ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஷேன் வார்னே தன்னுடைய விடுமுறையைக் கழிப்பதற்காக தாய்லாந்துக்கு நண்பர்களோடு சென்றிருந்தார். மார்ச் 4 அவருடைய அறையில் மூர்ச்சையான நிலையில் நண்பர்களால் கண்டறியப்பட்டார். 20 நிமிடங்களுக்கு மேலாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியில் ஷேன் இறந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாய்லாந்து போலீஸ் அவருடைய உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். ஷேனின் நிர்வாகம் அவர் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் எனச் சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஷேன் தங்கியிருந்த அறையின் தளத்திலும் அவருடைய டவலிலும் ரத்தக் கறை இருந்ததாக தாய்லாந்து போலீஸ் தெரிவித்திருக்கிறார்கள். "அதிகப்படியான ரத்தக்கறைகள் ரூமில் கண்டறியப்பட்டுள்ளன. ஷேனுக்கு CPR கொடுக்கப்படும் போது ரத்தம் வெளிவந்திருக்கலாம்" என அங்கிருக்கும் லோக்கல் போலீஸ் செய்தித் தொடர்பாளர் Satit Polpinit அந்த நாட்டின் மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

தாய்லாந்து Koh Samui பகுதியில் உள்ள வில்லாவில் வார்னே தங்கியிருந்தார். அந்தப் பகுதி போலீஸ் கண்காணிப்பாளர் Yuttana Sirisomba, வார்னே தன்னுடைய இதயம் சார்ந்த பிரச்னைக்காக சமீபத்தில் மருத்துவரைச் சென்று சந்தித்தாகக் குறிப்பிட்டுள்ளார்.
"அவர் உடலில் டிரக் மூலக்கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. அதனால் ஷேனின் மரணத்தில் சந்தேகிக்க வேறு காரணங்கள் எதுவுமில்லை. ஷேன் வார்னேவுக்கு ஆஸ்துமா மற்றும் இதய பிரச்னைகள் இருந்துள்ளன. கடுமையான மார்பு வலியை அவர் இறப்பதற்கு முன் உணர்ந்திருக்கக் கூடும்" எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
அரசு மரியாதையோடு அவருக்கான இறுதி சடங்கு நிகழ்வுகள், ஷேன் உடல் ஆஸ்திரேலியா வந்தவுடன் நடக்க இருக்கிறது. அவருக்கான அரசு மரியாதையை ஏற்பதாக அவருடைய குடும்பத்தார் அறிவித்திருக்கிறார்கள்.