இருந்து எடுத்துக்கொள்ள தன் படையினருக்கு கை காட்டினார் கேப்டன் விராட் கோலி.

கிரிக்கெட் என்னும் விளையாட்டினை சர்வதேச தளத்தில் ஆடிய முதன்மையான அணிகளுள் ஒன்று ஆஸ்திரேலியா. அந்நாட்டின் கிரிக்கெட் கலாசாரம் என்பது ஒரு நூற்றாண்டிற்கு மேல் பழைமையானது. வேறெந்த உலக அணிகளையும் விட அதிக எண்ணிக்கையிலான உலகப்கோப்பைகளை வென்ற நாடு என்ற பெருமையும் ஆஸ்திரேலிய அணிக்குதான் சொந்தம். இது எப்படிச் சாத்தியம்?

வெற்றிக்காக எந்த எல்லைக்கு சென்றும் போராடக்கூடிய வீரர்களை அந்த அணியின் நிர்வாகம் காலங்காலமாக வளர்த்தெடுப்பதுதான் இதற்கான முக்கிய காரணம். தங்களின் முழு திறனைமட்டுமல்லாது எதிரணி வீரர்களை தங்களால் முடிந்த அளவுக்கு மனரீதியாக ஆட்டத்தைவிட்டு திசை திருப்பி அவர்களின் தன்னம்பிக்கையை குன்றச்செய்து கவனத்தை இழக்க செய்வதையும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஓர் ஆயுதமாக பயன்படுத்துவது வழக்கம். இத்தகைய 'ஸ்லெட்ஜிங்' மற்றும் சீண்டல்கள் ஆட்டத்தின் ஆன்மாவைக் குலைப்பதுபோல் தோன்றினாலும் அவை விளையாட்டின் ஓர் அங்கமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியை பொறுத்தவரை சச்சின், டிராவிட், தோனி இன்னும் பல ஜாம்பவான்கள் இது போன்ற தாக்குதல்களுக்கு என்றுமே செவிசாய்க்காமல் அவற்றிற்கு தங்களின் ஆட்டத்தாலேயே காலங்காலமாக பதில் சொல்லி வந்தனர். அவர்களிடம் எதிர் தாக்குதல் என்பது அறவே இருந்தது கிடையாது.

Border Gavaskar Trophy 2018-19
Border Gavaskar Trophy 2018-19
AP

ஆனால், திருப்பியடித்து பழக்கமில்லாத பழைய இந்திய அணியிடம் மோதுவதாக எண்ணிய ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதையே ஆயுதமாக பயன்படுத்தத் திட்டமிட்டார் விராட் கோலி. இந்தியாவின் இத்தககைய அணுகுமுறையை ஆஸ்திரேலிய வீரர்கள் கொஞ்சமும் எதிர்பார்கவில்லை. அடிலெய்ட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஷமி ஆகிய மூவர் கூட்டணியை சமாளிக்கமுடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரிய, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது இந்திய அணி. இத்தனை வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதன்முறையாக வென்று சாதனை படைக்கிறது கோலியின் படை.

WTC இறுதிச்சுற்று – 7: ஆங்கில மண்ணில் கேப்டன் கோலியின் எழுச்சி! | INDvENG 2018

இரண்டாவது டெஸ்ட் பெர்த் நகரில் நடந்தது. முதல் போட்டியின் தோல்விக்குச் சரியான பதிலடி ஒன்றைக் கொடுத்து நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியாவை வீழ்த்துகிறது ஆஸ்திரேலியா. அப்போட்டியில் தோற்றிருந்தாலும் இனிமேலும் தங்களின் சீண்டல்களுக்கு பொறுத்து செல்பவர்கள் நாங்கள் இல்லை என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உணர்த்தினார் விராட் கோலி. ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியினர் பேட் செய்கையில் ஸ்டம்ப்புகளுக்கு பின் நின்று தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட் செய்துக்கொண்டிருந்த நேரம். அப்போது அவருக்கும் கோலிக்கும் வார்த்தை போர் ஒன்று தொடங்கி வெகுநேரம் நீள, அது ரன் எடுக்க ஓடிய பெய்னை கோலி உரசிச் செல்லும் வரை சென்றதால் நடுவரே தலையிட்டு இரு அணி கேப்டன்களுக்கு அறிவுரை கூறும் அளவிற்கு சென்றது.

மூன்றாவது போட்டி, மெல்போர்ன் மைதானத்தில் 'பாக்ஸிங் டே' டெஸ்டாகத் தொடங்கியது. ஆஸ்திரேலிய வீரர்களின் தொடர் சவால்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக்கொண்டது இந்திய அணி. சிட்னியில் நடைபெற்ற நான்காவது டெஸ்டிலும் புஜாரா இத்தொடரில் தனது மூன்றாவது சதத்தை விளாசினாலும் மழையால் அப்போட்டி டிரா ஆனது.

Border Gavaskar Trophy 2018-19
Border Gavaskar Trophy 2018-19

இந்த மொத்தத் தொடரில் பல்வேறு வீரர்களிடையே பல வார்த்தை சீண்டல்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அதில் மிக முக்கியமான குரலொன்று இந்திய விக்கெட் கீப்பிங் பொஷிஷனில் இருந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. தனது ரன் கணக்கை சிக்ஸர் மூலம் தொடங்கியதாக சென்ற பகுதியில் குறிப்பிட்டு முடித்த ரிஷப் பண்டின் குரல்தான் அது. “Come on ash, Come on ash” என்று பௌலர்களை உற்சாகப்படுத்துவதாகட்டும், “தற்காலிக கேப்டன்” என்று டிம் பெய்னை கலாய்த்ததாகட்டும், தன் குழந்தைகளுக்கு 'Babysitter' ஆக வர அழைத்த அதே பெய்னிற்கு தொடரின் வெற்றிக்கு பின் அவரின் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டதாகட்டும் இத்தொடர் முழுவதும் பல வேலைகளைப் பார்த்தார் பண்ட்.

இரு அணிகளுக்கும் விருந்தளித்த ஆஸ்திரேலிய பிரதமர் அங்கே பண்ட்டை தனியே கண்டறிந்ததுவரை பிரபலமானார் அவர். அடுத்த பகுதியில் உங்களை நிச்சயம் சந்திக்கிறோம் பண்ட்.

- களம் காண்போம்.

அடுத்த கட்டுரைக்கு